பிரியங்காவின் பிரதிக்யா யாத்திரை வெற்றி பெறுமா?

-சாவித்திரி கண்ணன்

ப.வ.தமிழரசன், சூலூர், கோயம்புத்தூர்

ஒரு தலைசிறந்த பத்திரிக்கையளாராக வர என்ன செய்ய வேண்டும்?

மானுட நேசமும், அறச் சீற்றமும், உண்மையைக் கண்டறியும் வரை சலிப்பில்லாத ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும்.

கே.எஸ்.கவின், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

ஶ்ரீபெரும்புதூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பட மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த நூறுகோடி இலக்கை விரைவில் எட்டி இருக்கலாம்தானே?

இந்த நூறு கோடி இலக்கை யாருக்கு சாதகமாக எட்ட நிர்ணயித்தார்களோ.., அதன்படி மட்டுமே செயல்படுவார்கள்!

கே.ராஜாராம், முகையூர், விழுப்புரம்

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதே..?ஆனால், திருவிழாக்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறதே?

அண்ணாத்தே தயாரிப்பாளர் கலாநிதி மாறன், வெளியீட்டாளர் உதயநிதி ஸ்டாலின்!

எம்.அண்ணாதுரை, திசையன் விளை,  திருநெல்வேலி

ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்க இந்த அரசு முன்வந்துள்ளது பற்றி?

பல வருடக் கோரிக்கை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி! ஆனால், பனை ஏறுவதை குற்றச் செயலாக அறிவித்த எம்.ஜி.ஆர் போட்ட அநீதியான சட்டம் இன்னும் தொடர்கிறதே? அன்று 12 இலட்சம் பனையேறும் தொழிலாளர்கள் இழந்த வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்குவார்களா..?

ஆர்.வேலாயுதம், காட்பாடி, வேலூர்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஜெகன்மோகன் ரெட்டிக்கும் நடக்கும் நடக்கும் மோதல் குறித்து?

போதை பொருள் கடத்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினருக்கும், ஆட்சிக்கும் தொடர்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானதல்ல. வரம்பு மீறிய தெலுங்கு தேச செய்தி தொடர்பாளர் பட்டாபிராமன் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க முடிந்த இடத்தில் ஜெகன் இருக்கும் போது, அவரது கட்சிக்காரர்கள் அத்துமீறி அராஜகங்களில் ஈடுபட்டதை அவர் நியாயப்படுத்துவது ஏற்புடையதல்ல! இலவசங்களை அள்ளிவிடும் மலினமான அரசியல், மணி பவர், மஸில் பவர்….ஆகியவை தொடர்ந்து ஜெகனுக்கு கை கொடுக்காது.

ஆர்.கோவிந்தன், கிணத்துக்கடவு, கோவை

பெருவெள்ளத் துயரத்தில் கேரளா சிக்கித் தவிக்கிறதே..என்ன காரணம்?

மிகுந்த வருத்தமளித்தது. ஆனால், அவர்களின் மனோபாவமே முக்கிய காரணம்!

2018 ல் இதைவிட மோசமான வெள்ளப் பெருக்கை எதிர் கொண்டது!

தேசிய சராசரி மழையளைவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக மழைப் பொழிவைக் கொண்டது கேரளம். இடுக்கி அணையைக் கட்டி தமிழகத்திற்கு பெரும் இடும்பைத் தந்தனர். முல்லைபெரியாறு, கல்லாறு, பம்பை அச்சன்கோயில் ஆறு ஆகியவற்றில் அவர்கள் காட்டும் அணுகுமுறைகளே வெள்ளப் பெருக்கிற்கான காரணமாகும். இயற்கை தரும் கொடைகளை எல்லாம் தங்களுக்கு மட்டுமேயானதாகக் கருதுபவர்கள் துயரத்தையும் வரிந்து வாங்கிக் கொள்கிறார்கள்!

முகமது ரியாஸ், புதுதில்லி

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா முன் எடுத்துள்ள அரசியல் எப்படி? குறிப்பாக பிரக்தியா யாத்திரை வெற்றி பெறுமா ?

மூர்க்கமான யோகி ஆதித்தியநாத் அரசுக்கு எதிராக மும்முரமாக களம் கண்டு வருகிறார் பிரியங்கா! இந்திராகாந்தியிடம் இருந்த அசாத்தியமான துணிச்சலை பிரியங்காவிடம் பார்க்க முடிகிறது. யாத்திரை அரசியல் யோகிக்கு டென்சனைத் தந்து மாத்திரை முழங்க வைக்கலாம். அதே சமயம் அடுத்தாண்டு வரும் சட்டப் பேரவை தேர்தலில் அலேக்காக உ.பியை அள்ளிவிட பிரியங்கா தந்துள்ள வாக்குறுதிகளை பார்த்தால் கதிகலங்குகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் இலவச அரசியல் தாக்கம் இந்திராவின் பேத்தியையும் விட்டுவைக்கவில்லையே…!

ஆர்.சரவணன், அயன்புரம், சென்னை

சமீபத்தில் பார்த்து ரசித்து லயித்த சினிமா..?

சர்தார் உதம்! உண்மையான தேசப் பற்று என்னவென்பதை உணர்த்தும் சர்வதேசத் தரமுள்ள படம்! மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய உன்னதமான திரைக் காவியம்!

ச.மணவாளன், செங்கல்பட்டு

எதிர்த்து நிற்கும் எடப்பாடியும், இரண்டுங் கெட்டான் பன்னீரும் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டி சசிகலா அதிமுகவில் அதிகாரம் பெறுவாரா?

டி.டி.வி.தினகரன் ஏற்படுத்தியுள்ள சிக்கல்களைக் களைய முடியுமானால், சசிகலாவிற்கு அதிமுகவில் உருவாகியுள்ள தடைகள் தானாக விலகும். அமமுக தலைவரான தினகரன் அதிமுகவில் சசிகலா மட்டும் பலம் பெறுவதையோ அல்லது அதிமுக பலம் பெறுவதையோ ரசிக்கமாட்டார்!

திருமலைராஜன், சுசீந்திரம், நாகர்கோயில்

உங்களுக்கு பிடித்த பின்னணி பாடகர் யார்?

டி.எம்.செளந்திரராஜன். அந்தக் குரல் ஏற்படுத்திய ஈர்ப்புக்கும், எழுச்சிக்கும் நிகராக வேறொன்றைச் சொல்ல முடியவில்லை. ஆண்மையின் கம்பீரம், உற்சாகத் துள்ளல், தெய்வீக உணர்வு, காதல் ரசம், கருணைக் குழைவு, புரட்சிக்கான எழுச்சி, உச்சரிப்பில் சொற்சுத்தம்.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். டி.எம்.எஸ் ஒரு சகாப்தம்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லின்கில் சொடுக்கி கேள்வியை பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time