காந்தி மீது ஏன் இவ்வளவு கோபம் கங்கனா ரனாவத்திற்கு?

- சாவித்திரி கண்ணன்

கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி

காமராஜர்_அண்ணா

கலைஞர்_எம்.ஜி.ஆர்

கலைஞர்_ஜெயலலிதா

என்ற ஒப்பீட்டு வரிசையில்

ஸ்டாலின்_….?

காமராஜர், அண்ணா இருவரும் சுயம்புவாக உருவான தலைவர்கள்!

கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் தமிழக அரசியலை ஒன்மேன் ஷோவாக மாற்றியவர்கள்!

கலைஞர், ஜெயலலிதா ஒருவருக்கொருவர் ஈகோவில் உச்ச நிலையைத் தொட்டவர்கள்!

ஸ்டாலுனுக்கு ஈடு கொடுப்பதில் தான் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது

இ.பி.எஸ், ஒ.பி.எஸ், சசிகலா போதாது என்று அண்ணாமலையும் களத்தில் நிற்கிறார்!

கட்சியில் அடுத்தகட்ட தலைவர்கள் அடையாளம் பெற்று எழுவதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை மீறி எழுந்து தன்னை நிலை நாட்டிக் கொண்டார் ஜெயலலிதா! ஜெயலலிதாவை மீறி எழுந்து தன்னை நிலை நாட்டிக் கொள்ளும் முயற்சியை காலம் தாழ்ந்து தான் கையில் எடுத்தார் சசிகலா.

தன்னை மீறி யாரும் கட்சிக்குள் அடையாளம் பெறுவதை கடைசி வரை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.

எல்.மதிவாணன், தேனீ

ஸ்ரீரங்கம் கோயிலில் உத்திரகாண்ட் சிவன் கோயில் மற்றும் சங்கர மட நிகழ்வில் மோடி பேசுவதை அம்மாள் சன்னதியில் ஒளிபரப்பிய பாஜக அண்ணாமலை செயல் குறித்து?

கோயில்களை வைத்து அரசியல் செய்வது போதாது என்று கோயிலுக்குள் நுழைந்து கட்சி அரசியல் செய்வது கோமாளித்தனம் மட்டுமல்ல. இறைவன் உறையும் இடத்தை அவமதிக்கும் செயல்!

அண்ணாமலையின் அத்துமீறலுக்கு இந்து அறநிலையத்துறை இணைஆணையர் உடன்பட்டதும், அவர் மீது இன்று வரை நடவடிக்கை பாயாததும் பல கேள்விகளை எழுப்புகிறது!

மற்ற சில கோயில்களில் கூட இது போல பாஜகவினர் அந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ததாக சொல்லப்படும் தகவல் உண்மை என்றால், இது சிறிதும் ஏற்புடையது அல்ல. வைஷ்ணவ பெரியவர் ரங்கராஜன் நரசிம்மனுக்கு இருக்கும் துணிச்சலும், அறச்சீற்றமும் அறநிலையத் துறைக்கும், அரசுக்கும் இருக்க வேண்டாமா?

கு. ராஜசேகரன், பாண்டிச்சேரி

கோவையில் பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் உயிர் இழந்த சம்பவம் குறித்து?

உயிர் இழந்த பிறகு உக்கிரம் பெற்றுள்ளது இந்தச் சமூகம். பள்ளிகளில் இது போன்ற காமூக ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத் தலைமையால் மட்டுமே கடிவாளம் போட முடியும்.

இது போன்ற புகார்களை மிக சீரியசாக எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டிக்கவோ, மீறினால் தண்டிக்கவோ தவறும் தலைமை ஆசிரியரும், நிர்வாகமும் தான் முதல் குற்றவாளிகள். சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் எப்படி தப்பிக்க முடிந்தது? தமிழக அரசு இது போன்ற விவகாரங்களில் உறுதிகாட்டவில்லை என்றால், இந்த சம்பவங்கள் தொடரவே செய்யும்.

கல்விக் கூடத்தை கண்ணியமாக நிர்வகிக்க முடியாதவர்கள் அனைவரையுமே முழுமையாக களை எடுக்க வேண்டும்.

ச. தமிழ்ச் செல்வி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி

சென்னை மழை வெள்ளத்தின் போது வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்த நிகழ்வுகள் செய்திகளை பார்த்தீர்களா..?

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பரப்பும், விழுங்கப்பட்ட வேளச்சேரி ஏரியின் உறைவிடமும், வளசரவாக்கம், சிட்லபாக்கம் ஆகிய குளங்கள் .ஏரிகள் சூழ்ந்த வனப்பகுதிகளையும் நாம் பாம்புகளிடம் இருந்து பறித்து தான் பட்டா போட்டுள்ளோம். இங்கே மிச்ச சொச்சமாக உயிர் வாழ்ந்த 82 பாம்புகளே தற்போது குடியிருப்புகளுக்குள் மழை,வெள்ளத்திற்கு அடைக்கலம் தேடி உள்ளன!

அ. முத்துச் செல்வன், சிதம்பரம்

1947 ல் இந்தியா பெற்றது சுதந்திரமல்ல, பிச்சை! 2014 ல் தான் உண்மையான சுதந்திரம் பெற்றது என்ற  நடிகை கங்கனா ரனாவத்தின் கருத்து குறித்து?

1947-ல் காங்கிரஸ் கைகளுக்கு கிடைத்த அந்த பிச்சையைத் தான் 2014ல் பாஜக பிடுங்கியுள்ளது. பிடுங்கப்பட்ட பிச்சை பாத்திரம் மீண்டும் ஆதிக்க சக்திகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு தான் 2014 ஆகும்! காந்தியின் படுகொலையே அந்த பிச்சை பாத்திரம் ஆதிக்க சக்திகளின் கைகளுக்கு உடனே மாற்றப்படாமல் இது நாள் வரை தடுத்தாட் கொண்டிருந்தது!

பல தியாகங்களைத் தந்து, தான் பெற்ற பிச்சையை கடைக்கோடி மனிதன் வரை பகிர்ந்தளித்தது காங்கிரஸ். அடடா.., இது எவ்வளவு பெரிய குற்றம்!

கங்கனா ரனாவத்தின் தாக்குதல் முழுக்க மகாத்மா காந்தியை குற்றவாளியாக்கும் நோக்கத்தில் மையமிட்டுருப்பதை கவனிக்கும் போது, இந்த காலதாமதத்திற்கு காரணமான காந்தி மீதான வன்மம் நாளுக்கு நாள் எப்படி எல்லாம் பாஜக ஆதரவு வகையறாக்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்!

எஸ். இராம சுப்பிரமணியன், மயிலாப்பூர், சென்னை

திருவள்ளுவரை ஆளாளுக்கு மதமாற்றம் செய்கிறார்களே?

திருவள்ளுவர் மதவாதிகளின் உடமை ஆக்கப்பட்டு வருவது மடமை!

திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட போதிலும், அதில் தமிழின் சிறப்போ, மொழிப்பெருமையோ கூறப்படவில்லை என்பது கூட அது மொழிகளைக் கடந்து உலகப் பொதுமறையாவதற்கு தன்னை தகுதி படைத்துக் கொண்டதையே காட்டுகிறது.

அதில் கூறப்பட்ட புலால் மறுத்தல், கொல்லாமை, தவம், துறவு, நீத்தார் பெருமை, நிலையாமை, ஒழுக்கமுடைமை ஆகிய அதிகாரத்தில் இடம்பெற்ற குறள்கள் சமணத்திற்கும்,பெளத்தத்திற்கும் மிக நெருக்கமாக அவரை காண்பித்தன. இப்படி உணரப்பட்டதில் தவறேதுமில்லை.

அதே போல கிறிஸ்த்துவர்களும் கூட பைபிளுக்கும், திருக்குறளுக்கும் ஏராளமான ஒற்றுமைகளை கண்டறிந்து வள்ளுவரை தங்களுக்கானவராக எண்ணத் தலைப்பட்டனர்!

அன்றைய சனாதன மதமாகிய பிராமண மதம் ,வேள்விகள், சடங்குகள், புலால் உணவு, மிருகங்களை யாகத்திற்கு பலியிடல் மற்றும் பல சூதுக்களை கொண்டிருந்த காரணத்தால் திருக்குறளை அன்றைய மத ஆதிக்க சக்திகள் தங்களுக்கான ஆபத்தாகவும் கருதினார்கள்!

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்து மதமானது சமண, பெளத்தத்தில் இருந்த சிறந்த கருத்துக்களை உள்வாங்கி செரித்துக் கொண்டது. அதே போல தற்போது திருவள்ளுவரையும் விழுங்கி செரிக்கப் பார்க்கிறது.

திருவள்ளுவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். மனிதத்திற்கு உரியவர்!

எம். ராமமூர்த்தி, குடவாசல், திருவாரூர்

உத்திரபிரதேசத்தில் இரவில் நகையோடு இளம் பெண் நடமாடக் கூடிய வகையில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என அமித்ஷா கூறியுள்ளாரே?

என்ன ஆச்சு? யோகி ஆதித்தியநாத் ஆட்சிக்கு இப்படி ஒரு அக்னி சோதனை? பகலிலேயே நடமாட முடியாத நிலையில்..இப்படி ஒரு உள்குத்துவிடுகிறாரே அமித்ஷா ?  ஆதித்திய நாத் ஆட்சிக்கு முடிவுகட்ட  முடிவெடுத்து தான் அமித்ஷா இப்படி பேசுகிறாரா என்று சந்தேகம் வருகிறது!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time