இடைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன..?- கேள்வி – பதில்கள்!

- சாவித்திரி கண்ணன்

சிபி, பேரளையூர், கடலூர்

”இந்து விரோதி” என்ற பாசகவின் விமர்சனத்திற்கு ஸ்டாலின்,தன் கட்சியில் பெரும்பான்மை இந்துகள் தான்’ என்றார். மம்தா,மதத்தை வைத்துப் பிரிவினை முடியாது” என்கிறார். இது குறித்து.?

திமுக இந்துக்களை தாஜா செய்யக் கூடிய கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்றாலும், அது ஒரு போதும், சிறுபான்மையினரை தாக்கும் கட்சியாக மாறாது.

”மதத்தை வைத்து பிரிவினை முடியாது” என்ற மம்தாவே கூட மேற்குவங்கத்தில் ராமரை முன்னிறுத்திய பாஜகவிற்கு மாற்றாக துர்க்கையை அடையாளப்படுத்தும் அரசியலைk கையில் எடுத்தார் என்பதே யாதார்த்தம்!

மருதமலை மகேஷ், வடவள்ளி, கோயம்புத்தூர்

TNSTC பணியாளர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவினில் வாங்கியதை போல அரசு ஊதியம் பெறும் அனைவரும் கட்டாயம் கோஆப்டெக்ஸில் தான் துணி வாங்க வேண்டுமென அரசு உத்திரவிட்டால் நல்லதுதானே?

போக்குவரத்து துறை போன்ற அரசு நிர்வாகங்கள் ஆவினில் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு சொல்லியதே தவிர, ஊழியர்கள் வாங்கியாக வேண்டும் என சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், தனி நபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக ஆகிவிடும்.

கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி,

நிதி தேவைப்படாத அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சில தமிழக அரசால் விரைவில் நிறைவேற்றப் பட்டாலும், அரசு ஊழியர்களை திருப்திப்படுத்த முடியவில்லையே…?

அரசு ஊழியர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு அரசின் கஜானா கனமாக இல்லை. காலப் போக்கில் அரசுத் துறையில் நிரந்தர ஊழியர்களே இல்லாமல் போகும் காலமும் வரக் கூடும் என்றே தோன்றுகிறது.

எஸ்.ராமநாதன், திருச்செந்தூர், தூத்துக்குடி

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள், சுற்றுச் சூழல் கேடுகள் இவற்றைத் தடுக்க என்ன வழி..?

சாதாரண பட்டாசுகளால் பிரச்சினை இல்லை. தடை செய்யப்பட்ட கொடிய ரசாயணங்களைக் கொண்டு உருவாக்கப்படும் பேன்ஸிரக வாண வேடிக்கை பட்டாசுகளே அனைத்து விபத்துகளிலும் அடிநாதமாக உள்ளன! அவற்றை உற்பத்தி செய்வது, விற்பது, பயன்படுத்துவது ஆகிய மூன்றுக்கும் மட்டுமின்றி அனுமதிக்கும் அதிகாரிகளுக்கும் கொலை முயற்சிக்கான வழக்கை பதிவு செய்தால் தான் முடிவுக்கு வரும்.

சு.முருகவேல், காரைக்கால்,பாண்டிச்சேரி

பிரெய்ன் அட்டாக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளாரே..?

70 வயது என்பது ஓய்வு தேவைப்படும் வயது! அதுவும், ஏற்கனவே மாற்றுச் சிறுநீரகம் பொறுத்தப்பட்டவர்! முந்தைய ஜெயின்ஸ்மோக், குடிப் பழக்கம் காரணமாக உடல் ஆரோக்கியம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த உடல் நலத்தை காரணமாக்கி அரசியல் வேண்டாம் என்றாரோ அது சினிமாவுக்கு பொருந்தாதா என்ன? தன்னை அதிக சிரமப்படுத்தி அவர் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது நன்கு தெரிகிறது. அவருக்கு பூரண ஓய்வு கொடுப்பது அவர் குடும்பத்தார் கைகளில் தான் உள்ளது.

தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டிற்கும் இருக்கும் வேறுபாடு என்ன ?

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். இரு கட்சிகளுக்கும் சித்தாந்த ரீதியாக பெரிய வேறுபாடுகள் இல்லை என்றாலும், செயல்பாட்டு ரீதியாக வித்தியாசப்பட்டு உள்ளனர்.

சோ. கார்த்திகேயன், சென்னை

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாய பணியிட மாறுதல்தங்கள் கருத்து?

மற்ற அரசு ஊழியர்களுக்கான நிர்வாக ரீதியான அணுகுமுறை ஆசிரியருக்கு பொருந்தாது. அவர் தன் அறிவனுபவத்தை கொடுப்பவர். பொருளாதார ரீதியாக மாணவர்களிடம் பெறுவதற்கான தேவையற்றவர். அவரே, விருப்பத்தின் பெயரால் மாறிப் போகலாம். கட்டாய பணியிட மாறுதல் அவசியமற்றது!

அதே சமயம் இந்த அளவுகோலை பொதுமைப் படுத்த முடியாது. பள்ளிக்கூடத்திற்கு பலமாக பார்க்கப்படும் ஆசிரியர்களும் உண்டு. பாரமாக இருக்கும் ஆசிரியர்களும் உண்டு. பணியிடத்து சூழலை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு!

சக்தி, பெங்களூர்

நம் தமிழகத்தில் இராவணன் என்ற பெயர் பொதுவானது. ஆனால், வட இந்தியாவிலோ இராவணனுக்கு மிகுந்த கெட்ட பெயர் உள்ளது. தமிழகத்தில் இராவணன் நல்லவனாக மதிக்கப்படுவது ஏன்..?

ஆதிகாலந்தொட்டே இதில் புவியியல் மற்றும் இனம் சார்ந்த விருப்பு,வெறுப்புகள் புதைந்துள்ளன.

வால்மீகி ராமாயணம் வட இந்தியர் நெஞ்சங்களில் இராவணன் குறித்த வன்மத்தை விதைத்து விட்டது. அது தொடர்ந்து கண்மூடித்தனமாக வளர்த்தெடுக்கப்பட்டும் வருகிறது.

இராவணன் தமிழ் மன்னன். தசரதனைப் போல அறுபதினாயிரம் மனைவியை கொண்டவனல்ல. அர்ச்சுனனைப் போல அளவில்லாத பெண்டிரை கைபிடித்தவனுமல்ல. ஒரே மனைவியோடு வாழ்ந்த சிவபக்தன்.  தவசீலன். அவனது தீய செயல் ஒன்றே ஒன்று தான் சீதையைத் தூக்கி வந்தது! ஆயினும் கடைசி வரை அவளைத் தொடவில்லை. இதைத் தவிர அவனிடம் அளப்பரிய நல்ல குணங்களும், ஆற்றலும் இருந்தன!

குணம் நாடி, குற்றமும் நாடி… என சீர்தூக்கிப் பார்க்கிறது தமிழர் மரபு! குற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சீனத்தோடு பார்க்கிறது வட இந்திய மரபு!

கு. மஸ்தான், ராணிப்பேட்டை

இடைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன..?

பாஜகவிற்கு இமாச்சல பிரதேசத்தில் இடி விழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் மண்ணை கவ்வியுள்ளது. மத்தியப் பிரதேசமும், வடகிழக்கு மாநிலங்களும் தோழமை கட்சிகளின் தயவில் பாஜகவின் மானத்தை காப்பாற்றி உள்ளன.

மேற்குவங்கத்தில் நான்கில் மூன்றில் டெபாசிட்டை கூட தக்க வைக்க முடியவில்லை.

கர்நாடகத்தில் சமபலம் காட்டியுள்ளனர்!

ராஜஸ்தானில் காங்கிரஸின் ராஜபாட்டை தொடர்கிறது!

இடைத் தேர்தல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு உற்சாகத்தையும், பாஜகவிற்கு பின்னடைவையும் தந்துள்ளது.

பாஜக பலவீனமடைந்து வருகிறது. மாற்று கட்சிகளை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். வருகிற ஐந்து மாநில தேர்தல்களில் இந்த தொடர்ச்சி மேலும் தெரிய வரலாம்!

எஸ்.ராகவன், நங்கநல்லூர்,சென்னை

2 ஜி வழக்கில் ஊழல் நடந்திருப்பதற்கு ஆதாரமாக தணிக்கை அறிக்கை தந்த மத்திய தணிக்கை அதிகாரி வினோத்ராய் மன்னிப்பு கேட்டுள்ளாரே..?

கரைபடியாத மன்மோகன்சிங்கிற்கு 2ஜியில் தொடர்பிருப்பதாக அவர் பேசியது மன்னிக்க முடியாத குற்றம்! அதற்கு வழக்கு போட்ட நிலையில் தான் மன்னிப்பு கோரி இருக்கிறார்.

‘2ஜியில் ஊழல் நடக்கவே இல்லை’ என்பதாக இதை புரிந்து கொள்ளத் தேவையில்லை.

2 ஜி ஊழல் ஊதி, ஊதி பெரிதாக்கப்பட்ட ஒன்று என்பதற்கு இந்த மன்னிப்பு கோரல் ஒரு சான்றாகும்.

எம். சரவணப் பெருமாள், ஓசூர்,கிருஷ்ணகிரி

ஜெய் பீம் நடித்த கையோடு பழங்குடியினர் வாழ்வுக்கு ஒரு கோடி நிதியை நடிகர் சூர்யா வழங்கியுள்ளது குறித்து?

பழங்குடியினத்தோரின் வாழ்வையும்,வலிகளையும் படத்தின் மூலமாக சொல்ல முன்வந்தது ஒன்றே அவர்களுக்கான விலை மதிப்பில்லா பெரும் கொடையாகும்!

அவர்களுக்கான நீதியை பெற்றுத் தருவதில் படம் தந்த பங்களிப்பே மகத்தானது என்ற அளவோடு நிற்காமல் அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டியாரும் கேட்காமலே தன் பங்களிப்பாக ஒரு கோடி நிதியையும் தந்துள்ளார் சூர்யா. அதையும் பழங்குடியினத் தோழர்களோடு அவர்களுக்காக பாடுபடும் கல்யாணி, சந்துரு உள்ளிட்டோரையும் சேர்த்து அழைத்துச் சென்று மனைவியோடு முதல்வரைச் சந்தித்து கொடுத்துள்ளார்.

அர்த்தமுள்ளதோர் வாழ்க்கையை தமக்கென உருவாக்கிக் கொண்டோர் நீதிக்கு குரல் கொடுப்பதிலும், நிதியை பகிர்ந்தளித்து வாழ்வதிலும் நிர்பந்தமில்லால் செயல்படுவர், அவர் நிம்மதியான வாழ்க்கையை கொள்வர்! தந்தை வழியில் தனயன்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time