சூடான அன்புமணி, சூசகமான பதில் சொன்ன சூர்யா!

- சாவித்திரி கண்ணன்

பழங்குடி மக்கள் அதிகார மையத்தால் அனுபவிக்கும் சொல்லப்படாத வலிகளை சொல்லும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் ஒரு புறம் மக்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில், மற்றொரு புறம் மதவாத, சாதிய அரசியல் செய்து வருபவர்களின் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த விமர்சனங்களுக்கான பதில்கள் படத்திற்குள்ளேயே இருக்கிறது என்ற வகையில் அமைதியாக கடந்து சென்றார் சூர்யா! ஆனால், அன்புமணி ராமதாஸ் மிக சூடாகி சூர்யாவிற்கு சில கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி ‘கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்’ என்றார்.

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் கேட்ட கேள்விகளுக்கு சூர்யா பதில் அறிக்கை ஒன்றை பொதுவெளியில் தானும் வெளியிட்டார்.

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனறு குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.

அதிகாரத்திற்கான எதிர்ப்பு

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது” என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவிர்கள் என நினைக்கிறேன்.

படைப்பு சுதந்திரம்

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்குஎவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

பெயர் அடையாள அரசியல் வேண்டாம்

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சமத்துவம்,சகோதரத்துவம்

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் அன்றைக்கு ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், குறிப்பாக தோழர் கோவிந்தனும் தான் நேரடியாக சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக காவல் நிலையம்,கோர்ட் என வருடக்கணக்கில் அலைந்து கடைசி வரை உறுதிபாட்டுடன் நின்று நியாயம் கிடைக்க உறுதுணையாய் இருந்தனர். அதிலும் தோழர் கோவிந்தன் உள்ளுரில் வாழ்ந்த எளிய பொது நலவாதி! இவர், பிறப்பால் ஒரு வன்னியர். அவரே இந்தப் படத்தை எதிர்க்கவில்லை. தன்னுடைய ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இந்த படத்தில் சொல்லப்படவில்லை என்றெல்லாம் அவர் கிஞ்சித்தும் எண்ணவில்லை.

படத்தின் உண்மையான நோக்கமும், நாம் பாடுபட்டதிற்கான நோக்கமும் ஒன்று தான்! ஆகவே, அது தான் முக்கியம் என்பதே அவர் உள்ளிட்ட முற்போக்கான இயக்கங்கள் அனைத்தும் பார்க்கும் பார்வை! அன்றைய தினம் இந்த பிரச்சினையில் பல கட்சிகளும் சம்பந்தப்பட்டு ராஜாக்கண்ணுவிற்காகக் குரல் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இதில் மற்றவர்கள் மெதுவாக விலகி நிற்க, கம்யூனிஸ்டுகள் மட்டுமே கையூட்டுகளுக்கோ, சாதி உணர்வுக்கோ சோரம் போகாமல் நியாயத்தின் பக்கம் நின்றனர்.

இந்த சர்ச்சையின் விளைவாய் அன்றைக்கு நடந்த அரசியல் போக்குகள், உண்மைகள் எவ்வளவோ வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் யார், யாரெல்லாம் பின்வாங்கினார்கள், என்னென்ன துரோக முயற்சிகள் நடந்தன என்றெல்லாம் மெல்ல வெளி வந்து கொண்டுள்ளன. உண்மையில் அதையெல்லாம் படம் பேசவில்லை. பேசினால், இந்த விவகாரம் வேறு தளத்தை நோக்கி சென்றுவிடும். ஆனால், தற்போது அவை நிஜமாகவே ஒரு ஆவணப்படமாக உருக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்போது, சாதி, மத நோக்கத்தில் அரசியல் செய்பவர்கள் மேலும் அம்பலப்பட்ட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. மக்கள் நலன்சார்ந்த அரசியலை பின்னுக்கு தள்ளி, உண்மையான பிரச்சினைகளை மக்கள் உணர்ந்து தெளிவடைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அரசியல் செய்பவர்கள் தாங்களாகவே அம்பலப்பட்டு வருகின்றனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time