திராவிடம் பாதி, இந்துத்துவம் பாதி தான் திமுகவா..?

- சாவித்திரி கண்ணன்

சிபி, பேரளையூர் கடலூர்

திமுகவில் அதிக உறுப்பினர்கள் இந்துகள் என்றது ,பதவியேற்ற பின் பார்ப்பனர்களைக் கொண்டு ஹோமம் நடத்தியது,பாரத மாதாவிற்கு பூசை செய்த அமைச்சர்கள் செயல் பற்றியும், RSS மக்கள் சேவை அமைப்பு என்ற மா. சுப்பிரமணியனின் கருத்துப் பற்றியும் எதுவும் பேசாதது, தமிழக பாசக எதற்குப் போராடினாலும் அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவது ,அறநிலையத்துறை கல்லூரியின் பேராசியர் வேலைக்கு இந்துகள் மட்டும் விண்ணப்பிக்க கோரியது போன்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி?

திமுகவில் இந்துக்கள் அதிகமாக இருப்பது ஒரு யதார்தமான உண்மை! அந்த உண்மையை சொன்னதே தவறாகாது. கோயில்கள் திறப்பு என்பது கொரோனா கிட்டதட்ட முடிவுக்கு வந்த நிலையில், எடுத்த முடிவாகவே பார்க்கிறேன். காக்கா உட்கார்ந்து பனம்பழம் விழுந்த கதையாக அதை பாஜகவினர் உரிமை கொண்டாடுவது அவர்களின் அரசியல்!

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வரிசையில் சிலவற்றை மேலும் சேர்க்க முடியும். மக்களும் இந்த மாற்றங்களை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

மற்றபடி, ஸ்டாலின் தலைமையிலான திமுக என்பது, மிருகம் பாதி மனிதன் பாதி என்பது போல திராவிடம் பாதி, இந்துத்துவம் பாதி..என்ற புதிய தோற்றத்தை காட்டுகிறது!

கூழாங்கல் படம் ஆஸ்கார் விருது திரையிடலுக்குத் தேர்வானது குறித்து?

கடந்த இருபதாண்டுகளில் இரண்டே தமிழ்ப் படங்கள் தான் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒன்று விசாரணை, மற்றொன்று கூழாங்கல்! போட்டியில் சர்தார் உதம் உள்ளிட்ட பல உன்னத படங்களை பின்னுக்கு தள்ளி இது தேர்வாகியுள்ளது என்பதே வியப்பளிக்கிறது. இது பல சர்வதேசிய பட விழாக்களில் கலந்து சில விருதுகளையும் வென்றுள்ளது. தமிழ் படைபாளிகள் பலர் இந்தப் படத்தை மனமார பாராட்டி வருகின்றனர். எஸ்.வி.வினோத்ராஜ் என்ற புதிய இளம் இயக்குனரை நாமும் பாராட்டுவோம்.

ராஜேந்திரன், மயிலாடுதுறை

ஆறுமுகச்சாமி கமிஷனால் எங்கள் பெயரே கெடுகிறது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கொந்தளித்துள்ளதே..?

95 சதவிதித விசாரணை முடிந்த நிலையில் அப்பல்லோ ஒத்துழைப்பு தந்திருந்தால் முடிவு என்றோ வந்திருக்கும். ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை 33 மாதங்களாக முடக்கியுள்ளதன் மூலம் அப்பல்லோவின் மீதான மக்களின் சந்தேகம் மேன்மேலும் வலுப்பட்டுவிட்டது! ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை வராமலே தன் பெயரை தானே ஆனவரை கெடுத்துக் கொண்டது அப்பல்லோ!

ஜெயசீலன்,சென்னை

தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு கொடுக்கப்பட்டது பற்றி?

சினிமா பற்றியே சிந்தனையே இல்லாதிருந்து ஒரு காலகட்டத்தில் அதை கஷ்டப்பட்டு தானே அறிந்து உணர்ந்து முதல் இன்னோவேஷனாக சொந்த செலவில் சினிமா எடுத்த அரும்,பெரும் சாதனையாளர் தாதாசாகேப்! அதனால் தான் இந்திய சினிமாவின் தந்தை எனப்படுகிறார். ஆகவே, வித்தியாசமான முன்னோடி முயற்சியை செய்த மகத்தான ஒரு படைப்பாளிக்கு தருவதே சிறப்பு. ரஜினிக்கு தந்தது ஏற்புடையதல்ல.

எல்.ஏகாம்பரம், ஓரிக்கை,காஞ்சிபுரம்

ஆங்கில மருத்துவத்தை விமர்சித்த ராம்தேவை விடாமல் துரத்தி வழக்கு போடுகிறர்களே மருத்துவர்கள்?

ஆங்கில மருத்துவத்தினால் ஏராளமான கரோனா நோயாளிகள் உயிர் இழக்கின்றனர். அது முட்டாள்தனமானது – இது ராம்தேவின் கருத்து. இந்தக் கருத்தில் லட்சக்கணக்கானோர் உடன்படலாம், மறுக்கலாம்.

அவரைத் தண்டிக்க கோருவது ஏன்? அவரைத் தண்டித்துவிட்டால் அக் கருத்து பொய்யாகுமா? அல்லது ஒருவரின் கருத்து கோடிக்கணகான மக்கள் அனுபவ ரீதியாக உணர்ந்த ஒன்றை மாற்றிவிடுமா?

கோபம் தனக்குத் தானே குழிபறிக்கும் என்பது போல, தங்களுக்கு எதிரான அவரது கருத்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பல கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளனர் அலோபதி மருத்துவர்கள்!

பா. முருகேசன், அரசரடி, மதுரை

தமிழ் தெரியாதவர்களும் தமிழ்நாடு அரசு பணிக்கான தேர்வை எழுதலாம் என்ற அரசாணை ஜெயலலிதா மறைவை அடுத்து அடிமை அதிமுக ஆட்சியில் ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதே அரசாணைப்படியே தற்போதும் திமுக ஆட்சியில் அரசு பணிக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றனவே..?

உண்மை தான்! முதலமைச்சர் ஸ்டாலின் அந்த அரசாணையை ரத்து செய்யாவிட்டால், இதுவும் ஒரு அடிமை ஆட்சி தான் என்ற எண்ணம் வலுப்பட்டுவிடும்.

ச. கயல்விழி, விருகம்பாக்கம், சென்னை

தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என்கிறாரே விஜயகாந்த்?

 ஓகோ.. அப்படியா? அப்படின்னா.., ஏற்கனவே அது தங்களால் அழிக்கப்பட்டுவிட்டதை இன்னும் அறியாதவராகவே விஜயகாந்தை வைத்துள்ளனர் அவரது மனைவியும், மச்சானும்!

ரத்தினவேலு, ராசிபுரம், நாமக்கல்

கோயில்களில் ஜோதிடர்களை ஆலோசகர்களாக நியமிக்க வேண்டும் என்கிறாரே காஞ்சி பீடாதிபதி?

பிரச்சினைகளில் உழலும் மக்களை ஜோதிடத்தின் வழி பரிகார பூஜை, புனஸ்காரங்கள் செய்யச் சொல்வதன் மூலம் பிராமணர்களின் வருமானத்திற்கு ஜோதிடர்கள் உதவக் கூடும்!

வீடு தேடிக் கல்வித் திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமா?

ஒன்றிய பாஜக அரசின் சமக்ரா சிக்‌ஷ்யா அபியான் திட்டத்தின் நிதி தான் இத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளதை தான் நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள்! மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக விவசாயிகள் எதிர்த்த போது, அந்த பெயரைத் தவிர்த்துவிட்டு அந்த பயிர்களை திணித்த கதை தான் இது.

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லின்கில் சொடுக்கி கேள்வியை பதிவு செய்யலாம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time