கிரிப்டோ கரன்சி எனும் உலகளாவிய பணப் பரிவர்த்தனை!

-செழியன் ஜானகிராமன்

கிரிப்டோ கரன்சி, பிட்காயின், என்றெல்லாம் சொல்லப்படும் குருட்டாம் போக்கிலான பணப்பரிவர்த்தனை முறையை தடை செய்வதா? இதன் விபரீத விளைவுகளை எப்படி கட்டுப்படுத்துவது..? என இந்திய அரசு தடுமாறுகிறது! இது தீவிரவாதிகளுக்கு உதவுகிறதா? அல்லது கறுப்பு பணத்தை பாதுகாக்கிறதா..?

ஷேர் மார்கெட்டில் பணம் போடுவதைக் கூட ஒரு சூதாட்டமாக கருதும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் புதிதாக வந்துள்ள கிரிப்டோகரன்சி பற்றித் தெரிந்து கொண்டால் என்ன சொல்வார்களோ..?

”அய்யோ இந்த வினையே வேண்டாம்” என்று சீனா, ரஷ்யா, வியட்னாம், பொலிவியா, ஈக்குவாடர், கொலம்பியா போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சியை தடை செய்து உள்ளன.

ஆனால், அமெரிக்கா, கனடா போன்றவை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தியா மாதிரியான அனேக நாடுகள் ஏற்பதா? வேண்டாமா? என்று தடுமாறிக் கொண்டு உள்ளன. ஏற்கனவே இந்திய அரசு செய்த தடையை நீதிமன்றம் சென்று ரத்து செய்துவிட்டனர்!

இதை பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் ஆதரிக்கிறார், உலகின் தலை சிறந்த நிதி நிர்வாகியாக மதிக்கப்படும் வாரன் பப்பட்  எதிர்க்கிறார்.

இப்படி எதிரும் புதிரும் கருத்துக்கள் இருக்கும்பொழுது  கிரிப்டோகரன்சி விஷயத்தில்  நாம் என்ன முடிவு எடுப்பது?

 

கிரிப்டோகரன்சியை எதற்கு உருவாக்கினார்கள்? யாருக்கு நன்மை? தீமை?

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

பத்து ஆண்டுகள் முன்பு உலகம் முழுவதும் பயன்படக்கூடிய வகையில் ஒரே பணமாக  இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து Satoshi Nakamoto  என்ற நபர் உருவாக்கிய கரன்சி தான் பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) ஆகும். அதாவது இந்த கரன்சியை கொடுத்து எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். Satoshi Nakamoto பெயர் கூட புனைபெயர்தான். இவர் யார் என்றோ, எங்கு உள்ளார் என்றோ, உண்மை பெயர் என்ன என்றோ, உண்மையில் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றோ  யாருக்கும் இன்று வரை தெரியாது.

கிரிப்டோகரன்சி என்பது பொதுப்பெயர் ஆகும். அதன் கீழ் வருவதுதான் பிட்காயின்    (Bitcoin) ஆகும். பிட்காயின் போல் இன்று ஆயிரக்கணக்கான வகையில் காயின்கள் வந்துவிட்டன.

நாணயம்(Currency) என்பது பொதுப்பெயர் அதன் கீழ் இந்தியாவின் Rupees, அமெரிக்காவின் டாலர், ஐரோப்பாவின் யூரோ என்பது போல் க்ரிப்டோகரன்சி என்ற பொதுப் பெயர் கீழ்  பிட்காயின், எத்திரியம் என்பதாக நிறையக் காயின்கள் இன்று வந்துவிட்டன. அதில் முதன் முதலாக வந்த கரன்சிதான் Bitcoin ஆகும்.

ஆரம்பத்தில் இந்த கிரிப்டோகரன்சியை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுதும் சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் எதிர்க்கவே செய்கின்றன!

கிரிப்டோகரன்சி-பிட்காயின் எந்த வடிவில் இருக்கும் ?

இங்கிருந்துதான் நாம் கிரிப்டோகரன்சியை கவனிக்கத் தொடங்க வேண்டும்.

அச்சடிக்கப்பட்ட தாள் வடிவில் பிட்காயின் இருக்காது. 100 ரூபாய் பணம் போல் பிட் காயினை கையில் தொடவோ, மற்றவர்கள் கையில் கொடுக்கவோ முடியாது. எண்கள் வடிவில் மட்டுமே உங்கள் கணக்கில் இருக்கும்.

உங்கள் பணத்தை ஆன்லைன் வழியாகச் செலுத்தினால் பிட்காயின் உங்கள் கணக்கில் வந்துவிடும். அதாவது 1 பிட்காயின் வாங்கி உள்ளீர்கள் அல்லது 100 பிட்காயின் வாங்கி உள்ளீர்கள் என்று உங்கள் கணக்கில் தெரியும். அவ்வளவுதான். வெளியே நீங்களும் சொல்லிக்கொள்ளலாம். என்னிடமும் பிட்காயின் உள்ளது என்று.

பிட்காயின் வைத்திருப்பதில் நமக்கு  என்ன லாபம் ?

பிட் காயினை உருவாக்கிய Satoshi Nakamoto சில வருடங்கள் பிறகு அதிலிருந்து விலகிக் கொண்டார். எந்த நோக்கத்திற்கு பிட்காயினை உருவாக்கினாரோ,  அதிலிருந்து அவை தடம் மாறி முதலீடு செய்யும் நோக்கில் சென்றுவிட்டது.

முதலீடு என்பது கூட சரியான வார்த்தை இல்லை. ஒரே பாடல் காட்சியில் பணக்காராகும் நடிகர்கள் போல் ஒரு சில மாதங்களில் கோடீஸ்வரராகவும் ஆகலாம், பிச்சைக்காரனாகவும் மாறலாம்.

பிட்காயின் வாங்கினால் சில மாதங்களில் கோடீஸ்வரர் ஆக முடியும் என்றால், சந்தோஷம்தானே என்று பலருக்கும் தோன்றக் கூடும்!

அப்படித்தான் எனக்கும் தோன்றியது. ஆனால், பிட்காயின் எப்படி உயருகிறது, குறைகிறது, யார் உயர்த்துகிறார்கள், யார் நடத்துவது, எங்கு அலுவலகம் உள்ளது என்று யாருக்குமே தெரியாது. எந்த வித சட்டதிட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்படாமல், யாரும் தலைமை ஏற்று நடத்தாமல் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது இன்றைய பிட்காயின் என்பதே யதார்த்தம்!

பிட்காயின் எப்படி வேலை செய்கிறது? Blockchain தொழில்நுட்பம்.

உண்மையில் பிட் காயினை யாரும் இயக்கவில்லை. அதை யாரும் தலைமை ஏற்று நடத்தவும் இல்லை. பிட்காயின் பயன்படுத்தும் பயனாளர்கள்தான் அவற்றைக் கட்டுப்படுத்துகிறார்கள். இன்னும்  குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் அவற்றை நடத்துகிறது.

பிட்காயின் BlockChain என்ற தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இவை ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஆகும். இந்த தொழில்நுட்பம் உங்கள் தகவல்களை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. தகவல் திருடுபவர்கள் இவற்றில் ஊடுருவ முடிவது மிகக் கடினமே. அதாவது தகவல்கள் ஒரு இடத்தில் சேமித்து வைப்பதற்குப் பதிலாகப் பல இடங்களில் சேமித்து வைக்கப்படுவதால் திருடுவது மிகக் கடினமாக இருக்கும். தகவல்களை மாற்றவும் முடியாது. Blockchain தொழில்நுட்பம் பாதுகாப்பான தொழில்நுட்பம் என்பதில் சந்தேகமே இல்லை.

அதனால்தான் சமீபத்தில் சில ஹேக்கர்ஸ் (Hacker) ராம்சார் வைரஸ் கொண்டு பல நிறுவனங்களின் கம்ப்யூட்டரை செயலிழக்கவைத்து அவர்களிடம் கோடிக்கணக்கான பணம் கேட்டு உள்ளனர். பணமாகப் பெற்றால் மாட்டிக் கொள்வோம் என்று பிட்காயினாக பெற்றுக் கொண்டார்கள். காரணம் உங்களிடம் எவ்வளவு பிட்காயின் இருக்கிறது என்று உங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பது உண்மை.

பிட்காயின்-ஷேர்மார்க்கெட் எப்படி விலை உயர்கிறது-குறைகிறது என்று தெரிந்து கொண்டால் நீங்களே எதில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

ஷேர் – பிட்காயின் எதை வாங்கலாம்?

ஷேர் மார்க்கெட்டில் அரசு வகுத்துள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டே எந்த ஒரு நிறுவனமும் இயங்க வேண்டும். அவற்றை SEBI கண்காணிக்கும்.

ஒரு ஷேர் வாங்கியவருக்கு கூட நிறுவனத்தின் அனைத்து செயல்களையும் நிறுவனம் சொல்ல வேண்டும். இவையெல்லாம் செபியின்(SEBI) கீழ் துல்லியமான கண்காணிப்பிற்கு உள்ளாகிறது.

நிறுவனத்தில் ஏற்படும் திருட்டுத்தனத்திற்குச் செபி எச்சரிக்கும், அபராதம் விதிக்கும், மீறி தொடர்ந்தால் ஷேர் மார்க்கெட்டில் இருந்து அந்த நிறுவனத்தை எடுத்துவிடும்.

நிறுவனம் லாபத்தில் இயங்கினால் நீங்கள் வாங்கிய ஷேர் உயரும், நஷ்டம் அடைத்தால், நிறுவனத்திற்கு கடன் அதிகம் இருந்தால் ஷேர் விலை குறையும். தலைமை சரியாக இல்லாமல் நிறுவனம் தடுமாறினால் ஷேர் விலை குறையும்.

ஆக, ஒரு நிறுவனம் நல்ல நிறுவனமா? அதன் தலைமை யார்? ஏற்கனவே அவர் நடத்தும் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகிறது? லாபம் வருகிறதா? கடன் எவ்வளவு உள்ளது? என்று ஒரு நிறுவனத்தின் அனைத்து அடிப்படை விஷயங்களையும் ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் ஷேர் வாங்கவது தொடர்பாக முடிவெடுக்கலாம்.

பிட்காயினை யார் நடத்துகிறார்?

பிட்காயின் பணப் பரிவர்த்தனையை யாரும் நடத்தவில்லை, இதற்கு நிறுவனங்கள் இல்லை, தலைவர் இல்லை, எந்த சட்டதிட்டங்களும் இல்லை, யாரும் கேள்வி கேட்க முடியாது, யார் ஒருவரின் அல்லது நிறுவனத்தின் கண்காணிப்பிலும் இல்லை, டாடா,ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் லாப-நஷ்டத்தில் இயங்குகிறது என்பது போல் பிட்காயினுக்கு லாபம் -நஷ்டம் இல்லை.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பிட்காயினுக்கு எந்த மதிப்பும் இல்லை.

 பிட்காயின் மதிப்பு எப்படி உயருகிறது? யார் உயர்த்துகிறார்கள் ?

வேறு யாரும் உயர்த்தவில்லை. நாம்தான் உயர்த்துகிறோம். ஆம், உண்மை பிட்காயின் விலை உயர காரணம் நாம்தான்.

நிறையப் பேர் பிட்காயின் வாங்குவதால் அவை உயர்கிறது. விலை உயர்வதைப் பார்த்து நீங்கள் வாங்கினால் இன்னும் உயரும். தொடர்ந்து பிட்காயின் வாங்கிக் கொண்டே இருந்தால் உயர்ந்து கொண்டே இருக்கும். பயம் காரணமாக வாங்குவது குறைந்துவிட்டால் விலையும் குறைந்துவிடும்.

கடந்த ஜூலை மாதம் ஒரு பிட் காயின் 22 லட்சம் ரூபாய்க்குக் குறைந்தது இப்பொழுது  45 லட்சத்திற்கு விற்பனை ஆகிறது. இப்படி எந்தவித கட்டமைப்பும் இல்லாமல் நம்ப முடியாத அளவு உயர்வது-இறங்குவது என்ற நிலைதான் உள்ளன.

”பிட்காயின் எந்தவித சட்டதிட்டத்திற்கும் உட்படாமல் செயல்படக்கூடியவை. இதற்கு விதிமுறை கிடையாது” என்று சொல்லியே விற்பனை செய்கிறார்கள். க்ரிப்டோகரன்சி வாங்கி நீங்கள் ஏமாந்தால் அதற்காக வழக்குப் போட முடியாது.

இப்படி ஆபத்து இருந்தால் அதை ஏன் பில்கேட்ஸ் வாங்குகிறார், இலான் மஸ்க் (Elon Musk) வாங்குகிறார்?

குதிரைப் பந்தயம் கூடத்தான் ஆபத்தானது. ஆனால், கிண்டி குதிரைப் பந்தயத்தில் பெரிய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் ஈடுபடுவதில்லையா? அதனால், அனைவரும் அதில் பணம் போடுங்கள் என்று சொல்ல முடியுமா?

கிளப்பில் ஆடும் சீட்டாடத்தில் கூட பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் தான்! அதனால், அது சரியான முதலீட்டு முறையா?

பில்கேட்ஸ், இலான் மஸ்க் போன்றவர்களைக் கிண்டி குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டும் நபர்களாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.  எந்தவித மதிப்பும் இல்லாமல் இருக்கும் ஒரு விஷயத்தைப் பலர் வாங்குவதனால் மட்டுமே விலை உயர்கிறது என்பதற்காக அவை எப்படி நம்பத்தகுந்த முறையாக இருக்க முடியும்.

சிறந்த நிதி நிர்வாகியான வாரன் பப்பட், ”கிரிப்டோகரன்ஸியை ஒரு போதும் பயன்படுத்துவதில்லை” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  மற்றொரு சிறந்த நிதி விர்வாகியாக கருதப்படும் சார்லி மங்கர் கிரிப்டோ இன்னும் ஒரு படி மேல் போய், ” இந்தக் கரன்சி என்பது  கொள்ளைகாரர்களும், கடத்தல்காரர்களும் பயன்படுத்துவது.  இவற்றின் வளர்ச்சி மிகவும் அருவருப்பானது” என்றும் குறிப்பிடுகிறார்.

பிட்காயினை குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற ஒரு பணம் சம்பாதிக்கும், இழக்கும் முறை என்று சொல்லலாமே தவிர, பாதுகாப்பான அடிப்படைகளைக் கொண்ட முறை என்று சொல்ல முடியாது.

இன்று பல நிதி ஆலோசனை நிபுணர்கள் பிட்காயின் வளர்ச்சியைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு உங்களுக்குத் தேவைப்படாத பணத்தை பிட்காயினில் போடுங்கள் என்று சொல்லும் நிலை வந்துள்ளது. காரணம், கண்மூடித்தனமாகப் பணத்தை அதில் போடும் நிலை வந்து உள்ளது.

பில் கேட்ஸ் அல்லது வாரன்  பப்பட் இவர்களில் யாரைப் பின்பற்றப் போகிறீர்கள்?

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time