இரா.அன்பழகன், திருப்பரங்குன்றம், மதுரை
அதிமுகவில் பிளவு ஏற்படுமா? பிளவு ஏற்பட்டால் யார் கை ஓங்கும்?
கட்சி நடத்திச் செல்லும் அளவுக்கு கமிட்மெண்ட் உள்ளவரல்ல ஒபி.எஸ். தொண்டர்கள் ஆதரவுமில்லாதவர். சசிகலாவை நம்பி சென்றால் காலப்போக்கில் காணாமலாக்கிவிடுவார்கள்!
கமிட்மெண்ட்டானவர் என்றாலும் தலைவனுக்கான பண்பில்லாதவர் இபிஎஸ்!
சசிகலாவும், தினகரனும் தங்கள் சமுதாயம் அளவுக்கு மட்டுமே செல்வாக்குள்ளவர்கள்!
ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் சூட்சும அரசியலில் யார் தப்ப முடியும் எனத் தெரியவில்லை!
பிளவு தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது.
பிளவுக்குப் பின் அந்தக் கட்சி நீண்ட நாட்களுக்கு பிழைத்திருக்காது.
எஸ்.ராதாகிருஷ்ணன், தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி
மறைந்த மதுரை மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ நன்மாறன் குறித்து..?
நம்மிடையே வாழ்ந்த நிகழ்கால அதிசயம்!
ஏழையாக இருந்தாலும் எம்.எல்.ஏ ஆகமுடியும் என்பதற்கும்,
எம்.எல்.ஏவாக (10 ஆண்டுகள்) இருந்தாலும் ஏழையாகவே தொடரமுடியும் என்பதற்கும்!
தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் பிற்காலத்தில் உணவு தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?
வீணாகக் கூடிய கரும்புக் கழிவில் இருந்து எத்தனால் எடுத்து வந்த வரை பிரச்சினை இல்லை. ஆனால், தற்போது அரிசி குருணை,கோதுமை,வேர்க்கடலை,மக்காச்சோளம் உள்ளிட்ட 18 வகையான தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிக்கவும், அதற்காகவே லட்சக்கணக்கான ஏக்கரில் அதை விளைவித்து அழிக்கவுமான முயற்சி நடப்பது வேதனையானது. வயிற்று பசியோடு கோடிக்கணக்கானோர் உள்ள நாட்டில் வாகன எரிபொருளுக்காக உணவுப் பயிர்கள் வளர்த்து அழிக்கப்படுகின்றன!
எம்.முகமது இஸ்மாயில், பினாங்கு, மலேசியா
அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் அடங்கிய ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பாஜக அரசு அறிவித்துள்ளதே?
இந்தியாவின் அரிய வரலாற்று ஆவணங்கள் பலவற்றை இன்னும் லண்டனில் பிரிட்டிஷ் அரசு பாதுகாக்கிறது!
இந்த ஏலம் பணத்திற்கானதல்ல. வரலாற்றை திரிக்கவும், மாற்றவுமான ஏற்பாட்டிற்கு தான் அதை அரசு பாதுகாப்பிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள்!
என்.ராமன், திருவெற்றியூர், சென்னை
மீண்டும் மேல் சபையைக் கொண்டுவர இன்றைய தமிழக அரசு முயற்சிக்கிறதே..?
மேல் சபையால் பலன்கள், பாதகங்கள் இரண்டும் உண்டு!
அதில், மக்கள் பிரச்சினைகளை எதிரொலிக்க நினைக்கும் அறிவார்ந்தவர்கள் இடம் பெறுகிறார்களா? ஜால்ராக்கள் ஆக்கிரமிக்கப் போகிறார்களா? என்பதைப் பொறுத்தே உள்ளது!
எம். சரோஜா, பீளமேடு, கோயம்பத்தூர்
சமீபத்தில் தன் எண்பதாம் அகவையை அமைதியாக கொண்டாடிய – நடிகர் சிவகுமார் குறித்து?
ஒப்பனையில்லாத நிஜ மனிதர்!
80 வயதிலும் தலைமுடி நரைக்காதபடிக்கான இயற்கை சார்ந்த வாழ்வியலை கடை பிடிப்பவர்!
ஓவியர், நடிகர் அத்தியாயத்தை முடித்துக் கொண்டு எழுத்தாளர், சொற்பொழிவாளர் என தனைக்கென ராஜபாட்டை அமைத்து தூள் கிளப்புகிறார்.
தன்னை உள்ளபடியே வெளிப்படுத்திடும் அவரது சொற்பொழிவுகளும்,எழுத்துக்களும் நாளும் பல்லாயிரக்கணக்கான இளம் தலைமுறையினரோடு அவரை உயிர்ப்புடன் வைத்துள்ளது!
மெய்கண்டன், அறச்சலூர், ஈரோடு
கொட நாடு வழக்கில் என்ன நிலைமை? குழப்பமாக உள்ளதே?
குழப்பமோ குழப்பம். கொட நாடு இப்போதும் சசிகலா கட்டுப்பாட்டில் தான் உள்ளது! இத்தனை கொலைகள்,கொள்ளைகளுக்கு பிறகும் சசிகலா வாய் திறக்கவில்லை.
சசிகலா வாய் திறந்தால் எடப்பாடி சிக்கலாம்! எடப்பாடியை சிக்க வைப்பது சசிகலாவிற்கும் சிக்கலைத் தரலாமோ என்னவோ..?
ஆட்சி மாற்றத்தால் தான் ஒரளவாவது விசாரணை சாத்தியமாகியுள்ளது. விசாரணைகளில் எடப்பாடியின் வில்லங்க முடிச்சுகள் மெல்ல அவிழத் தொடங்கியுள்ளன!
எல்.கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி,கோயம்பத்தூர்
ஒட்டுக் கேட்பு பெகாசஸ் விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழு அமைத்துள்ளதே..?
இது மத்திய அரசுக்கு பெரிய மானக்கேடு!
இந்த மானக்கேட்டை உணராமல் இருப்பது சாபக்கேடு.
க. இராமநாதன், போடி, தேனிமாவட்டம்
முல்லைப் பெரியாறு விவகாரம் முடிவுக்கே வராதா..?
1970 களில் ஆரம்பித்த புரளி அரசியலை 50 ஆண்டுகளாக இன்னும் தொடர்கிறார்கள்!
100 ஆண்டுகளுக்கு முன்பு பென்னிகுயிக் நமக்கு கட்டித் தந்த பெரியாறு அணையைக் காப்பாற்ற வேண்டுமானால் – அவர்கள் இடுக்கி அணை கட்டியதை போல – நாமும் ஒரு அணை தமிழக பகுதியில் கட்டுவதே தீர்வாகும்.
இது வரை முல்லை பெரியாறு அணையைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்திற்கும், போராட்டங்களுக்கும் செலவழித்த பணத்தில் அதை போல ஒரு அணையை தமிழகப் பகுதியில் கட்டியிருந்தால் பிரச்சினை என்றோ முடிவுக்கு வந்திருக்கும். தென் தமிழக பகுதிகளும் வறட்சி நீங்கி வளம் பெற்று இருக்கும்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளமோ மூர்க்கமாக உள்ளது, தமிழகமோ முடங்கிக் கிடக்கிறது!
சிபி, பேரளையூர், கடலூர்
ஆளுநருக்கு அரசின் நலத் திட்ட விபரங்களை சேகரித்து தயாராக வைத்திருக்க கூறிய இறையன்புவின் சுற்றறிக்கை குறித்து..?
தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தேன்.
இது வழக்கமான நடவடிக்கை எனத் தெரிய வருகிறது.
மாநில ஆளுனர் விபரங்கள் கேட்கும் தொனியில், ‘உள்நோக்கம் இருந்தாலோ’,
‘தடங்கல் செய்கிற அணுகுமுறை வெளிப்பட்டாலோ’ தான்
இதை பிரச்சினையாக்க முடியும்.
Also read
எஸ்.இந்திரபாபு, கண்ணகி நகர், சென்னை
தன்னை பெரிதும் நம்பி அரசியல் கணக்குகள் போட்ட பாஜகவை அம்போவெனவிட்டு, ஆளும் திமுக குடும்பத்திற்கு ‘அண்ணாத்தே’ நடித்துக் கொடுத்துள்ளாரே ரஜினிகாந்த்?
அவர் அண்ணாத்தே படத்தில் கமிட் ஆனபோதே பாஜகவினர் சுதாரித்திருக்க வேண்டும் – திமுகவை எதிர்த்து எப்படி அரசியல் செய்வார் என்று!
108 கோடி சம்பளம். கொரானா பரவலை மீறி 700 திரையரங்குகளில் 100% இருக்கையுடன் திரையிடும் வல்லமை கொண்ட திமுக குடும்பத்துடன் தொழில்முறை உறவு!
தாதா சாகேப் விருது கொடுத்து தாஜா செய்யும் பாஜக அரசுடன் ராஜாங்க நட்பு!
தன் அளவில் அவர் எப்போதும் தெளிவாக அனைவரையும் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திச் சென்று கொண்டே இருக்கிறார்.
Leave a Reply