முதல் உலகப் போரில் போரிட்ட இந்திய வீரர்களின் வலி மிகுந்த அனுபவங்களின் ஊடாக, போலி தேசபக்தியும், போர்வெறியும் விளைவிக்கும் பேரழிவுகளை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது ச. பாலமுருகன் எழுதிய இந்த நாவல்! டைகரிஸ் நதிக்கரையில் போரிட்டு, அந்த நதி வெள்ளத்தில் தங்கள் ரத்தத்தை ஈந்து உயிரிழந்த இந்திய வீரர்களின் சொல்லப்படாத கதை!
மனித உரிமை செயற்பாட்டாளரான ச.பாலமுருகன் எழுதியுள்ள நாவல் ‘டைகரிஸ்’. முதலாம் உலகப் போரில் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான வீரர்கள், அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு ஆதரவாக போரில் கலந்து கொண்டனர். துருக்கி ஒட்டாமன் பேரரசை எதிர்த்தப் போரில் கணிசமானோர் தங்கள் உயிரை இழந்தனர். பலர் காணாமல் போயினர். இது இப்படிப்பட்டவர்களைப் பற்றிய நாவல். முதல் உலகப்போரைப் பற்றிய கதையை இதுவரை யாரும் தமிழில் எழுதவில்லை.
‘சோளகர் தொட்டி’ நாவலில் வீரப்பன் தேடுதல் வேட்டையினால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் இன்னல்களை வெளிக்கொணர்ந்தவர் ச.பாலமுருகன். இப்பொழுது முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்து உள்ளார். முதல் உலகப் போர் (1914 -1918) முடிந்து ஒரு நூற்றாண்டு முடிந்த நிலையில், அதன் கோர முகத்தைப் பதிவு செய்துள்ளார்.
வில்லியம்ஸ் என்ற ஆங்கிலோ- இந்தியன் ஊடாக கதை தொடங்குகிறது. ஆங்கிலேயருக்கும், மருத்துவராக இருக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவன் வில்லியம்ஸ். “பிரிட்டனுக்கு நீங்கள் தேவை, கடவுள் அரசரைக் காக்கட்டும்” என்ற முழக்கத்தினால் ஈர்க்கப்பட்டு இராணுவத்தில் சேர்கிறான். கணவனை இழந்த அவனது அம்மாவிற்கு இதில் விருப்பமில்லை. பம்பாய் துறைமுகத்தில் இவனைப் போல வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு சேர்ந்து, துருக்கிப் பேரரசை எதிர்த்து போரிட, முதலில் குட் நகருக்கு (தற்போதைய ஈராக்) வந்து சேர்கிறான்.
‘பட்டாளத்தில் சாதி இருக்காது’, அரசு வேலை, நாட்டு விசுவாசம், குடும்பத்திற்கு பென்சன் என்ற பல்வேறு காரணிகளால் இராணுவத்தில் சேர்கின்றனர். ஜமீன்தார், கலெக்டர், தாசில்தார், கிராம முன்சீப், பள்ளி ஆசிரியர், பாதிரியார்கள், மத குருமார்கள் என ஒட்டுமொத்த சமூகமே இராணுவத்திற்கு ஆட்களைத் திரட்டி அனுப்புகிறது. முடி திருத்துபவர், சலவைத் தொழிலாளி, துப்புரவுப் பணியாளர், குதிரை ஓட்டுபவர், சமையல்காரர் என எல்லாரும் சேரலாம். எந்தத் தொழிலும் தெரியாவிட்டாலும் தடையில்லை. மூட்டை சுமக்கத் தெம்பிருந்தால் போதும். எந்த முன் நிபந்தனையும் இன்றி காந்தி போருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். பஞ்சம் போன்ற காரணங்களும் கிராம மக்களை போருக்குத் தள்ளுகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி குதிரைகளும், கழுதைகளும் கூட போருக்கு அனுப்பப் படுகின்றன. எல்லாம் சரி. இவர்கள் யாரை எதிர்த்துப் போராடப் போகிறார்கள். இவர்களின் எதிரி யார் ! இந்தப் போரினால் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது ? எதற்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தனர்!
டைகரிஸ் என்பது ஒரு நதியின் பெயர். இந்த நதி துருக்கி ஒட்டாமன் பேரரசில் ஓடுகிறது. இன்று இருக்கும் ஈராக், சிரியா, துருக்கி ஆகியவை அப்போதைய ஒட்டாமன் அரசில் இருந்த பகுதிகள் எனலாம். இந்த நதியில், நதிக்கரை ஓரம், நதிக்கரை அருகில், நதியின் ஓட்டத்தில் கதை பெரும்பாலும் நடைபெறுகிறது. எனவே டைகரிஸ் என்ற பெயர் பொருத்தமானதே.

நாவல் சரளமாக செல்கிறது. எளிதாகப் படிக்கலாம். புவியியல் அந்நியமாக நமக்கு இருப்பதாலும், ஒரு நூற்றாண்டு முடிந்துவிட்டதாலும், அதில் காட்டப்படும் பல்வேறு நகரங் களும் நமக்குப் புதிதாக இருப்பதாலும் நாவலில் லேசான ஆவணத்தன்மை தென்படுவதை தவிரக்கவியலாது.
அதை ஈடு செய்யும் வகையில் ஆங்காங்கே, பாத்திரங்களை உணர்வோடு உருவாக்கிக் கொண்டேச் செல்கிறார் பாலமுருகன். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் ‘அய்னி’. அதாவது வசந்த மலர். மொழி தெரியாத பிரதேசத்தில், எவ்வளவு காலம் வில்லியம்ஸ் அய்னியோடு ‘டச்சிங் – டச்சிங்கில்’ இருக்க முடியும்; முயற்சி செய்திருக்கிறார். இது தவிர கேரளா இக்பால், இவர்கள் வளர்க்கும் ஆட்டுக்குட்டி, இராமன், எந்தச் சூழலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ராணா போன்ற பாத்திரங்களும் அந்த வகையிலானவையே !
எந்த யுத்தத்திலும் உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. குட் நகர மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் அந்த நகரின் உள்ளூர் பிரமுகர்கள் இருபது பேரை பணயக்கைதிகளாக வெள்ளை இராணுவம் பிடித்து வைக்கிறது. அவர்கள் நிராயுதபாணி ஆக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆயுத பலத்தோடு உள்ள வெள்ளை இராணுவத்தை எதிர்த்து, குட் நகரின் எளிய அரபு மக்கள் என்ன செய்ய முடியும். அப்படிப்பட்ட உள்ளூர் பிரமுகர் ஒருவரின் மகள்தான் அய்னி. இவர்கள் போனபின்பு அல்லது தோற்றபின்பு அடுத்து வரும் அரசு இந்த அரபியர்களை சும்மா விட்டுவிடுமா என்ன ! அந்த நகர மாந்தர்களுக்காக நாம் கண்ணீர் சிந்துகிறோம். வில்லியம்ஸ் – அய்னிக்காக வருந்துகிறோம்.
இதுவரை வெள்ளை இராணுவம் போரில் தோற்றதில்லை.போரில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை மட்டும் போதாதே ! வெள்ளம், மழை, வெயில், குளிர், பாலைவனம் போன்ற இயற்கைக் காரணிகள் போரைப் பாதிக்குமே ! ஆயுதம், உணவுப் பொருள்,குடிநீர், மருந்து , உடை போன்றவை தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்க வேண்டுமே ! பாக்தாத் நகரை வெற்றி கொண்டால், அந்நகர ஆளுநராக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற ஆசை ஜெனரல் டவுன்செண்ட் -ஐ உந்தித் தள்ளலாம். ஆனால் ‘எங்கோ ஆஸ்திரியா இளவரசன் பர்டினன்டையும், அவன் மனைவியையும் போஸ்னியாவின் வீதியில் ஒரு்பள்ளி மாணவன் சுட்டுக் கொன்றதற்காக, தென்னிந்தியாவில் ஊட்டியில் இருக்கும் ஒருத்தியின் மகன் (வில்லியம்ஸ்) எதற்காக சண்டைக்குப் போகவேண்டும்?
உணவுப் பற்றாக்குறையைப் போக்க குதிரைகளையும், கழுதைகளையும் உணவாக சாப்பிடுங்கள் என்கிறது இராணுவம். வீரர்கள் தயங்குகிறார்கள். டெல்லி இமாம், ஹலால் செய்துவிட்டு குதிரைக்கறி சாப்பிடலாம் என தந்தி அடிக்கிறார். அஸ்வமேத யாகத்தில் குதிரைக்கறி சாப்பிட்டதை ஒரு இந்து சாமியார் குறிப்பிடுகிறார்.
இந்தக் கதை உருவாக்கத்திற்காக பாலமுருகன் நன்கு உழைத்திருக்கிறார். போர்க்களத்தில் நடப்பவைகளை அப்படியே காட்சிப்படுத்துகிறார். வீரர்களால் போர்க்களத்தின் உண்மையான நிலவரங்களை கடிதத்தில் எழுத முடியாது. சென்சாருக்குப் பிறகே கடிதம் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படும். 75,000 இந்தியர்கள் யுத்தத்தில் இறந்ததாக நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘போர்க்களத்தில் சாகின்றவர்கள் சொர்க்கத்திற்குப் போவார்களாம்!; ‘வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள் அந்தக் கணக்கில் வருவார்களா ?’
கல்கத்தாவிலிருந்து வந்த கேப்டன் கல்யாண் ஒரு மருத்துவர். இவர் மூலமாக போர்க்கால மருத்துவமனைகள், சிகிச்சை முறை, காலரா, ஸ்கர்வி, டைபஸ் போன்ற நோய்கள் பேசப்படுகின்றன. இராமன் என்ற வீரன் துப்பாக்கி சத்தம் கேட்டாலே மிரளும் நோய்க்கு ஆளாகிறான். சரணடைந்த வீரர்களை நானுறு மைல்கள் சிரியா பாலைவனத்தில் நடக்க வைத்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். போர்கள சாவுகளைவிட இதனால் ஏற்பட்ட சாவுகள் அதிகம். போகும் வழியில், கூட்டத்தில் இருந்து தவறிவிட்டால் அவ்வளவுதான். இப்படி காணாமல் போனவர்கள் பட்டியல் தனியாக உண்டு. அப்படிப்பட்ட ஒரு வீரன்தான் ராணா. அப்படி போகும் வழியில்தான் ஆர்மீனியர்களின் இனப்படுகொலை நடக்கிறது. அதனை இந்த நாவல் விரிவாக பதிவு செய்துள்ளது. அவர்களது சர்ச்சுகளை எரிப்பது, பெண்கள் மீது ஏவப்படும் வன்கொடுமை, அடிமைகளாக்குவது போன்ற விவரங்களை இந்த நாவல் நன்கு பதிவு செய்துள்ளது. தனது சொந்தத்தாயை இழந்து, வளர்ப்புத்தாயும் கைவிடும் ‘மிகிர்’ என்ற சிறுவனைத்தான் கல்கத்தாவிற்கு தன்னோடு மிகுந்த போராட்டங்களுக்கிடையில் அழைத்து வருகிறான் கேப்டன் கல்யாண். மனிதாபிமானம் மிக்க இளகிய மனம் படைத்தவன் கேப்டன் கல்யாண்.
Also read
எம்டன் கப்பல் சென்னையில் குண்டு போட்டபோது, எப்படி சென்னை மக்கள் பீதியினால் நகரை காலி செய்தார்கள். அந்தக் கப்பல் என்ன செய்தது ? அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. ஆங்கிலேயப் படைகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை, இந்தியப் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டதா ! எதிரியாக இருந்தாலும் துருக்கி தளபதியைவிட, ஜெர்மானிய தளபதியிடம் சரண்டர் ஆவதை மேலாக டவுன்செண்ட நினைக்கப்பதற்கு காரணம் அவனது நிறவெறிதானே ! உபயோகித்த துண்டு சிகரெட்டுக்கு ஏங்கும் அவலம், சக தளபதிகளுக்கு தேநீர் தருவதை தவிர்க்கும் மனநிலை என சின்னசின்ன சுவாரசியமான சம்பவங்களை நாவல் முழுவதும் நாம் காணலாம்.
குட் நகரில் போரிடுவது , போர்க்கைதிகளாக சிரியப் பாலைவனத்தில் நானூறு மைல்கள் நடத்தி அழைத்துச் செல்வது, ஆர்மீனியப்படுகொலை, சரண்டர் என நான்கு பாகங்களில் இந்த நாவல் உள்ளது.
போலி தேசபக்திக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் மக்களின் மனநிலையை உருவாக்குவதில் இந்த நாவல் வெற்றிபெற்றுள்ளது. ‘சக சகோதரனுக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள்’ என்று முதல் உலக யுத்தத்தின் போது லெனின் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
எதிர்வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, பின்கோடு; 642002
பக்கங்கள் 463 , விலை; ரூ.550,
தொடர்பிற்கு செல் : 99425 11302.
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
வாசிக்க ஆவலாகிறது.