தமிழ்நாடு எப்போது உருவானது..? யார் அதைத் தீர்மானிப்பது..?

- சாவித்திரி கண்ணன்

குழப்பமோ குழப்பம்!

ஜீலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது!

அன்றைய தினம் தான் அறிஞர் அண்ணா மதராஸ் என்ற பெயரில் இருந்த மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார்! அதனால், அண்ணா பெயர் சூட்டிய நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க போவதாக சொல்லப்பட்டுள்ளது!

மொழிவழியாக மாநிலங்கள் உருவாக்குவதற்காக ம.பொ.சிவஞானம், நேசமணி, தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோர் பல போராட்டங்களை நடத்தி, பல மனித உயிர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர்!

நேசமணி,                                                 ம.பொ.சிவஞானம்                                               கவிமணி

தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தே உயிர்துறந்து இறுதியாக மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழகத்திற்கான நிலப்பரப்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் ஒன்று. ஆகவே, அந்த நாள் தான் தமிழ்நாடு உருவான நாளாக இது நாள் வரை அனைத்து தமிழ் இயக்கங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது! அந்த நாளை மாற்ற வேண்டாம் என்பது பல தமிழ் அமைப்புகள் வைக்கும் வாதம்! பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், பெ.மணியரசன்..போன்ற பலர் இந்த நாளைத் தான் வலியுறுத்துகின்றனர்!

உண்ணாவிரதத்தில் உயிர் துறந்த சங்கரலிங்கனார்

முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் மதுரை சென்ற போது சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் அறிஞர்கள் வைத்த கோரிக்கையின் விளைவே இந்த அறிவிப்பு என்பதால், சாலமன் பாப்பையாவைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

”ஐயா, மொழிவழி மாகணங்கள் பிரிந்து தமிழ் மாகாணத்திற்கான நிலப்பரப்புகள் வரையறை செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக தமிழகம் உருவானது 1956, நவம்பர் ஒன்று என்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் பிறகு 11 ஆண்டுகள் கடந்து தான் அண்ணா, ‘மதராஸ்’ என்ற பெயரை நீக்கி ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டினார்! ஒரு குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவதா..? அதற்கு சில வருடங்கள் கழித்து பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவதா?’’

”அண்ணா அறிவித்த பிறகு தான் இந்த மாநிலம் தமிழ் நாடாக அறியப்பட்டது! ஆகவே அதையே தமிழ் நாடு நாளாக கொண்டாட வேண்டும் என நாங்கள் தமிழறிஞர்கள் பலரும் கூடி முடிவெடுத்தோம். பலரும் ஒத்துக் கொண்டு தான் இந்த நிலைபாடு எடுக்கப்பட்டுள்ளது.”

”பெயர்சூட்டல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது! நமக்கு ஒரு அடையாளத்தை தந்தது என்பது மறுப்பதற்கில்லை. வரலாற்று ரீதியாக தமிழ்நாடு அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டதே!”

”நீங்கள் குறிப்பிடும் காலத்திற்கு முன்பும் கூட இந்த நிலப்பரப்பு தமிழ்நாடு தான்! ஆனால், அதிகார பூர்வமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அண்ணா அறிவித்த நாளை தமிழ்நாடு என அறிவிப்பதில் என்ன பிழை இருக்கிறது?”

”நல்லது, அப்படியானால் பல வருடங்கள் மொழிவழி மாநிலத்திற்கான தொடர் போராட்டங்கள் உயிரிழப்புகள், தியாகங்களுக்கு பிறகு உருவான தமிழகம் என்பது நவம்பர் ஒன்றாம் தேதி! அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமே?”

”அதெப்படி..? அது தான் கெஜட்டில் இருக்கிறது! சட்டமன்ற பதிவேட்டில் இருக்கிறது. வரலாற்றில் ஏற்கனவே பதிவாகிவிட்டதே!”

”ஆனால், ஜூலை 18 மட்டுமே முக்கியத்துவம் பெறும் என்றால், நவம்பர் ஒன்றாம் நாளை என்ன செய்வதாக உத்தேசம்..?”

”அதற்கும் ஒரு முக்கியத்துவம் வேண்டும் என்கிறீர்கள். அடுத்த கட்டமாக அதையும் பேசலாம்!”

”ஆம், எல்லைகள் வகுக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது நவம்பர்-1,1956. அது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது ஜீலை-18 1968. இவை இரண்டுமே அதனதன் தன்மையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் தானே!”

”உங்கள் கருத்து எனக்கு விளங்குகிறது. அதை அடுத்தகட்டமாக பேசுவோம்’’ என்றார், சாலமன் பாப்பையா.

இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால், அண்ணா சட்டமன்றத்தில் ஜீலை-18, 1968ல் வெற்றிகரமாக தீர்மானம் நிறைவேற்றிய போதும், அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்து அதிகாரபூர்வமான பெயர் மாற்றம் ஜனவரி 14, 1969 தான் நிகழ்ந்தது. ஆக, அந்த விதத்தில் பார்த்தாலும் ஜூலை-18 முக்கியவத்துவமா? ஜனவரி-14 முக்கியமா? என புரிபடவில்லை.

ஆனால், இத்தனை வருடங்களில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் அந்தந்த மாநிலங்கள் உருவான தினத்தை விமர்சையாக கொண்டாடினாலும், தமிழக ஆட்சியாளர்கள் பொருட்படுத்தியதே இல்லை. ம.பொ.சி வற்புறுத்தலில் எம்.ஜி.ஆர் நவம்பர்- 1, 1981 ஆம் ஆண்டை தமிழ்நாடு உருவான பொன்விழாவாக அனுசரித்தார். அதே போல 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தமிழ் அமைப்புகள் மற்றும் அறிஞர்களின் வற்புறுத்தலால், நவம்பர் ஒன்றை அங்கீகரித்து  தமிழ்நாடு உருவான பொன்விழா ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது!

பல ஆண்டுகால வற்புறுத்தலுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ”நவம்பர்-1, இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு உருவான ஆண்டாக கொண்டாடப்படும்’’ என்றார்.

அப்படியிருக்க, இப்போது இந்த திடீர் அறிவிப்பு தருகிறார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த ஒரு ஆட்சியாளர் வந்து எந்த நாளை தமிழ் நாடு என அறிப்பாரோ தெரியவில்லை. அதிகாரம் தான் தமிழ்நாடு எது என தீர்மானிக்கும் என்றால், அந்த நாள் நமக்கு தேவையில்லை!

நிலத்திரை கடல் ஓரத்திலே – நின்று

நித்தம் தவஞ்செய் குமரி எல்லை – வட

மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்

மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!

என்று 1900 த்தின் ஆரம்ப ஆண்டுகளிலேயே பாரதியார் பாடியது எந்த அரசாங்கத்தின் அறிவிப்புக்கும் பிறகல்ல. அப்போதும் தமிழ்நாடு இருந்தது.

”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுகம்’’

என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டதே! எந்த ஆட்சியாளர்களின் அனுமதி பெற்று இதை அன்றே சொன்னார்,தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பரனார்! தொல்காப்பியர் இப்படி தமிழ் நிலப்பரப்பை வரையறுத்த காலத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் உருவாகவில்லை!

ஆட்சியாளர்கள் அவரவர் ஆசைக்கு என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். தமிழ்நாடு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, என்றோ உருவாகி நிலைபெற்றுவிட்டது. அது உருவான நாள் யாருக்கும் தெரியாது! அதைக் கண்டுபிடிக்கும் திரானியும் நமக்கில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time