மு.தமிழரசன், கோடம்பாக்கம், சென்னை
சார்பதிவாளர், ஆர்.டி.ஓ, நகராட்சி … போன்ற அரசு அலுவலங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய தமிழக அரசின் விஜிலென்ஸ் ரெய்டுகள் பற்றி..?
மகிழ்ச்சி! நல்லது. ஆனால், நேர்மையான நிர்வாகத்திற்கான முனைப்பாக இதைப் பார்க்க முடியவில்லை.
க.வேல்முருகன், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு மக்களூம், அரசும், கன்னட சமூகமும் காட்டிய மரியாதையை பார்த்தீர்களா..?
செய்த அளவில்லா சேவைகளும், வாழ்ந்த வெளிப்படையான வாழ்க்கையும் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள்!
தமிழகத்தில் பிறந்து படித்து வளர்ந்து கர்நாடத்தில் சூப்பர் ஸ்டார் ஆனவரையும்,
கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டார் ஆனவரையும் மனம் ஒப்பிட்டு பார்த்தது!
மயில்வாகனன், திருப்பூர்
ஒபிஎஸ் நிதானமானவர் என்கிறாரே டி.டி.வி.தினகரன்?
வெட்டப்படுவதற்கு முன்பு ஆட்டிற்கு மஞ்சள் பூசி மரியாதை காட்டுவார்கள், தென்தமிழகத்தில்!
ஆர்.லலிதா, பெங்களூர்
டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தால் போடப்பட்ட கான்கிரீட் தடுப்புகளையும், முள்வேலி பேரிகார்டுகளையும் அதிரடியாக மத்திய அரசு அகற்றிவிட்டதே..?
ஏதோ அன்னிய நாட்டுப் படைகள் முன்னேறிவிடாமல் அமைக்கப்பட்ட தடுப்புகளைப் போல பார்ப்பவர்களை மிரட்டி, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தின இவை!
விவசாயிகள் மீது மக்கள் கோபம் திரும்பச் செய்ய செய்யப்பட்ட ஏற்பாடுகள், மத்திய அரசின் மீது தான் திரும்பியது. இவை உ.பி பார்டரை தொட்டுக் கொண்டிருப்பதால், வரப்போகும் உ.பி. தேர்தல் பாஜக ஆட்சியாளர்களை உதறல் எடுக்க வைத்துள்ளது. அதன் விளைவே!
நீலவண்ணன், ஆவடி, திருவள்ளூர்
அதிரடி அறிக்கைகள் விட்டு கெத்து காட்டுகிறாரே பாஜக அண்ணாமலை?
அரைவேக்காட்டு அறிக்கைகள்! கிணற்றுத் தவளை தன் இருப்பை வெளிப்படுத்துகிறது.
மு.ராமசாமி, சோழவந்தான், மதுரை
பல ஆண்டுகளுக்கு பாஜகவோடு தான் மக்கள் போராட வேண்டி இருக்கும் என்கிறாரே பிரசாந்த் கிஷோர்?
தாங்கமுடியாத அளவுக்கு அத்துமீறி ஆட்டம் போட்ட பிறகு தான் அரக்கர்கள் அழிக்கப்பட்டதாக புராண, இதிகாசங்களில் படித்துள்ளேன்!
எஸ்.ரகமத்பாட்ஷா, பெரம்பூர், சென்னை
அரசியல், சமூக விவகாரங்களில் அடிக்கடி டிவிட் போடும் கமலஹாசனைப் பற்றி?
சினிமா, பிக்பாஸ்க்கு இடையில் ஒரு சின்ன ரிலாக்சேஷன் தேவைப்படுகிறதே..!
கோ. எழில்முத்து, குன்றத்தூர், காஞ்சீபுரம்
ஓஷோ என்ற ரஜினீஸைப் படித்திருக்கிறீர்களா?
இளம்பிராயத்தில் என் மனக் கதவுகளைத் திறந்தவர்!
இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சியவர்!
மாயைகளை விலக்கி மனதை விசாலப்படுத்தினார்!
அரசியல்வாதிகளோடு சமரசம் கொள்ள மறுத்தார்!
அதிகார மையங்களை கேள்விக்கு உள்ளாக்கினார்!
இந்த போலிச் சமூகத்திற்கு உண்மையான சாமியார்கள் தேவைப்படுவதில்லை என்பதை அவரது இறுதி வாழ்க்கை உணர்த்திச் சென்றது…!
எஸ்.ராமச்சந்திரன், விசாகப்பட்டிணம், ஆந்திரா
மாநில எல்லைகளைக் கடந்து மற்ற மாநிலங்களிலும் கால் பரப்புகிறார்களே அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும்?
அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான நிர்வாகத் திறனும்,
மம்தாவின் அஞ்சாத போராட்ட குணமும்,
மாநில எல்லைகளைக் கடந்து மக்களை வசீகரிக்கின்றன!
ஆயினும், அவர்கள் தேசம் தழுவிய தலைவர்களாவதற்கு வாய்ப்பில்லை!
க.சரவணன், திருத்துறைப் பூண்டி, திருவாரூர்
தீபாவளிக்கு தயாராகிவிட்டீர்களா..? பட்டாசுகள் வாங்கியாச்சா..?
Also read
மன்னிக்கவும்,
விபரம் தெரியத் தொடங்கிய வயதிலிருந்து எனக்கு தீபாவளி மீது பெரிய ஈர்ப்பில்லை!
புதுத் துணிமணிகள், வித,விதமான ஸ்வீட்கள், பட்டாசுகள்..! எதற்காக இந்தக் கொண்டாட்டங்கள் புரிபடவில்லை.
பொங்கல் திருவிழா உழவின் மகத்துவத்திற்காக!
ஆயுத பூஜை உழைப்பின் மகத்துவதிற்காக!
சரஸ்வதி பூஜை கற்றலின் ஈடுபாட்டிற்காக!
தீபாவளி எதற்காக..? என்பதற்கு எனக்கு உடன்பாடான பதில் கிடைக்கவில்லை.
தீய விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தும் பண்டிகை, தீபாவளியைத் தவிர வேறில்லை!
தீபாவளியை ஒட்டி எத்தனை வெடிவிபத்துகள்..! உயிர் இழப்புகள்…, அதிக சேதாரங்கள்!
ஒவ்வொரு தீபாவளியும் சக்கரை வியாதிஸ்தர்களை கூடுதலாக்கிச் செல்கின்றன!
செலவின் நிர்பந்தங்கள் ஏழை, எளிய குடும்பத்தை கடனாளியாக்கின்றன!
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.
I was studying some of your blog posts on this website and I believe this website is rattling informative! Keep on posting.