ஒச்சை – மீரான் மைதீனின் கிராமத்துக் காவியம்!

- பீட்டர் துரைராஜ்

மீரான் மைதீன்  எழுதியிருக்கும் புதிய நாவல் ‘ஒச்சை’. கன்னியாகுமரி மாவட்டத்தின், ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை மிக உயிர்ப்புடன் எழுதியுள்ளார்! ஒச்சை என்று சொல்லுக்கு இரைச்சல் என்று பொருள். வளைகுடாவில் பணிபுரியும் மாந்தர்களை  ‘அஜ்னபி’ நாவலில் காட்சிப்படுத்தியவர் மீரான் மைதீன். அவருடைய உரையாடலும், பாத்திரங்களின் சித்தரிப்பும், எள்ளலும் இந்த புதிய நாவலிலும் தொடர்கிறது. யாராலும் புறக்கணிக்க முடியாத இடத்தை தமிழ் இலக்கிய உலகில் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

‘ஒச்சை’ கதையின் நாயகன் கோயா. ஆனால் கோயாவின் நிஜப்பெயர் நூர்தீனோ அல்லது கமர்தீனோ. ‘ஏகதேசம் கோயா என்றால் பட்டென அவன் முகம் நினைவில் வந்துவிடுமளவுக்கு ஊருக்கு வெளியேயும், ஏரியா தாண்டி எல்லோருக்கும் தெரியும்’. கோயாவுக்கு ஒச்சை என்றும் ஒரு வட்டப் பெயர் உண்டு. கோயா முதல் அத்தியாயத்தில்தான் உயிரோடு வருகிறான். அடுத்த அத்தியாயத்தில் ஒரு தோப்பில் வைத்து கொலை செய்யப்படுகிறான். தனது மனைவி சைனபாவை விட்டு விலகி, பெட்டிக்கடை மனோரஞ்சிதத்தோடு வாழ்கிறான் என்று ஊரில் பேச்சு. யார் கொலையாளி என்று விசாரணை நடக்கிறது. இதுதான் ஒரு வரி.

நடந்திருப்பது கொலை. அவன் போலீசுக்கு உளவாளியாக இருந்தவன். எனவே இந்தக் கொலையை காவல்துறை அக்கறையோடு விசாரிக்கிறது. இந்த விசாரணையின் ஊடாக அந்தக் கிராமத்தின் அனைவரும் வருகிறார்கள்.  சாதாரணமாக சில நல்லப்படங்களை நாம் பார்த்தால்,  அதன் காட்சிகள்  அடுத்த ஒருசில தினங்கள் நம்   கண்முன்னே வந்துபோகும். அதுபோல இந்த நாவலைப்படித்து விட்டு, என்னுடைய  கிராமத்து தெருக்களோடு, பள்ளிவாசலோடு, டீக்கடையோடு, தென்னந்தோப்போடு பொருத்திப் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

கோயா மாதிரி ஒரு நபரை நாம் எங்கும் காணமுடியும். அவனுக்கு இங்கு நடக்கும் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்து உண்டு. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அதை அவன் சொல்லுவான். நீங்கள் காது கொடுத்து  கேட்டுத்தான் ஆக வேண்டும். இது தொல்லையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவனால்தான், பஷீர்  ஆட்டோவின் முன்பக்கம்  எழுதியிருந்த அவனது உம்மாவின் பெயரான மரியம் பீ, எப்படி திரிவேணியாக மாறியது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.  ‘சந்தேகத்திற்குரிய சின்ன அசைவுகளையும் அதிநுட்பமாகக் கணித்துச் சொல்லிவிடுகிற ஆளாக கோயா இருந்தான்’. அதனால்தான் அவன் போலீஸ் உளவாளியாக இருந்துதானோ என்னவோ ! கோயா இறந்த பிறகு,  ரியல் எஸ்டேட் புரோக்கராக இருக்கும் நெட்டையை உளவாளியாக போலீஸ் அனேகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ‘சின்னச் சின்ன தகவல்களை, புதிய நகர்வுகளை அவர்களுக்கு பக்கச்சார்பின்றிச் சரியாக தகவல் தருகிற சில மனிதர்கள் தேவை’.

ஆட்டோ பஷீருக்கு, வேணி போனால் என்ன ! ‘அசப்பில் நடிகை நவ்யா நாயரைப் போல’, லாசர் கிளினிக்கில் இருந்து புஷ்பா கிடைக்க மாட்டாளா என்ன ? கோயாவால் ஆட்டோ பஷீருக்கு ஒரு வழி காட்ட முடியும். அழகிய மனோரஞ்சிதத்துடன், தனக்குள்ள உறவு குறித்து   இறுதிவரை, ஆட்டோ பஷீருக்கு சொல்லாமலே இறந்துவிடுகிறான்.

மனோரஞ்சிதம் பாத்திரம் மூலம் நாம் கோயாவின் உட்சபட்ச மனிதத்தை  உணர்ந்து கொள்கிறோம். இடுப்புக்கு கீழே செயலற்று இருக்கும் அவளுக்காக காவலரிடம் பரிந்து  பேசமுடியும். காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் சரக்கை விற்க ஏற்பாடு செய்ய முடியும். மனோரஞ்சிதத்தின் அப்பா போனால் என்ன ! அம்மா போனால் என்ன ! சகோதரர்கள் போனால் என்ன ! அவளுக்கு கோயா இருக்கிறான். கடையும், வீடுமாக இருந்த இடத்தில் இருந்து மாம்பட்டையோடு, கொஞ்சம் கள்ளச் சாராயம் விற்கிறாள். ‘அவளை என்ன செய்வது என்று சட்டத்துக்கு தெரியவில்லை’. கோயாவின் மரணம் அவளை எப்படி பாதிக்கும் ! என்ன ஆவாள் !

எளிய நாவல்தான்.145 பக்கங்கள்தான். எல்லோராலும் சுலபமாக படிக்கமுடியும். ஆனால் கதையில் வரும் உரையாடல்கள் நாவலைக் காட்சிப்படுத்துகின்றன.  மக்கள் புழங்கும் வார்த்தைகளை அப்படியே மீரான் மைதீன் பயன்படுத்தி உள்ளார். ஆபாசமாகத் தெரியவில்லை. அதுதான் இந்த நாவலின் பலம். ‘தமிழகத்தின் பஷீராய் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மீரானின் எழுத்துகளில் அதிகமிருக்கின்றன” என்று இந்த நூலில் நட.சிவக்குமார் குறிப்பிடுகிறார்.

கதை கன்னியாகுமரியில்  நடக்கிறது; கொலையானவன் முஸ்லிம். சந்தேக வளையத்தில் இருப்பவன் சதாசிவன். அவனுக்கு ஒரு முன்னணி ஆதரவு இருக்கிறது. விசாரிப்பவரோ ராயன் என்ற கிறிஸ்தவ எஸ்.ஐ.. கைது செய்வதை எப்படி நியாயப்படுத்துவது ?  இதில் காவல்துறை செய்யும் ‘டகாலடி’  வேலைகளை அற்புதமாக எழுதியிருக்கிறார்.  மக்களோடு மக்களாக படுத்து, குடித்து,  உருண்டவர்களால்தான் இதனை எழுதமுடியும். சதாசிவனுக்கு அரசியல், அரசு வேலை இருந்தால் என்ன ! மனிதனாகக் கூட இல்லையே !

விசாரணை வளையத்திற்குள் வந்த மோசேயும், ஆறுமாதத்தில் இறந்து போன தேங்காய் இறக்கும் பூமணியும் இக்கதையின் பாத்திரங்கள்தான். காவல்துறை அவர்கள் மொழியில் விசாரணை நடத்தி இருக்கலாம். அவர்கள் உண்மையைக் கண்டுபிடிக்க ஆர்வமாக இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் காவல் சித்திரவதையில் வருமா ? அவர்கள் செய்த பாவம் என்ன ! பூமணி மனைவிக்கு யார் இருக்கிறார்கள் !  இத்தனைக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் தனிக்கவனம் கொடுத்து நடக்கும் விசாரணை ! இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத காவல்நிலையம் இங்கு உண்டா !

கோயாவின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ள அனுமதிக்கப்படாமல்  விசாரணை செய்யப்படும் ஐயப்பன்,  கோயாவுக்கு செலுத்தும் அஞ்சலி நெகிழ்ச்சியாக இருக்கிறது.  காவல்நிலையத்திற்கு போகாமலேயே நெல்சன் டீக்கடையில் இருந்துவிட்டு உதவிசெய்ததாக படியளக்கும் ஜமாஅத் தலைவர் பொறியாளர் அன்வர், அதனை வெளியில் சொல்லும் சரவணன், டீக்கடை சாலம்து, ஓமனுக்கு போன எட்டரை மாதத்தில் இரண்டாவது குழந்தையைப் பெற்ற ஜின்னா  போன்ற பாத்திரங்கள் நம்மிடையே இருப்பவர்கள்தான். அதனாலேயே இந்த நாவல் வாசகனுக்கு நெருக்கமாகி விடுகிறது. சமகால கிராமத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அப்படியே இந்த நாவல் காட்டுகிறது. நாகர்கோவிலில் இருந்து வெளிவந்துள்ள ‘இன்னொரு புளியமரத்தின் கதை’ இது.

நூல் திறனாய்வு ; பீட்டர் துரைராஜ்

புலம் வெளியீடு;

அனுதீப் அபாட்மெண்ட், 3 வது பிரதான சாலை,

நடேசன் நகர், சென்னை – 92

164 பக்கங்கள்,  விலை;ரூ.180

9840603499

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time