மழைநீர் வடிகாலுக்காக எத்தனை கோடிகள்? என்ன தான் நடந்தன?

- சாவித்திரி கண்ணன்

2015 தின் சோக காட்சிகள் இந்த ஆண்டும் அரங்கேறுவதற்கான சாத்தியகூறுகள் இருந்த போதிலும், ஆட்சி மாற்றத்தினால் கொஞ்சம் தப்பித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்! பல ஆயிரம் கோடிகள் மழை நீர் வடிகால் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டுள்ளன. அவை போதுமான பலன்களை தராமல் வீடுகளுக்குள் வெள்ளம் போனதன் காரணம் என்ன..?

இன்றைய ஆட்சியாளர்கள் பேரழிவுகளை தவிர்க்க ஆனமட்டும் முயற்சிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. முதல்வரும், அதிகாரிகளும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இப்போதே நிலைமை இப்படி உள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பரிதவிப்பில் தான் அனைவரும் உள்ளோம்.

முன்கூட்டியே தமிழக முதல்வர் ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் வெள்ளநீர் வெளியேற, மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கூட்டங்கள் நடத்தி நகர்ப்புற உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில், 20.9.21 முதல் 25.9.21 வரை ‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்’ ஆக அறிவித்து, அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கமாக முன்னெடுத்து செயல்படுத்த ஆலோசனை வழங்கி இருந்தார்!

தற்போதைய கனமழையால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள், மற்றும் திருச்சி, நாமக்கல் வரை உள்ள மாவட்டங்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன! தென் தமிழகமும், மேற்கு தமிழகமும் பெரிய பாதிப்புகள் இல்லை.தரமற்ற கட்டுமானத்தால் கடலூர் அருகே உள்ள ஒரு தடுப்பணை விரிசல் விட்டுள்ளது காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பயிர்கள் பல ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்று மணலை நாள்தோறும் அள்ளிச் செல்வதால் தான் மழைக்காலங்களில் மழைவெள்ளம் பயிர்களை பாதிக்கிறது.

சென்னை நகரத்தை பொறுத்த வரை இது ஒரு சமதளமான பகுதி. ஐதராபாத், டெல்லி, பெங்களூரு நகரங்கள் போல் சென்னை நகரத்தின் அமைப்பு கிடையாது. சென்னை நகர் பகுதியில் மழை நீர் சென்று சேர கழிவு நீர் குழாய், மழைநீர் வடிகால்கள் என 2 விதமான வடிகால் அமைப்புகள் உள்ளன. சென்னை நகரில் 5,550 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளின் ஓரங்களில் 7,200 கிலோ மீட்டரில் கழிவு நீர் வடிகால் பாதைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் மழைநீர் வடிகால்கள் உள்ளது. இது 2,350 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இவையாவும் பழமையானவை! பழுதடையக் கூடிய மற்றும் தற்போதைய வளர்ச்சி போக்குகளை தாங்கமுடியாத நிலையிலும் உள்ளன.

100 வருடத்திற்கும் மேற்பட்ட வடிகால் கட்டிடங்களும் இங்கு உள்ளது. படித்த மனிதர்கள் நிறைந்த சென்னை உள்ளிட்ட நகரங்களில் தற்போது, மழைநீர் வடிகால்களை மக்கள் குப்பை தொட்டியாகவே பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பகுதியில் எந்த அளவுக்கான கழிவு நீர் குழாய்கள் உள்ளனவோ..அதற்கு மேல் அங்கு எந்த ஒரு புது குடியிருப்பையும் அனுமதிக்கக் கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளை அதிகப்படுத்த ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இந்த கட்டிடங்களுக்கு அனுமதி தரும் சி.எம்.டி.ஏ சரியாக இருந்தாலே சென்னை சிறப்பாக இருக்கும். சென்ற ஆர்சி காலத்தில் அது மிகவும் சீர்கெட்டு இருந்தது. அதன் நிர்வாக இயக்குனராக இருந்த கார்த்திகேயன் சதா சர்வகாலமும் காசு,பணம், துட்டு, மணி, மணி என்று ஆளாய் பறந்தவர். இப்படிப்பட்ட அதிகாரி தான் அந்தத் துறையின் அமைச்சராக விளங்கி ஒ.பி.எஸ்சுக்கு தேவைப்பட்டது.

                             ஒ.பி.பன்னீர் செல்வம், கார்த்திகேயன் ஐ.ஏஎஸ்

சென்ற ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியும், சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷும் சேர்ந்து மழைநீர் வடிகால் திட்டங்களை எல்லாம் பணம் ஒன்றே குறிக்கோளாய் இயங்கி பாழ்படுத்திவிட்டனர். சென்ற ஆட்சியில் மழை நீர் வடிகால் திட்டப்பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைசட்டத்தில் தகவல்களை அறப்போர் இயக்கம் கேட்ட போது அதிகாரிகள் பதில் தரமறுத்துவிட்டனர்.

                                        பிரகாஷ் ஐ.ஏ.எஸ் , வேலுமணி

சென்ற ஆட்சியில் கொசஸ்தலை ஆறு வடிகால் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2,800 கோடி தந்தது. இது ஒழுங்காக செயல்படுத்தப்பட்டு இருந்தால் வடசென்னை வெள்ளத்தில் தத்தளித்து இருக்காது. அது போல கோவளம் வடி நிலப் பகுதியில் வடிகால் வசதி செய்ய ஜெர்மன்வளர்ச்சி வங்கி 3,500 கோடி ஒதுக்கியது. இது ஒழுங்காக செயல்படுத்த பட்டிருந்தால் தென் சென்னை வெள்ளைத்தில் தத்தளித்து இருக்காது. இது போக உலகவங்கி மழை நீர் வடிகால் திட்டத்திற்கு 101 கோடியே 43 லட்சம் தந்தது!

இவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டும் ஏன் தெருக்களில் வெள்ளம் தேங்குகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது. சென்னை திணறுகிறது? என்பதற்கு விடை தருகிறார் முன்னாள் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அ.வீரப்பன்.

”மழை நீர் வடிகால் குழாய்கள் பதிக்கப்படுவதன் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமலே திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். மழை நீர் வடிகால் குழாய்களின் அமைப்பே சரியில்லை. மேலும் அவைகளுக்குள் விழுந்த நீரை அருகேயுள்ள ஆறு, குளம்,ஏரி போன்ற ஏதாவது ஒரு நீர் விலையில் விழுவது போல செய்தால் தான் நோக்கம் நிறைவேறும். ஏதோ ஒரு முட்டுச் சந்தோடு அந்தக் குழாய் தொடர்பற்று விடப்பட்டதால் தான் இந்த நிலைமை’’ என்கிறார்.

அதாவது, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணம் வேண்டும். காண்டிராக்டர்களுக்கு வேலை வேண்டும். திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதில் யாருக்குமே அக்கறை இல்லை. அதுவும் அமைச்சர் வேலுமணி தன் சகோதர்கள், உறவினர்கள் என்பதாக பல பினாமி நிறுவனங்களுக்கு எல்லா காண்டிராக்டும் கிடைக்கும்படி செய்வது ஒன்றில் தான் அக்கறை காட்டினார். ஆகவே, பல ஆயிரம் கோடிகள் கொட்டப்பட்டும் திட்டத்தின் நோக்கம் என்னவோ அது நிறைவேறாமல் போகிறது!

சென்னையை பொறுத்த வரை பள்ளிக்கரணை, நந்தனம், நுங்கம்பாக்கம், கொடுங்கையூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட 30 கால்வாய்கள் மற்றும் அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் என நான்கு விதமான முக்கிய நீர் ஓடும் தளத்தில் தான் மழை நீர் சென்று சேர வேண்டும். ஆனால், இவற்றுக்கு சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் வண்ணம் அடைப்புகளும் ஆக்கிரமிப்புகளும் உள்ளன.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மிகவும் துடிப்பாக செயல்படுகிறார்! இவராவது தன் பணிகாலத்திற்குள் இந்தச் நிலைமைகளை சீர்செய்வாரா..? கே.என்.நேரு எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார்..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time