அமெரிக்காவில் இந்தியர்களிடையே சாதியப் பாகுபாடும்,சர்ச்சைகளும்! கமலா ஹாரிசின் நிலைபாடு என்ன?

- சிவ.மணிமாறன், பத்திரிகையாளர்

“இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க”

இந்தக் குரலை நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

உயர்தொழில்நுட்பம் படித்து, கனவு நாடான அமெரிக்காவுக்குச் சென்று, அதுவும் முன்னேறிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தியர்கள் சாதிப் பாகுபாடுகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

“இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க” என இதனை எளிதாக கடந்துவிட முடியாது.

அமெரிக்க நாட்டில் உள்ள மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா, இந்த மாகாணத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை, சிஸ்கோ என்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு எதிராக அண்மையில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில், தலித் பொறியாளருக்கு எதிரான சாதி  பாகுபாட்டைத் தடுக்க நிறுவனம் தவறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளது.

சிஸ்கோ நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் சுந்தர் ஐயர். இவருக்கு கீழ் ரமணா கொம்பெல்லா என்பவர் பணியாற்றுகிறார். இவரைப் பற்றி விசாரித்த சுந்தர் ஐயர், ஐ.ஐ.டி.யில் பொதுப்பிரிவில் சேராமல், இடஒதுக்கீடு பிரிவில் கொம்பெல்லா சேர்ந்திருப்பதை அறிந்துகொண்டதுடன் அவருடைய சாதியையும் தெரிந்துகொள்கிறார். உடனே தம்முடைய நட்பு வட்டத்தில் இந்தத் தகவலை பரப்புகிறார். பிறகு என்ன? சிஸ்கோவில் கொம்பெல்லா இடம்பெற்றிருந்த குழுவில்(team) புறக்கணிக்கப்படுகிறார். பணியில் நீடிக்க முடியாத நிலை உருவாக்கப்படுகிறது. அதுவரை உயர்தொழில்நுட்ப வல்லுநராகத் தெரிந்த கொம்பெல்லா, அதன் பிறகு தலித்தாக அடையாளம் காணப்படுகிறார்.

சிஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களில் பிராமணர்கள் 90 விழுக்காடு பணியாற்றுவதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில், அமெரிக்காவில் இந்தியருக்கு எதிராக நடந்துள்ள அநீதியான இந்தப் பாகுபாடுக்கு இந்திய ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த சலசலப்பும் எழவில்லை. The wire போன்ற ஆங்கில வலைத் தளங்களில் மட்டும் கட்டுரைகள் வெளிவந்தன.

ஆனால், சிஸ்கோ வழக்கு தொடர்பாக இந்தியர்களிடமிருந்தும், இந்தியாவிலிருந்தும் வந்த எதிர்வினைகள் கவனிக்கவேண்டியவை. ‘புகார் கூறியவர் நடிக்கிறார்’ என்றும், ’’தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவை’’ என்றும் சில தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் கூறினர்.’’ இடதுசாரிகளும் தாராளவாதிகளும் பரப்பிவிடும் வதந்தி’’ என்றும் சிலர் சாடினர்.

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களிடையே சாதிப் பாகுபாடு இல்லை என இவர்கள் மறுப்பதால், அங்கு பிரச்சனையே இல்லை என்று  மாயத் தோற்றம் உருவாக்குகின்றனர்!

தொழில்நுட்ப மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ’ஈக்வலிட்டி லேப்ஸ்’, அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் தெற்காசிய சமூகத்தினரிடம் நிலவும் சாதி பாகுபாடு குறித்து 2016 ஆம் ஆண்டில் ஆய்வு நடத்தியது. 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆய்வில், அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் பல வெளிவந்தன. 25 விழுக்காட்டினர் சாதி அடிப்படையில் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளது, பணியிடங்களில் பாகுபாட்டுடனும் நியாயமற்றும் 67 விழுக்காடு தலித் பொறியாளர்கள் நடத்தப்பட்டுள்ளதும், உயர்சாதியினர் கூட்டு சேர்ந்து புறக்கணிப்பதாகவும் 40 விழுக்காட்டினர் அந்த ஆய்வில் தெரிவித்திருந்தனர்.

’ஈக்வலிட்டி லேப்ஸ்’ மேற்கொண்ட ஆய்வு முறையையும், முடிவுகளையும் அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் ஏற்க மறுத்துள்ளன.  அமெரிக்காவில் இந்துக்கள் சாதி ரீதியாக பிளவுபட்டிருப்பதாகக் கூறுவது தவறு என்றும், சாதி என்பதே இனிமேல் பொருந்தாது என்றும் அந்த அமைப்புகள் கூறின.

உண்மை என்ன?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது சிஸ்கோ வழக்கு, இது முதலாளியால் துன்புறுத்தப்பட்ட தனி வழக்கு அல்ல, மிகவும் ஆழமான நோயின் அறிகுறி என்கிறது ஈக்வலிட்டி லேப்ஸ்.

இந்து அமெரிக்க அறக்கட்டளை, இந்து வழக்கறிஞர்கள் அமைப்பு போன்றவையும், வடஅமெரிக்க நாயர் சர்வீஸ் சொசைட்டி போன்றவையும் சாதிய பாரம்பரியத்தை பெருமையாகவே வெளிப்படுத்தி வந்திருப்பதை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க சிவில் உரிமை சட்டத்தின் 7 வது பிரிவைப் பயன்படுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.  1960 களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தலைமையிலான போராட்டத்தின் விளைவாக கொண்டுவரப்பட்ட சட்டம் இது. நாடு, இன, மொழி, நிற பாகுபாடுகளை கடைப்பிடிப்பதற்கு எதிரானது இந்தச் சட்டம். இதன் கீழ் சாதி பாகுபாடு வராது.

சாதி என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. எனவே சாதி பாகுபாடுகளைத் தடுக்கும் எந்தவொரு சட்டமோ சட்டப்பிரிவோ அமெரிக்க சட்ட அமைப்பில் இடம்பெறவில்லை. அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்துக்கு இருக்கும் இந்தப் பிரச்சனை குறித்து அமெரிக்கர்களுக்கான புரிதல் புதிதானதாகும்!

அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களிலும் சமூக அமைப்புகளிலும் நிலவும் நுட்பமான சாதி பாகுபாடுகளை ’புலிட்சர் மையம்’ தயாரித்த ‘அமெரிக்காவில் சாதி’ தொடர் படம்பிடித்துக் காட்டுகிறது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இரண்டாவது இடத்தை இந்திய மாணவர்கள் பிடித்துள்ளனர். ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களின் சாதிய இயங்குநிலையைப் புரிந்துகொண்டு உரையாடத் தொடங்கியுள்ளன.

சிஸ்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கு, நவீன சாதிய பாகுபாடுகளை அமெரிக்கா புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு, அமெரிக்க சட்ட அமைப்பின் பாகுபாடு வரையறைக்குள் சாதியை கொண்டுவருவதற்கு உதவக்கூடும்.

நவீன சாதிய பாகுபாடுகள் சிஸ்கோ பன்னாட்டு நிறுவனத்தில் மட்டுமல்ல, கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் உட்பட பல்வேறு நிறுவனங்களிலும் நிலவுவதாக புகார்கள் உள்ளன.

சாதியப் பாகுபாடு நிலவுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தின் செனட்டர் தான் கமலா ஹாரிஸ். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இவர் களமிறங்கியிருக்கிறார். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவராகவும், தாய், இந்தியாவைச் சேர்ந்தவராகவும் இருந்தாலும், அவர் பிறந்தது கலிஃபோர்னியாவில்தான். கருப்பின மக்கள் பிரச்சனைகள் குறித்து கவனத்துடன் இருக்கும் கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் நிலவும் சாதிய பாகுபாடு பற்றி இதுவரை எதுவும் பேசியதில்லை. அவர் செனட்டராக இருக்கும் கலிபோர்னியா மாகாண அரசு புகார் அளித்திருந்தும், கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்படைய வைக்கிறது.அமெரிக்காவில் இந்தியர்களிடையே நிலவும் இந்த சாதிப்பாகுபாடு குறித்து மற்ற அமெரிக்கர்களுக்கு பெரிதாக தெரியாமல் போயிக்கலாம்! ஆனால், தன் தாய்வழியில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக தன் தாய் வழியில் அறியப்பட்டிருப்பதால் நிச்சயம் இதற்கு அவர் எதிர்வினையாற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய எதிர்பர்ப்பு! கமலா ஹாரிஸ் செனட்டாராக இருக்கும் மாகாணத்திலேயே இவை நடந்திருப்பதால் அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! ஆனால்,இந்தியர்களிடையே நிலவும் சாதிப்பாகுபாடு குறித்து இது வரை எதையுமே அவர் வெளிப்படுத்தாமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது?

கொரோனா வைரஸ் கண்டங்கள், நாடுகளைக் கடந்தும் வடிவத்தை மாற்றி வீரியமடைந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதைப்போன்றதுதான் சாதி. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றாலும், அதிகாரத்தையும் பதவியையும் தக்கவைப்பதற்கான அம்சமாக சாதியை சுமந்து செல்கின்றனர் சிலர்! இவர்கள் படித்த உயர்கல்வியும் தொழில்நுட்ப அறிவும் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பது வேதனையானது என்பதுடன், ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியதும்கூட!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time