பெருவெள்ளச் சேதங்கள்! பாடங்களும், செயல் திட்டங்களும் என்ன?

பொறியாளர் அ.வீரப்பன்

2015-ல் பெய்த மழையில் நான்கு மாவட்டங்களில் –சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் கடலூர் போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளச் சேதங்கள்- உயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டன. டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் தூத்துக்குடியிலும் பெரும் மழைச்சேதங்கள். இந்த நிகழ்வுகளின் மூலம் அன்றைய அரசாங்கத்தின் -அரசியல்வாதிகளின் – ஏன் தனிப்பட்டவர்களின் தவறுகள் மற்றும் குற்றங்கள் பல வெளியே அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. தற்போதைய பெருவெள்ளம் அவற்றை நினைவுபடுத்துகிறது.

அன்றைய பேரழிவுகளில் இருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போதுமான பாடம் பெறவில்லை. இப்போதும் ஏன் தண்ணீர் சாலைகளில் இவ்வளவு தேங்க வேண்டும்? வீடுகளுக்குள் ஏன் தண்ணிர் புக வேண்டும்?

நீர் நிலைகளை – குறிப்பாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அவற்றின் வரத்து – போக்குக் கால்வாய்களை எந்த வரைமுறையும் இன்றி ஆக்கிரமித்துப் பன்மாடிக் கட்டடங்களைக் கட்டியுள்ளதின் விளைவுகளைத் தான் தற்போது அனுபவிக்கிறோம்.

இதுமாத்திரமின்றி முன்பு 200 மீட்டர் அகலத்தில் ஓடிக் கொண்டிருந்த அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் இவற்றின் இருகரைகளை மறித்து -ஆற்றின் அகலத்தையே அடைத்து நான்கில் ஒன்றாக – அதாவது  200 மீட்டர் அகல ஆற்றை வெறும் 60 மீட்டராக குறுக்கி பூங்காக்களையும், நடைபயிற்சி பாதைகளையும் அமைக்கின்றனர். இது மிகத் தவறாகும்.

இத்துடன்  கட்டடக் கழிவுகளையும், வீட்டுக் கழிவுகளையும், குப்பைகளையும்  கொட்டி ஆற்றின் ஓட்டத்தையே தடுத்த பாவத்திற்கான விலையைத் தான் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவையாவும் அரசின் ஆதரவோடு – அரசியல்வாதிகளின் உடந்தையோடு – நம் அதிகாரிகளின் கண்முன்னே நாள்தோறும் நடந்தேறியவை என்பதை கவனப்படுத்துகிறேன்.

சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநில நகர மற்றும் ஊராட்சி திட்ட இயக்ககம் முதலியவை சட்டமாக இயற்றியுள்ள கட்டடக் கட்டுமான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை சரியாக கடை பிடித்திருந்தால் பிரச்சினையே இல்லை. ஆனால், அதற்கு  முரணாக – அத்துமீறல்களுடன் நகரின் – அதுவும் புறநகர்களின் தாழ்வான பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரிலும்,  நகரமயமாக்கல் என்ற பெயரிலும் பல லட்சக்கணக்கான வீடுகளை, பன்மாடிக்கட்டடங்களைக் கட்டுவதை எந்தவிதபொறுப்புணர்வு மற்றும் சமுதாய அக்கறையின்றி வேடிக்கை பார்த்த நிர்வாக குற்றத்தை என்னென்பது?

இப்பெருவெள்ளத்தால் பலதரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை யார் சரிக்கட்டுவார்கள்? இன்றுள்ள இந்தத் தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளுக்கு அதற்கான நேர்மறை நோக்கும், முயற்சிகளும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டவவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. காரணம் அந்த கால்வாய்கள் வழியே செல்லும் மழைநீர் இறுதியாக பக்கத்தில் உள்ள ஏதேனும் ஓர் நீர் நிலையில் சேர்ந்து கலப்பது போல திட்டமிடவில்லை. அப்படியே அரைகுறையாக நிற்கிறது பல இடங்களில்! மற்றும் பல இடங்களிலோ அவற்றை குப்பைகளை போட்டு மழை நீர் இறங்காதவாறு மக்கள் அடைத்துள்ளனர்.

இனியாவது…..வருங்காலங்களில்

சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களை பாரபட்சமின்றி இடித்துத் தள்ள வேண்டும். ஏரிகள், கண்மாய்களின் நீர்வழித்தடங்களை அடைப்போர் மீது உடன் நடவடிக்கை எடுத்து தடுத்திட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்களா?

அரசியல் தலையீடுகளை குறுக்கீடுகளை ஒதுக்கித் தள்ளுவார்களா? அரசாங்க அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை பொறுப்புகளைக் காலத்தே செய்திட விடுவார்களா? அரசியல் சட்டங்களிலும் அரசு இயந்திரத்திலும் முறையாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலை  இந்த அரசு – முடக்காமல் – செயற்படுத்துமா?

அரசாங்க அதிகாரிகள் தம்முடைய பதவிக்கென உள்ள பொறுப்புகளை உணர்ந்து, கூடுதலான ஊதியமும் படிகளும் சலுகைகளும் பெறுவதற்கேற்ப பொறுப்புடன் செயலாற்ற வேண்டாமா? அரசாங்கத்தின் அங்கமாக மதிப்புடனும் பெருமிதத்துடனும் செயற்படவேண்டியவர்கள், அரசியல்வாதிகளின் கையாள்களாக ,ஏன் எடுபிடிகளாக நடந்து கொள்வது நமக்கு அவமானமாக உள்ளது.

வெளி நாடுகளில் திட்டமிட்டு செய்திருப்பதைப் போல மழை நீரை தரைக்கு அடியே சுரங்கப் பாதை அமைத்து கொண்டுபோய் ஒரு நீர் தேக்கத்தில்விட வேண்டும்!

சென்னை மாநகரையும் புறநகர்ப் பகுதிகளையும் மழைவெள்ளம் சூழ்ந்தால் – உடனடி நிவாரண வேலைகளாக இன்று செய்ய வேண்டியவை:

சென்னையைச் சுற்றியுள்ள 10 முதல் 20 புறநகர்ப் பகுதிகளில் (திருவொற்றியூர், வில்லிவாக்கம், குளத்தூர், திருநின்றவூர், தாம்பரம்முடிச்சூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற) நிலம் காலியாக உள்ள இடங்களில் பத்து லட்சம் கன அடி முதல் 100 மில்லியன் கன அடி வரை கொள்ளளவு கொண்ட சுரங்கநீர்தேக்கத் திட்டத்தைத் திட்டமிட்டு முனைப்பாகச் செய்திட வேண்டும்.

மேலை நாடுகளிலும் வளர்ந்த கீழை நாடுகளிலும் இத்தகைய சுரங்க நீர்தேக்கத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர திட்டமிடல் – செயற்படுத்துலுக்கு ஓராண்டுக்கு மேலான காலமும் கூடுதல் நிதிச் செலவும் ஏற்படும். இத்திட்டத்தை விளக்கும் படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

முதலில்  50 முதல் 100  மீட்டர்  நீளத்திற்கு  6மீ – 10 மீட்டர் விட்டமுடைய சுரங்கங்கள் (நிலமட்டத்திற்குக் கீழே 20மீ – 30 மீட்டர் ஆழத்தில்);  தோண்டுதல் வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக 200 மீட்டர் – 300 மீட்டர் அகலம் – 15மீ – 20 மீட்டர் ஆழம் ரூ 1000 மீட்டர் – 3000 மீட்டர் நீளத்தில் மிகப் பெரிய சுரங்க நீர்த் தேக்கம் அமைத்தல் வேண்டும்.

பின் பகுதியில் மீண்டும் 100 மீட்டர் நீளம் – 6 மீட்டர் விட்டங்கொண்ட வெளியேறும் சுரங்கம்
இதில் வெள்ளநீரைத் தற்காலிகமாகத் தேக்கி – பின்னர் நீர் இறைப்பிகளின் வாயிலாக இறைத்துப் பயன்படுத்துதல் வேண்டும்.

வெளிநாடுகளில் கழிவுநீரைத் தேக்கி – மறுசுழற்சி வாயிலாகச் சுத்தப்படுத்தி – அந்த நீரை பல்வேறு பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்துகிறார்கள் என்பதும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இத்தகைய சுரங்க நீர்த்தேக்கங்கள் ஒவ்வொன்றிலும் 100 மில்லியன் கன அடி முதல் 200 மில்லியன் கன அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம். இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்கலாம்.

வெள்ளக் காலங்களில் தற்காலிகச் சேர்த்து வைப்பதற்கும் மற்ற நேரங்களில் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.இரண்டாவதாக முயற்சி எடுத்து மழைநீர் வடிகால்களை பெரிய காங்கிரீட் குழாய்கள்  (2.00மீ-1.60மீ விட்டமுடையவை) மூலமாக அருகிலுள்ள கால்வாய்களில், சிற்றாறுகளில் (கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஒட்டேரி நல்லா) சென்று  விழுமாறு இணைப்புகளை ஏற்படுத்தி அவற்றை முறையாகப் பராமரித்திட வேண்டும்.

-முயற்சி செய்து முன்னோடியாகச் செயற்படலாமே!

மாநகரங்களை விரிவுபடுத்திக் கொண்டே செல்வது பிரச்சினைகள் அதிகரிக்கவே வழிவகுக்கும். பெரும் நிலப்பகுதியை நிர்வகித்து மக்கள் தேவைகளை நிறைவேற்றுவது சவாலாகிவிடும். ஆகவே, நகர விரிவாக்கத்தை தவிர்க்க வேண்டும்!

கட்டுரையாளர்; பொறியாளர் அ.வீரப்பன்

முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர்,

தமிழ்நாடு பொதுப்பணித்துறை,

வடிவமைப்பு வல்லுநர்,

மின்னஞ்சல் : [email protected]

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time