தேசபக்தி என்பதை வியாபாரமாக, அரசியல் அதிகாரமாக, ஏன் போதையாகவும் கூட பலர் பயன்படுத்துகின்றனர்! இதையெல்லாம் பார்த்து அலுத்த சூழலில் அதை இயல்பான கண்ணோட்டத்துடன், நம்பகமான தன்மையில் சித்தரித்துள்ள வகையில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது சர்தார் உதம்.பொய்யான, பகட்டுத்தனமான தேசபக்தியாளர்களையும், அப்படியான கமர்ஷியல் படங்களையும் கண்டு சலிப்படைந்துள்ள நமக்கு இந்தப் படம் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது.
இன்று நினைத்தாலும் மனதை உலுக்கிப் போடக்கூடிய ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றுவிட சபதம் ஏற்று அதை பல வருட முயற்சிக்கு பிறகு என்று சொல்வதைவிட, தவத்திற்கு பிறகு கொன்றொழிக்கும் சர்தார் உதம் பற்றிய வரலாறு தான் படம்!
இதற்கு ஒரு தனிமனிதன் தன்னந்தனியனாக பஞ்சாபிலிருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா என்று கால் நடையாக நடந்து, பனிமலைகளை எல்லாம் கடந்து இறுதியாக லண்டன் சென்றடைந்து அங்கு பலதரப்பட்ட வேலையை பார்த்துக் கொண்டு கடைசியில் ஜெனரல் டயரிடமே வேலை பெற்று அவரது வீட்டிலேயே தங்கி, பல வாய்ப்புகள் அமைந்தும் காத்திருந்து பொது வெளியில் வைத்து அவரை சுட்டுக் கொல்கிறான் சர்தார் உதம்.
அப்போது பிடிபட்டு பலதரப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆளாகி விசாரிக்கப்படும் தருவாயில் அவன் ஏன் கொன்றான் என்பதை சொல்லும் நினைவோடையாக கதை சொல்லப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு முந்தைய பஞ்சாபையும், அதன் சூழலையும் கண்முன்னே காட்சிப்படுத்த ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர்! பகத்சிங் அவர் விதைத்துச் சென்ற அந்த விடுதலை எனும் புரட்சி நெருப்பு எப்படி அன்று இருந்தது என விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ் பெற்ற ஜாலியன்வாலாபாத் சம்பவம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை தனி மனிதனாக தூக்கி வந்து காப்பாற்ற சர்தார் உதம் செய்த அர்ப்பணிப்புள்ள செயல்பாடுகள், தவிப்புகள், ஆற்றாமைகள் வெகு நீளமாக எடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் மிக ஆழமாக மனதில் பதிகிறது. அவை சிலிர்க்க வைக்கின்றன! இவரைப் போன்ற பலர் திட்டமிட்டு வரலாற்றில் மறைக்கப்பட்டதை நாம் உணர வேண்டும்.
இதே போல 90 வருடத்திற்கு முந்தைய இங்கிலாந்து துறைமுகம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சாலைகள் கட்டிடங்கள் அன்றைய டிராம் பண்டிகள் ,கார்கள், அன்றைய மனிதர்களின் நடை, உடை பாணிகள் எல்லாவற்றையும் எப்படித்தான் காட்சிப்படுத்தினார்களோ அபாரம்! கலை இயக்குனர் பிரதீப் ஜாதவ்விற்கு ஒரு சல்யூட்.
காட்சிப்படுத்தலின் வாயிலாக பார்வையாளர்களை காலத்தோடும், கதைகளத்தோடும் ஒன்ற வைக்கும் ஒளிப்பதிவை செய்துள்ள அவிக் முகோபாத்யாவின் திறமைக்கு ஒரு சபாஷ்!
சர்தார் உதமாக நடித்துள்ள நடிகர் விக்கி கெளசல் மிக இயல்பாக, மிகைப்படுத்தாத நடிப்பில் மனதை கொள்ளை கொள்கிறார்! அவர் போலீஸ் சித்திரவதைகளுக்கு ஆளாகும் போதெல்லாம் நம்மை துடிதுடிக்க வைக்கிறார். அப்போதும் கூட தன்னை விசாரிக்கும் அதிகாரியிடம், ”உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. உங்க வேலையைத் தான் செய்கிறீங்க. என் நாடு அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெற வேண்டும்.” என்று தெளிவாக சொல்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு கதையை தேர்வு செய்தது, அதற்காக தேடல்களோடு நீண்ட நெடிய சலிப்பற்ற உழைப்பை நல்கியது. நல்ல டீம் வொர்க்கை சாத்தியப்படுத்தி உலகத் தரத்திலான ஒரு கலைப்படைப்பை வழங்கியது, மலினமான மசாலத்தனமான தேசபக்தி காட்சிகளை முற்றிலும் தவிர்த்தது, புத்தகங்களை வாசிக்க முடியாத பல கோடி மக்களுக்கு தெளிவான வரலாற்றுப் பாடத்தை போதித்தது..போன்ற பல காரணங்களுக்காக இயக்குனர் சுஜித் சிர்க்கார் மிகவும் போற்றத்தக்கவர். இந்த ஒரு படமே அவரை இந்திய சினிமா வரலாற்றில் என்றென்றும் நிலை நிறுத்தும்.
தன் லண்டன் தோழி, ”ஏன் உங்க நாட்டு சுதந்திரத்திற்குத் தான் போராடுவியா..? ஒட்டுமொத்த உலகத்திற்காக போராடா மாட்டியா?” என கேட்ட போது, ”இயலாது, முதல்ல நாங்க சமமாக நடத்தப்படணும், சமமாக இல்லாத நீயும், நானும் ஒன்றுபட்டு போராட முடியுமா?” என திட்டவட்டமாக சொல்கிறார்.
அவரது இளமைக் காலமும்,காதலும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது! அது எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் தொலைத்து விட்டு, இந்த லட்சியப் பயணத்தில் உழல்கிறார் என்பதைச் சொல்கிறது.
இன்று நாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் போலி தேசப்பற்று, மதம் சார்ந்த வெறியூட்டும் தேசப்பற்றை மெளனமாக கேள்விக்கு உள்ளாக்குகிறது படம். இன்று ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் திளைக்கும் அதிகார ஆளும் வர்க்கத்தின் மனதை ஒரு கணமேனும் சில காட்சிகள் உலுக்கி எடுக்கும்.
Also read
இந்தப் படம் பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் சமூகக் கூடங்களில், இளைஞர் சங்கங்களில், அலுவலக மண்டபத்தில் திரையிடப் பட வேண்டியதாகும். திரையிட்டால் மட்டும் போதாது, படத்தை பற்றி விவாதிக்கவும் களம் அமைத்து தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த படத்திற்கு வரிவிலக்கு அறிவித்து தியேட்டரில் திரையிட உதவலாம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
For latest news you have to go to see world-wide-web and on internet I found this site as
a best web site for most up-to-date updates.