மழலையர் பள்ளிகள் மீது மனம் வைக்குமா அரசு?

- ஈரோடு உமா

பள்ளிகள் திறக்கப்பட்டாலும்  அங்கன்வாடிகள் , மழலையர் வகுப்புகள், இன்னும் திறக்கப் படவில்லை! வரும் மாதங்களில் திறக்கலாம். மழலையர் பள்ளிகள் உருவாகத்தில் இதுவரை அரசுக்கு ஏனோ போதிய ஆர்வம்  இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மழலையர் பள்ளிகளை முறையாக கட்டமைக்காவிட்டால், இனி அரசு பள்ளிகளே கிடையாது…என கள நிலவரங்கள் சொல்கின்றன!

தற்போதைய அரசுப் பள்ளிகளின்  மழலையர் வகுப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. குழந்தைகளையும்,பெற்றோர்களையும் ஈர்க்கும் வகையில் அவற்றை மாநிலம் முழுக்க முறைப்படுத்தப் பட வேண்டியது மிக அவசியம் மட்டுமல்ல, அவசரமானதும் கூட!

தனியார் மயக் கல்வி 

தமிழகப் பள்ளிக் கல்வி சந்தித்து வரும் பல சவால்களில் மிக முக்கியமானது, தற்போதைய தனியார்மய கல்விச் சூழலை எதிர்கொள்வதே!. தனியார்கள் நடத்தும் பிளே ஸ்கூல் மற்றும் கிண்டர் கார்டன் போன்ற முன் மழலையர் வகுப்புகள் அடித்தட்டு மக்களைக் கூட வெகுவாக ஈர்க்கின்றன!

ஆம் , இரண்டு வயது நிரம்பிய உடனே ஏதேனும் ஓர் ஆங்கில வழி பிளே ஸ்கூல் அல்லது கிண்டர்கார்டன் பள்ளியில் சேர்த்து விட எண்ணுகின்றனர்.   அவர்கள் வேலைக்குச் செல்ல வசதியாகவும் பள்ளிகள் குழந்தைகளை சுவீகரித்துக் கொள்கின்றன.  இரண்டு மூன்று வருடங்களில்  குழந்தைகள் முதலாம் வகுப்பு வந்து விடுவர்.  நாட்கள் ஆக ஆக பெற்றோர்கள் அந்தப் பள்ளிகளை விட்டு வெளியேறாமல் , .அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயக்கம் கொள்வதோடு , அங்கு சேர்க்கும் மனப்பான்மையையே கைவிட்டு விடுகின்றனர் என்பதும், இதனால், அரசு ஆரம்ப பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிந்து கொண்டிருப்பதும் கவனத்திற்கு உரியது!

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் 

ஏன் தனியார் பள்ளியை சாதாரண விளிம்பு நிலை மக்களும் அடித் தட்டு மக்களும்  நாடிச் செல்கின்றனர் என்று யோசித்தால் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கான கல்வி முறை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடையாது. முதல் வகுப்பிலிருந்து தான் அரசுப் பள்ளிகள் இயங்கி வந்தன.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 இல் வந்த போது நம் தமிழ்நாட்டில் அவசரமாக செயல்படுத்திய , அதன் மிக முக்கியமான கூறு தான்  ECCE (Early Child Center Education)  இந்த முன் மழலையர் கல்வி  வகுப்புகள் உருவாக்கம்! அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் சரிப்படுத்தும் செயல்பாடாக இதைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் ஒரே வளாகத்தில்  இயங்கும் அங்கன் வாடிப் பள்ளிகள்  கொண்ட  2,382 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் மழலையர் வகுப்புகளைத் துவங்கக் கூறி அரசு ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து  2019 இல் திடீரென மழலையர் வகுப்புகளைப் பள்ளிகள் திறந்தன.

அரசுப் பள்ளிகளைப் புறந்தள்ளும் பெற்றோர்களுக்கு இச்செய்தி  மகிழ்ச்சி அளித்தது . இந்த காரணத்திற்காகவே பிள்ளைகளை அனுப்பினர். ஆனால் எல்லா அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை.

அனுமதி அளிக்காத மற்ற இடங்களிலும் ஆர்வமாக இயங்கும் தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே மழலையர் வகுப்புகளைத் தங்கள் பள்ளிகளில் பெற்றோர்,  சமூக மக்கள் உதவியுடன் ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால், மழலையர் வகுப்புகள் இல்லாமல் இனி ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகள் நேரடியாக வந்து சேர்வது என்பது நினைத்து பார்க்க முடியாததாக மாறிவருகிறது. இப்படியான சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன எனக் கேட்டறிந்தோம். மிகச் சிறப்பாக இயங்கும் 5 தலைமை ஆசிரியர்களின் கள எதார்த்த சவால்களையும் ,  மழலையர் வகுப்புக்கு கற்பிக்கும் சில ஆசிரியர்களின் கருத்துகளையும்    இங்கு பதிவு செய்கிறோம் . இவை,  ஒட்டு மொத்த தமிழகத்தின் நிகழ்கால மழலையர் கல்விச் சூழல்களுக்கான சில உதாரணங்களாகும்!

திரு வீரமணி , தலைமையாசிரியர் ,( மாநில நல்லாசிரிய விருதாளர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , கெரிகேப்பள்ளி ,ஊற்றங்கரை கிருஷ்ணகிரி

 எங்கள் பள்ளி தொடக்கப் பள்ளி , இங்கு மழலையர் வகுப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கவில்லை. என் சொந்த முயற்சியில், விருப்பத்தின் பேரில் மழலையர் வகுப்புகளைத் துவக்கினேன். 2018 இல்  28 என்ற  மாணவர் எண்ணிக்கை இன்று 150 ஆகியுள்ளது!  தேவையான அனைத்து நிதி , கற்பித்தல்  வசதிகளையும் அரசின் உதவியின்றி நாங்களே செய்து கொள்கிறோம். அங்கன் வாடிகள் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது , ஆனால் செயல்படுவதேயில்லை. அதை நீக்கி விட்டு பள்ளிக் கல்வித் துறையில் முறையாக மழலையர் வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும். ஒரு அரசுப் பள்ளியை மேம்படுத்த வேண்டுமெனில் , பள்ளியின் சிக்கல்கள் குறித்து மற்ற அரசுத் துறைகளின் அதிகாரிகளுக்கும் அதில் பங்குண்டு , ஆனால் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்களே காது கொடுப்பதில்லை , எனில் மாவட்ட ஆட்சியர் காதுகளுக்கு அப்பள்ளியின் பிரச்சனை குறித்து எவ்வித செய்தியும் சென்று சேர்வதில்லை’’

திரு செல்வக் கண்ணன்,(தேசிய நல்லாசிரிய விருதாளர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர், பரமத்தி, கரூர்  

எங்கள் பள்ளிக்கும், அங்கன்வாடிக்கும் இடையே ஒரே ஒரு குறுக்குச் சுவர் இருப்பதால்  அரசு மழலையர் வகுப்புக்கு அனுமதி தரவில்லை.

எங்கள் ஒன்றியத்தில் 88 தொடக்கப் பள்ளிகளும் 18 நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன . இவற்றில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை 2600 . இது,கடந்த கல்வியாண்டின் படி ! தற்போது சற்று கூடியிருக்கலாம். ஆனால், எங்கள் மாவட்டத்தில் இயங்கும் ஒரே ஒரு தனியார் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கைக்கு இது இணையாகும். 35 பள்ளிகளில் 10க்கும் குறைவாகவே மாணவர்கள் இருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் இதே நிலை தான் .

எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 260 , அதாவது ஒன்றியத்தின் மொத்த மாணவர்களில் 10% த்தினர்  இங்கு தான் பயில்கின்றனர். காரணம், அரசு அனுமதி தரவில்லை. என்றாலும். எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மழலையர் வகுப்புகளை ஆரம்பித்து , நிதி ஆதாரம் தேடி , ஆசிரியர்களை நியமித்து செயல்பட்டு வருகிறோம்.  எங்கள் வேலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிர்கால சந்ததியினர் அரசுப் பள்ளிகளில்  வேலை வாய்ப்பு பெறவும் இப்படியான முயற்சிகளை அரசை எதிர்பார்க்காமல் நாங்களே செய்கிறோம்.

நரசிம்மன் , (தேசிய நல்லாசிரிய விருதாளர்) தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , உம்மியம்பட்டி , தர்மபுரி மாவட்டம் 

எங்கள் நடுநிலைப் பள்ளிக்கு மிக அருகாமையில் ஒட்டியவாறு,  அங்கன்வாடி இருப்பதால் மழலையர் வகுப்புக்கு அனுமதி தரவில்லை. அங்கன்வாடி மழழையர் பள்ளியாகாது. அதனால், நான் எடுத்த முயற்சிகளால் – பள்ளி மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதால் – எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மழலையர் வகுப்புகளுக்கான அறிவிப்பை 2019 இல் வெளியிட்டோம் , இரண்டு மணி நேரத்தில் வரிசை கட்டி நின்ற பெற்றோர்களிடம் முதல் 50 பேருக்கு மட்டும் டோக்கன் கொடுத்து  மழலையர் வகுப்பு மாணவர்களை சேர்த்துக் கொண்டோம். அரசு தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது , எதிர் பார்க்கக் கூடாது என்று கல்வி  அதிகாரிகள் கூறி விட்டனர்.  ஆனால் எங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்  உதவியோடு மிகச் சிறப்பாக மழலையர் வகுப்புகளை நடத்தி வருகிறோம் , மாணவர் எண்ணிக்கை வெகுவாக உயர்த்துள்ளது! தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு முறைகளை அரசு வழங்கி மழலையர் வகுப்புகளை நடத்த வழிகாட்ட வேண்டும்!

திரு மூசா ராஜா ஜூனைதி, தலைமையாசிரியர், .கே.எம் .எம். அப்துல் கனி மதரசா தொடக்கப் பள்ளி , ஈரோடு

இப்பள்ளியோ அரசு உதவி பெறும் பள்ளி , எங்களுக்கும் மழையர் வகுப்பிற்கு அனுமதி வழங்கவில்லை , ஆனால், பள்ளி தாளாளர் உதவியுடன் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 3 வருடங்களுக்கு முன்பு மழலையர் வகுப்பைத் துவக்கினோம். துவங்குவதற்கு முன்பு எனது பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 540 . ஆரம்பித்து 3 வருடங்களில் தற்போது 750 ஐத் தாண்டி மாணவர் எண்ணிக்கையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது!

திரு குணசேகரன், தலைமை ஆசிரியர், அரசு தொடக்கப் பள்ளிமாயனூர்கரூர்

எங்கள் பள்ளியிலும் மழலையர் வகுப்பு ஆரம்பிக்க விரும்பி  அரசு அதிகாரிகளிடம்  அனுமதி  கேட்டால் எந்த பதிலும் இல்லை . பெற்றோர்கள் அரசு மழழையர் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப விருப்பமுடன் இருக்கின்றனர்.  எல்லா ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். அனுமதி மட்டும் தாருங்கள் என்றால், சட்ட விதிகள் இல்லை என்கின்றனர். அது மட்டுமல்ல , ஏதாவது குழந்தைகளுக்குப் பிரச்சனை என்றால், நீங்கள் தான் பொறுப்பு என்றும் அச்சமூட்டுகின்றனர். ஆயினும் ஆரம்பித்துவிட்டோம். மழலையர் வகுப்பு  ஆரம்பித்த பிறகு தான் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது , குறைந்த பட்சம் அனுமதி மட்டுமாவது வழங்கவே இவ்வளவு தயக்கம் காட்டினால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை எப்படி தக்க வைக்க முடியும்?

மேற்சொன்ன தலைமையாசிரியர்கள் அரசின் அனுமதி இல்லாமல் தாங்களாகவே  மழலையர் வகுப்புகளை நடத்தி வருவது ஒரு புறம். ஆனால் அரசின் அனுமதி பெற்று மழலையர் வகுப்புகளை ஆரம்பித்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள் ஆரம்ப கல்வித் துறையின் மற்றொரு புறத்தையும் காட்டுகிறது.

திருமதி தமிழ்ச்செல்வி , ஆசிரியர் , கள்ளக் குறிச்சி

இடைநிலை ஆசிரியராக இருந்த என்னை பணி இறக்கம் செய்து  மழலையர் வகுப்புக்கு ஆசிரியராக்கினர். வகுப்புகள் தொடங்கவே 6 மாதம் தாமத்தினர். அங்கன்வாடிகள் வட்டார வளர்ச்சி அலுவலரது ( BDO ) கட்டுப்பாட்டிலும் ,மழலையர் வகுப்புகள்   ஒன்றிய கல்வி அலுவலர்(BEO) கட்டுப்பாட்டிலும் இருப்பது சிக்கலாக உள்ளது. கற்பித்தல் உபகரணங்கள் , வகுப்பறை என எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்கவில்லை என்கிறார்.

திருமதி ராஜேஸ்வரி , ஆசிரியர் , மேச்சேரி , சேலம்  

நானும் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பணி இறக்கம் செய்யப்பட்டு மழலையர் வகுப்பு ஆசிரியரானேன். நிர்வாகத்தில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளே கிடையாது. குழந்தைகளை ஈர்க்கும் வகையில் தனித்துவமான வகுப்பறை வசதிகளுடன் மழழையர் பள்ளிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

திரு ராஜேஸ், ஆசிரியர், குண்டடம் ஒன்றியம் , தாளக்கரை , திருப்பூர்

எங்கள் பள்ளியில் கணிசமாக மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில்  LKG UKG வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத சூழ்நிலை. சமூக நலத்துறை மூலமாகத் தான் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன .ஆனால் அவை சரியான எண்ணிக்கையிலோ, சரியான நேரத்திலோ வழங்கப்படுவதில்லை. கற்பித்தல் கருவிகளும் அங்கிருந்தே தரப்படுகின்றன . கல்வித் துறை மூலமாக வழங்குவது போல முறையாக இல்லை .இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக நியமிப்பதற்கு மாற்றாக ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நியமித்தால் மட்டுமே கற்பித்தல் சிறக்கும்.

 சீர் செய்யப்பட வேண்டிய சிக்கல்கள்; 

போதுமான மழலையர் பள்ளிகள் இல்லாதது, தேவைப்படும் இடங்களில் ஆர்வம் காட்டாதது, ஆர்வம் காட்டும் ஆசிரியர்களுக்கு அனுமதிதரத் தயங்குவது, அரசு அனுமதி அளித்த மழலையர் பள்ளிகளிலும் இவ்வளவு சிக்கல்கள் இருப்பது மக்களுக்கு  அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையை சிதைத்து விடும் . தரமான கல்வி அரசுப் பள்ளிகளில் தர வேண்டும் எனில், அரசு மழலையர் வகுப்புக்கான பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். DPTT( Diploma in Pre _Primary Teacher Training) போன்ற பயிற்சி முடித்தவர்களை நியமிக்கலாம் என பல ஆசிரியர்கள் கருத்து சொன்னார்கள்.

இது மட்டுமின்றி, குழந்தைகள் விரும்பக்கூடிய அழகான வகுப்பறை கட்டமைப்புகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி என அனைத்து கோணங்களிலும் கவனம் கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களையே மழழையர் பள்ளிகளாக்கிவிடக் கூடாது.

அதோடு, எல்லா அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கட்டாயம்  துவங்கப்பட வேண்டும் .அப்போது தான் அரசுப் பள்ளிகள் எதிர்காலத்தில் காப்பாற்றப்படும். இது மிகவும் அவசியமானதும் அவசரமானதும் என்பதை கல்வித் துறையும், அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

குறிப்பு;  இக்கட்டுரை – சுவடு பதிப்பகமும், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து நடத்திய இணைய வழிக் கருத்தரங்கில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பகிர்ந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கட்டுரையாளர்; ஈரோடு உமா

கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்! அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர்.                ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்.

பரவசத்தில் மாணவர்கள், பற்றாகுறையில் பள்ளிகள்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time