பட்டாசுப் புகையால் பார்வையில் மறைந்த தமிழக நகரங்கள்!

- மாயோன்

ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரம் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாகவே பட்டாசுப் புகையில் சிக்கித் திணறியது. மேக மூட்டமும், விடாமல் பெய்த மழையும், குளிரும்,  முதியவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சற்று சிரமத்தை தந்தன! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழ்நாட்டில் 1614 வழக்குகளும் சென்னை மாநகரில் 758 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 517 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடை நடத்தியதற்காக 239 வணிகர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.  நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசுவெடியால் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறையினரும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டது போல தீவிர கண்காணிப்பு, மற்றும் கட்டுபாடுகள் செய்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன!

நம் நாட்டில் அதிக மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளித் திருநாள் இந்த ஆண்டு  மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பட்டாசு குழந்தைகளுக்கு பிடித்தமானது என்பதால் அனைத்து மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் பட்டாசு வெடிப்பதில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள்  முக்கிய இடத்தை வகிப்பது 1940 க்குப் பிறகுதான். சிவகாசியில், அய்யன் மற்றும் சண்முகம் ஆகியோர் 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினாலும் சுமார் 15 ஆண்டுகள் கழித்து தான் பட்டாசு தொழிற்சாலைகள் அங்கு தலைகாட்டி, வேகம் காட்டத் தொடங்கின.

அண்மைக் காலம் வரை நாட்டின் தேவையில் 90 சதவீதம் சிவகாசி பட்டாசுகள் தான் பூர்த்தி செய்தன.   கடந்த சில ஆண்டுகளாக,சீனப் பட்டாசுகள் கள்ளத்தனமாக நாட்டுக்குள் நுழைந்து சிவகாசி பட்டாசு விற்பனையை பாதித்தன. நீதிமன்ற உத்தரவுகள்  இன்னொரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தின. கொரோனா ஊரடங்கு கடந்த ஓன்றரை ஆண்டாக  பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையை அடி மட்டத்திற்கு கொண்டு போய்விட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பால் ஏற்படும் பாதிப்புகள், நாட்டில் மக்கள் தொகை குறைவாக -பரவலாக இருந்தவரை   தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தலைநகரான டெல்லியில் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்ட போது தான் பட்டாசுகளை இப்படி ஏகமாக வெடித்துத் தள்ளுவது சரியானது தானா? என்ற கேள்வி எழுந்தது.

பட்டாசுகளுக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளும் பட்டாசு தொழிலை நம்பி உள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்களுக்கு ஆதரவான வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

இதற்கிடையில் , பல்வேறு மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது.

சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக, தடைவிதித்த மாநிலங்களுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதி தடையை விலக்க கோரினார்.

இந்தநிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சுற்றுச்சூழலை கவனத்தில் எடுத்துக்கொண்டும், கடுமையான நிபந்தனைகளுடன்  பட்டாசுகள் வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மொத்தம் 2 மணி நேரத்திற்கு பட்டாசுகள் வெடிக்க தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் , இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கப் பட்டதாகவே தெரியவில்லை. தமிழ்நாட்டில் காலை முதல் இரவு வரை, குறிப்பாக மாலை 6 மணியிலிருந்து  இரவு11 மணி வரை தொடர்ந்து வெடித்துத் தள்ளினர். சர வெடிகள் வெடிக்க கூடாது என்று தடை உள்ளது. ஆனால் தெருவுக்குத் தெரு சரவெடி சத்தம் கேட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள குறியீட்டு எண் அடிப்படையில் காற்றில் மாசு அளவு 100 க்குள் இருக்க வேண்டும். இதைத் தாண்டி , தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்ற எண்ணிக்கையில் தீபாவளி இரவு மாசு காணப்பட்டது. வாகவ ஓட்டிகள் புகை மண்டலத்தில் மிகவும் சிரமப்பட்டனர்.

திருப்பூரில் 230 என்ற அளவில் காற்று மாசு குறியீடு இருந்தது. திருச்சியில் இந்த அளவு 320 ஐ தொட்டது. கோவை மற்றும் மதுரையிலும்  காற்று மாசு அதிகரித்திருந்தது .ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட சென்னை மாநகரம் மூச்சுமுட்டி கிடந்தது. வட சென்னையில் 344 என்ற அளவுக்கு இருந்தது. ஆனால், தென் சென்னையில் குறைந்து காணப்பட்டது. தீபாவளி காலை தொடங்கி அடுத்த நாள் அதிகாலை வரை பட்டாசு நச்சு புகை மண்டலத்திற்குள் தான் அனைத்து மக்களும் சுவாசித்துக் கொண்டிருந்தனர்.

சென்னையின் பல இடங்களில் காற்று மாசின் அளவு 500 புள்ளிகளைக் கடந்தது. பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் இதன் அளவு 700 தாண்டி நின்றது.

இந்த நச்சு புகைமண்டலத்தில்  இருந்த  பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரையிலான ஒரு கோடி பேரும் ஒரே நாளில் நாற்பத்தி ஆறு சிகரெட் பிடித்ததற்கு சமமான  பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு சென்னை மாநகரில் அள்ளப்பட்ட  பட்டாசு குப்பைகளின் அளவு 87 டன்னாகும். அடுத்த நாள் காலையில்  மட்டும் சுமார் 48 டன் அளவு பட்டாசுக் குப்பைகள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து அள்ளப்பட்டுள்ளன..! இதே அளவு குப்பைகள் இன்னும் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது.

நைட்ரேட், பொட்டாசியம், கந்தகம் போன்ற நச்சு இரசாயனங்களால்தான் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மண்ணையும் காற்றையும் விண்ணையும் கெடுக்கின்றன.

சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ரசாயனக் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் ,கூவம், அடையாறு வழியாக கடலுக்குள் செல்கின்றன. கடல் மீன் மற்றும் பல்வேறு வழிகள் வாயிலாக நம் உடலுக்குள் இந்த ரசாயன கழிவுகள் மீண்டும் வருகின்றன. இது இயல்பாக நடைபெறும் சுழற்சியாகும்.

இவற்றின் பாதிப்பு உடனடியாக தெரிவதில்லை. பல மாதங்கள் கழித்து கொடிய நோயாக வெளிப்படுகின்றன. அண்மைக்காலமாக புற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் புற்றீசல்கள் போல  புற்றுநோய் மருத்துவமனைகள் தோன்றுவதற்கும் காரணங்களை ஆராயும் போது இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சுந்தர்ராஜ், நித்யானந்த் ஜெயராமன், முருகவேல் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை மண்டலம் ஓசோனில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

பிரச்சனை ஒரு பக்கம் இப்படி இருக்க, இன்னொருபுறம் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளில் 5 சதவீதம் மட்டுமே இயந்திரங்கள் பங்களிப்பு கொண்டவை. மற்ற 95% மனிதர்களின் உழைப்பால், அவர்களின் கைகளைப் பயன்படுத்தி தயாராகி வருபவை. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினந்தோறும் ஒரு தொழிலாளி  சுமார் 300 ரூபாய் சம்பாதித்துள்ளார். அண்மைக்காலமாக 200 ரூபாய் தான் சம்பாதிக்க முடிவதாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் பட்டாசு விற்பனை குறைந்து போனதுதான்.

மேற்குவங்க அரசு கூட இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்தது. சுப்ரீம் கோர்ட்டு அந்த தடையை நீக்கி கடைசி நேரத்தில் உத்தரவிட்டது. கடைசி நேர உத்தரவால் பெரிய அளவு வணிக நடைபெற வாய்ப்பு இல்லை.

மனிதர்களை வைத்து தான் மதங்களும் பண்டிகைகளும் என்பதால் வருங்காலங்களில் பட்டாசுகள் கூடுதல் நெருக்கடியைதான் சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையை வருடத்திற்கு ஒரு முறை  கடந்து செல்லும் நிகழ்வு என்று கருதி விடக்கூடாது.

தமிழ் நாட்டில் பட்டாசு நச்சு புகை மண்டலங்கள் இனி உருவாகாத வண்ணம் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதேவேளையில், இதை வாழ்வாதாரமாக கொண்டுள்ள  தொழிலாளர்களுக்கும்  வியாபாரிகளுக்கும் மாற்று வருமானத்திற்கான வழி காட்டுதல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதை  குடிசைத் தொழிலாக கொண்டிருக்கும் தொழிலாளர்கள் குறிப்பாக இளம் வயதினருக்கு பட்டாசு ரசாயனம் உடல் முழுவதும் பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே  மாற்று தொழிலுக்கு அவர்கள் செல்லும் போது நல்லதொரு வாழ்வியல் சூழலும் கிடைக்கும்.

தீபாவளியை ஆரம்பத்தில் கொண்டாடியபோது அகல் விளக்குகளை வரிசையாக வைத்தும் அலங்காரமாக அமைத்தும் தான் கொண்டாடியுள்ளனர். இப்போதும் அந்த வழக்கம் இருக்கத் தான் செய்கிறது! இவை பார்க்க மிக ரம்மியமாக உள்ளன!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதில் நுழைந்த பட்டாசுகள் ஒரு கலாச்சார நிகழ்வு அல்ல. பட்டாசுகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நவீன விளக்குகள் அலங்காரம்  போன்ற புதிய முறைகளை உருவாக்கி தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும்.

தமிழக  மக்களுக்காகவும் சிவகாசி தொழிலாளர்களுக்காகவும் தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஒரு தொடக்கமாகக் கொண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வை  நோக்கி தமிழக அரசு  துரிதமாக நகர வேண்டும்.

டெல்லி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகு அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நிலைக்கு செல்ல தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

இப்பிரச்சினையில் அரசின் அணுகுமுறை “மதம்” என்ற அடிப்படையில் இல்லாமல் “மனிதம்” என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.!

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்” குறள்-435.

பொருள்:

தீங்கு நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

-மாயோன்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time