சமரசமற்ற நீதிபதிகளை பந்தாடும் பாஜக அரசு!

- ச.அருணாசலம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. சஞ்சீப் பானர்ஜீ மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு ” நீதி பரிபாலனத்தை செவ்வன செய்யும் பொருட்டு” (better administration of justice) மாற்றப்படுகிறார் என்பது செய்தி.

இச்செய்தி அனைவரையும் துணுக்கிட வைத்தது. காரணம் திடுதிப்பென்று இத்தகைய மாறுதலுக்கான காரணம் என்ன என்று எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டாலும் விவரம் அறிந்தவர்கள், ”இம்மாறுதல் ஒருவகையில் எதிர்பார்த்த ஒன்றுதான் , ஏனெனில், பானர்ஜீ தன்னிச்சையாய் நடக்க கூடியவர், அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுக்காதவர், உண்மை மற்றும் சட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை முடித்து வைப்பவர். எனவே, இம்மாறுதல் ஒருவகையான மட்டந்தட்டுதலே’’ என்கின்றனர் .

75 நீதியரசர்களை கொண்ட இந்தியாவின் நான்காவது பெரிய உயர்நீதிமன்றமான சென்னை உயர்நீதி மன்றமும் நான்கே நான்கு நீதியரசர்களை கொண்ட சிறிய மேகாலயா உயர்நீதி மன்றமும்  பெயரளவில்தான் சமமே ஒழிய உண்மையில் அவ்வாறில்லை. பனிஷ்மென்ட் டிரான்ஸ்பர் என்றால், எல்லோருக்கும் புரியும் அத்தகைய மாறுதல்தான் இது என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் சென்னை பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு, ”சஞ்சீப் பானர்ஜியை ஏன், எந்த காரணத்திற்காக மேகலாயாவிற்கு மாற்றுகிறீர்கள்” என கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆனால், நீதியரசர்களை, குறிப்பாக உயர்நீதிமன்ற நீதியரசர்களை மாறுதல் செய்வதை உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒப்புதலோடு நீதியமைப்பு குழு – Collegium-  தான் இறுதி முடிவை அரசிற்கு தெரிவிக்கும்.

இந்த நடைமுறை  Memorandum Of Procedure M O P  என்றழைக்கப்படும் குறிப்பாணையின் அடிப்படையிலேயே அமலாக்கப்படும். இது சட்டம், முறை.

ஆனால், நடைமுறையில் பானர்ஜீயை மேகாலயாவிற்கு தூக்கியடித்தது மட்டந்தட்டும் செயலா? அல்லது பழி வாங்கும் செயலா? என்ற குழப்பம் நீதி துறையில் நிலவுகிறது.

மேகாலயா உயர் நீதிமன்றம், சந்தீப் பானர்ஜி

நீதியரசர் சஞ்சீப் பானர்ஜியின் கடந்த கால தீர்ப்புகளும்,  அவரது அணுகுமுறைகளும்  தற்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைமைக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளதே இதற்கு காரணம் என்கின்றனர்.

பானர்ஜீ தலைமையிலான அமர்வு ( Bench)  சமீபத்தில் பாண்டிசேரியில் பாஜகவினர் ஆதார் டேட்டாக்களை திருட்டுத்தனமாக உபயோகித்து வாக்காளர் ஆதாரங்களை சேகரித்தனர் என்ற குற்றமனுவில் உண்மையுள்ளது என்றறிந்து அம்மனுவை தள்ளுபடி செய்யாமல் (பாஜககும்பலின் எதிர்புக்கிடையில்) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

இவர் தலைமையில் மற்றுமொரு அமர்வு , தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை அறிவித்த ‘ தமிழகத்தில் கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் ‘ என்ற ஆணையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அம்மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கியது.

மற்றுமொரு அமர்வு நீட் தேர்வு முறையின் தாக்கம் பற்றி ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ராஜன் குழுவை எதிர்த்த பா ஜ க வினரின் மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற் போல நீதியரசர் பானர்ஜீயின் கோபக்கணைகள் மற்றொரு வழக்கில் மிகப் பெரிய தலைப்பு செய்தியாக மாறி இந்தியா முழுவதையும் ஒருகணம் திரும்பி பார்க்க வைத்தது.

கொரானா காலத்தில் அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல்  மக்களை ஆபத்தில் தள்ளும் தேர்தல் பரப்புரைகள், அணிவகுப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேரணிகள் ஆகியவற்றை அனுமதித்த தேர்தல் கமிஷன் மீது ஏன் கொலை முயற்சி வழக்கு தொடுக்க கூடாது’’ என பானர்ஜீ கொதித்தது சலசலப்புகளையும் கொந்தளிப்பையும்  ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது!

இதுபோன்ற இவரது நேர்மையான, அறஞ்சீற்ற மிக்க அணுகுமுறைகள் எதிரிகளை சம்பாதிப்பதில் வியப்பில்லை, குறிப்பாக வலதுசாரி சிந்தனைக்கும் அதன் ஆதிக்க மனோபாவத்திற்கும் இவர் எதிரியாய் களத்தில் இருப்பது , ஆட்சியாளர்களிடம் அனுசரணை காட்டாதது போன்றவை டெல்லி சுல்தான்களுக்கு எரிச்சல் ஊட்டியதில் வியப்பில்லை !

ஆனால், இம்மாறுதல் நமக்கு இதைப்போன்ற மற்றொரு மாறுதலை நினைவூட்டுகிறதல்லவா?

2019ம் ஆண்டு இதே சென்னை உயர்நீதி மன்ற நீதியரசியாக வலம்வந்த வி.கே. தாகில்ரமனி அவர்களை பதவியேற்ற சொற்ப காலத்திலேயே மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்தனர். அது நடந்தது ரஞ்சன் கோகோய் (பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்) உச்ச நீதி மன்ற தலைமை நீதியரசராக இருந்த நேரம்.தாகில்ரமனி இம்மாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்தை வேண்டினார் , கொலீஜியம் மறுத்ததால் அதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தார்.

அப்பொழுது இந்த சர்ச்சைக்கிடமான மாறுதல் உத்தரவை விமர்சித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மதன் பி. லோகுர் கூறுகையில் ,’’இந்த உத்தரவு வெளிப்படைதன்மையற்ற ஒரு அநாகரீகமான உத்தரவு, மாறுதலை தண்டனையாக நிறைவேற்றுகின்றனர்’’ என விமர்சித்தார்.

நீதிபதி மதன் பி. லோகுர்

நீதியரசி தாகில்ரமனிக்கு ஏன் இந்த மாறுதல், தண்டனை, நிர்ப்பந்தம்?

2002 குஜராத் கலவரத்தின்போது (மோடி முதல்வராக இருந்த போது) நடந்த பில்கி பானோ Bilky Bano   கூட்டு வன்புணர்வு -Gang rape Case- வழக்கில்  11 குற்றவாளிகட்கு ஆயுள் தன்டனை என தீர்ப்பு வழங்கினார் திருமதி தாகில்ரமனி அம்மையார்.

அப்பொழுது அவர் மகாராஷ்டிர உயர்நீதி மன்ற நீதியரசராக இருந்தார். குஜராத் கலவரத்தை யொட்டி எழுந்த வழக்குகளில் , மோடி முதல்வராக இருந்த பொழுது ஒரு வழக்கு கூட முறையாக நடைபெறாததால், குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது என்று கூறி  உச்ச நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. அவ்வாறு மாற்றப்பட்ட வழக்கில் ஒன்றுதான் பிலகி பானோ வழக்கு.

இவ்வழக்கில், காவலர்கள், டாக்டர்கள் உட்பட 11 குற்றவாளிகளுக்கு அவர்கள் குற்றமிழைத்ததை உறுதி செய்து ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்தார் தாகில்ரமனி.

இதுதான் அவர் இழைத்த “குற்றம்” டில்லி ஆட்சியாளர்கள் கண்ணில். அதற்கான பரிசு தான் மேகாலயா மாறுதல் உத்தரவு. என்கின்றனர் விவரம் அறிந்த மராட்டியர்கள்.

மாறுதலுக்கான காரணத்தை பல விமர்சனங்களுக்கிடையிலும் வெளிப்படுத்தாத கொலீஜியம் நடவடிக்கை நீதித் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ஆனால், கொலீஜியம் ஆட்சியாளர்களின் கண்ணசைவிற்கேற்பவே காய்களை நகர்த்துகிறது என்பதை பெரும்பாலானோர் கூறுகின்றனர் .

அதற்கு அவர்கள் மற்றொரு உதாரணத்தையும் கூறுகின்றனர். 2017ம் ஆண்டு நீதியரசர் ஜெயந்த் பட்டீல், கர்நாடகாக உயர்நீதி மன்றத்தின் மூத்த நீதியரசராக , அடுத்த தலைமை நீதியரசராக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு மூன்றாம் நிலை நீதியரசராக மாற்றப்படுகிறார். இந்த அநீதியை கண்டித்து அவர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறார். இது நடந்த ஆண்டு 2017.இவர் பந்தாடப்பட்டதன் காரணம் பிரம்ம ரகசியம் இல்லை!

மீண்டும் குஜராத்து நிகழ்வுகளே காரணமாகிறது. குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சியில் அமீத் ஷாவின் ஆளுகையின் கீழ் நடந்த போலி எனகவுன்டர்கள் பலவற்றில் ஒன்றான இஷரத் ஜகான் என்ற இளம் பெண் போலி என்கவுண்டர் வழக்கில் நீதியரசர் ஜெயந்த் பட்டீல், ”இவ்வழக்கை குஜராத் போலீஸ் விசாரணை செய்ய தேவையில்லை , சி பி ஐ விசாரணை செய்தாலே உண்மை வெளிவரும்” என சி பி ஐ விசாரணைக்கு ஜெயந்த் பட்டீல் உத்தரவிட்டார். விளைவு? பல பெருந்தலைகள் (அமீத் ஷா, வன்ஜாரா, பாண்டியன் இன்னும் பல உயர் குஜராத் போலீஸ் அதிகாரிகள்) இந்த பயங்கர கொலை குற்றத்திற்காக உருண்டன. கைதுகளும் சிறைவாசமும் தொடர்ந்தன.

ஆனால், 2014ம் ஆண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னர் நீதிமன்ற கொலீஜியத்தையும் தமது அழுத்தத்தில் கொண்டுவருவதில் குறியாக இருக்கின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள்.

நீதிமன்ற நியமனங்கள், நீதியரசர் நியமனங்கள் மற்றும் மாறுதல்கள் ஆகியவை கொலீஜியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும், அதற்கு அரசியல் சட்ட பிரிவு 222 உறுதுணையாக இருந்தாலும்  M O P  என்று அழைக்கப்படும் நடைமுறை குறிப்பாணை எக்சிகியூட்டிவ் என்றழைக்கப்படும் ஆட்சியாளர்களின் கைகளில் வாளாகவும், பல சமயம் கேடயமாகவும் திகழ்ந்து நீதிதுறையின் நடுநிலைமையை நேர்மையை வெளிப்படைத்தன்மையை பந்தாடுகிறது.

நீதியரசர் சஞ்சீப் பானர்ஜீ உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றது ஜூன்22.2006. அவர் தலைமை நீதியரசராக பொறுப்பேற்ற ஆண்டு ஐனவரி 4, 2021. அவர் பணிமூப்படையும் நாள் நவம்பர் 1,2023.  பணிமூப்பிற்கு முன் உச்சநீதிமன்ற நீதியரசராக பதவியேற்கும் வாய்ப்பு அவருக்குள்ளது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு இந்த தகாத மாறுதல் உத்தரவினால் பாதிக்கப்படலாம் என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள். இவருக்கு பதிலாக கொலீஜியம் முனீஷ்வர் நாத் பண்டாரி என்ற நீதியரசரை அலகாபாத் உயர்நீதி மன்றத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது. இவர் 2019ல் தான் ராஜஸ்தானில் இருந்து உ.பி. அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

எல்லா மாறுதலும் “நீதி பரிபாலனத்தை செவ்வனே செய்யும் பொருட்டே” நடைபெறுகிறதுஎன்று கூறப்படுகிறது. நம்புவோமாக!

பணியிடை நீக்கத்திற்கு பதிலாக, பணியிட மாறுதலும்,பணிமூப்பு மாறுதலும் ஆட்சியாளர்களின் ஆயுதங்கள் ஆனபிறகு, வழிக்கு வராதவர்களை பந்தாட பல உத்திகள் கையாளப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

கொலீஜியத்தின் சுதந்திரத்திற்கும், ஆட்சியாளர்களின் ஆளுகைக்கும் இடையில் நடக்கும் இந்த நிழல் யுத்தம் எலிக்கும், தவளைக்குமிடையிலான பலப்பரீடசையாக சீரழிந்து காணப்படுகிறது.

எதற்கு எது நீதி?

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time