கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் கூவம் மணக்கும் கிரிகெட் வர்ணனை!

- ஹ. பிதாவுல்லாஹ் 

கேட்க காதுகள் கூசுகின்றன! மனம் அதிர்கிறது. அவ்வளவு மரியாதை குறைவான வார்த்தைகள்! இத்தனைக்கும் இவரே ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தவர் தான்! தன் இளைய சகாக்களைக் குறித்து இவ்வளவு தரக்குறைவாக பேசும் இவரை தடுக்க யாருமே இல்லையா..? வசீகரமான தமிழ் மொழியை வெறும் வசவு மொழியாக்கி வரம்பு மீறி பேசிக்  கொண்டிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு தீர்வே இல்லையா..?

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் வளைகுடா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் அதனை நேரலையில் நாம் பார்த்தோம்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வாகை சூடியது. இந்த கொரோனா 19 தொற்றுப் பரவல் காலத்தில் எந்தவிதமான பெரிய தொந்தரவும் இல்லாமல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி முடித்தது. அதற்கு முதலில் ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

இப்போது நான் தலைப்புக்குள் வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை நாம் பார்த்தோம்.

சடகோபன், பத்ரிநாத், ஆர், ஜெ. பாலாஜி ஆகியோர் சிறப்பாக வருணனை செய்தார்கள். தேவையான நேரத்தில் தகுந்த புள்ளி விவரங்களைத் தந்து ஆட்டத்தின் கோணங்களை நன்றாகவே விளக்கினார்கள். ஆர்.கே, பாவனா,   அபினவ் முகுந்த், எஸ்.ரமேஷ், நானியும் சிறப்பாகவே தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள்.

வானொலி காலத்தில் இருந்து கிரிக்கெட் வருணனை என்றால் பல ஆயிரம் நேயர்கள் தங்கள் காதுகளை ரேடியோவிடம் ஒப்படைத்து வாய் பிளந்து கேட்ட அருமையான காலம் ஒன்று இருந்தது.

அகில இந்திய வானொலி நிலையம் ஒலிபரப்பும் அந்த வருணனையை கூத்தபிரான், அப்துல் ஜப்பார், வல்லுநர் மணி என்றெல்லாம் பல ஆளுமைகள் அருமையான முறையில் கண்ணியமாக வருணனை செய்தார்கள். அதிலும் குறிப்பாக அப்துல் ஜப்பாரின் அழகான தமிழுக்கு கிரிக்கெட் தெரியாதவரும் மயங்கி நின்று கேட்பார்கள்.

ஸ்ரீ காந்த் இந்திய அணியின் உன்னதமான பிளேயர் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஒப்பனராக நின்று களமாடுவதில் வல்லவர் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அவர் ஐ.சி.சி.யின் தலைமைப் பொறுப்பில் இருந்து சிறப்பான பல ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பளிக்க வழிகோலினார் என்பதிலும் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

தற்போது முடிந்த ஐ.பி.எல் தொடரில் மகா மட்டமான ஒரு வருணனை என்று பட்டியலிட்டால்  முதலில் நிற்பவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீ காந்த் தான். சென்னைவாசிகளுக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், அவர் வாயை திறந்தாலே கூவம் நாற்றம்.

அவர் வருணனை செய்ய ஆரம்பித்தால்…, எவ்வளவு மட்டமாக பேசமுடியுமா அவ்வளவு  மட்டமாக பேசுகிறார். மரியாதை குறைவாக இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அவருக்கு யாரும் சொல்லி இருக்க மாட்டார்களா?

அவருடைய அரிய வருணனைக்கு சில சாம்பிள்கள் இதோ…

“டேய் ரபடா … சூப்பர் டா…”

”இந்த வார்னர் இருக்கானே, நல்ல பிளேயர் தான். ஆனா இவன் இன்னிக்கு சொதப்பரான்டா …”

”டேய் அஷ்வின் உனக்கு என்ன டா கேடு… ஏண்டா இப்படி போட்ற…”

”மொயின் அலி அட்ச்சான் பாரு… எகிரடிச்சு டா… சூப்பர் டா அலி”

”மச்சான் நீ அப்படியே ஆட்றா…”

”டேய்  சொறிவிட்டான் பாரு…”

”ஏன்டா கேட்ச்ச விட்ட… ஐயோ மச்சான் புடிச்சிருக்கலாண்டா…”

”நானா இருந்தா உன்ன உள்ளே விட்டிருக்க மாட்டேன்…”

”டே தோனி, இன்னும் கொஞ்ச நகர்ந்து ஆடுடா… வெங்கிடேஷ் அய்யர் இவன் எந்த ஊரு பா… நல்ல அடிக்கிறான்…”

”பர்குசன் சுத்த வேஸ்ட்… ரன்ன அள்ளி தர்றான்.”

”மச்சான் பும்ரா நல்லா குத்துடா …”

”கோலி நீ இப்ப காலிடா”

”டேய்… டேய்… மூக்கு மேலே ராஜா டா… கேட்ச் கேட்ச் புடிச்சான் பாரு”

”கேட்ச் விட்டியேடா… இவன் வீணா நிக்கிறான்…”

அவருடைய செவ்வாய் மலர்ந்து உதிர்த்த வார்த்தைகள் இவை. எந்த ஆட்டக்காரராக இருந்தாலும் சிறிதும் மரியாதை இல்லாமல் அவன், இவன், என்று சகட்டு மேனிக்கு வருணனை என்ற பெயரில் வாயில் வந்தபடி பேசுகிறார்.

திரு ஸ்ரீ காந்தை யாரும் மரியாதை கொடுத்து அழைக்க மாட்டார்களா?

இவர் ஆடும் போது யாராவது “ஸ்ரீ காந்த் பம்மறான் பாரு… வாசிம் அக்ரம் ஓடி வரும் போது இவனுக்கு தலையில் போட்ட 14 தையல் நினைவு வந்திடுச்சு போல… தூக்கி கொடுத்துட்டு பெவிலியனுக்கு திருப்பிட்டான்னு” சொன்னால் எவ்வாறு இருக்குமோ.., அப்படி இருக்கிறது இவருடைய மட்டமான தமிழ் வருணனை.

இவருக்கு தமிழ் பேசத் தெரியாவிட்டால் அமைதியாக இருக்கலாம் அல்லது அவருக்கு தெரிந்த மொழியில் பேசலாமே. ஏன் இப்படி கடித்து துப்புகிறார்.

இவரைப் போன்றவர்களை ஸ்டார் தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனல் எதற்கு பயன்படுத்த வேண்டும்? மொழி தெரியாத இவர்களை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.

இது போன்ற மட்டமான மொழி நடையில் இவர் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ  பேசுவாரா? அல்லது அதை அந்த மக்கள்தான் பார்த்துக்கொண்டு அமைதி காப்பார்களா?

டி 20 உலக கோப்பையிலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் இம்சை  தொடராமல் கிரிக்கெட்  ரசிகர்கள் நிம்மதியாக ஆட்டத்தை ரசிக்க வேண்டும்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் கவனிக்குமா… ‘இல்லை மச்சான் ஸ்ரீ காந்த் நீ நல்ல பேசறடா’  என்று அவர் வாய்க்கு அவல் தருமா?

சொல்வதை சொல்லியாகிவிட்டது.

ரஜினி மொழியில் சொல்லவேண்டுமானால், இப்படியே இவர் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் ”மூக்கு மேல ராஜா” என்று சொல்லிக் கொண்டு திரிய வேண்டியதுதான்.

கட்டுரையாளர்; ஹ. பிதாவுல்லாஹ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time