தேசிய கல்வி கொள்கை  ஒரு விஷம் தடவிய ஐஸ் கிரீம்!

-மாயோன்

தேசிய கல்வி கொள்கை 2020  க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி  பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்‌.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது.

இந்தக் கல்விக் கொள்கை  மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குஜராத் தொடங்கி அருணாச்சலப்பிரதேசம் வரைக்கும் உள்ள கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே  இந்த கல்விக் கொள்கையை தடுத்த நிறுத்த முடியும் என்று  இந்த அமைப்பு  உறுதியாக நம்புகிறது.

அந்த இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த அமைப்பினர் கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசை கண்டித்தும் இதன் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்கும் வகையிலும் வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை, கொல்கத்தா , டெல்லி ஆகிய மாநகரங்களில் மாநாடு நடத்துகின்றனர்.

இந்த மாநாடு குறித்து  அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி சார்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் ராமு மணிவண்ணன், கல்வியாளர்கள் நந்தகுமார், பேராசிரியர் யோக ராஜன்,  உமா மகேஸ்வரி மற்றும் எம்.ஜே.வால்டேர் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக பேட்டியளித்தனர்.

பேட்டியின் போது அவர்கள் கூறியது:

“நயவஞ்சக மாற்றங்களை தன்னகத்தே கொண்டுள்ள தேசிய கல்வி கொள்கை 2020  பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி,  கொண்டு வரப்பட்டதாகும்‌. இது கல்வியில் மிச்சம் மீதி இருக்கும் அறிவியல்பூர்வ- மதச்சார்பற்ற விழுமியங்களை அழித்து விடும்.

மக்களுக்கு கல்வி  வழங்கும் கடமையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசுக்கு இந்த கல்விக் கொள்கை வழி வகை செய்கிறது. நாட்டின் கல்வியை கார்ப்பரேட்டுகள் கையில் கொடுப்பதற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

இந்திய நாடு பல மொழிகள் பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்ட நாடு. பன்முகத்தன்மையும் பல தேசிய இனங்களையும் கொண்ட இந்த நாட்டுக்கு ஒரு இடத்திலிருந்து கொண்டு கல்விக் கொள்கையை வகுப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்.?

கல்வி தனியார்  மயமாக்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு, தமிழகத்தில் தற்போது உள்ள பொறியியல் கல்வியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது பரவலான  வியாபாரமாகக்கூட இல்லை. குறிப்பிட்ட சிலர் பெரிய அளவில் காசு பார்க்கும் வணிகமாக மாறி, பொறியியல் கல்வியை மிகவும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

இந்த நிலை மிகப்பெரிய விபரீத  விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர வேண்டும். அந்தந்த மொழி , கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாகும் கல்விமுறையே சிறந்ததாக இருக்க முடியும்.

கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டுக்கும் பின்னால் உள்ள பீகார் மாநிலத்திற்கு ஒரே பாடத்திட்டம் எப்படி சரியாக இருக்க முடியும்?

ஒரு குழந்தை பத்து வயது ஆகும்வரை இயல்பாக விளையாடும். அத்தகைய மனநிலைக்கு ஏற்ப கல்வி கொள்கை இருக்க வேண்டும்.

ஆனால் ,தேசிய கல்விக்கொள்கை ,முன்மழலை பாடத்திட்டம் என்று வகுத்து கொண்டு அந்த  பிஞ்சு  குழந்தைகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுக்கப் போகிறது.

3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வு என்று அறிவித்துள்ளார்கள்.

இது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு ஆசிரியரை கொண்ட அரசுப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள் பலவற்றில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதை பார்க்கிறோம். இப்படி அடி தளத்திலேயே நிலைமை சீராக இல்லை. முதலில் இதை சீர் செய்ய வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

தேசிய கல்வி கொள்கை  2020 ஒரு விஷம் தடவிய ஐஸ்கிரீம்.! படித்தவர்களும், பொதுமக்களும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அனுமதித்தால் ஒரு நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்‌.! நான்கே நான்கு திட்டங்கள் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கல்வித் துறையையும் வளைத்துப்போட  முடிவு செய்துள்ளனர். தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள “இல்லம் தேடி கல்வியும்” தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் ஒரு அங்கம்தான். எனவே, மாநில அரசுகளும் இதன் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

சாமானிய மக்கள் இனி தங்கள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கான கல்வியை பெற முடியாத நிலை ஏற்படக்கூடும்.

ஏற்கெனவே  பல பிரச்சனைகள்  உள்ளன. கொரோனா  வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தங்கள் வகுப்பு தோழர்களையும் ஆசிரியர்களையும் பள்ளியையும் விட்டு விலகி இருக்கின்றனர். ஆன்லைன் கல்வி வசதி படைத்தவர்களுக்கும் வசதி இல்லாதவர்களுக்கும் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது. இது புதிதாக தோன்றியுள்ள கல்வி பிரச்சினை. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம்.

கல்வியை தனியார் மயமாக்கும் திட்டம் 1986ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. அப்போது இருந்து நாம் நாட்டு மக்களிடம் இதன் தீமையை  சொல்லி வந்துள்ளோம். 1989 ஆம் ஆண்டு நாடு தழுவிய போராட்டம் நடத்தி மக்களின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு போனோம். அந்த சூழலில் நீதியரசர் வி.ஆர் .கிருஷ்ணய்யர் தலைமையில் சென்னையில் மாநாடு நடத்தினோம்.

இன்றைக்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. பேரழிவுக்கும் பேரிருளுக்குள்ளும்  நாட்டைக் கொண்டு செல்லும் இந்த கல்வி கொள்கை குறித்து கடந்த காலத்தில் நாம் எழுப்பிய குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. இனியாவது நாட்டு மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசாங்கத்துக்கு அடிபணிந்து செல்லும்  அமைப்புகள் மூலம் இந்த கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை செயல்படுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன.

இன்றைய கல்வியை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையின் கல்வியையும் பாதுகாப்பதற்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்காக வருகிற 30.10.21, 31.10.21  தேதிகளில் அகில இந்திய கல்வி பாதுகாப்பு மாநாடுகளை நடத்த உள்ளோம். இதில் கல்வியாளர்கள் கல்வி மீது அக்கறை கொண்டவர்கள் பங்கேற்று விவாதித்து, எதிர்கால இயக்கங்களுக்கான திட்டங்களை வகுக்க உள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம்: தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் – என்பது தான். இதை மக்களிடம் புரிய வைப்பதற்காக எத்தகைய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் இந்த மாநாட்டில் முடிவெடுக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் பிரபல வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ரொமிலா தப்பார், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சுகாதியா தோரட், முன்னாள் துணைவேந்தர்கள் ஜவகர் நேசன், சந்திரசேகர் சக்கரவர்த்தி, டபோதிர் பட்டாச்சாரியா பேராசிரியர்கள் கருணானந்தன், எஸ்.ஹச்,திலகர், சச்சிதானந்த சின்கா,டி.கே.நஸ்கர், அணிஷ் குமார் ராய், அதித்யா முகர்ஜி, பிரேந்திர குமார் நாயக், ஒடிசா ஸ்ரீ பிமல் சட்டர்ஜி, ஏ.கே. ராமகிருஷ்ணன், கான்ஷியாம் நாத், பேராசிரியர் , டாக்டர் ஷியாம் சுந்தர் தீப்தி பங்கேற்று கருத்துரை வழங்குகிறார்கள். அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தலைவர் பிரகாஷ் என் ஷா மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

கொரோனாதொற்று  இன்னும் முழுமையாக விலகவில்லை ஆதலால், அதை கருத்தில் கொண்டு டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் நேரடியான இணைய வழி இணைப்பில் மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டு நிகழ்வுகள் 30,31 ஆகிய இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகநூல்  மற்றும் யூடியூப் ஆகியவற்றின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

நம் கல்வி மீது தொடுக்கப்பட்டுள்ள பன்முகத் தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கத்துடன் நடைபெறவுள்ள இந்த கல்வி பாதுகாப்பு மாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர்கள் பேட்டியின் போது தெரிவித்தனர்.

-மாயோன்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time