போலி நகைகளும், பொலிகிடா வங்கிகளும்!

- செழியன் ஜானகிராமன் 

எதனால் வங்கிகளில் போலி வகைகளை வைத்து பணம் பெற்று ஏமாற்றும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன? எப்படி தடுப்பது?

ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கவேண்டிய வேலை  வங்கிப் பணியாகும். ஒரு நிமிடக் கவன குறைவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். கவன குறைவால் உயிர் சேதம் வங்கி பணியில் ஏற்படாது என்றாலும், கோடிக்கணக்கான பணம் ஏமாற, ஏமாற்ற வழி உண்டு. சமீபமாக கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து பல கோடி மோசடி செய்தது வெளிவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறுவு வங்கியில் 2 கோடி ரூபாய் அளவு போலி நகை வைத்து ஏமாற்றி உள்ளனர். இதற்கு உடந்தையான  மேலாளர், நகை மதிப்பீட்டாளர் மற்றும் இன்னும் சில பணியாளர்களை பனி இடை நீக்கம் செய்து உள்ளனர்.  இவை ஒரு மாதிரிதான் இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் இன்னும்  பல கோடிகள் மோசடிகள் வெளி வரவேண்டியுள்ளது.

பொதுவாக வருடம் ஒரு முறை வங்கித் தலைமை வெளியே இருந்து நகை மதிப்பீடு செய்பவர் ஒருவரை வங்கி கிளைகளுக்கு அனுப்பும். அந்த நகை மதிப்பீடு செய்பவர் வங்கியில் உள்ள நகையின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து போலி நகை இருந்தால் சொல்வார். இது நடைமுறை. இதனால் ஏமாற்ற நினைப்பவர்கள் அடுத்து எப்பொழுது நகை ஆய்வாளர்கள் வருவார்கள் என்று தெரிந்து கொண்டு அதற்குள் போலி நகைகளை வைத்து பணம் எடுத்து கொள்வார்கள். ஆய்வாளர்கள் வருவதற்குள் பணம் செலுத்தி அந்த போலி நகைகளை எடுத்துவிடுவார்கள். இவை எப்பொழுதும் வெளியே தெரிவதில்லை.

ஆனால், அந்த ஒரு வருடத்திற்குள் அதிகப்படியாக போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கான பணம் எடுத்துவிட்டால் அதை திரும்ப கட்ட முடியாமல் போகும். ஆய்வு செய்யும்பொழுது மாட்டிக் கொள்வார்கள்.  இப்பொழுது மாட்டி உள்ளவர்களும் இப்படிபட்டவர்களே. மாட்டாமல் போனவர்களே அதிகமாகும்.

வருடம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்தாலும், சில வங்கிகளில் இரண்டு வருடம் வரை ஆய்வு செய்யாமல் பிறகு செய்யும்பொழுது பெரிய அளவில் மோசடி வெளிச்சத்திற்கு வரும். அப்படித்தான் பல கோடி ஏமாற்றியவர்கள் நிச்சயம் கடைசி ஒரு வருடத்திற்குள் மட்டுமே செய்திருக்க வாய்ப்பு இல்லை. இத்தகைய விஷங்களை உன்னிப்பாக கவனித்தால், பல வருடங்கள் ஆய்வு செய்யாமல் விட்டிருப்பது தெரியவரும்.

உதாரணம்

சில மாதங்கள் முன்பு Union Bank Of india திருவள்ளுர் கிளையில் உள்ள மேகநாதன் என்ற அப்ரைஸர் கடந்த 3 வருடங்களாக போலி நகைகளை வைத்து 4 கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார். 3 வருடங்களாக வங்கி ஏன் நகை ஆய்வு செய்யவில்லை என்பது கேள்விக்கு உள்ளாகிறது?

அப்ரைஸர் தன் பெயரில் நகைக் கடன் வைக்க வங்கி விதி அனுமதிப்பதில்லை. அதனால் நண்பர்கள், மற்றும் பழக்கமான வாடிக்கையாளரிடம் பேசி அவர்கள் பெயரில் வைத்து மோசடி செய்வார்கள்! அப்படித்தான் மேகநாதன் வங்கி வாடிக்கையாளர், நண்பர்கள் என்று 137 நபர்கள் பெயரில்  போலி  நகை வைத்து ஏமாற்றி உள்ளார்.

இதில் அப்ரைஸர் மட்டுமே இந்த மோசடி செய்து கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் bank of india வில் பணிபுரிந்த அப்ரைஸர் வெங்கடேஷ் தன் நண்பர் பெயரில் 6 லட்சம் போலி நகையை வைத்து ஏமாற்றி கைதாகி உள்ளார்.

சமீபமாக வேலூரில் நண்பர்களுடன்  இணைந்து நித்தியானந்தன் என்ற அப்ரைஸர் 70 லட்சம் ரூபாய்க்கு போலி நகை வைத்து எடுத்து உள்ளார். இதில் ஈடுபட்ட சிலர் கைதாகி உள்ளனர். இருவர் தலைமறைவாகி உள்ளனர்.

நல்ல நகையா? போலியா ?

ஒரு நாள் முடிவில் வங்கியில் வந்துள்ள நகைகளை மேனேஜர் எடுத்து அதன் மீது திரவம்  ஊற்றி நல்ல நகையா? போலியா? என்று சோதித்து பார்க்க வேண்டும். சில வங்கி மேனேஜர்கள் வந்துள்ள நகைகளில் சில நகைகளை (Random) எடுத்து திரவம் ஊற்றிப் பார்ப்பார். ஆனால், பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருக்கும் வங்கிகளில் அப்படியே எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள். நகரங்களிலும் பெரும்பாலும் இப்படியே நடக்கும். சிலநேரம் இப்படி ஊற்றப்படும் திரவத்தாலும் நகையின் உண்மைத் தன்மையை கண்டு பிடிக்கமுடியாது!

சரியாக ஒரு நகை நல்ல நகையா அல்லது போலியா என்பதை தொட்டு பார்த்து கண்டுபிடிக்கும் திறமை நகை மதிப்பீடு செய்யும் அப்ரைஸர்க்கு தான் உண்டு.

பல நேரம் இத்தகைய மோசடிக்கு வங்கி மேனேஜர் உடந்தையாக இருந்தாலும், பெரும்பாலும் அப்ரைஸரும் தனியாக மோசடியில் ஈடுபட்டிருப்பார்.  உதாரணமாக 10 மோசடி நடைபெற்றால் வங்கி பணியாளர் உடந்தையுடன் 4ம், அப்ரைஸர் மட்டுமே 6 என்ற அளவில் இருக்கவே வாய்ப்புகள் உண்டு. காரணம் நகைக் கடன் வழங்கும் முறைகளும், அப்ரைஸரின் பணிப் பாதுகாப்பின்மையுமாகும்.

இங்கு தான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. வங்கியின் அடிப்படைகளை தெரிந்து கொண்டால் பிரச்சனையின் ஆணிவேர் தெரிவரும்!

வங்கியில் பணத்தை கையாள்பவர் வங்கி மேனேஜர் கூட இல்லை. கேஷியர் தான் பணத்தை கொடுப்பது, வாங்குவது ஆகும். ஆனால் கேஷியருக்கு அதை தாண்டி எந்த அதிகாரமும் கிடையாது. நாள் முடிவில் வங்கி அதிகாரி அன்றைய நாளின் கையிருப்பு பணத்தை சரிபார்த்து அவற்றை பாதுகாப்பு அறையில் கேஷியர், மற்றும் மேனேஜர்  ஒன்றாக சென்று வைத்து விட்டு வருவார்கள். பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் சாவி இரண்டு பேரிடமும் இருக்கும். ஒரு சாவி போட்டு திறக்க முடியாது. ஆக ஒருவர் நினைத்தாலும் பெட்டியில் இருந்து பணம் எடுக்க முடியாது. மறுநாள் காலை இரண்டு பேரும் சென்று பணப் பெட்டியை வெளியே கொண்டு வந்து திறப்பார்கள். இதுவே நடைமுறை.

கேஷியர்கள் கிளெர்க் என்று அழைக்கப்படுவார்கள். அதே வங்கியில் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அதிகாரிகள். இவர்களுக்குத் தான் கடன் கொடுப்பது, ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்து போடுவது ஆகிய அனைத்து முக்கிய பொறுப்புகளும் இருக்கும். அதேபோல் தொடக்க நிலை ஊழியர்கள் வங்கி ஆவணங்களை இங்கிருந்து மற்றவர்களுக்கு கொடுப்பது, வங்கியை திறந்து கொடுப்பது, மூடி கொடுப்பது என்று செய்வார்கள் இவர்களை வங்கி உதவியாளர் அல்லது பியூன் என்று அழைக்கப்படுவார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரி-கிளெர்க்-உதவி பணியாளர் இவர்கள் அனைவரும்  வங்கியில் நிரந்தர பணியாளர்கள் ஆகும். வங்கி இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும். பணம் உயர்வுடன்  இன்னும் பல நன்மைகள் உண்டு. ஆனால் இதே வங்கியில் கேஷியர் போன்ற பல கோடிகளை பணமாக இல்லாமல் தங்க நகையாக கையாள்பவர்களை நகை மதிப்பீட்டாளர் அல்லது அப்ரைஸர் என்று அழைக்கப்பார்கள். இங்குதான் முரண்பாடே தொடங்குகிறது.

கேஷியருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லையென்றாலும் அவருக்கு வங்கி பணியாளர் என்ற அங்கீகாரம் உண்டு. வங்கிக்கும் அவருக்கும் நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. பொதுவெளியில் மதிப்பு ஏற்படுகிறது. ஆனால் தங்க நகையை  கையாளும் அப்ரைஸர்களுக்கு  வாடிக்கையாளர் கொடுக்கும் கமிஷன் தொகைதான் சம்பளம். வங்கி இவருக்கு எந்தப் பணமும் கொடுக்காது!

எளிமையான கேள்விகள்? 

# கோடிக்கணக்கான மதிப்பு உடைய நகைகளை மதிப்பீடு செய்யும் நபரை வங்கிகள் ஏன் கமிஷன் அடிப்படையில் ஆட்களை எடுக்கிறது? எப்படி வங்கிகள் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கிறது?

# பணத்தை கையாளும் கேஷியரை அப்படி கமிஷன் அடிப்படையில் பணிக்கு எடுக்குமா?

# பணம் தொடர்பான, கடன் தொடர்பான பயிற்சிகளை வங்கிகள் தங்கள் பணியாளர்க்ளுக்கு அவ்வப்பொழுது கொடுத்து கொண்டே இருக்கும். ஏன் அவர்களுக்கு நகை உண்மைத்தன்மை கண்டுபிடிக்கும் பயிற்சிகளை கொடுப்பதில்லை?

# எல்லாவற்றையும் அப்ரைஸர் பார்த்துக் கொள்வார் என்று இருப்பதால்தானே இதுபோல் பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டுபிடிக்க முடியாமல் வெளியே இருந்து இன்னொரு அப்ரைஸர் வந்து கண்டுபிடிக்கும் நிலை ஏற்படுகிறது?

# தினமும் மேனேஜர் நகையை வாங்கி உள்ளே வைப்பார். நகை தன்மையை கண்டுபிடிக்கும் திறமை அவருக்கு இருந்திருந்தால் ஒரு நாள் இலையென்றாலும் இன்னொரு நாள் கண்டுபிடித்துத் விடுவார் இல்லையா? வருடம் முடிவில் தெரியவருவது தொடக்கத்திலேயே தெரிந்துவிடும் இல்லையா?

# மேனேஜர் உடந்தையுடன் இல்லாமல் அப்ரைஸர் மட்டும் செய்யும் மோசடியை பிறகு கண்டுபிடிக்கும்பொழுது அப்ரைஸர் கோபத்தில் இதற்கு மேனேஜரும் இன்னும் சில பணியாளரும் உடந்தை என்று சொல்லிவிட்டால் இந்த பிரச்சனையில்  இருந்து மேனேஜர் வெளியே வருவது மிக மிக கடினமே. எப்படி நிரூபிப்பார் தான் குற்றவாளி இல்லை என்று?

# மேனேஜர் உடந்தையுடன் செய்யும் மோசடிகளை அடுத்து வரும் புதிய மேனேஜர் அல்லது வருட முடிவில் வரும் நகை ஆய்வாளர் கண்டுபிடிக்கும் வரை இந்த மோசடி நடந்து கொண்டுதான் இருக்கும்.

# வருடம் ஒரு முறை வந்து நகை ஆய்வு செய்வதற்கு பதில் 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது திடீர் திடீர் என்று நகை ஆய்வு செய்யத் தொடங்கினால் மேனேஜர் உதவியுடன் நடைபெறும் நகை மோசடிகளையும் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், இந்த கேள்விகள் எதற்குமே விடை இல்லாமல் இப்படி நிறைய போலி நகை மோசடிகள் நடந்து கொண்டு இருந்தாலும் துரிதமாக மாற்று நடவடிக்கை எடுக்காமல் அப்படியே செயல்படுவதுதான் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாக உள்ளது.

ஒரு நாள் முடிவில் கேஷ்ரியிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பு அறையின் உள்ளே வைக்க மேனேஜர் மற்றும் கேஷியர் செல்வார்கள். ஆனால், நகையை உள்ளே வைக்க அப்ரைஸரை அழைத்து செல்லாமல் மற்றோரு அதிகாரியை அழைத்து சென்று வைப்பர். இங்கு தனித்துவிடப்பட்ட நிலை அப்ரைஸர்களுக்கு ஏற்படும்.

வாழக்கை முழுவதும் பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் அப்ரைஸர்கள் மிகச் சுலபமாக போலி நகை கொண்டு பணம் பெரும் முறை வங்கியில் அமைவதால் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். தாம் வங்கி நிரந்தர பணியாளர் இல்லை என்று எண்ணம் அவர்களுக்கு மோசடிகள் செய்ய வழி சமைத்துவிடுகிறது.

மோசடி செய்யும் மேனேஜர்கள் நகை விஷயத்தில் மட்டுமே செய்வார் என்பது இல்லை. வங்கியில் இருக்கும் அனைத்து வழிகளிலும் பணம் மோசடி செய்ய பார்ப்பார்.  வாடிக்கையாளர் கட்ட வரும் பணம் அதிகம் இருந்தால் திருப்பி கொடுக்காமல் வைத்து கொள்ளும் சில கேஷியர்களும் உண்டு.

என்ன தீர்வு ?

பணத்தை கையாளும் கேஷியரை போன்று அப்ரைஸர்களையும் நிரந்தரப் பணி நியமனம் செய்தால் பணி பாதுகாப்புடன் வங்கிக்கு விசுவாசமாக செயல்பட நிர்பந்தப்பட்டராவர்.

வருடம் ஒரு முறை என்று இல்லாமல் அவ்வப்பொழுது நகை ஆய்வு செய்ய தொடங்கினால் பெரும் மோசடிகளை தடுக்க உதவும். எந்த வங்கியில் மோசடி நடந்து உள்ளதோ அந்த  வங்கியில் மட்டுமே திடீர் என்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளன வங்கிகள். அதைத் தவிர்த்து அனைத்து நகை கொடுக்கும் வங்கிக் கிளைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.

மோசடியில் ஈடுபடும் மேனேஜர், அப்ரைஸர் இருவரிடம் இருந்தும் மக்கள் பணத்தை பாதுகாக்க இது ஒன்றே வழியாகும்.

இந்த மூன்றில் ஒன்று வங்கிகள் கடைபிடித்தாலும் போலி நகை மோசடி குறையும். குற்றங்களை முழுவதும் நிறுத்த முடியாது என்றாலும் குறைக்க முடியும்! அதையாவது வங்கிகள் செய்யலாம்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன் 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time