சிகரெட்டும், தமிழ் சினிமா ஹீரோக்களும்!

- பாலு மணிவண்ணன்

சின்னப்பா பாகவதர் காலம் தொடங்கி சினிமாவில் சிகரெட் காட்சிகள் குறையின்றி தொடர்ந்து கொண்டுள்ளன! மக்களிடம் மிக வலுவான தாக்கம் ஏற்படுத்தும் துறைகளில் முக்கியமானது சினிமா. சினிமாவில் வரும் எது ஒன்றும் பிரபலமாகும், பின்பற்றப்படும். பொதுவாக சிகரெட் பிடிப்பது குற்றமாக கருதப்பட்ட நமது சமூகத்தில் அதை கடைக்கோடி மனிதன் வரைக்கும் சகஜமான ஒன்றாக மாற்றியதில் திரைப்படத் துறைக்கு பங்கிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பலரிடம் நடந்தப்பட்ட அந்த ஆய்வில் 53 சதவிகிதமானோர் தங்கள் புகைப்பழக்கத்திற்கு சினிமா ஒரு தூண்டுதலாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து தான் சமூக ஆர்வலர்கள் பலரும் ‘நடிகர்கள் சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது’ என்று அவ்வப்போது வேண்டுகோள் வைக்கின்றனர்!

நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த வேலை இல்லா பட்டதாரி எனப்படும் வி.ஐ.பி திரைப்படத்தில் அவர் புகைபிடிக்கும் காட்சி பெரிதும் பேனராக சாலைகளில் வைத்து விளம்பரப்படுத்தப்பட்டது! இந்த சர்ச்சை நீண்ட நாள் வழக்காகவும் உள்ளது! பெரிய இடத்து மருமகன் என்ற காரணமோ என்னவோ, ”தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கடிதம் தந்துவிட்டது. ஆகவே, நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதைக்கேட்டு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பொங்கி எழுந்துவிட்டார்!

அவர் பிறப்பித்த உத்தரவை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

இன்றைக்கு வெளிவரும் 60%க்கு மேற்பட்ட சினிமாக்களில் புகைபிடிக்கும் காட்சி வந்து கொண்டுதான் இருக்கிறது ..! சினிமாவும் சிகரெட்டும் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே ஆரம்பகாலம் தொட்டு இருந்துள்ளன என்பதைத் தான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்க உள்ளோம்.

தமிழ் சினிமாவுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது . அதைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும்  சிகரெட் புகை , சுருட்டு புகை அல்லது ஹூட்க்கா புகை மணக்கவே செய்கின்றது.

சினிமா பேசாத காலத்திலேயே, 1920 களில், அமெரிக்க சினிமாக்கள் இந்திய சந்தைக்குள் புற்றீசல்கள் போல புறப்பட்டு வந்தன.  அவற்றில் புகை பிடிப்பது, மது அருந்துவது , கவர்ச்சிக் கன்னிகளின் நடனங்கள், ஆணும் பெண்ணும் அரவணைத்துக் கொள்வது, ஏன் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் கூட இடம்பெற்றிருக்கின்றன. அதை அன்றைய சென்னை ராஜதானியின்  ரசிகர்களும் ஓடி ஓடிப் பார்த்திருக்கிறார்கள். விழுந்து விழுந்து ரசித்திருக்கிறார்கள். அவற்றைக் கட்டுப்படுத்த அன்றைய ஆங்கில அரசு 1923ஆம் ஆண்டு சென்சார் விதிகளை  அறிமுகப்படுத்தியது. ஏனென்று கேட்டபோது , இந்த அமெரிக்கப் படங்களைப் பார்த்தால் எங்களது பிரிட்டிஷ் படங்களும் இப்படித்தான் இருக்கும் என்ற தவறான எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுவிடும்’’ என்றார்கள். சென்சார் அதிகாரியாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளையே, அதாவது தமிழ்க்குடிப் பெருமகன் களையே நியமித்திருந்தார்கள்.

இது ,அன்றைய சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகவும் வசதியாகப்போய்விட்டது. ஏதோ ஒரு வகையில் அவரை சரிக்கட்டவும்  வாய்ப்பாகி விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் வியாபார படத் தயாரிப்பாளர்களும் அமெரிக்க பாணியிலேயே படங்கள் தயாரிக்கத் தொடங்கினர். தயாரிக்க வசதி இல்லாதவர்கள் பம்பாயிலிருந்து பிரிண்ட் வாங்கிவந்து நம்மூர் தியேட்டர்களில் போட்டனர். வசூலை அள்ளினர்.

1931 ஆம் ஆண்டு வெளியான முதல் பேசும்படமான காளிதாஸிலேயே ஹிந்துஸ்தானி உடையில் ஒரு பெண் நடனமாடும் காட்சி இருந்திருக்கிறது. அதை ஒரு சீமான் ரசித்தபடி புகை பிடிக்கும் காட்சியும் இருந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு படத்திலும் ஆங்காங்கே புகைபிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் ,கவர்ச்சி நடனங்கள் போன்றவை இடம் பெற்றே வந்திருக்கின்றன.  அவ்வளவு ஏன் , 1939ல் வெளியான”வீர ரமணி” என்னும் பேசும் படத்தில் கே.டி.ருக்மணி என்னும் நடிகை புகை பிடித்திருக்கிறார் .சுருள் சுருளாக புகைவிட்டு அவர் புகைபிடித்த காட்சி மிகவும் ரசிக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணே புகை பிடிக்கிற போது , ஆண் பிடிக்ககூடாதா? பிடிக்காமல் இருப்பது, ஆண்மைக்கு இழுக்கில்லையா ?என்று வீரம் பேசிய பல ஆண்மக்கள் ஒளிந்தும் ஒளியாமலும்,  தெரிந்தும் தெரியாமலும்  புகைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அந்தக் காலம் தொடங்கி வாழ்க்கைப் பிரச்சனைகள் அல்லது காதல் தோல்விகள் என்றால்,  ஹீரோக்கள் தாடி வளர்த்துக் கொண்டு மதுகுடித்தோ புகை பிடித்தோ அந்த சோகத்தை மறப்பதாக காட்டி வந்தனர். தேவதாஸ், வாழ்வே மாயம் தொடங்கி இன்றைக்கும் அதன் காரணமாக, அதுவரை புகை பிடிக்காத இளைஞர்களும் புகை பிடிக்க ஆரம்பித்து கவலைகளை மறக்க முயன்றனர்.

சுதந்திரத்திற்கு பிந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சென்சார் விதிகள் வகுக்கப்பட்டன .அவற்றில் புகை பிடிப்பதற்கு எதிரான விதிகளும்  இருந்தன. ஆனாலும், அவை ஏட்டளவிலேயே இருந்தன. நடைமுறைப் படுத்தவில்லை. தமிழ்ச்சினிமாக்களில் எம்ஜிஆர் , சிவாஜி கணேசன் என்கிற ஹீரோக்கள் உருவானபோது, புகைபிடித்தல் என்பது, ஹீரோயிசத்தின் ஒரு அம்சமானது. எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் புகைபிடிப்பது போல நடிக்க மாட்டார். 1952ல் வெளியான அந்தமான் கைதி எனும் படத்தில் மட்டும் பீடி பிடிப்பது போல காட்டியிருப்பார்கள். மலைக்கள்ளன் போன்ற ஒன்றிரண்டு  படங்களில் புகைபிடிப்பது போல நடித்திருப்பார்.  ஒளிவிளக்கு  படத்தில்  மது அருந்தியதுபோல நடித்திருப்பார். அதிலும்கூட, ரசிகர்கள் மத்தியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக “தைரியமாகச் சொல், நீ மனிதன் தானா?” என்று அவரது மனச்சாட்சியே அவரைக் கண்டிப்பது போல காட்சி அமைத்து இருப்பார்கள். அதேபோல தண்ணியடித்துவிட்டு, நினைத்தை முடிப்பவன் படத்தில் சிகரெட் பிடிப்பது, போல் நடித்திருப்பார்!

தமிழ் சினிமாக்களில் சிகரெட் மீது ஒரு பெரும் ஈர்ப்பையே ஏற்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  தான்! அவர் பல படங்களில்  புகைபிடிப்பது போல நடித்திருக்கிறார். குறிப்பாக “சாந்தி “என்னும் படத்தில் , “யார் அந்த நிலவு ?ஏன் இந்தக் கனவு?” என்ற பாடற் காட்சியில் அவர் புகைபிடிப்பதை  ரசிக்கும் வகையில்  அழகாக லைட்டிங் அமைத்திருப்பார்கள். அது போல புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ.. பாடல் காட்சியில் மிக ஸ்டைலாக சிகரெட் ஊதிதள்ளுவார்!

காதல்மன்னனாக கொண்டாடப்பட்ட ஜெமினிகணேசனும் பல படங்களில் சிகரெட் புகைத்தார். தொடர்ந்து ஆக்சன் ஹீரோ ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற ஹீரோக்களும் கூட புகைப்பிடிப்பது மாதிரி காட்சிகளில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

 நடிகர் ஆவதற்காக, கர்நாடகாவில் இருந்துசென்னை வந்த சிவாஜிராவ் , வாய்ப்பு கிடைத்ததில் அவரது சிகரெட்டை உயரே தூக்கிப் போட்டு உதட்டில் கவ்வி நடித்த ஸ்டைல் முக்கியமானது . அதில் மெய்மறந்து தான்,கே பாலச்சந்தர் அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கி ரஜினிகாந்த் ஆக்கியிருக்கிறார், தனது ஒவ்வொரு படத்திலும் அவரை ஸ்டைல் ஸ்டைலாக சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடித்து ,புகை பிடிக்கும் காட்சியை வைத்துக்கொண்டே வந்தார். ரஜினிகாந்த் விடும் புகை ,வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் போல வெளிப்படுவதைக் கண்டு தமிழ் இளைஞர்கள் பிரமித்துப் போனார்கள் . தொடர்ந்து அவர்களில் பலர், ரஜினிகாந்த் ரசிகர் ஆனார்கள் .

நடிகர் கமல்ஹாசனும் நிறைய படங்களில் புகை பிடித்துள்ளார். சொல்லத்தான் நினைக்கிறேன், வாழ்வே மாயம், சத்யா..என அந்தப் பட்டியல் நீளமானது.

பிறகு வந்த ஹீரோக்களும் நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்று ஆளாளுக்கு புகை பிடிக்க ஆரம்பித்தார்கள். நடிகர் விஜய் சர்க்கார், கில்லி,மெர்சல்.அழகிய தமிழ் மகன் என பல படங்களில் சிகரெட் புகைத்துள்ளார். திருமலை படத்தில் சட்டை காலரிலிருந்து விருட்டென்று சிகரெட்டை எடுத்து பிடிப்பது அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. நடிகர் அஜித்  காதல் மன்னன், வாலி, தீனா,பில்லா, மங்காத்தா, ரெட் போன்ற பல படங்களில் புகை பிடித்திருக்கிறார்.

இந்த வரிசையில் வந்தவர் தான் தனுஷ்! மாரி,வடசென்னை, ஜெகமே தந்திரம் என படத்திற்குப் படம் புகை தான்! இவர் 2015ல் இனி நான் சிகரெட் பிடிப்பது போல நடிக்கமாட்டேன் என பேட்டி தந்து அது அச்சைல் வந்து ஈரம் காய்வதற்குள் மீண்டும் சிகரெட்டுடன் தோன்றினார். விஜய்யும் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை 2012 ஆ ஆண்டு தந்து, தந்த கையோடு சிகரெட்டை எடுத்துக் கொண்டார். அவர்களது ரசிகர்களும் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றைக்கு நடிகைகளும் சிகரெட் பிடிப்பதில் போட்டி போட ஆரம்பித்துவிட்டனர்! சிகரெட் பிடிப்பது ஏதோ ஆண்மகனுக்கான இலக்கணம் போல சீன் காட்டுவதற்கு இது சவாலாகிவிட்டது. இப்படி தமிழகம் மட்டுமல்ல, இந்திய வான்வெளி முழுக்க புகை மூட்டம் தான்!

இந்த நடிகர்களுக்கு மத்தியில் சிவகார்த்திகேயனும், கார்த்தியும் மட்டும் விதிவிலக்காக உள்ளனர். அதுவும்  நடிகர் கார்த்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என உறுதிகாட்டி வருகிறார்!

பார்வையாளர்கள் மீது சினிமா செலுத்தும் ஆதிக்கம் அசாதரணமானது!

அதனால் தான் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு கவனத்திற்கு உரியது; மத்திய அரசு மற்றும் சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத் தயாரிப்பு நிறுவனம், தவறை ஏற்று மன்னிப்பு கடிதம் அளித்திருப்பதாகவும், சிகரெட் விளம்பர தடை சட்டத்தின் கீழ், தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது சரியல்ல. இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது. இதனால், ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் இறக்கின்றனர்.

புகையிலை தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைக்காக, அரசுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகிறது. இந்தச் சூழ்நிலையில் தான், சட்டம் இயற்றப்பட்டது. இதை அமல்படுத்த தவறும் அதிகாரிகள், பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் குறுக்கிடுகின்றனர்.மாநில அளவிலான கண்காணிப்புக் குழு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பொது சுகாதாரத் துறை இயக்குனர்,  சட்ட நடைமுறைகளை பின்பற்றி, கண்டிப்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஒருமுறை சினிமாவில்பார்த்த காட்சி , மனித மூளைகளில் அழுத்தமாக பதிவாகிறது. அதன் காரணமாக சம்பந்தப்பட்ட காட்சியில் உள்ள  புகை பிடிப்பது, மது அருந்துவது, பாலியல் வக்கிரம் , வன்முறை உணர்வைத் தூண்டும் சண்டைக்காட்சிகள் ..போன்றவை முதலில் செய்து பார்க்க தூண்டுகின்றன. பிறகு அவை பழக்கம் ஆகின்றன ; பிறகு, வழக்கமாகவும் ஆகின்றன.

புகையிலைப் பொருள் தயாரிப்பு ,விளம்பரம், வினியோகம் ,விற்பனை, ஆகியவற்றுக்கு தடைவிதித்து கடந்த 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம்தான் அந்த ஆயுதம்!

ஆயுதங்களை உறையில் போட்டு வைத்திருப்பது உசிதமல்ல; உரிய வகையில் அதைப் பயன்படுத்துவது தான் அரசின் அக்கறையை வெளிப்படுத்தும்.

புகைபிடிக்கும் காட்சி படத்தில் வரும் போதே “புகை பிடித்தல் தீங்கானது ‘”என்று போர்டு காட்டுவது பயனற்றது. அது ஒரு வெற்றுச் சடங்கு!

கட்டுரையாளர்; பாலு மணிவண்ணன்

இயக்குனர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ‘திரையும், திரைக் கதையும்’ உள்ளிட்ட 32 நூல்களின் ஆசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time