உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டாலும் ஆவணப்படமாகவோ, மிகைப்படுத்தியோ, பிரச்சார தொனியோ இல்லாமல் திரைப்படம் முழுவதும் ஒரு திரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வு நமக்குள் எழும் வண்ணம் காட்சி அமைப்புகள் உள்ளன! சொல்லப்படாத பழங்குடியினர் வாழ்க்கை போராட்டத்தை, உலுக்கி எடுக்கும் வகையில், மிக உயிர்ப்புடன், உலகத் தரத்தில் விவரிக்கிறது ஜெய்பீம்!
உண்மையில் இந்த திரைப்படம் சினிமாத் தனம் இல்லாத ஒரு சினிமா என்று தான் சொல்ல வேண்டும். சிறிது கூட தொய்வு இல்லாமல் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை படத்தை நகர்த்தியிருக்கும் பாங்கு மிக நேர்த்தி. சமூக அக்கறையுடன் ஒரு திரைப்படத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக இயக்குனர் கொடுத்திருப்பது அபாரம்.
ஜெய் பீம் கதை பல பேருக்கு தெரிந்திருக்கும். நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ஒரு மலைவாழ் பெண்ணிற்காக நீதிக்கேட்டு வாதாடிய வழக்கு தான் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தை பிறரிடம் கேட்டோ, படித்தோ நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், 90 களில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு அணுவணுவாக உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் த. செ. ஞானவேல். இதுவும் மற்றுமொறு சம்பவம் என்று நம்மால் அவ்வளவு சீக்கிரம் கடந்து போகமுடியாத தாக்கத்தை நம் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
திரைப்படத்தின் காட்சி அமைப்புகள் பெரும்பாலும் வேறு எந்த படத்தையும் நினைவு படுத்தாதபடியும், புதியதாக தோன்றும் வண்ணமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருளர் சமுதாயத்தை சேர்ந்த செங்கேனிக்கும் ராசாகண்ணிற்கும் இடையே இருக்கும் காதலை சொல்லிய பாங்கும்,, எலிபிடிக்கும் காட்சியும், பாம்பு கடிக்கு வைத்தியம் பார்ப்பதும், இருளர் மக்களை மனிதர்களாக கூட நடத்தாத சாதிய அமைப்புகளும், உயர் நீதிமன்றத்தை செட் மூலம் அழகாக நம் கண்முன் நிறுத்திய நேர்த்தியும், அதில் வரும் நீதியரசர்கள் கதாபாத்திரங்களை தேர்வு செய்ததில் கொண்டு வந்த தத்ரூபத்தையும், நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
இருளர் கிராமத்தை நம் கண்முன்னே வரவழைத்து, அவர்கள் வாழும் குடிசையில் இருந்து, உடுத்தியிருக்கும் ஆடை வரை எல்லா வற்றிலும் உயிரோட்டம் இருக்கின்றது.. சினிமாடோகிராபர் எஸ் ஆர் கதிரும், எடிட்டர் ஃபிலோமின் ராஜ்ஜும் தங்கள் பங்கினை மிக கச்சிதமாக கையாண்டிருக்கின்றனர்.
பொதுவாக கதாநாயகிகளை அழகாக காட்ட வேண்டும் என்று ஏதாவது ஒரு இடத்திலாவது யதார்த்தம் தப்பிய காட்சி அமைப்புகளும், ஒப்பனைகளும் படங்களில் வந்துபோகும். ஆனால் இந்த திரைப்படத்தை ஒரு ‘ரியலிஸ்டிக் மூவி’ என்று சொல்லாம். உலகத் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான ‘அக்மார்க்’ தமிழ் திரைப்படம். இந்திய சினிமாவில் இது ஒரு மைல்கல்.
சண்டை காட்சிகள் இல்லை, ஆபாசங்கள் இல்லை, திரைப்படம் முழுவதும் ஒரு திரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வு நமக்குள் எழுகிறது. தன்னை மாஸ் ஹீரோவாக காட்டும் காட்சி அமைப்புகள் படத்தில் இல்லாத போதும், இது போன்ற தரமான படங்களுக்கு ஆதரவு கொடுத்து, இயக்குனருக்கு முழு சுதந்திரம் அளித்து, படத்தின் நோக்கம் கெடாமல் பார்த்துக் கொண்ட நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகள். அட்வகேட் சந்துருவாக அவரின் நடிப்பும், அவர் பேசும் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்பதான வசனங்களும் நம் நெஞ்சில் நிற்கின்றன.
90களில் நம்மை ஒரு டைம் மெஷீனில் பயணம் செய்தது போன்ற ஒரு அனுபவத்தை இந்தப் படம் தருகின்றது. லாகஅப் கொலைகள் பற்றி சில படங்கள் எடுக்கபட்டிருந்தாலும், இந்த படம் நம்மை உலுக்கி எடுக்கும் விதத்தில் இது ஒரு ‘ஸ்டண்ட் ஔட் மூவி’ என்று சொல்லலாம். இது ஏதோ 95-ல் நடந்த சம்பவம் என்று நாம் நினைக்கக் கூடாது, இப்பொழுதும் இருளர்களின் வாழ்க்கைத் தரம் உயராமல் தான் இருக்கின்றது. இம் மாதிரியான நெஞ்சை உலுக்கி எடுக்கும் அராஜகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சாத்தான்குளம் தந்தை மகன் ஜெய்ராஜ், மற்றும் பென்னிக்ஸ்ஸின் லாக் அப் கொலையிலிருந்து இன்றும் காவல் துறையில் நடக்கும் அவலங்களை நாம் புரிந்து கொள்ளலாம். அதிகாரவர்கத்தின் அடக்குமுறையை – குறிப்பாக காவல் துறையில் அராஜகத்தை – இந்த படத்தில் நன்றாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர். கதையின் ஓட்டம் சிறிது கூட தப்பாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் வைத்து, நம் கவனம் எங்கும் சிதறாமல் இருக்கும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது இயக்குனர் ஞானவேலுவின் இரண்டாவது திரைப்படம். கூட்டத்தில் ஒருத்தன் என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகமான இவர், பயணம் படத்தில் தான் எழுதிய வசனங்கள் மூலம் பலரின் பாராட்டினை பெற்றவர்.
இயக்குனர் ராஜீமுருகனின், ‘தலைகோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்’ என்னும் பாடல் மனதை தொடும் வரிகள். மீண்டும் மீண்டும் நம்மைக் கேட்கத் தூண்டுகிறது. இந்த திரைப்படம் உலக அளவில் பல விருதுகளை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடையே எழுந்துள்ளது.
ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், இந்த படம் தியேட்டரில் வெளிவந்திருந்தால் ஒரு ‘ரன் அவே ஹிட்டாக’ இருந்திருக்கும். இந்த படத்தின் பிரம்மாண்டத்தையும், காட்சி அமைப்புகளின் உயிரோட்டத்தையும், தொலைக்காட்சியிலும், கை பேசியிலும் தான் மக்கள் பார்க்க போகிறார்கள் என்று நினைக்கும் பொழுது சிறிது வருத்தமாக இருக்கின்றது.
Also read
ஒரு சில படங்களில் மட்டும் தான் குறைகள் பெரியதாக எதுவும் கண்டுப் பிடிக்க முடியாது. அந்த வகையில் ஜெய் பீம் இந்திய சினிமாவில் இன்னும் பல காலம் எல்லோரையும் பேச வைக்கப்போகும் ஒரு காவியமாக இருக்கும்.
இனி மேல் தான் இயக்குனர் ஞான வேலுவிற்கு பெரிய சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவர் இந்த படத்தில் செட் பண்ணியிருக்கும் ‘பென்ச் மார்க்’ மிகவும் அதிகம். இனி அவர் இயக்கபோகும் திரைப்படங்களுக்கு உருவாக போகும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே பெரிய சவாலாக அவருக்கு இருக்கும்.
உச்சநீதிமன்றம் சரவெடியை இந்த தீபாவளிக்கு தடை செய்தாலும் ஜெய்பீம் இருளர் இன மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கும் சமூக நீதிக்கான சரவெடி.
இது சாதாரண படம் அல்ல, ஆகச்சிறந்த படைப்பு, ஒரு சிறந்த அனுபவம்!
கட்டுரையாளர்; நா.ரதி சித்ரா,
யூ டியூபர், வாகை வனம்
ஆழமான விமர்சனம். நேர்த்தியான படத்தின் அலசல் அருமை.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
இது இதுதான் ஒரு உண்மையான படைப்பாளிக்கு புத்துயர் அனிக்கும் நிதர்சனமான விமர்சனம் |
தலை வணங்குகிறேன் உங்கள் நேர்மைக்கு.
சிறப்பான திரை விமர்சனம்…