காமராஜர் காலத்து மாணவர்களின் தளபதி தஞ்சை இராமமூர்த்தி!

- பசுபதி தன்ராஜ்

காமராஜர் காலத்து மாணவரணித் தளபதிகளுக்கு தலைமை தாங்கியவர், கம்பீரமான பேச்சாளர், தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால் புலமை கொண்டவர், தீவிர புத்தக வாசிப்பாளர், சிறந்த  சோசலிஸ்ட், திராவிட இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் நெருக்கமான நண்பர்களைக் கொண்டவர், நேர்மையான வழக்கறிஞர், எளியோருக்காக பணம் வாங்காமல் ஆஜரானவர்.., பெரும் ஆளுமையாக இருந்தும் உரிய அங்கீகாரம் பெறாதவர்…என பலவாறாக சொல்லிக் கொண்டே போகலாம் நண்பர் தஞ்சை ராமமூர்த்தியைக் குறித்து!

தஞ்சை இராமமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி இடியாய் இறங்கி என்னை வந்து தாக்கியது !

தஞ்சை இராமமூர்த்தி  மறைந்தார் ! தலைவர் காமராஜ் காலத்து மாணவரணியும் மறைந்தது !

அவர் சென்னை சட்டக் கல்லூரியில் மாணவராக சேர்ந்த போதே அவருக்கு வயது 35. அவர் எம்.ஏ.,பி.டி , படித்து விட்டு, சற்று காலம் பள்ளி ஆசிரியராக பணியாற்றி விட்டு சென்னை சட்டக் கல்லூரி மாணவரானார்.

ஆகவே, அவரை யாரும் ஒரு  சராசரி மாணவராக பார்க்கவும் இல்லை ! நடத்தப் படவும் இல்லை !

மேடையில் பேசப்போகும் பேச்சாளரைப் போல கதர் ஜிப்பா, கதர் வேட்டியோடு தான் சட்டக் கல்லூரியின் வகுப்புகளுக்கு மாணவராக படிக்க வந்தார் !

சட்டம் படித்துவிட்டு தஞ்சை இராமமூர்த்தி அவர்கள் தஞ்சையில் தான் வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்தார் ! கிரிமினல் வழக்குகளையே பிரதானமாக கொண்டு செயல்பட்டார்

அண்ணன் இராமமூர்த்தி தனித்த இயல்பினர் ! யாருக்கும் தலைவணங்காதவர் ! அவர் புகைக்கும் சுருட்டை யாருக்கும் மறைக்காதவர்! பணக்காரரையோ அல்லது பதவியில்  இருப்பவருக்கோ எந்தவித மரியாதையையோ தராதவர். சராசரி ஏழைத் தொண்டனிடமும் “பந்தா” காட்டாதவர் !

யாரைப்பற்றிய விமர்சனத்தையும் பகிரங்கமாக சொல்லத் தயங்காதவர் ! ஏன், அவரைப்பற்றிய சுய விமர்சனமும் செய்து கொள்வார் ! ஆற்றல் மிக்க பேச்சாளர்! ஆற்றொழுக்க நடையில் தனது கருத்துகளை ஆணித்தரமாக சொல்பவர் !

காங்கிரஸில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர் ! தீவிரமான இடதுசாரி கருத்துடையவர் ! ஆகவே அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் தஞ்சையாரை மிகவும் நேசிப்பர் !

அரசியல் கூட்டங்களில் மட்டுமல்ல,  இலக்கியக் கூட்டங்களிலும் தனது புலமை முத்திரையை பதிக்கும் பேராற்றல் தஞ்சையாரிடம் உண்டு !

பாரதியின் பன்முகங்களையும் பரவசப்பட்டு பேசி பலரையும் மகிழ்விப்பார் !

வள்ளலார் மீதும் ஈடுபாடு கொண்டவர் ! அவர் ஒருமுறை வள்ளலார் பற்றி பேசத் துவங்குமுன், அப் பகுதியில் உள்ள பிரமுகர ஒருவர் தஞ்சையாருக்கும் திருநீறு பூச வந்தாராம் !

அதற்கு அவர், “நான் எவ்விதமான மதச் சின்னத்தையும் அணிய விரும்பாதவன் !

” நான் வள்ளலாரை நேசிப்பதிற்கு காரணம் அவர் சொல்லும் கருத்துகளேத் தவிரபக்தியல்ல” என்றாராம் ! வள்ளலார் குறித்த சிறந்த நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த “சோஷலிஸ்டு பாரத்தில்” ஆழ்ந்த பிடிப்பு கொண்டு பணியாற்றினார் !

அந்த அமைப்பில் தீவிரமாக இருந்த கே.டி.மாளவியா, ஆர்.கே.சின்ஹா, அர்ஜுன் அரோரா, மோகன் தாரியா போன்றோராரிடம் நட்பு பாராட்டியவர் |

அப்போதைய மத்திய அமைச்சரும், பின்னர் மே.வங்கம், திரிபுரா மாநிலங்களில் ஆளுநராக இருந்த கே.வி.ரகுநாத ரெட்டியின் அணுக்கத் தோழர். மறைந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலமும் விரும்பிடும் தோழராக தஞ்சையார் திகழ்ந்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஈவேகி சம்பத், கவிஞர் கண்ணதாசன் மற்றும் ஜெயகாந்தன் போன்றோர் தஞ்சையார் மீது நெருக்கமாக நேசம் காட்டியவர்கள். அந்த குழு தமிழகத்து தேசிய மேடைகளில் வீரமுழக்கம் செய்து வந்தது

1967- தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோற்றது! திமுக முதன் முதலாக ஆட்சிக்கு வந்தது!

காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி, புனருத்தாரனம் செய்தாலொழிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில்  வாழ்வில்லை என்பதை தலைவர் காமராஜ் அவர்கள் உணர்ந்தார்.

திமுகவின்  மூல பலமே மாணவர்கள் ! அந்த மாணவ வர்க்கத்தை காங்கிரஸுக்குள் கொண்டு வர தலைவர் காமராஜ் அவர்கள் திட்டமிட்டார்.

சென்னையில் உள்ள மாணவர் காங்கிரஸ் தலைவர்களை தன் இல்லத்துக்கு அழைத்தார். மனம் விட்டு பேசினார்.மாணவர்களையும் பேச வைத்தார். சக்தி வாய்ந்த ஒரு மாணவர் அமைப்பை உருவாக்க விரும்பினார் !

“தேசிய மாணவர் வளர்ச்சிக் குழு” என்ற அமைப்பு பிறந்தது. அதற்கு தஞ்சை இராமமூர்த்தி அவர்களை பொறுப்பாளராக இருந்திடப்  பணித்தார்!

மாணவ நண்பர்கள் தண்டாயுதபாணி, ஹக்கீம், வாழப்பாடி இராமமூர்த்தி, வீராசாமி, ஜெகவீர பாண்டியன் கலைக்கல்லூரி மாணவர் தலைவர் வே.கி.திருமாறன் மற்றும் நான் போன்றோர் அனைத்து கல்லூரிகளிலும் “தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சி கிளைகளை உருவாக்கினோம். அன்றைய மாணவர் பட்டாளத்திற்கு ஒரு ஆதர்ஷ்ச சக்தியாகத் திகழ்ந்து பிற்காலத்தில் வாழப்பாடியார் போன்றோர் தலைவர்களாக உருக்கொள்ள தஞ்சையார் அடித்தளமிட்டார் என்றால், மிகையல்ல!

சென்னை மாநகரத்து பல கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல்களில் காங்கிரஸ் மாணவர்கள் வாகை சூடியது வியப்புறும் செய்தியாக பார்க்கப் பட்டது! மாணவப் பேச்சாளர்கள் காங்கிரஸ் கட்சியில் மதிக்கப் பட்டனர்!

தஞ்சையார் தலைமையில் இருந்த மாணவர்கள் மட்டுமே பேசுகின்ற போதுக்கூட்டங்களுக்கு பெருங்கூட்டம் கூடியது. தமிழகம் முழுவதும் பயணம் செய்ய எங்களின் கல்லூரிக் கல்வி தடையாக இருந்தது !

ஆகவே சென்னை மாநகர மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன ! அநேகமாக வாரத்தில் எல்லா நாட்களிலும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. நவசக்தியிலும், நாத்திகத்திலும் சற்று காலம் ஜெயபேரிகையிலும் அண்ணன் தஞ்சை இராமமூர்த்தியின் பேச்சும், எங்களைப் போன்றவர்களின் சொற்பொழிவுகளும் பிரசுரமாயின !

காங்கிரஸ் பலம் பெறுகிறதே,  அடுத்த ஆட்சி காங்கிரஸுக்கே என்பது பேச்சானது !

1968– ல் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே சென்னை மாகராட்சிக்கு தேர்தல் நடந்தது ! அதில் திமுக 54 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றி பெற்றது அனைவரின் விழிகளையும் விரிய வைத்தது !

அதற்கு தஞ்சையார் தலைமையில் மாணவ பேச்சாளர்களின் சொல்லுரைகள் தான் காரணம் என்றால் மிகையல்ல ! மாறிப் போயிருக்க வேண்டிய தமிழக அரசியல் மாறாததிற்கு காரணம் 1969– ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு தான் காரணம் !

பிரதமராக இருந்த அன்னை இந்திராவும் தலைவர் காமராஜ் அவர்களும் வெவ்வேறு அணிகளில் பிளவுண்டது இந்தியா முழுவதும் காங்கிரஸ் வளர காரணமாகவும் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்து விட்டது !

முற்போக்கான திட்டங்களான வங்கிகளை நாட்டுடமை ஆக்கப்பட்டது போன்ற இந்திரா காந்தியின் ஆக்கபூர்வமான கொள்கைகளால் கவரப்பட்ட தஞ்சை இராமமூர்த்தி தம்மை இந்திராவின் அணியில் அழைத்துக் கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

தஞ்சையார் மிகுந்த நேர்மையாளர் ! கொள்கையில் உறுதி கொண்டவரே தவிர தனக்கு இப் பதவி வேண்டும் என்று கேட்காதவர் !

திறமையாளர்களை ஊக்குவிக்கும் பழக்கமும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை !

என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுதான் :

தஞ்சை இராமூர்த்தி சட்டக் கல்லூரியில் தனது கல்வியை முடித்த பிறகு சென்னையில் இருந்திருக்க வேண்டுமே தவிர தஞ்சைக்கு போயிருக்கக் கூடாது ! அவர் சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்திருந்தால் சில உயரங்களை தொட்டிருப்பார் !

அரசியல்,சமூக, இலக்கியக் கூட்டங்களிலே அதிகமாக கலந்து கொண்டு தனது அடையாளத்தை தக்க வைத்து கொண்டிருப்பார்! அவரது விரிந்த ஞானத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும் !

தீரர் சத்தியமூர்த்தி சென்னை மாநகர மேயராக இருந்தார்! அவர் அப்பதவியில் இல்லாமல் இருந்திருந்தால் அவருடைய அரசியல் நுண்புலத்துக்கு இன்னும் பெரிய பொறுப்புக்கு போயிருப்பர் என்று சொல்வர்.

அவரைப்பற்றி அப்போதைய சென்னை மாகராட்சி ஆணையரும் ஐசிஎஸ் அதிகாரியுமான புல்லா ரெட்டி சொன்னார் : Sathyamoorthi is an over size personality to  the Mayorality of Madras — என்று!

அதேபோல் தஞ்சையார் போன்று போன்ற ஆளுமைகளும் அறிவு ஜீவிகளும் சென்னையிலேயே இருந்திருந்தால் தஞ்சையாரின் புகழின் வீச்சு அதிகமாகியிருக்குமோ என்னவோ !

தஞ்சை இராமமூர்த்தி அவர்கள் சென்னையை விட்டு போனபிறகு அவருடன் எனக்கிருந்த தொடர்புகள் அறுந்து விட்டன !

தஞ்சையில் அவரோடு பணிபுரிந்த சக வழக்கறிஞர்களிடம் கேட்டு தெரிந்த சில தகவல்கள் :

தஞ்சையாருக்கு இரு மகன்கள் ; ஒரு மகள். அதில் மூத்த மகன் இறந்து விட்டாராம். இளைய மகன் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அதன் நிர்வாகத் துறையில் பணி புரிகிறார் ! மகள் கோவை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார் !

தஞ்சையார் தலித்துகளுக்கும், சமூகத்தில் பின்தங்கிய– உரிமை மறுக்கப் பட்டவர்களின் உரிமையை மீட்டுத் தரும் வழக்கறிஞராகவே தொழில் புரிந்திருக்கிறார் ! குடந்தையில் நீலப்புலி இயக்கம் போன்ற போராடும் மக்களின் வழக்கறிஞராகவே தொழில் புரிந்திருக்கிறார் !

‘பொய்யுரைக்காத வழக்கறிஞர்’  என்பது அவரது நிலைத்து விட்டபெருமை |

பொருள் ஈட்டுவது முன்னுரிமையாக இல்லாததால் நிறைந்த செல்வம் அவரிடம் இல்லை !

ஆயினும் வசதியான குடும்பப் பின்புலம் காரணமாக பெரிய பொருளாதார நெருக்கடி  எதையும் அவர் சந்திக்கவில்லை !

தலைவர் காமராஜ் அவர்களால் காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான இஞைர்களை கொண்டு வர உதவிய தளகர்த்தர் தஞ்சை இராமமூர்த்தி அவர்களின் மறைவால் அந்த மாணவர் பட்டாளமும் அநேகமாக மறைந்து விட்டது !

கட்டுரையாளர்; பசுபதி தன்ராஜ்

வழக்கறிஞர், எழுத்தாளர், மூத்த காங்கிரஸ் தலைவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time