ஆக்கிரமிக்கப்படும் போரூர் ஏரி, அலட்சியத்தில் அதிகாரிகள்!

-மாயோன்.

போரூர் ஏரி, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  பரப்பளவில் தற்போது பாதி அளவு தான் உள்ளது.தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படும் இந்த ஏரியைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அப் பகுதி  சமூக ஆர்வலர்கள்  வருந்துகின்றனர். பல லட்சம் மக்களின் தண்ணீர் ஆதாரம் பரிதாபகரமான நிலையில் உள்ளது!

சென்னை மாநகரைப் பொருத்தவரை 1970 இல் மக்கள் தொகை 30 லட்சம். இப்போது ஒரு கோடியை தாண்டிவிட்டது.

சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கும்?

தற்போதுள்ள  நிலைமைக்கு ஏற்ப தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்றால் இல்லை.

திருமழிசை போன்ற நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களில் துணை நகரங்களை உருவாக்கி மக்களை பரவலாக வாழவைக்கும் திட்டம் அந்த நோக்கில் தான் தீட்டப்பட்டது. நிதி பற்றாக்குறை, நீதிமன்ற உத்தரவு போன்ற காரணங்களை காண்பித்து இது போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசாங்கங்கள்  முன்வரவில்லை.

சென்னைக்கு மாதந்தோறும் தற்போது சுமார் ஒரு டி.எம்.சி தண்ணீர் தேவை. பூண்டி, சோழவரம் , புழல் ஏரி செம்பரம்பாக்கம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை- கண்ணன்கோட்டை ஏரி இவை ஐந்திலும் சேர்த்து சுமார் 12 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்.

இவை தவிர போரூர் ஏரி, போன்ற பல்வேறு சிறிய ஏரிகள் ஓரளவு குடிநீர் தந்து உதவுகின்றன. இந்த சூழலில்தான் இருக்கிற ஏரிகளையும் நீர் ஆதாரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை மிக வலுவாக வைக்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையான உறுதி காட்டி சென்னை உயர்நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆனாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அதற்கு ஒரு உதாரணம் போரூர் ஏரி.

இந்த ஏரியைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று ஏரியை ஒட்டி வசிக்கும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இருக்கிற ஏரியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுப் பார்த்துவிட்டு  கடைசி முயற்சியாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

சமூக ஆர்வலர்களான ஜெ.ஜெயவீரன் (ஜஸ்ட் கிரீன் பவுண்டேஷன் ), அழகர் செந்தில் (பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு இயக்கம்) ஆகியோர் நம்முடைய அறம் இணையத்தள இதழுக்கு அளித்த பேட்டி:

“சென்னை மாநகர எல்லைக்குள் இருக்கும் அழகிய ஏரிகளில் இதுவும் ஒன்று. போரூருக்கும் ஐயப்பன் தாங்கலுக்கும் இடையே பயணிக்கும் பொது மக்களுக்கு இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த ஏரிக்கு அது ஒரு எல்லை தான். அங்கு மட்டும் தான் வேலி அமைத்து பராமரிக்கிறார்கள்.372  ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்த இந்த ஏரியின் தற்போதைய பரப்பளவு வெறும் 250 ஏக்கர் தான். இந்த வேதனை ஒருபுறம் இருக்க, ஏரியின் உட்புற எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் எங்களைப்போன்ற சமூக ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த ஏரி நீரை குடிநீருக்கு பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது எவ்வளவு முக்கியம் கொடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும்.

தெள்ளியார் அகரம் மற்றும் ஐயப்பன்தாங்கலில் இருந்து  வரும் கழிவுநீர்  ஏரியில் கலந்து கொண்டிருக்கிறது. இதை  புகைப்படமாகவும் ,வீடியோவாகவும் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காண்பித்து புகார் செய்தோம் அப்படி இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உட்புறமாக பல இடங்களில் மலஜலம் கழித்து கால் கழுவுகிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகிறார்கள். அவற்றை எரிக்கிறார்கள். ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. குறிப்பாக, ஏரியின் ஒரு பகுதியை மடக்கிப்போட்டு  கல்லறையாக பயன்படுத்துகிறார்கள்.

கல்லறைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதையும் படங்களுடன் புகார் மனுவில் தெரிவித்தோம். ஒரு பயனும் இல்லை’’ என்றனர்.

வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் பண்டகசாலை மற்றும் கோட்டையை கட்டுவதற்கு சென்னையை  தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இங்கிருந்த அபரிமிதமான நீர்வளம் தான். சென்னையை உள்ளடக்கிய செங்கல்பட்டு ,”ஏரிகள் மாவட்டம் “என்றே அழைக்கப்பட்டது.

இங்குள்ள ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரை சுமந்து செல்லும் பணியைத்தான் அன்றைக்கும் இன்றைக்கும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் செய்து வருகின்றன.

ஆங்கிலேயர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் குளித்து, மகிழ்ந்து கொண்டாடிய கூவம் , அடையாறு ஆறுகள் தற்போது கழிவு நீரை சுமந்துகொண்டு கண்ணீர் வடித்து நிற்கின்றன.

சுதந்திரத்திற்குப் பிறகு நீர்நிலை மேம்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரிதாக எதுவும் நடைபெறவில்லை.

மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் இந்த மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களின் பரப்போ மூன்றில் ஒரு பகுதியாக சுருங்கிவிட்டது.

வடகிழக்கு பருவமழை பொய்க்கும் வருடத்தில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை சென்னை மாநகரம் சந்தித்து வருகிறது. கிருஷ்ணா நீர், காவிரி நீர்  மற்றும் கடல் சுத்திகரிப்பு நீர் ஓரளவு கிடைத்தாலும் பருவமழை தவறும்போது இவ்வளவு மக்களுக்கும் தண்ணீர் கொடுக்க தமிழக அரசு படாதபாடு பட்டதை நாம் பார்த்தோம்‌.

எந்த பகுதியிலாவது  கொஞ்ச நஞ்ச நிலத்தடி நீர் கிடைத்தால் அதையும் எடுத்துவந்தும்  எங்காவது கல் குட்டைகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதையும் கொண்டு வந்துதான் சமாளித்ததை கடந்த காலத்தில் பார்க்க முடிந்தது.

போரூர் ஏரியின் சுற்றுவட்டார மக்களிடம் பேசிய போது,

தமிழக முதல்வர்  ஸ்டாலின் இந்த ஏரியை பார்வையிட வந்தால்தான் விடிவுகாலம் கிடைக்கும் என்று நம்புகிறோம். உட்புறமாக ஏதாவது ஒரு எல்லை பகுதியில் நின்று ஏரியை அவர்  பார்வையிட வேண்டும்.

ஏரி குடிநீருக்கு பயன்படுவது ஒரு அம்சம்தான், இதை நம்பி நூற்றுக்கணக்கான சிறு உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் வாழ்கின்றன. சுற்றுச்சூழல் பேணப்படுகிறது.

ஏரியில் கழிவுநீர் கலக்க காரணமாய் இருப்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

போரூர் ஏரியை பாதுகாத்து இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

-மாயோன்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time