திமுக ஆட்சியில் அராஜகங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளதே..?

- சாவித்திரி கண்ணன்

எஸ்.வேதவள்ளி, பூந்தமல்லி

இடைத் தேர்தலில் கிடைத்த உதையால் பாஜக அரசு பெட்ரோல் வரியை குறைத்துவிட்டு மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையும் குறைக்க சொல்லி உள்ளதே?

ஆனைக்கு விழுந்த அடியை பூனைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்! சரி தான்!

இந்த பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தின் பின்னுள்ள உண்மையான திமிங்கலம் ரிலையன்ஸ் தான். இன்றைக்கு பெட்ரோலிய நிறுவனங்களின் சரிபாதி உற்பத்தி அம்பானி கைகளில் தான் உள்ளது. அவர் தான் விலையேற்றத்தின் முழு காரணகர்த்தா! அந்த திமிங்கலத்திற்கு மக்களையே தீனியாக்கி ஆள்பவர்கள் தான் மத்திய ஆட்சியாளர்கள்!

க.முருகானந்தம், காஞ்சீபுரம்

ஜெய்பீம் ஏற்படுத்தி வரும் நல் அதிர்வுகளை கவனித்தீர்களா..?

குளத்தில் விழுந்த கல்! சுற்றிலும் வளையங்களை பிரசவித்தவண்ணம் உள்ளது! அரசாங்கத்தில் இருந்து அடி நிலை மனிதர்கள் வரை அப்பப்பா… நாளும், நாளும் அதிர்வுகள், மாற்றங்கள்! பல தலைமுறைகளாக பார்க்கப்படாமல் இருந்த ஒதுக்கப்பட்டிருந்தவர்களை நோக்கி அதிகார மையங்கள் செல்வதை கண்டு ஆனந்த கண்ணீர் பெருகுகிறது! இது தான் ஒரு கலையின் உண்மையான வெற்றி!

எம். தணிகைச் செல்வன், விருதாச்சலம்

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை விட வேண்டும் என்ற அளவுக்கு முயற்சிகள் நடக்கிறதே..?

முட்டாள்தனம் இந்தியாவிற்கு மட்டுமே உரிய தனிச் சொத்தல்ல.

எல்.அமுதா, பள்ளிப்பட்டு, திருவள்ளுர்

திமுக ஆட்சியில் அராஜகங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளதே..?

ஆடிப் பழக்கப்பட்ட கால்கள் மேடை கிடைத்தால் சும்மா இருக்காது…! ஆடுவது மேடையோடு இருந்தால் கூட பிரச்சினையில்லை. அது அவர்களின் உரிமை! மற்றவர்களின் தலையில் கால் வைத்து ஆட முற்படும் போது தான் பிரச்சினையாகிறது.

கடலூர் எம்.பி. டிஆர்வி.ரமேஷ், நெல்லை எம்.பி.ஞானதிரவியம், வேலூர் எம்பி.கதிர்ஆனந்த், தூத்துக்குடி அனிதா ராதா கிருஷ்ணன்..என்று அடுத்தடுத்து புகார்கள்! இதில் கதிர் ஆனந்த்திற்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் லேசாக செக் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவோ பல நன்மைகள் நடந்தாலும் கூட, இது போன்ற சில அராஜகங்கள் அனைத்தையும் மறக்க வைத்துவிடும். இப்படிப்பட்ட அராஜகக் கால்களை அடக்கி, ஒடுக்கி அச்சம் ஏற்படுத்தி முலையில் உட்கார வைப்பதில் தலைமை எந்த அளவுக்கு கறார் காட்டுகிறது என்பதில் அதன் எதிர்காலம் உள்ளது.

எஸ்.ராஜசேகர், கம்பம்,தேனி

சசிகலா எங்களோடு தான் இருக்கிறார். ஆனால், அவர் பாதை வேறு, என் பாதை வேறு என்கிறாரே டி.டி.வி.தினகரன்?

ஆபத்தான நேரத்திலே கூட சசிகலாவோடு ஒன்றிணைந்து பயணிக்க முடியாதவராக தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறார், டி.டி.வி.தினகரன்!  இவர் தான் சசிகலாவின் அனுகூல சத்துரு.

ப.சந்திரசேகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி

கமலஹாசன் தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று சிலர் சொல்வது குறித்து?

இந்திய சினிமாவின் பல முக்கிய அடையாளங்களில் கமலஹாசனும் தவிர்க்கமுடியாத ஒருவர். ஆனால், இந்திய சினிமாவின் அடையாளமே கமலஹாசன் தான் என்ற மாயையை கட்டமைப்பவர்களின் அறியாமையையும், அகங்காரத்தையும் காலம் துடைதெறிந்து போட்டுச் சென்று கொண்டே இருக்கும்.

வெற்றி செல்வி, சென்னை

திமுக அரசு பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்க பயப்படுகிறதா? எதிர்பார்த்தது போல இல்லாமல் செயல்பாடுகள் ரொம்ப சாதாரணமாக உள்ளதே,,?

அஞ்சுவதஞ்சாமை பேதமை என்பார்கள். அது கேட்டில் தான் முடியும். திமுகவின் அச்சம் ஒரளவு நியாயமானதும் கூட. ஆனால், அது அளவுக்கு மீறி போகிறாதா? என்பதை இப்போதே முடிவு செய்ய முடியவில்லை. மற்றபடி அதிக எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. உங்களுக்கு இருந்திருந்தால் அதற்கு திமுக எப்படி பொறுப்பாகும்?

எஸ்.அந்தோணிராஜ், பண்ருட்டி

ஜெய் பீம் படத்தில் அந்த அராஜகப் போலீஸ்காரர் வீட்டில் வன்னியர்சங்க காலண்டர் ஒன்று தொங்கியதாக சிலர் கொந்தளிக்கிறார்களே..?

நான் உட்பட மிகப்பலரும் கவனத்தில் கொள்ளாத ஒன்றை இப்படி கவனப்படுத்தி செய்தி பரப்புவதை தவிர்ப்பது நல்லது. இது ஆவணப்படம் இல்லை. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கற்பனை சினிமா தான்! மற்றபடி எல்லா சாதிகளிலும் நல்லவன், கெட்டவன் உண்டு.. என அந்தப் படத்திலேயே ஒரு வசனம் வருகிறது. இந்த புரிதலை மனதில் கொள்வோம். படத்தின் உன்னத நோக்கத்தை சிதைக்க வேண்டாம்.

ச.கந்தசாமி, முத்தியால்பேட்டை, சென்னை

வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்க்கிறதே..?

ஒவ்வொரு ஆண்டும் கொட்டித் தீர்க்கிறது மழை.

குளம்,குட்டைகளை ஆக்கிரமித்து கான்கிரீட் காடுகளை கட்டமைத்து, அந்த மழையை பூமிக்குள் இறங்க அனுமதி மறுக்கிறது பொதுச் சமூகம்.

இந்த அறியாமையும், ஊதாரித்தனமும், வரமாக வந்த மழையை சாபமாக மாற்றிப் பெரும் இழப்புகளைப் பெறுகிறது!

ஹெச்.பிரபு, ஒரத்தநாடு, தஞ்சாவூர்

ஜெய் பீம் படத்தில் ஒரு வட இந்தியரை பிரகாஷ்ராஜ் கன்னத்தில் அறைந்ததற்காக வருத்தப்படும், கோபப்படும் இந்திமொழிப் பற்றாளர்கள் குறித்து..?

படத்தில் திருட்டு நகைகளை பெற்று உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றியதோடு ஒரு அப்பாவி அடித்தே கொல்லப்பட்டதற்கும், இரண்டு அப்பாவிகள் கொடுமையாக தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருப்பதற்கும் காரணமான அந்தக் குற்றவாளி. தான் தப்பித்துக் கொள்வதற்காக போலீஸ் அதிகாரிக்கு தெரியாத மொழியில் பேசி அவரை திசை திருப்புகிறான். அவனை கன்னத்தில் அறைந்து ’’தமிழில் பேசு’’ என்பார் பிரகாஷ்ராஜ்.

இவ்வளவு அநீதிகளுக்கு காரணமான ஒருவனை கன்னத்தில் அறைந்ததற்கே இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே! அவனது பேராசையால் கொல்லப்பட்ட அப்பாவிக்காக, கொடூரமாக தாக்கப்பட்ட அப்பாவிகளின் நிலைமைக்காக அந்த அதிகாரிக்கு அறச் சீற்றம் வரக் கூடாதா..? இவர்கள் தங்கள் இனம்,மொழிசார்ந்து எவ்வளவு மோசமான கிரிமினல் குற்றங்களையும் எந்த குற்றவுணர்வுமின்றி ஆதரிக்கிறவர்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மும்பையில் ஒரு தமிழன் குற்றம் செய்து மாட்டிக் கொண்டு தமிழில் பேசி திசை திருப்ப பார்த்தால் மும்மப் போலீசும் கன்னத்தில் அறைந்து ”இந்தி போலோ’’ என்று தான் கேட்டிருப்பான்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time