கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறார்! இதன் மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என முதல்வர் உள்ளிட்ட பலரும் நம்புகின்றனர். முதலில் இது சாத்தியமா? என்பதே கேள்விக்குறி தான்! இதன் உண்மை நிலைமையினை விரிவாகப் பார்த்தால் எத்தனை சர்ச்சைகள் ,சவால்கள்,சங்கடங்கள் புதைந்துள்ளன..என வியப்பளிக்கிறது!
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்திய நதிகளை ஒருங்கிணைத்து – பல மாநிலங்களில் பெருமழை வெள்ளச் சேதங்களைக் குறைக்கவும், நாட்டின் ஒரு பகுதியில் கிடைக்கும் மிகை நீரை வறட்சியுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலங்களுக்குத் திருப்பவும் திட்டமிட்டனர்.
அதன் வழி தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை (National Water Development Agency – NWDA) – வட இந்தியாவில் 14 நதி இணைப்புகளையும், தென்னிந்தியாவில் 16 நதி இணைப்புகளையும் கண்டறிந்து அறிக்கை அளித்தது. அதன்படி தென்னிந்தியாவில் திட்டமிட்ட நதிநீர் இணைப்புகளில் தலையாயது – மகாநதி – கோதாவரி – காவிரி – வைகை – குண்டாறு இணைப்பாகும். இதிலும் (மகாநதியில் கிடைக்கப் பெறும் மிகை நீரளவு இன்னும் மிகச் சரியாக இறுதி செய்யப்படாமையால்) முதற்கட்டமாக கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி – வைகை – குண்டாறு இணைப்பைச் செயற்படுத்த தேசிய நீர்வளமேம்பாட்டு முகமை – விரிவான திட்ட அறிக்கையினை மார்ச் 2019 இல் அளித்துள்ளது.
இவ்வறிக்கையின்படி கோதாவரி நதியில் மிகைநீராக மதிப்பிடப்பட்ட 7000 மில்லியன் கன மீட்டர் (247 டிஎம்சி) நீரைத் திருப்பி – தெலுங்கானாவிற்கு 83 டிஎம்சி ஆந்திராவிற்கு 81 டிஎம்சி மற்றும் தமிழ்நாட்டிற்கு 83 டிஎம்சி வழங்கிடக் கணக்கிடப்பட்டுள்ளது.
கோதாவரி நதி இஞ்சம்பள்ளியிலிருந்து காவிரி கல்லணை வரை 1251.59 கிமீ தொலைவிற்குத் திறந்த கால்வாயாகவும் 21.87 கிமீ தொலைவிற்குச் சுரங்கங்கள் வழியாகவும் நீரைக் கொண்டுவர… 2018 – 2019 விலை வீதத்தில் ரூ.60,361 கோடி திட்டச் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. (2021 -2022 ஆண்டு விலை வீதம் என்றால் திட்டச் செலவு ரூ.80,000 கோடி ஆகலாம்) நிறைவேற்ற 5 ஆண்டுகள் என்றால் ரூ.97,2,00 கோடிக்குப் போகும். இப்படித் திருப்பப்படும் மிகை நீரானது 200 டிஎம்சி பாசனத்திற்காகவும் 18.40 டிஎம்சி தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவும் 13.57 டிஎம்சி குடிநீர் வழங்கலுக்காகவும் பிரித்து வழங்கப்படும். இதில் 38 கிளைக்கால்வாய்கள் 10 7 நேரடி மதகுகள் மூலம் பாசனத்திற்குரிய தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு 9.38 லட்சம் ஹெக்டர் (23.18 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டில் சூன் முதல் அக்டோபர் வரை143 நாட்களுக்கு இத்தண்ணீர் திருப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விணைப்புக் கால்வாயில் திருப்பப்படும் நீரினால் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 7,94,733 ஹெக்டேர் (19.64 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதிபெறும் என்றும் கூடுதல் விளை பொருள்களின் மதிப்பு ரூ.7968.89 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
கோதாவரி – காவிரிக் கால்வாய் வரும் வழித்தடங்கள் எவை ?
கோதாவரி ஆற்றில் புதியதாக ஏற்படுத்தப்படும் ஜனம்பெட் நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் செல்லக் கீழ்க்கண்ட வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன.
# கோதாவரி (இஞ்சம்பள்ளி ) – கிருஷ்ணா (நாகார்ஜூனா) இணைப்பு
# கிருஷ்ணா (நாகார்ஜூனா) – பெண்ணார் (சோமசீலா) இணைப்பு
# பெண்ணார் (சோமசீலா) – காவிரி (கல்லணை) இணைப்பு
(தமிழ்நாடு அரசு – கல்லணைக்குப் பதிலாகப் புதிதாக மாயனூரில் கட்டியுள்ள புதிய தடுப்பணைக்கு இணைக்குமாறு கோரியுள்ளது).
மத்திய நீர்வள ஆணையம் மதிப்பீட்டின்படி. 50% நம்பிக்கை அடிப்படையில் கோதாவரியில் 247 டிஎம்சிக்குக் குறைவின்றி தண்ணீர் கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. 1252கிமீ தொலைவுள்ள திறந்த கால்வாய் வழித்தடங்கள் கோதாவரி, கிருஷ்ணா,பெண்ணார், பாலாறு ரூ காவிரி வடிநிலப்பகுதிகளில உள்ள மாவட்டங்கள், தெலுங்கானாவில் பத்ராத்திரி,கோத்த குடம், கம்மம், வாரங்கல்,சூர்யா பெட், நால்கோண்டா ஆந்திராவில் குண்டூர், பிரகாசம், நெல்லூர்,சித்தூர், தமிழ்நாட்டில் திருவள்ளுர், காஞ்சிபுரம். திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , திருச்சி முதலியன இக்கால்வாய் நீரினால் பயன்பெறும்.
தமிழ்நாட்டிற்குள் வரும் போது வழியில் நீரிழப்பு போக 83 டிஎம்சி பெறஅகலமும் 10 மீட்டர் உயரமும் கொண்ட திறந்த கால்வாய் தேவைப் படும். தெலங்கானா,ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு பாசன வசதி பெறும் கூடுதல் நிலப்பரப்பு :
தெலங்கானா – 137150 ஹெக்டேர் ; (3,38,898 ஏக்கர்)
ஆந்திரப் பிரதேசம் : 492281 ஹெக்டேர் (12,16,426 ஏக்கர்) 10
தமிழ்நாடு : 308721 ஹெக்டேர் (7,62,850 ஏக்கர்)
மூன்று மாநிலங்களிலும் மொத்தப் பரப்பு : 9,38,152 ஹெக்டேர் (23,18,174 ஏக்கர்)
இந்த அளவுத் தண்ணீரைக் கொண்டு செல்லும் வழித்தடத்திலுள்ள இயல்பான மட்ட அளவுகளைக் கருதி 4 கட்டங்களில் 196.50 மீட்டர் உயரத்திற்கு நீரேற்றமும் செய்ய வேண்டி வருகிறது. இதற்காக நீரேற்றும் நிலையங்களையும் புதிதாக நிறுவ வேண்டியிருக்கிறது.
இத்திட்டத்தில் உள்ள சிக்கல்கள்;
இத்திட்டம் இன்றைய அறிவியல் – பொறியியல் தொழில்நுட்பத்தில் நிறைவேற்றத்தக்கதே. எனினும் இத்திட்டத்தைச் செயற்படுத்தும் போது சில சங்கடங்கள் ஏற்படும்.
கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் கொண்டுவரும் கால்வாயின் மொத்த நீளம் 1,252கிமீ. வரும்போது நீர் ஆவியாதலினால் 17.50 டிஎம்சி அளவு குறைந்துவிடும். இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணாநதியில் கிடைக்கும் நீரளவில் பற்றாக்குறையளவு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே 12.16 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசனம் செய்திட ஆந்திராவிற்கு ஒதுக்கப்பட்ட நீரைவிடக் கூடுதலாக எடுத்துக்கொள்வார்கள்.திறந்த கால்வாய் நீரை சட்டத்திற்குப் புறம்பாக நீரிறைப்பிகள் மூலம் இரவு நேரங்களில் கடத்தும் வேலைகள் நடக்கும். எனவே தமிழ்நாட்டிற்கு உரிய பங்காகிய 83 டிஎம்சி அளவு நீர் நிச்சயமாக வராது. (இப்போது ஆந்திராவின் கண்டலேறு – கிருஷ்ணா கால்வாயில் கண்டலேறு அணையிலிருந்து 2000 கன அடி விநாடி நீரைத் திறந்துவிட்டால் தமிழ்நாட்டு எல்லையில் (பூண்டி) 700 அல்லது 800 கன அடி ஃவிநாடி அளவே வருகிறது என்பது இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது).
மகாநதியின் துணைநதியான இந்திரவதி ஆற்றின் மிகை நீர் இன்னும் மிகச் சரியாக இறுதி செய்யப்படவில்லை. ஆனால் NWDA அறிக்கை அந்த அளவை 760 டிஎம்சியாகக் கணக்கில் கொண்டு 247 டிஎம்சி தண்ணீரை எளிதாகத் திருப்பலாம் என மதிப்பிட்டுள்ளது. எனினும் ஒடிசா அரசு இத்திட்டத்திற்கு இந்நாள் வரை ஒப்புதலளிக்கவில்லை.
தெலங்கானா அரசுக்கு திருப்தியில்லை
அதைப்போல தெலங்கானா அரசு அண்மைக்காலங்களில் பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது. கோதாவரி நதியிலிருந்து 195 டிஎம்சி நீரை இறைப்பிகள் மூலம் மேலேற்றும் (ரூ.1.20 லட்சம் கோடி செலவில்) காளேஸ்வரம் நீரேற்றும் திட்டம் 2016-2019 இல் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தேவை கருதித் தெலங்கானா அரசும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்திவருகிறது.
இத்திட்டத்தின் தோராய மதிப்பீட்டுத்தொகை ரூ.97,200 கோடி (5 ஆண்டுகளில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது) ஆனால் உண்மையில் நிறைவேற்றிட (நிலம் கையகப்படுத்தல், சுரங்கங்கள் அமைத்தல் முதலியவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகும். திட்டமதிப்பும் ரூ.1,45,800 கோடியாக உயரும். இதில் தமிழ்நாட்டின் பங்காக ரூ.48,600 கோடி அளவுக்கு இருக்கும். இதுவன்றிக் கால்வாய் செயற்படுத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு என ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு மேல் ஆகும்.
சூழல் பாதிப்பு, மக்கள் வெளியேற்றம்
இம் மாபெரும் அளவு தண்ணீரைத் திருப்புவதால் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்படுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 29,800 ஹெக்டேர் (பட்டா நிலம் 22,483 10 வனநிலம் 2775 10 அரசு புறம் போக்கு 4622 ஹெக்டேர்) நிலத்தைக் கையகப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கில் அந்நிலங்களில் வாழும் மக்களைப் புலம் பெயர்த்து புதிய குடியிருப்புகளுக்கு மாற்றுவதற்குப் பெரும் எதிர்ப்பு எழும். காட்டுயிர்களுக்கும் பாதகம் ஏற்படுமென்று தெரிவிக்கின்றனர். எனவே திட்டச் செயலாக்கக் காலம் 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட ஆகலாம்.
48,600 கோடி செலவு தேவையா? மாற்று என்ன?
இத்திட்டத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகக் கிடைக்கவிருக்கும் தண்ணீரின் அளவு 83 டிஎம்சி தான்! அதுவும் காவிரிக்கு வரும்போது 48 டிஎம்சி மட்டுமே. இந்தக் குறைவான அளவு நீரைப்பெற தமிழ்நாடு அரசு ஏன் ரூ.48,600 கோடிப் பணத்தைச் செலவழிக்க வேண்டும்?
2001 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு நியமித்த டி.எஸ்.விஜயராகவன் வல்லுநர்குழு, தமிழ்நாட்டு ஆறுகளிலிருந்து 4 ஆண்டுகளுக்கொரு முறை 259.76 டிஎம்சி அளவுக்கு மிகை வெள்ளநீர் கிடைக்கிறது . இது பயன்படுத்தப்படாமல் கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி யை 10000 பெரிய ஏரிகளைத் தூர்வாரி 1 மீட்டர் ஆழப்படுத்தினால் கூடுதலாக 150 டிஎம்சி தண்ணீரைச் சேமித்துவைக்கலாம்.
இவ்வாறே பெரிய அணைக்கட்டுகள் , நீர்த்தேக்கங்கள் – 25க்கு மேற்பட்டவைகளில் பல ஆண்டுகளாகப் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி – மேலும் 1.00 மீட்டர் ஆழப்படுத்தினால் குறைந்தது 50 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாகத் தேக்கி வைக்கமுடியும். தமிழ்நாடு அரசு வரும் ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள்,தரைகீழ்த் தடுப்பணைகள் மற்றும் நீர்மின் உற்பத்திக்குக் கதவணைகள்முதலியவற்றில் 50 டிஎம்சி தண்ணீரைச் சேர்த்து வைக்கலாம். மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை முறையாக நிறைவேற்றினால் மொத்தமாக 250 டிஎம்சி தண்ணீர் நம் பயன்பாட்டுக்கு எளிதாக இரண்டு மூன்று ஆண்டுகளில் கிடைக்கும். ஆகும் திட்ட மதிப்பீட்டுச் செலவு எல்லா வேலைகளுக்கும் சேர்த்து ரூ.25,000 கோடிக்குமேல் ஆகாது.
தமிழக அணுகுமுறையில் உடனடி மற்றம் வேண்டும்.
மிழக அரசு தாம் நிறைவேற்றும் பாசனத்திட்டங்களில் – பழைய திறனற்ற – செலவு அதிகம் பிடிக்கும் திட்ட அணுகு முறையினை முற்றிலும் கைவிட்டு; இன்றைய மேம்பட்ட கட்டுமானப் பொருள்களையும்,நவீன முன்னேற்றமுடைய தொழில் நுட்ப முறைகளையும் கடைபிடிக்க முன்வர வேண்டும். மேம்பட்ட தொழில் நுட்பங்களைக் கடைபிடிப்பதால் திட்டச் செலவுகளைப் பாதியாகக் (50%) குறைத்திட முடியும். நாம் அண்டை மாநிலங்களிலிருந்து நீரை உரிய காலத்தில் பெறுவதற்குப் பல தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவே, தமிழக அரசின் அணுகுமுறையில் உடனடியாக மாற்றம் வேண்டும்.
Also read
தன்னிறைவுத் தமிழகம்
ஆகவே , அண்டை மாநில நீரையே முற்றிலும் நம்பியிருக்காமல் அவற்றின் தண்ணீருக்காக ஆண்டுக்கணக்கில் காத்திராமல் – தமிழ்நாட்டு நீர்வளங்களை முழுமையாகப் பயன்படுத்தத்தக்க வகையில் நவீன மேம்பட்ட தொழில் நுட்பங்களைக் கைக்கொள்ள வேண்டும். இதற்கென மற்ற மாநிலங்களைப் போல மெகா திட்டங்களைத் தீட்டி விரைவாகச் செயற்படுத்துதலே சிறந்த வழி. இதன்வாயிலாகத் தண்ணீர் தன்னிறைவுத் தமிழகத்தைச் சாத்தியமாக்கலாம்;. அவ்வகையில் கட்டுமானப் பொறியாளரும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கமும் தேவையான கருத்துரைகளை அளித்திட நாளும் அணியமாய் உள்ளன என்று உறுதியுடன் உரைக்கிறோம். தமிழ்நாடு அரசு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருவார்கள் என்று நம்புகிறோம்.
கட்டுரையாளர்; பொறிஞர்,முனைவர் அ.வீரப்பன்
அலைபேசி : 94444 04774
மின்னஞ்சல் : [email protected]
2001 இல் கூறியபடி எத்தனை எரிகளை தூர் வாரி எத்தனை tmc தண்ணீர் அதிகமாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை மட்டும் உள்ளது. அதை செய்ய எந்த அரசும் ஏன் முன்வைரவில்லை. பேப்பரில் இருந்தால் போதாது.