நீட்டுக்கு எதிரான மக்கள் பாதை ஆறாம் நாள் உண்ணாவிரதம்! காவல்துறை அராஜக தாக்குதல்!

சாவித்திரி கண்ணன்

நீட் எதிர்ப்பில் தமிழக அரசின் போலித்தனமான நிலைப்பாட்டைக் கண்டித்தும் மாணவர்கள் தற்கொலை தொடராமல் இருப்பதற்கான தீர்வைக் கோரியும் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் செப்டம்பர் 15 முதல் சாலிகிராமத்திலுள்ள அந்த இயக்கத்தின் தலைமையகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின்,திருமுருகன் காந்தி,இயக்குநர் கௌதம்,மயில்சாமி…போன்றோர் வந்து பேசிச் சென்றனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் உண்ணாவிரதத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்தனர்.ஆனால்,தமிழக அரசின் சார்பில் யாராவது அமைச்சரோ,அதிகாரியோ வந்து நீட் தொடர்பாக உறுதியான நிலைப்பாடு எடுப்பதாகப் பேசி உத்தரவாதம் கொடுத்தால் முடித்துக் கொள்வதாக இளைஞர்களும் தெரிவித்தனர்! அந்தப்படியே ஏற்பாடு செய்வதாக நேற்று சொல்லிச் சென்ற காவல்துறையினர் அதிரடியாக இன்று அதிகாலை ஆறு மணியளவில் மக்கள் பாதை தலைமையகத்திற்கு பெரும் திரளாக வந்தனர்! மூடியிருந்த கேட்டின் மீது ஏறி தாவி குதித்து உள் நுழைந்து உண்ணாவிரதம் இருந்த சந்திரமோகன்,ஆரா அருணா,தமிழ்செல்வி, காசிநாத் துரை,கீதா,அரவிந்த் ஆகியோரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்ல முயன்றனர்.இதை அலுவலகத்திலிருந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுக்க முயன்றபோது, கடுமையாகத் தாக்கினர்.தாக்குதலில் ஆறு நாளாக உண்ணாவிரதம் இருந்த இளைஞர்கள் நிலைகுலைந்தனர்.

உண்ணாவிரதம் இருந்தவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆயினும் தங்களைத் தாக்கியதால் டிரிப்ஸ் ஏற்ற மறுத்து ஆறுபேரும் மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர முயற்சித்தனர். ஆனால்,காவல்துறை கெடுபிடியுடன் அவர்களை படுக்கையில் கிடத்தி டிரிப்ஸ் ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்கள் உயிரை துச்சமாக மதித்து பொது நலன் கருதி உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தமிழகக் காவல்துறை நடத்திய அதிரடி அராஜக தாக்குதல் தமிழக மக்களிடம் அரசின் மீதான கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time