அண்ணாத்தே விமர்சனங்களும், அபாரமான வசூல் கணக்கும்!

- சாவித்திரி கண்ணன்

அண்ணாத்தே படத்தின் அதீதமான வசூல் செய்திகள் ஏதோ இதில் இடிக்கிறதே ..என களத்தில் தள்ளியது..!

கதைக்கு ஏற்றார் போல நடிகர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் படங்கள் பெரிய வெற்றி பெறுகின்றன! நடிகருக்காக கதை உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பிளாப் ஆகின்றன!

அந்த வகையில் அண்ணாத்தே படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரஜினி ரசிகர்களே கழுவிக் கழுவி ஊத்திவிட்டனர். படம் பார்த்தவன் எல்லாம் தங்கள் எதிரிக்கும் கூட இந்த அனுபவம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தானே போன் போட்டு எல்லோருக்கும் பரப்பிவிட்டனர். போதாக்குறைக்கு யூடுபர் வேறு முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரசிகர்களை பேட்டி கண்டு படத்தை பீஸ்பீஸாக கிழித்து தொங்கவிட்டுவிட்டனர். இதை நான் மிகவும் ரசித்தது பி.பி.சொயில் நண்பர் முரளிதரன் எழுதிய எள்ளல் துள்ளிய விமர்சனத்தைத் தான்! சோஷியல் மீடியா எங்கும் அண்ணாத்தேவுக்கு எதிரான விமர்சனங்கள் தன் எழுச்சியாக வீரியம் பெற்ற நிலையில் அடுத்த நாள் அனைத்து மீடியாக்களிலும் அண்ணாத்தேவின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

தமிழ்நாட்டில் – ரூ.34.92 கோடியும்; ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.3.06 கோடியும்; கர்நாடகாவில் ரூ. 4.31 கோடியும்; கேரளாவில் ரூ.1.09 கோடியும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.1.54 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 25.27 கோடியும் என மொத்தம் ரூ. 70.19 கோடி வசூல் செய்திருப்பதாகத் மீடியாக்கள் தகவல்களை பரப்பின. இப்படி வசூலாக வாய்ப்பே இல்லையே என நாம் திரைத்துறை வட்டாரத்தை விசாரித்த போது உண்மையில் நல்ல வசூல் தான், ஆனால், அந்த வசூல் 24 கோடிக்கு நெருக்கமாக என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றனர்.

சரி முதல் நாள் முன்கூட்டியே அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பார்த்திருக்கலாம். ஆனால், அடுத்த நாள் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே எனக் காத்திருந்தால் இரண்டாவது நாள் வசூல் அறிவிப்பும் மிரள வைத்தது. நாம் பாக்ஸ் ஆபிஸ் தரப்பில் கேட்டபோது இதுவும் மிகைப்படுத்தப்பட்ட தகவலே என்றனர்.

இரண்டாவது நாளில் இருந்து வசூலில் சரிவைச் சந்தித்த அண்ணாத்த திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று ரூ 42.43 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இருப்பினும், வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு அண்ணாத்த படத்தின் உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 112.82 கோடியாக உள்ளது, இந்த வசூல் அண்ணாத்த படத்தை 2021 இன் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாற்றுகிறது…என மீடியாக்கள் அதிர்ந்தன.

அண்ணாத்தே பற்றிய நெகடிவ் இமேஜிலிருந்து படத்தை மீட்கவே தயாரிப்பு தரப்பு இப்படி செய்திகளை கசியவிட்டதாகத் தெரிகிறது. அதுவும் சன் டிவியிலேயே வசூல் விபரங்களை பகிரங்கமாக அறிவித்தனர்!

”இந்தப் படத்தை பொறுத்த அளவில் இது வசூலித்தாலும் மகிழ்ச்சி தான். வசூலிக்காவிட்டாலும் ஒரு வகையில் மகிழ்ச்சி தான்” என்று  தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நமக்கு தெரிந்த ஒரு நண்பர் கூறினார்.

”அதெப்படி வசூலாகாவிட்டாலும் மகிழ்ச்சி என்பீர்கள்..?” என விருட்டென்று யோசிக்காமல் கேட்டுவிட்டேன்.

”அட நீங்க என்ன சார் இவ்வளவு விபரமான பத்திரிகையாளராக இருந்துகிட்டு இப்படி வெள்ளந்தியா கேட்கிறீர்களே அரசியல்வாதிகளை பொறுத்த வரை ஆக்கம், அழிவு இரண்டிலுமே லாபம் பார்க்கத் தெரிந்தவர்கள் ஐயா!” என்றார்.

ஓ! புரிந்துவிட்டது….! வாழ்க, ஜனநாயகம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time