நீட் தேர்வு போல அலைகழிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்!

- சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு பல தடைகளைக் கடந்து நடக்கவுள்ளது. ஆனால், அதை நீட் தேர்வு பாணியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகுகிறதா..? என்ற கேள்வியும், வேதனையும் தேர்வு எழுதும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வுகளில் 156 மாணவர்களின் மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்தி பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப் பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் 1060 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டது. அத்தேர்வுகள் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.

இப்படியாக ஒத்திவைக்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில், ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , அரசு பல் தொழில் நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணித்தேர்வு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் 14/2019 நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது. கணினி வழி தேர்வினை நடத்திட  அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28,29,30 மற்றும் 31 தேதிகளில் நடக்கவுள்ள இந்த தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வு நடத்தப்பட்டு ஏகப்பட்ட குளறுபடிகள்  நடந்து நீதிமன்றம் அத்தேர்வை ரத்து செய்து மறுபடியும் தேர்வு நடத்தப்படுவதைக் காரணம் காட்டி ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வு நடக்கும் இடத்தை மனம் போன போக்கில் மாற்றி வெவ்வேறு மாவட்டங்களுக்கு போட்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக சென்னையில் இருக்கும் பல மாணவர்களுக்கு விருதுநகர் போன்ற தென்மாவட்டங்கள் தேர்வு மையமாக போட்டிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு கன்னியாகுமரி.. அதே போல் தெற்கு மாவட்டங்களில் இருக்கும் மாணவர்களுக்கு வட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் தெரிவித்ததாவது;

இரண்டு ஆண்டுகளுக்கு இத்தேர்வில் நடந்த தவறு தேர்வு எழுதிய மையங்களில் நிகழ்ந்ததல்ல. அந்த தேர்வை நடத்திய உத்திரபிரதேசத்தின் டேட்டா மேக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தாலும் தேர்வு வாரிய அலுவலகத்தில் உள்ள அலுவலக ஊழியர்களின் பேராசையாலும் நடந்த தவறே அது. ஆனால், தற்போது சம்பந்தமில்லாமல்  மாணவர்களுக்கான தேர்வு மையத்தை தாறுமாறாக வெகு தூரம் மாற்றிப்போட்டு அலைக்கழிப்பது ஏன் எனத் தெரியவில்லை. தவறு நடக்காதவாறு முறையாக கண்காணித்தாலே போதும்.

இப்படி வெவ்வேறு இடங்களில் போடுவதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அலைச்சலும், பொருளாதார இழப்புகளும் தான் ஏற்படும். தேர்வு அலுவலக ஊழியர்களின் முறைகேட்டிற்கு மாணவர்களை தண்டிப்பது நியாயமாகாது. இதனால் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தேர்வு எழுதும் மாணவிகளை நினைத்துப்பாருங்கள். அறிமுகம் இல்லாத மாவட்டத்தில் போடுவதால் தேர்வுக்கு முந்தைய நாளே சென்று அருகில் எங்காவது தங்க வேண்டும். கூடவே பெற்றோர்கள் செல்ல வேண்டும்.

நீட் தேர்வுக்கு இப்படித்தான் நம் மாணவர்களை ஒன்றிய அரசு அலைக்கழித்து கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதே தவறை இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் செய்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவரும் அவருக்கு அருகில் இருக்கும் தேர்வு மையத்தைத்தான் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருப்பார்கள். அவர்கள் அவ்வாறு கொடுத்திருப்பது அவர்களால் எளிதாக வந்து எழுதும் அளவுக்கு போக்குவரத்து வசதி சாத்தியமான இருக்கும் என்ற காரணத்தால்தான். காப்பியடிப்பதற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ அல்ல.

மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருக்கும் விண்ணப்ப மையத்திற்கு மாறாக சம்பந்தமே இல்லாமல் வெகு தூரத்தில் தேர்வு மையத்தைக்கொடுப்பது மாணவர்களை கடுமையாக அலைக்கழிக்கும். அதற்கு பதிலாக ஐந்து, பத்து கீமீ தூரத்தில் உள்ள இடங்களுக்கு மாற்றி தந்திருந்தால் கூட யாருக்குமே வருத்தம் ஏற்படப் போவதில்லை. தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் இதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு விண்ணப்பத்தில் என்ன தேர்வு மையம் கேட்டிருக்கிறார்களோ அத்தேர்வு மையத்தையோ அல்லது அதற்கு சற்று தொலைவில் இருக்கும் தேர்வு மையத்தையோ ஏற்பாடு செய்ய வேண்டும். தவறு நடக்காத அளவுக்கு அறிவியல்பூர்வமாக கண்காணிப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினால் போதுமானது.’’ என்கிறார்கள் மாணவர்கள்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time