ஜெய் பீம்பிற்கு எதிரான சர்ச்சைகள், அவதூறுகள் சொல்லும் செய்தி என்ன?

- சாவித்திரி கண்ணன்

எம்.ஆதித்யா, பனைமரத்துப்பட்டி, சேலம்

”ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இடைத்தரகர் சூசேன்குப்தாவிற்கு ரூ65 கோடி தரப்பட்டுள்ளது பற்றி ராகுல் பதில் சொல்ல வேண்டும்” என்கிறதே பாஜக?

இதைக் கண்டுபிடிக்க ஏழு ஆண்டுகளா..? இதைத் தெரிந்து கொள்ளாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டு 36 விமானங்கள் வாங்கபட்டதா? இந்த அளவுக்குத் தான் நிர்வாகத் திறமையா..? தவறு நடந்திருக்கிறதென்றால், தண்டிக்க வேண்டியவர்களே நீங்கள் தானே? சம்பந்தப்பட்டவர்களை எப்போது உள்ளே தள்ளப் போகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்!

விவகாரத்தை திசை திருப்பாமல் பதில் சொல்லட்டும். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்திற்கு 526 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியிலோ அந்த விமானத்தின் மதிப்பு 1,670 கோடியானது. அதில் போர் விமானம் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது. இதற்கெல்லாம் பதில் உண்டா பாஜகவிடம்?

கே.புஷ்பலதா, ஆதம்பாக்கம்,சென்னை

ஜெய் பீம் குறித்தும், சூர்யா குறித்தும், இந்துத்துவாவினர் தொடர்ந்து சர்ச்சைகளையும், அவதூறுகளையும் கிளப்பிய வண்ணம் உள்ளனரே? ஏன்?

நல்லது. அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பானது!

ஆதிக்கம் செலுத்துவோரும், அடிமைப்படுவோரும் கொண்ட சமூக அமைப்பை அப்படியே தக்க வைத்தால் தான் அவர்கள் அரசியல் எடுபடும். அதை தர்க்கத் தூண்டுவது போல, ஜெய் பீம் ஏற்படுத்தி வரும் அரசியல் விழிப்புணர்வு அவர்களை பதற்றமடைய வைத்து ஆத்திரம் ஏற்படுத்துகிறது.

இந்த சமூகத்தின் மனசாட்சியை தட்டி உலுக்கி, எளிய மக்களின் பால் அன்பும், அரவணைப்பும் காட்டத் தூண்டுவதே படத்தின் மைய நோக்கம்! சாதி ஆதிக்கத்தை உருவாக்கி நிலைபெற வைத்தவர்களுக்கு இருக்காதா தாக்கம்?

எம்.சேகர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு

மாநகர விரிவாக்கங்களும், புதிய, புதிய மாநகர உருவாக்கங்களுமே மழை பெய்தால் தண்ணீர் வெள்ளமெனத் தேங்க காரணம் என்ற கூற்று உண்மையா?

ஒவ்வொரு மாநகர விரிவாக்கங்களும் சிற்றூர்களையும், கிராமங்களையும் அதன் வயல் வெளிகளையும் விழுங்குகின்றன! அப்போது அங்குள்ள ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் ரியல் எஸ்டேட்காரர்களால் ஏப்பம்விடப்படுகின்றன!

பளபளக்கும் தார் சாலைகள் போட வெளிநாட்டுக் கடன்களை வாங்கவும், கார்ப்பரேட் கம்பெனிகள் காலூன்றவும் நம் தலைக்கு நாமே வைக்கும் கொள்ளிகளே நகரமயமாக்கல்! உண்மையில் இது இயற்கை வாழ்வியலை நரகமயமாக்குகிறது.

பெரும் நகரத்தை மையப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்டு நிர்வகிப்பது சிக்கலாகிறது. அதிலும் மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்கள் அமைக்க பல ஆயிரம் கோடி வெளிநாட்டுக் கடன் பெற்று ஊழல் செய்வதே இது வரை நடந்துள்ளது.

எஸ்.ரகோத்தமன், திண்டுக்கல்

சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் குறித்து?

காந்தியவாதி கிருஷ்ணம்மாளுக்கு வயது 95. முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக சேவையே மூச்சாக வாழும் அம்மாவுக்கு பத்மபூஷன் என்பது காலம் கடந்து தரப்பட்ட சிறிய கெளரவமே!

காந்தியின் கட்டளைகளை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கிருஷ்ணம்மாள்-ஜெகன்நாதன் தம்பதி! வினோபாவின் பூமிதான இயக்கத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க காரணமானவர். தமிழக விவசாய நிலங்கள் இறாள் பண்ணைகளால் பாழ்பட்டபோது அதை பாதுகாக்க போராடி வெற்றி கண்டவர். மிக சமீபத்தில் கூட 13,000 ஏழை குடும்பங்கள் தலா ஒரு ஏக்கர் நிலங்களை பெறக் காரணமானவர். இப்படி பல அத்தியாயங்களாக பட்டியலிடக் கூடிய சேவைகளை தன் கணவர் மறைந்த ஜெகன்நாதனோடு இணைந்து செய்தவர். இப்போதும் செய்து கொண்டு இருப்பவர்!

ஆர்.பீர்முகமது, திருவெற்றியூர், சென்னை

மழைவெள்ள நிவாரணப் பணிகளில் இந்த ஆட்சியின் செயல்பாடுகள் பற்றிய உங்கள் மதிப்பீடு?

அவசரகாலக் களப் பணிகளில் முதல்வர் ஸ்டாலினை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. ஓய்வில்லா உழைப்பு, சலிப்பிலாத வேகம், தடுமாற்றம் இல்லாத முடிவுகள்! முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் தொடங்கி அதிகாரிகள் அனைவரும் கள யதார்தங்களை நேரில் கண்டு துரிதமாக செயல்படுவது கண் கூடாகத் தெரிகிறது.

ம.அன்பழகன், திருச்சி

உண்மையிலேயே மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியை தாய் மொழியாக கொள்ளாத அனைத்து இந்தியர்களும் புறக்கணிக்கபடுகிறார்கள்! இதற்கு உதாரணம் சமீபத்திய UPSC நடத்திய CSE, IFS ஆகிய தேர்வு ரிசல்டுகளில் 59% இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் தேர்வாகியுள்ளனர். இது போல வெளிவரும் பல ரிசல்டுகளை பார்க்கையில் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புகளையும், இந்தி தாய் மொழி இல்லாதவர்கள் ஒரு பங்கு வாய்ப்பையும் பெற்று வருவது தெரிய வருகிறது. மக்கள் தொகையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனால், மத்திய அரசுப் பணிகளில் அவர்கள் தான் மூன்றில் இரண்டு பங்கை ஆக்கிரமிக்கிறார்கள்!

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை இந்த பாகுபாடெல்லாம் இல்லை. சமவாய்ப்பை மறுக்கும் இந்தச் சதிச் செயல் மூலம் பாஜக இந்தியர்களை பாகுபடுத்தி பிரித்தாள்கிறது.

ச.மதிவாணன், கோயம்புத்தூர்

அண்ணாத்தே தோல்வி சொல்லும் பாடம் என்ன..?

சினிமா ரசிகர்களின் ரசனைகள் ரியலிஸ்டிக் மூவி, நிகழ்கால சமூக அவலங்களை நம்பகத் தன்மையுடன் காட்சிப்படுத்தும் சமூக அக்கரை… என்ற தளத்தை நோக்கி அடுத்தகட்ட நகர்வை கொண்டுள்ளது. ஆனால், சூப்பர்ஸ்டாரை வைத்து படமெடுப்பவர்களின் ரசனை மிகவும் பின்தங்கியுள்ளது.

தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு

உத்திரபிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் ஏன் சமாஜ்வாடியுடன் கூட்டணி காணவில்லை? இது பாஜகவிற்கு சாதகமாகாதா?

சாதகமாக வேண்டும் என்பது தான் சமாஜ்வாடியின் விருப்பமோ என்னவோ!

இரு கட்சிகளுக்கு இடையிலும் ஈகோவும், அதிகார பகிர்வுமே இடையூறாக உள்ளது.

எதிர்கட்சிகளை பிரித்தாள்வதில் பாஜக படுசமர்த்தாக உள்ளது. அரவணைத்துச் செல்வதில் காங்கிரஸின் போதாமையும் ஒரு காரணமே!

எச்.பாண்டியன், திருநெல்வேலி

முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மீட்க போராடுவோம் என அதிமுகவும், பாஜகவும் மார்தட்டுகிறார்களே..?

பறி போன ஒன்றைத் தான் மீட்க முடியும். நம்மிடம் உள்ள உரிமையை உணராமல் உதார்விடக் கூடாது.

நூறாண்டுகளுக்கு முன்பு பென்னிகுயிக் கட்டிக் கொடுத்த கொடை அது. அது இன்று போதாது என்பது நன்கு புரிந்தும் நம் பகுதியில் அது போல ஒரு புதிய அணையை கட்டி நம் பகுதிக்கு அதிக நீரைக் கொண்டு வர முயற்சிக்காமல் கேரளாவுடன் சதா சண்டை போட வேண்டுமா? அதிக நீரை அனுபவிக்க அவர்களால் இடுக்கி அணை கட்ட முடிகிறது என்றால், நம்மால் ஏன் முடியவில்லை?

மு.பரமசிவம், அந்தியூர், ஈரோடு

உங்களை பிரமிக்க வைத்த எழுத்தாளர் யார்?

ராமச்சந்திர குஹா! சாதாரண எழுத்தாளரல்ல, நம் சமகால சரித்திர ஆய்வாளர்!

இந்திய அரசியலை, இந்திய சமூகத்தை, அதன் மிகச் சமீபத்திய வரலாறை, காந்தியை, காந்தி இந்திய அரசியலிலும், சமூகத்திலும் நிகழ்த்தியுள்ள தாக்கங்களை ராமச்சந்திர குஹா அளவுக்கு சொன்ன பிறிதொருவரைக் காண இயலாது!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time