ஆர்யன்கான் கைதும், விடுதலையும் கண்துடைப்பு நாடகமா?

சாவித்திரி கண்ணன் & அருணாசலம்

ஷாருக்கானின் மகன்  ஆர்யன்கான் போதைப்பொருள் தடுப்புக் காவல் துறையால் (NCB)  கைது செய்யப்பட்டு நான்கு வார சிறைவாசம் மற்றும் விசாரணைக்கு பிறகு விடுதலையாகியுள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப் பொருள் கலாச்சாரம் 30 ஆண்டுகளாக உள்ளது! சஞ்சய்தத் தொடங்கி ஷாருக்கான், ரன்பீர்கபூர் வரை, தீபிகாபடுகோனே தொடங்கி கீதாஞ்சலி நாக்பால் வரை பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த பழக்கத்திற்கு ஆளானவர்களே! பல பெரிய அரசியல்வாதிகளும் இதில் சம்பந்தப்பட்டவர்களே..!

இந்த கைது நடவடிக்கைக்கு காரணம் என்ன? நோக்கங்கள் என்ன..?

ஆர்யன்கானுடன் அவரது நண்பர்கள் இருவரும் மும்பையிலிருந்து கோவா செல்லும் உல்லாச கப்பலில் இருந்து கைது செய்யப்பட்டனர். பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் , போதைமருந்து உட்கொண்ட காரணத்திற்காக ஆர்யான் கான் மற்றும் இருவரும் கைது செய்யப்பட்டதாக போதைபொருள் தடுப்புக்காவல் துறை அறிவித்தது. அவர்களது கைது அறிக்கை – Arrest Memo- யும் அதையே (personnel consumption)  சுட்டிக்காட்டியது.

ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து , போதைப்பொருள் உட்கொண்டனர் என்ற குற்றச்சாட்டிலிருந்து முன்னேறி ‘இவர்கள்’ குறிப்பாக ஆர்யான் கான் போதைபொருள் வாங்கி வினியோகம் செய்ய சதி செய்து முகந்தெரியாத சர்வதேச நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினர் என்ற சதிசெயல் குற்றத்தை -Conspiracy and international drug link-ஆர்யான்கான் மீது  போதைப்பொருள் தடுப்புக்காவல் துறை சுமத்தியது. ஆனால், ”அதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை முன் வைக்கவில்லை” என்று ஆர்யான் கான் தரப்பு கூறுகின்றனர்.

ஆர்யான்கான் அப்பாவி என்றோ குற்றவாளி என்றோ நீதி மன்றம் முடிவு செய்யும் . இதில் நாம் தலையீடு செய்ய முடியாது. ஆனால், சட்டத்தின் படி நடக்க வேண்டிய விசாரணை அமைப்பும், ஆட்சி நிர்வாகமும் அவ்வாறு நடைபெறுகிறதா…? என்று கண்காணிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

குஜராத்தில் அதானியின் முந்திரா துறைமுகத்தில் 21,000 கோடி பெறுமானமுள்ள 2,988 கிலோ போதைபொருள் பிடிபட்ட விவகாரத்திலும், அந்தப் போதை பொருள் கடத்தலில் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு தொடர்பு இருக்கிறது என்று சந்திரபாபு நாயுடு கூறியதிலும் பாஜக அரசு மெளனம் சாதிப்பது கவனிக்கதக்கது.

போதைப் பொருள்கள் தங்கத்தைக் காட்டிலும் விலைமதிப்புள்ளவையாக இருப்பதால் இவை மிகப் பெரிய வருமானமாக உள்ளன! இவை தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும் பாலிவுட்டிற்குள் சர்வசாதரணமாக புழக்கத்தில் இருக்கின்றன. இதில் சிறிய, பெரிய நடிகர்கள் வேறுபாடுகள் இல்லை. சிறிய நடிகர்கள் கஞ்சாவையும் சாரஸையும் பயன்படுத்துவார்கள். அவ்வளவு தான்!

பெரிய நடிகர், நடிகைகளுக்கோ சகலமும் கிடைக்கும்! ரன்பீர்கபூர், கீதாஞ்சலி நாக்பால், பிரசாத் பிடபா, ராகுல் மகாஜன்..ஆகியோர் டிரக் பயன்படுத்துவது ஊரறிந்த ரகசியமாகும்.

ஷாருக்கான் தன் வீட்டிலேயே சர்வசாதரணமாக டிரக் எடுப்பார். அர்ஜின் ராம்பால் அவரோடு சேர்ந்து கொள்வார். இதெல்லாம் பல மீடியாக்களில் தொடர்ந்து பேசப்பட்டவையே! சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் எவ்வளவோ உண்மைகள் அம்பலப்பட்டன! ஆனால், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டனர்…? அதை ரங்கனா ரனாவத்தைக் கொண்டு பாஜக அரசியல் செய்து திசை திருப்பியது.

போதைப் பொருள்கள் இல்லாவிட்டால் பல நடிகர், நடிகைகளுக்கு நடிப்பே வராது என பாலிவுட் டெக்னிசியன்கள் சிலர் ஊடகங்களுக்கு பேட்டி தந்தனர்!

தீபிகா படுகோனே, சாராகபூர், ராகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஆகியோருக்கு போதைக்கும் உள்ள தொடர்பு குறித்து என்.சி.பி சம்மன் அனுப்பி விசாரித்தது நினைவிருக்கலாம்!

போதைப்பொருள் தடுப்பு சட்டம் நம்நாட்டில் முழுமையாக கொண்டுவரப்பட்டது 1985ல்தான். சஞ்சய்தத் தான் இதில் முதன் முதல் கைதான நடிகர்!

சஞ்சய் தத்

இந்த போதைப்பொருள் தடுப்பு சட்டம் உபயோகிப்பவரையும், உற்பத்தி செய்து வினியோகிப் பவரையும் ஒரே தட்டில் வைத்து எடை போடுகிறது, இரண்டு நடவடிக்கைகளையும் கிரிமினல் குற்றமாக பாவிக்கிறது, தண்டனை அளிப்பதிலும் வேறுபாடு காட்டவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

இரண்டு இதற்கான சமூக காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆனால் நம்நாடு இன்னும் அதற்கு தயாராகவில்லை போலும், அந்த சூழலில் இக்கடுமையான முரட்டு சட்டங்கள் நேர்மையாக கையாளப்படுகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும்எழுவது இயற்கையே!

ஆர்யான் கான் கைது செய்யப்பட்டது அக்டோபர் 3 ஆம் தேதி. அவரது கைது அறிக்கையில்  போதைமருந்து உட்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் இதுவரை ரத்த பரிசோதனைக்கோ, சிறுநீர் பரிசோதனைக்கோ உட்படுத்தப் படவில்லை என்பது உண்மை. இது வேடிக்கையல்ல, அவரிடமிருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அப்புறம் எதற்கு கைது?

ஆர்யான்கான் போதைபொருள் உட்கொண்டார் என்று குற்றஞ்சாட்டும் என்சிபி  NCB அதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்கவில்லை, அவரிடம் எந்த போதைப்பொருளும் கைவசமில்லையாம்! அதனால் கைப்பற்றபட வில்லையாம். ஆனாலும், அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

கீழமர்வு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததையொட்டி ஆர்யான்கான் தரப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடியது. அங்கும் பிணை மறுக்கபடுகிறது. அதற்கான காரணமாக இரண்டு விஷயங்களை செஷன்ஸ் நீதிமன்றம் கூறியது. ஒன்று ஆர்யான் கான் தன்னிடம் எந்த போதைப்பொருளும் வைத்திருக்காவிட்டாலும் அவர் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் 6 கிராம் வைத்திருந்தது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது .எனவே இவர் உணர்வுபூர்வ உடைமை –  conscious possession –  என்ற குற்றத்திற்கு ஆளாகிறார், இரண்டு , வாட்ஸ் அப் உரையாடல்கள் ஆதாரம். ஆகையால் பிணை மறுக்கப்படுகிறது’’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த போதைப்பொருள் தடுப்பு காவல்துறையின் நடவடிக்கைகளில் ஒருவித சாயல், மாதிரி அல்லது பேட்டர்ன் தெரிவதை நம்மால் உணரமுடியும் .

இந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் பற்றி எதிர்தரப்பு அறிவதற்கு முன், நீதிமன்றம் அறிவதற்கு முன் குறிப்பட்ட தொலைக்காட்சி சானல்கள் ( இந்தியா டுடே) இதை ஒளிபரப்பி புதுக்கதை கட்ட ஆரம்பித்தனர். இதே மாதிரி செயலைத்தான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கிலும் அவரது. பெண்நண்பரான ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் வழங்கியதாக வழக்கு போட்டது என்சிபி. பல மாதங்களுக்குப் பின் அந்த வழக்கில் இருந்து குற்றமற்றவர் என்று ரியா விடுதலையானார். அவருக்கு போதைப் பழக்கம் இருப்பது ஊரறிந்த உண்மை! தங்களது அரசியல் நோக்கங்களுக்காக ஆளுவோரும் அவர்களது கைப்பாவையான NCB, ED, NIA, CBI  போன்ற அமைப்புகளும் இந்த காலகட்டத்தில் செயல் படுவதை பார்க்கிறோம்.

மற்றொரு வேடிக்கை இந்த வழக்கில் பஞ்சநாமா என்றழைக்கப்படும் மகஜரில் ஸ்பாட் விட்னஸ் ஆக இரு கௌவரமான மற்றும் நடுநிலையான இரண்டு சாட்சிகள் வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த ரெய்டின் போது அப்படி வந்த இரண்டு சாட்சிகளில் ஒருவர் கோசாவி என்பவர்! தனியார் புலனாய்வாளரான இவர் ஆர்யன்கானுடன் செல்பி எடுத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இவரையும்,இவரது உதவியாளர் பிரபகரனையும் சாட்சியாக சேர்த்தனர்! இவர் விசாரணை அதிகாரிகளுக்காக பேரம் பேசி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை அவரது உதவியாளரே கூறியுள்ளார்.

கோசாம்பி எடுத்த செல்பி

இந்த வழக்கில் பிரபாகர் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறப்பட்டு உள்ளதாவது: போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரி சமீர் வான்கடே மற்றும் கோசாவி இருவரும் கூட்டாக சதி செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னிடம் வெற்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். நான் காரில் அமர்ந்திருந்த போது, போன் மூலம் கோசவி அவர்கள் சாம்டி சூசா என்பவரிடம் ரூ.18 கோடி பேரம் பேசியதை கேட்டேன். அதில், ரூ.8 கோடி சமீர் வான்கடேவிடம் வழங்கப்பட்டு விட்டது.’’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து கோசாம்பி தலைமறைவானார். ஆனால், இவர் நேற்று புனேவில் கைது செய்யப்பட்டார், அவர்மீது பல்வேறு சீட்டிங் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்

மற்றொரு சாட்சியான பானுஷாடி என்பவர் பிஜேபி பிரமுகர் !

இப்படி பல்வேறு கோளாறுகளை வைத்துக்கொண்டு இவ்வழக்கை ஜோடிப்பதன் அவசியம் என்ன?  குற்றங்களை களைவதும், குற்றவாளிகளை அறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தருவதா இவர்களது நோக்கம்? யாருடைய நிர்பந்தத்திற்காக இப்படி வழக்கு தொடுத்து நடத்துகின்றனர்?

ஆளுவோர்க்கு வேண்டாதோரை சந்திக்கிழுப்பது, கேவலப்படுத்துவது, கறை பூசுவது, சேற்றை வாரியிறைப்பது, இது தான் நோக்கம்.

சமீர் வாங்கேட்

குறிப்பாக என்சிபி யின் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதன் மும்பை தலைவராக உள்ள சமீர் வாங்கேட் மீது பல்வேறு குற்றசாட்டுகள் பொதுவெளியில்  கிளப்பப் படுகின்றன. லஞ்சம் வாங்கியதிலிருந்து போலி சாதி சான்றிதழ்மூலம்  வேலையில் அமர்ந்தது,பல நடிகைகளை தன் உல்லாசத்திற்கு பயன்படுத்துவது, அபாரமாக சொத்து சேர்த்திருப்பது  போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரே தொடர்ந்து நீடிக்கிறார் என்பதில் இருந்து இது போன்ற பதவிகளில் நேர்மையற்ற அதிகாரிகளை ஆள்வோரே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது!

சட்டத்தின் வழியில் அனுமதிக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைகள் மூலம் தகுந்த சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் ஆர்யான்கான் குற்றமிழைத்துள்ளார் என்று நிரூபித்து தண்டனை வழங்கட்டுமே! ஏன் செய்ய மறுக்கிறார்கள்…? அப்படி செய்தால் பல பாஜக விவிஐபிக்களின் பிள்ளைகள் மீதும் நடவடிக்கை கேட்டு குரல்கள் எழும்பும் என்ற அச்சம் காரணமாக இருக்கும்!

ஆர்யான்கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. விடுதலையும் ஆகிவிட்டார்! இனி வழக்கை அவர் எதிர்கொள்வார். இவர்களைப் போன்ற செல்வாக்கானவர்களுக்கு இவையெல்லாம் தற்காலிகப் பிரச்சினையே! ஆனால், நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் எளிய குடும்பங்களில் ஏராளமான இளைஞர்களை பலி கொண்டபடி தொடர்கிறது! வசதி இல்லாதவன் கைதானால் வாழ்நாளின் பெரும்பகுதி சிறையிலேயே கழிந்து விடும்!

சாவித்திரி கண்ணன் & அருணாசலம்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time