மழை காலத்தில் பறவைகள் என்ன செய்கின்றன…?

-செழியன். ஜா

மழைக் காலம் வந்தால் புயல் வருமா?, வெள்ளம் வந்து வீட்டில் மழைநீர் புகுந்துவிடுமா?, மரம் சாய்ந்துள்ளது, சுரங்கப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது அதனால் இங்கிங்கே செல்ல வேண்டாம் என்று தொலைக்காட்சியில் பிரேக்கிங் செய்தி ஓடிக்கொண்டிருக்கும்.

விளிம்புநிலை மக்களுக்கு அரசு, தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே உணவு வழங்குகிறார்கள். மழைக் காலம், கோடைக் காலம், குளிர் காலம் இப்படி எந்த காலம் வந்தாலும் பேச்சு மனிதர்களைச் சுற்றியே இருக்கின்றது. ஆனால், இந்த உலகில் மனிதர்கள் கூடவே கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன!. நம் முன் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் இந்த மழைக் காலங்களை எப்படி எதிர் கொள்கிறது என்று நாம் நினைப்பதே இல்லை.

ஆனால், எந்தக் காலத்தையும் கடந்து வாழும் இந்த உயிரினங்கள் உண்மையில் எப்படி மழைக்காலத்தில் வாழ்கின்றன?

தொடக்கக் காலத்தில் மரத்தின் கீழ், பாறை அடியில் நின்று மழைப் பொழியும் பேரிடர் காலத்தை மனிதர்கள் எதிர் கொண்டனர். ஒரே இடத்தில் மனிதன் வாழத் தொடங்கிய பிறகுதான் உணவு உற்பத்தி, தங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடம் உருவாக்குவது என்பதாக மனிதர்கள் வாழ்க்கை மாறியது. தொடக்கக் கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் விலங்குகள், பறவைகள் எப்படி மழைக்காலத்தை எதிர் கொண்டதோ இன்றும் அப்படியே எதிர் கொள்கின்றன. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இயற்கை என்ன கற்றுக் கொடுத்ததோ, அவற்றைப் பின்பற்றுகிறது. ஆனால், மனிதன் இயற்கையை விட்டு விலகியதால் பல இன்னல்களைச் சந்தித்து கொண்டு வருகிறான்.

மழை பெய்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் தொடர் பிரேக்கிங் செய்தி ஓடிக் கொண்டு இருக்கிறது! ஆனால் அவை அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே தவிர, மற்ற உயிரினங்களுக்கு இல்லை. கொஞ்சம் உங்கள் விட்டு ஜன்னல் வழியாக வெளியே பாருங்கள். மழையில் பறவைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று தெரியவரும்.

மழையைப் பறவைகள் எப்படி எதிர்கொள்கின்றன? குஞ்சுகள் உடைய பறவைகள் அதன் குஞ்சுகளை மழையிலிருந்து எப்படி காப்பாற்றுகிறது? பறக்கவே முடியாத இந்த மழையில் இரைக்கு என்ன செய்கிறது? இப்படி நிறையக் கேள்விகள் ஜன்னல் வழியே பறவைகளைக் கவனித்துப் பார்க்கத் தொடங்கினால் தோன்றக் கூடும்.

பறவை குஞ்சுகள் எப்படித் தப்பிக்கிறது மழைக்காலத்தில்

சில வருடங்கள் முன்பு ஒரு மழை நாளில் பறவைகள் பார்க்கச் சென்றபொழுது சிறிது நேரத்தில் மழை வந்துவிட்டது. தாழைக்கோழி பறவை ஒன்று தன் குஞ்சுகளுடன் நீர் ஓரத்தில் உள்ள புல் தரையில் நடந்து கொண்டு இருந்தது.

தாய் பறவையை விட்டு குஞ்சுகள் கொஞ்சும் தூரத்தில் விளையாடிக் கொண்டு இருந்தது. மழை என்று உணர்ந்து உடன் குஞ்சுகள் வேகமாக ஓடி தாய் பறவை அருகே சென்று விட்டது. தாய் பறவை தன் இறக்கையை அகலாமல் வைத்து குஞ்சுகளை உள்ள அழைத்து முழுவதும் மூடி தரையோடு தரையாக அமர்ந்து விட்டது. 20 நிமிடம் மழை.  தாழைக்கோழி எழுந்து கொள்ளவே இல்லை. மழையில் முழுவதுமாக நனைந்து கொண்டு இருந்தது. மழை விட்டபின்பு இறக்கையை  விரித்து அடியில் பாதுகாப்பாக இருந்து குஞ்சுகள் வெளியே வரத் தொடங்கின. குஞ்சுகள் மேல் சிறு மழைத் துளியும் இல்லை.

மிகுந்த ஆச்சரியத்தைக்  கொடுத்த காட்சி ஆகும். இப்படி பறவைகள் தன் குஞ்சுகளை மழையிலிருந்து பாதுகாக்கிறது. மழையை நீரை முழுவதும் உடலில் வாங்கிய தாழைக்கோழி பறவை உடலை ஒரு குலுக்கு குலுக்கி இறக்கையை வேகமாக மேலும் கீழும் அடித்து மழை நீரை வெளியே தள்ளியது. அப்போ வளர்ந்த பறவைகளை மழை நீர் ஒன்றும் செய்யாதா?

இங்குப் பறவைகளின் இறக்கை பற்றித் தெரிந்து கொண்டால், பறவைகள் மழையை எப்படி எதிர் கொள்கின்றன என்று தெரிந்து கொள்ள முடியும்.

பறவைகளின் சொத்து இறக்கை

குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய் பறவைகளுக்கு மழை நீர் உள்ளே செல்லாதா?

ஆம் செல்லாது என்பதுதான் உண்மை.

பறவைகளின் இறக்கை மழை நீரை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. அப்படி இயற்கையாக ஒரு கவசம் போன்று இறக்கை பயன்படுகிறது. பறவைகளின் இறக்கை நீரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிடும். மேலும் பறவைகளின் உடலில் சுரக்கும் எண்ணெய்யை அலகால் எடுத்து உடல் முழுவதும் கோதி விடும். நீர் புகாத வாட்ச் (Waterproof watch) பார்த்து இருப்போம் அப்படி பறவைகளின் இறக்கை  தண்ணீரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாக்கும். இறக்கையில் உள்ள எண்ணெய் காரணமாகவும் நீரை உள்ளே செல்ல அனுப்பாமல் வெளியே வழிந்துவிடச் செய்கிறது.

நீரில் நீந்தும் நீர் புலப் பறவைகளுக்கு இந்த என்னைச் சுரப்பி அதிகமாக இருக்கும் அதனால் அதன் விரல், கால் தவிர உடலில் நீர் ஒட்டுவதில்லை.  பொதுவாகப் பறவைகளின் வால் பகுதியில் எண்ணெய் சுரபி உள்ளது. தன் அலகால் எண்ணெய்யை எடுத்து உடலின் மற்ற இடங்களுக்குப் பரப்பிவிடும்.

பொதுவாக நாம் பறவைகளைப் பார்க்கும் பொழுது பறவைகள் தன் அலகால் இறக்கையைக் கோதிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். அவை எண்ணெய்யை பரப்புவதற்காகவும், இறக்கையைச் சுத்தம் செய்யவும் இருக்கலாம்.  மழைக்காலத்தில் நிமிடத்திற்கு நிமிடம் இறக்கையை அலகால் நீவி விடும் காட்சியை பார்க்க முடியும். மற்றும் வேகமாக இறக்கையை அடித்தும்  நீரை வெளியேற்றுகிறது.

எந்த நேரமும்  பறப்பதற்குத்  தயாராக இருக்கும் பறவைகள் இறக்கையை தொடர்ந்து பராமரித்து வரும். அதன் ஒரு பகுதிதான் உடலில் சுரக்கும் எண்ணெய்யைக் கொண்டு உடல் முழுவதும் அலகால் பரப்பும்.

இவை மட்டும் இல்லாமல் மற்ற காலத்தில் மண் குளியல் எடுக்கும். நம் வீட்டு முன் இருக்கும் மணலில் சிட்டுக் குருவிகள் இப்படி மண் குளியல் செய்வதைப் பார்க்கலாம். மற்றும் பறவைகள் சிறு எறும்புகளை இறக்கையில் ஏற்றி உடலில் இருக்கும் உண்ணிகளைக் கொல்லும். இப்படி அனைத்து பறவைகளும் இறக்கையை முழு அளவில் பராமரித்து வரும். காரணம் இறக்கைதான் ஒரு பறவைக்கு சொத்து ஆகும்.

மழைக்காலத்தில் பறவைகள் என்ன செய்கிறது?

பறவைகள் மழையை கண்டு ஒதுங்கிச் சென்றுவிடுவதில்லை. மழையில் நனையவே விரும்புகின்றன. அப்படி இப்பொழுது பெய்து கொண்டு இருக்கும் கனமழையில் பறவைகள்  என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்ததில் காகங்கள் மழையை விரும்புகின்றன. காகங்கள் மட்டும் இல்லை மற்ற பறவைகளும் மழை விரும்புகின்றன. நேரடி மழையில் நனைந்து கொண்டு இருக்கிறது. மரத்தின் உச்சியில் முழு மழை நீர் படும்படி  நிறைய காகங்கள் நின்று கொண்டு இருக்கின்றன.

கிண்டி புதர் பகுதியில் ஒரு மழைக் காலத்தில் சுற்றி வந்தபொழுது பருந்து ஒன்று அங்கு இருந்த மரத்தில் நேரடியாக மழை நீர் படும்படி நின்று இருந்தது. அனைத்து பறவைகளும் மழை நீரை வெளியேற்ற அவ்வப்பொழுது இறக்கையை  வேகமாக அடித்து, உடலைக் குலுக்கி நீரை வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது. இங்குப்  பருந்தும் அப்படியே செய்து கொண்டு இருந்தது.

மிதமான மழை பெய்யும்பொழுது பொதுவாகப் பறவைகள் மழையில் நேரடியாக நனைந்து கொண்டு இருக்கவே விரும்புகின்றன. கனமழையில் மரக்கிளையில் அடியிலும், வீட்டின் வாகனங்கள் விடும் பகுதியிலும் தங்கிவிடுகின்றன. மற்றும் புறாக்கள் வீட்டின் ஜன்னல் கீழ் உள்ள பகுதியில், கோவில் கோபுரத்தில்  தஞ்சம் அடைந்துவிடுகின்றன.

சிறு பறவைகள் குறிப்பாகச் சிட்டுக் குருவிகள் மழைபெய்யும்பொழுது வீட்டின் முன் பகுதியிலும், மரக்கிளை அடியிலும் மழைக்காலத்தில்  தங்கிக் கொள்ளும் என்று பட்டினப்பாக்கத்தில் உள்ள அஸீஸ் தெரிவிக்கிறார்.  200 சிட்டுக்குருவிகள் இவர் வீட்டைச் சுற்றிப் பறந்து கொண்டு இருக்கின்றன. சிட்டுக் குருவிகள் பற்றி நுணுக்கமாகத் தெரிந்து வைத்து உள்ளார் அஸீஸ்.

காட்டில் உள்ள பறவைகள் மரக்கிளை அடியிலும், மரத்தில் உள்ள பொந்திலும் அடைந்து கொள்கிறது. தரையில் வாழும் பறவைகள் மரத்தில் அடைவதில்லை. பாதுகாப்பான புதர் பகுதியில் இருந்துவிடுகிறது.  மழையை எப்படி எதிர்கொள்வது என்பது பறவைகளுக்கு இயற்கையாகத் தெரிந்து இருப்பதால் அவை மனிதர்கள் போல் பயந்து கொண்டு இருப்பதில்லை.

பெரும் வெள்ளம், கட்டுக்கடங்காத சூறாவளி போன்ற நேரத்தில் பெரிய மரங்களே  விழும், இயற்கையாகவே நிறையச் சேதங்கள் ஏற்படும் அப்பொழுது பறவைகளும்  பாதிக்கப்படுகின்றன. அந்த நேரம் பல பறவைகள் இறக்கவும் நேரும். 2015ஆம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கும், சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விழுந்தன. அப்பொழுது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வலசையாக வந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  சூரைக் குருவிகள் பாதிப்படைந்தன. அதில் தப்பித்த பல சூரைக் குருவிகள் கிண்டி அருகில் உள்ள போலீஸ் ஆபீஸ் சாலையில் உள்ள ஆலமரத்தில் வந்து தங்கின.  அதன் பிறகு கிண்டி ஆலமரத்தில் இன்று வரை அந்த பறவைகள் வருவதில்லை.

இப்படித் தடுக்க முடியாத சூறாவளி, பெரும் வெள்ளத்தில் பறவைகளும் பாதிப்பு அடையவே செய்கின்றன.

மழை காலத்தில் பறவைகள் இரைக்கு என்ன செய்கின்றன?

மனிதர்கள் போல் உணவை சேகரித்து கொள்ளும் பழக்கம் பறவைகளுக்கு இல்லை. தினமும் வெளியே சென்றால் தான் இரை என்ற நிலையிலேயே பறவைகள் உள்ளன. இது போல் கன மழை பெய்யும்பொழுது இரை குறைவாகவே கிடைக்கும். இருந்தாலும் அதன் உடலில் இருக்கும் ஆற்றலை கொண்டு  மழைக்காலங்களை எதிர் கொள்ளும்.

கொஞ்சம்  மழை விட்டாலும் இரையை தேடி பறந்து செல்கிறது. மழையில் நீண்ட தூரம் அவற்றால் பறக்க முடியாது என்பதால் அருகிலேயே இரையை தேடுகிறது. அப்படி காகங்கள் சிறு மழை தூறலில் இரையை தேடி கொண்டு இருந்தன. சிறிது நேரத்தில் மழை அதிகமாகிவிட்டது பறந்து அருகில் உள்ள வேப்ப மரத்தில் வந்து அமர்ந்துவிட்டது. சில பறவைகள் மரத்தின் உச்சி கிளையில் வந்து அமர்ந்து கொள்கிறது.

பூச்சிகளை உண்ணும் பறவைகளுக்கு மழைக்காலம் கொஞ்சம் சிரமம். மழைக்காலத்தில் பூச்சிகள் அதிகம் பறப்பதில்லை. இருந்தாலும் கிடைக்கும் சிறு நேரத்திலும் இரை தேடத் தொடங்கும்.

நீண்ட தூரம் வலசை செல்லக்கூடிய பறவைகள் பல நாட்கள் இரை உண்ணாமல் பறக்கும் சூழல் வரும் அதற்கு ஏற்றாற்போல் கிளம்ப தொடங்கும் முன்பே அதற்கான ஆற்றலை உருவாக்கி கொள்ளும். பிறகு நீண்ட தூரம் இரை இல்லாமல் பறந்து செல்லும். அப்படியே  மழைக்காலத்தில் பறவைகள் ஆற்றல் பெற்றுக் கொள்ளும்.

சாதாரண நாட்களில்  நம் கண் முன்பே பறந்து கொண்டிருக்கும் பறவைகள் மழைக்காலத்திலும் நம் அருகிலேதான் இருக்கும். ஆனால், அவை அதிகம் பறப்பதில்லை. அருகில் இருக்கும் மரத்தில், பொந்துகளில், கட்டடங்களில் இருக்கும். ஆனால் மழைக்காலத்தில் பறவைகளே இல்லை என்று சொல்வோம்

மழைகாலத்தில் உங்கள் ஜன்னலை திறந்து பாருங்கள். நிச்சயம் பறவைகள் என்ன செய்கின்றன என்று ஓரளவேனும் தெரியவரும். கொஞ்சம் பறவைகளுக்கும்  நேரம் ஒதுக்குவோம். 

கட்டுரையாளர்; செழியன். ஜா

சுற்றுச் சூழல் ஆர்வலர்,

‘பறவைகளுக்கு ஊரடங்கு’ நூலின் ஆசிரியர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time