அரசுபள்ளிகளை பலவீனப்படுத்தவா இல்லம் தேடிக் கல்வி திட்டம்?

- ஈரோடு உமா

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 1

அரசுப் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன! இந்தச் சூழலில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டமாம்! அதற்கு 200 கோடி செலவாம்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே இத்திட்டம்! காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துகள் இதில் புதைந்துள்ளன..!

நவம்பர் 1 ஆம் தேதி, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை கல்வி பயிலும்  குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு! ஏறக்குறைய  19 மாதங்களாக பள்ளிக்கு நேரடியாக வராமல் போன குழந்தைகள் பள்ளிக்கு வரப் போகின்றனர் . இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் மிக விரைவாக நடந்து வருகின்றன . ஆசிரியர்கள், குழந்தைகள் , பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பினூடே அந்த நாளை எதிர்பார்த்துள்ள சூழல் ஒரு புறம்.

அதே வேளையில் மாநிலமெங்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான கற்றல் இடைவெளியை நிரப்புவதன் பொருட்டு இல்லம் தேடிக் கல்வி  திட்டத்தை செயல்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது .

பள்ளிகளின் வழியே கற்பிக்கும் முறை சார் கல்வி முறையும்  (Formal education system)  வீட்டிற்கே சென்று கற்பிக்கும் முறை சாராக் கல்வி முறையும்  ( Non- Formal education system) ஒரே நேரத்தில் செயல்பாட்டிற்கு வருகின்றன.

வயது வந்தோர் கல்வித் திட்டங்களே முறைசாராக் கல்வியின் வடிவங்களாக இருக்கும். ஆனால் பள்ளி வயதுக் குழந்தைகளின் கற்றலை முறை சார் கல்வி வழியே மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது தான் அறம். அது அரசின் பொறுப்பும் கூட .

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் சரத்துகளே இல்லம் தேடிக் கல்வி

நமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்த  ஊடகப் பேட்டியில், ’’இது தேசியக் கல்விக் கொள்கையா?’’ என்ற கேள்விக்கு , ‘’இல்லை முற்றிலும் தமிழகக் கல்வித் திட்டம்’’ என்றார்.

நல்லது, அப்படியானால் மகிழ்ச்சி தான்! ஆனால், இந்தத் திட்டத்தின் முழு வடிவமும் தேசியக் கல்விக் கொள்கையின் பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் இருக்கிறதே!

 பகுதி – 1- பள்ளிக் கல்வி

2 .அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் : கற்றலுக்குத் தேவையான அவசர மற்றும் அவசியமான முன்நிபந்தனைகள்   – என்ற தலைப்பில் 2.7 ஆவது சரத்து கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கொண்டுள்ளது

தற்போதைய கற்றல் நெருக்கடி அளவீட்டில் அனைவருக்குமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கத்தில் , உள்ளூர் சமூகம் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் பங்கேற்க நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படும். சமூகத்தின்   ஒவ்வொரு படித்த உறுப்பினரும் ஒரு மாணவர் அல்லது நபரை எவ்வாறு படிப்பது என சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொள்வார் எனில், அது மிக விரைவாக நாட்டின் அமைப்பை மாற்றிவிடும்!

அதேபோன்று 3 .இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் மற்றும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்தல் என்ற தலைப்பின் கீழ்

சரத்து 3.5 இல் தரப்படுவது …..

அனைத்து மாணவர்களுக்கும் கற்றலை எளிதாக்குதலும், சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முறைசார் மற்றும் முறைசாரா கல்வி முறைகள் எனப் பல வழிகளில் கற்றலை எளிதாக்கும் வகையில் பள்ளிக் கல்வியை விரிவாக்குவது அவசியம் ..

சரத்து 3.7 இல் தரப்பட்டுள்ளதோ

கற்றல் என்பது முழுமையான ஒருங்கிணைந்த மகிழ்வான ஈடுபாட்டுடன் அமைவதாக இருக்கவேண்டும் கற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தன்னார்வ சமூக மற்றும் முன்னாள் மாணவர்களைப் பள்ளியில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்டவற்றின் ஒருங்கிணைந்த திட்டம் தான், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்பதே உண்மை!

 

திட்டத்தின் போக்கு 

நம் தமிழக அரசுப் பள்ளிகளில் 1 – 8 ஆம் வகுப்பு குழந்தைகளின் எண்ணிக்கை தோராயமாக 34 லட்சங்கள். இத்தனைக் குழந்தைகளுக்கும் லட்சக்கணக்கில் தன்னார்வலர்கள் தேவைப்படுவர். முறையான ஆசிரியர் பயிற்சி பெறாத 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு , படித்த, 17 வயது பூர்த்தியடைந்த போதுமான கல்வித் தகுதியற்ற தன்னார்வலர்கள் கற்பிக்கிறார்கள்! மாலை வேளையில் பள்ளி முடிந்த பிறகு ஒரிரு மணி நேரம் என வரையறுத்து வாரத்திற்கு 6 மணி நேரம் குழந்தைகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணக்கு கற்பிக்க கூறப்பட்டுள்ளது.

நம் முன் நிற்கும் கேள்விகள் 

தன்னார்வலர்கள் யாராக இருப்பர்? இவர்கள் எந்த வித தகுதி உடையவர்களாக இருப்பார்கள் ? பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா ?  அவற்றுக்கு யார் பொறுப்பேற்பார்கள் ?

இருபது குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் எனில், இதை நல் வாய்ப்பாக கருதி சேவை செய்ய நினைப்பவர்களும் இருக்க கூடும்.  ஆனால், ஒரு மணி நேரத்தில் என்னதான் கற்றுக் கொடுக்க முடியும் ?

அரசுப் பள்ளிக் குழந்தைகளது கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டம் என்றால் , அரசுப் பள்ளிகள் சரியில்லையா ? சரியில்லை எனில், அதன் போதாமைகளை சீரமைக்க என்ன முயற்சி..? தனியார் பள்ளிக் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தவில்லை எனில், அரசுப் பள்ளிகளை பலவீனப் படுத்தவே இந்தத் திட்டமா ?

கொரோனா இடைவெளியில் பள்ளிக் கூடம் வராமல் வேலைக்கு செல்ல நேர்ந்த இளம் சிறார்களை இந்த விதமாக படித்தால் கூட போதுமானது என உணர்த்தும் முயற்சியா..? பள்ளிக் கூடம் வர இயலாத சிறார்களை பள்ளிக்கு அழைப்பது எப்படி..? என அரசு பள்ளி ஆசிரியர்கள் விழிபிதுங்கி நிற்கையில், வீடு தேடிக் கல்வித் திட்டம் என சிறார்களை முடக்காதா?

தேசியக் கல்விக் கொள்கையின் இந்த மேற்சொன்ன சரத்துகளை நம் அரசு நடைமுறைப் படுத்துகிறதா?  மற்றும் இது கொரோனா காலத்திற்கான திட்டம் என்றும் 6 மாத காலம் மட்டுமே செயல்படும் என்றும்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், இத்திட்டம் முழுக்க தேசியக் கல்விக் கொள்கையின் வடிவம் எனில், 6 மாத காலத்துடன் முடிந்து விடக் கூடியதல்லவே..? என்ற ஐயம் ஏற்படுகின்றது.

 இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் ?

நூறு நாள் வேலைத் திட்டத்தின் குழறுபடிகள் போல ஆயிரம் ரூபாய் கிடைப்பது லாபம் என சில தன்னார்வலர்கள் ஒப்பேற்றிச் செல்ல வாய்ப்புள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படாமல்  போகலாம் . ஏனெனில், கற்றல் இடைவெளி எவ்வளவு பெரியதாக இருந்தாலும்,  தன்னார்வலர்களை வைத்து சரி செய்ய முடிவெடுக்கலாம் .

தமிழகம் பள்ளிக் கல்வியில் 1 – 8 வகுப்பு மாணவர்கள் 100% . எண்ணறிவு ,எழுத்தறிவில் அடைவு எனப் பதிவேடுகள் உருவாக்கி ஆவணப்படுத்தலாம் .

பாலியல் துன்புறுத்தல்கள் , பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள்  குழந்தைகளுக்கு உருவாகலாம்.

காலையில் வேலைக்கு வா சம்பாதிக்கலாம் , சாயங்காலம்  தன்னார்வலர்களிடம் படிச்சுக்கலாம் என பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்தலாம்.

ஒரு கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்று பள்ளிகள் மூடப்படலாம்.

 தற்போதைய தேவை என்ன? 

பள்ளிக் கல்வி தரமான கல்வியாக உருவாக வேண்டுமெனில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குறிப்பாக  ,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் , ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் . ஏனெனில், தொடக்கப் பள்ளிகள் பெரும்பாலும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகவே இருக்கின்றன.

நவம்பரில் பள்ளிக்கு மாணவர்கள் வரும் போது சமூக இடைவெளியுடன் அவர்களை அமர வைத்து, பாதுகாப்புடன் கற்பிக்க  வகுப்புக்கு ஒர் ஆசிரியர் கட்டாயம் வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் இருந்தாலே பெருமளவு கற்றல் இடைவெளி நீங்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபட அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

முறை சார் கல்வி முறையின் அடிப்படைக் கட்டமைப்பான அரசுப் பள்ளிகளை தரப்படுத்த முயற்சிகள்  வேண்டும். அது தான் அரசின் தர்மம் . கட்டமைப்பு , ஆசிரியர் நியமனம்கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல் , கற்றல் சூழலை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் மிக அவசியம்.

ஒரு மனிதன் சமூகத்தைக் கற்றுக் கொள்ளும் இடமும், சமூகத்திற்கானவனாக வார்த்தெடுக்கப்படும் இடமும் பள்ளிகள் தான். பள்ளிகளை நோக்கிக்  குழந்தைகள் வர வேண்டுமேயன்றி வீட்டை நோக்கி பள்ளிகள் செல்வது ஆரோக்கியமாகாது.

முற்போக்கு பிம்பத்தைக் கொண்டதாக தெரிந்தாலும், சில நல்ல நோக்கங்கள் இருந்தாலும், இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் விளைவு ஆபத்தாகலாம்! ஆகவே, அரசு இதற்கு செலவழிக்கும் 200 கோடி ரூபாய் நிதியை அரசு பள்ளிகளுக்கு செலவிடுவதே சிறந்த முதலீடு. அரசை குறை சொல்வதல்ல, நமது நோக்கம். நியாயமான அச்சங்களையே வெளிப்படுத்தி உள்ளோம்! நல்லதே நடக்கட்டும்.

கட்டுரையாளர்; ஈரோடு உமா 

 கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்! அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர்.                ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time