படம் பார்த்த பிறகு அரைமணி நேரம் ஆகியது, அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு மனம் சகஜ நிலைக்கு திரும்ப! பலருக்கும் இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
அந்த அளவுக்கு ரியலிஸ்டிக்காகவும், மையக் கதையில் இருந்து திசை மாறாமலும் ஜெய்பீம் எடுக்கப்பட்டிருக்கிறது.
பழங்குடிகளை நம்மில் ஒருவராக மதிக்காமல் புறம் தள்ளி வந்துள்ள இந்த சமூகத்தின் இயல்பை காட்சிபடுத்தி இருப்பதன் மூலம் சமூக மனசாட்சியை தட்டி உலுக்குகிறது படம்!
படத்தின் உண்மையான ஹீரோ கதைக்கரு தான்! அதற்கு அடுத்த முக்கிய கதாபாத்திரம் கதாநாயகி செங்கேணி தான்! அவள் படும் அளவற்ற கொடுந்துயரங்களும், அதில் உண்டான மனஉறுதியும், அவளது அச்சமற்ற தொடர் போராட்டமும், கடைசி வரை அதிகாரத்தின் ஆசைவார்த்தைகளுக்கோ, மிரட்டலுக்கோ அஞ்சாத திடமும் தான் நம்மை ஈர்க்கும் அம்சமாகும்!
எந்த இடத்திலும் கதாநாயக பிம்பத்தை காட்டாமல் தன் செயல்பாடுகள், நோக்கங்கள், அதை நோக்கிய தன் நகர்வுகள் ஆகியவற்றின் வழியே சூர்யா ஒரு முன்னோடி வழக்கறிஞராக வாழ்ந்து காட்டியுள்ளார். சூர்யா நடிக்கிறார் என்பதற்காக ஒரு கதாநாயகியையும், அதற்கான டூயட்டையும் வலிந்து கொண்டு வராதது படத்திற்கு மரியாதையை உருவாக்கிவிட்டது என்றே சொல்வேன்!
போலீஸ்காரர்களின் கொடூர குணத்தை காட்டுகிறேன் என்று அவர்களின் ஈவிரக்கமற்ற அட்ராசிட்டியை மட்டும் காட்டாமல், அதிலும் மனசாட்சியுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் நியாயத்திற்காக நிற்பதன் வாயிலாகத் தான் நீதியை வென்றெடுக்க முடியும் என்ற யதார்த்தத்தை சரியாக உள்வாங்கி படம் எடுக்கப்பட்டு இருப்பதற்கு சந்துரு, பிரபா கல்யாணி போன்றோரின் வழிகாட்டுதல்களும் ஒரு காரணமாயிருக்கக் கூடும்!
காவல்துறை நண்பர்களை ’புரவோக்’ பண்ணாமல் அவர்களே பார்த்தாலும் கூட, உள்ளதைத் தான் சொல்லி உள்ளனர் என உணர்த்த வைத்திருப்பது தான் படத்தின் சிறப்பு! இயக்குனர் ஞானவேலுவுக்கு பாராட்டுக்கள்!
வழக்கறிஞர் தொழிலுக்கு வரும் இளைஞர்களுக்கு இந்த சந்துரு கதாபாத்திரம் காலாகாலத்திற்கும் ஒரு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கப் போகிறது. இது சமூகத்தில் பல நல்ல அதிர்வுகளை உருவாக்கும். காவல்துறை விசாரணை அதிகாரி பிரகாஷ்ராஜ் பாத்திரமும் பின்பற்றத்தக்க ஒரு முன்னோடி காவல்துறை அதிகாரியாக என்றும் நிலைக்கும்.
இறுதியாக ஒன்று! 35 ஆண்டுகால பத்திரிகைத் துறை அனுபவத்தில் தொடர்ந்து பல வழக்குகளில் நான் பார்ப்பது, காவலர் சிலரின் தவறுகளை மூடி மறைக்க எடுக்கும் ஒரே அஸ்த்திரம் காவல்துறையின் மானம் காப்பற்றப்பட வேண்டும் என்பதே! அந்த கோணத்திலேயே சகல அநீதிகளும் மூடிமறைக்கப்பட்டுள்ளன! காவல்துறையின் அந்த மனநிலையில் ஒரு மாற்றம் தேவை! ஒரு சில காவலர்களின் குற்றங்களை மூடிமறைக்க ஓட்டுமொத்த காவல்துறையும், நீதித்துறையும் கைகோர்த்து இயங்கினால் இதுபோன்ற அநீதிகள் தொடரத்தான் அவை வழிவகுக்கும்! இது எளிய மனிதர்களுக்கு எப்போதும் நீதி கிடைக்காமல் தடுத்துவிடும்.
இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் காவல்துறையை முதல்அமைச்சரே தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாகும். இதுபோன்ற கொடூரமான காவலர்கள் இழைக்கும் அநீதி, ‘முதல்வர் இமேஜிக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமே’ என்ற பதற்றம் தான் காவல்துறை தலைமைக்கு பெரிய சங்கடத்தை தரும். ஆகவே, எந்த நல்ஆட்சி வழங்க நினைக்கும் முதல்வரும் காவல்துறைக்கு கண்டிப்பாக பொறுப்பு ஏற்கக் கூடாது. அதை நேர்மையும் ஆற்றலும் உள்ள ஒரு அமைச்சரிடம் தந்தால் தான் அதுவும் சுதந்திரமாக செயல்படும். முதலமைச்சரும் டென்ஷன் இல்லாமல் விலகி நின்று அதை அணுகலாம்.
Also read
இதை ஸ்டாலின் பரிட்சித்து பார்க்கட்டும். இதை நான் அழுத்தமான பரிந்துரையாக சொல்கிறேன்! பல நன்மைகளை அவர் பார்க்க முடியும்!
இந்தப் படம் மனிதநேயத்தையும், மன உறுதியையும் பார்ப்பவர்களிடையே ஏற்படுத்துவதாலும் புறக்கணிக்கப்பட்டு வாழும் ஏழை பழங்குடிகளின் சொல்லபடாத வாழ்வை சித்தரிப்பதாலும், இந்தப் படத்திற்கு வரிவிலக்கு தந்து இந்தப் படம் பட்டிதொட்டி எங்கும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு மக்கள் காண முதல்வர் ஸ்டாலின் முன்வரவேண்டும்! உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதில்லை ஒரு சில மாதங்கள் கடந்து கூட செய்யலாம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
2 Comments