திமுகவின் இந்துத்துவ எதிர்ப்பு என்பது நாடகமா?

வெளித் தன்மைக்கு திமுகவுடன் பாஜக மோதுவது போல தோன்றினாலும், பாஜகவின் விருப்பங்களை, செயல்திட்டங்களை நிறைவேற்ற திமுக அரசு ஒத்திசைவோடு நடக்கிறது என்ற சந்தேகம் பலப்பட்டு வருகிறது! திசை மாறுகிறதா திமுக?

என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்து அறநிலையத் துறைக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்! ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பாஜகவிற்கு போட்டியாக இந்து வாக்கு வங்கி அரசியல் பார்வை திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே பிரதானமாக வெளிப்பட்டது. பிறகு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எல்லாமே இந்துமதம் சார்ந்த நகர்வுகளாக உள்ளன!

முதலில் என்னைப் போன்ற பலரும் ஏற்பட்ட உணர்வு என்னவென்றால், திமுகவை ஒரு இந்து விரோத கட்சியாக பாஜக அடையாளப்படுத்துவதை களைய இந்த மாதிரி செயல்படுகிறார்கள் என்பதே! அந்த வகையில் தான், ஒரு கால பூஜை கூட நடைபெறாத கோயில்களுக்கு நிதி ஒதுக்கியதையும், கோயில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பதையும் பார்த்தோம். நல்லது வரவேற்போம்.

ஆனால், திடீரென்று தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, ரூ.1,500 கோடி மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்துக் கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சார்பில் பரமத்தி வேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திகுளத்திலும் என நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க  தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது நம்மை துணுக்குற செய்தது! தமிழகத்தில் கல்லூரிகளைத் தொடங்கவும், நிர்வகிக்கவும் உயர்கல்வித் துறை ஒன்று இருக்கும் போது, அறநிலையத் துறை ஏன் ஈடுபடுகிறது. கோவில்கள் தொடர்பாக செய்வதற்கு அதிக வேலைகள் காத்துக் கிடக்கும் போது இந்த முயற்சி எதற்கு என்று தோன்றியது.

இதோடு மட்டுமின்றி, அந்தக் கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இந்துக்கள் மட்டுமே ஆசிரியர் உள்ளிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.

அறிவிப்பின் ஈரம் காய்வதற்கு முன்பகவே சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தாண்டு இக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்கள் முதல்வர் ஏற்பாட்டின்பேரில் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். யார் கேட்டார்கள் இந்த இலவசத்தை? தமிழக உயர்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக பேராசியர்கள் நியமனம் இல்லாமல் அத்துக் கூலிக்கு கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கூட வழங்க நிதியில்லை என்ற செய்தி எல்லாம் வந்ததே!

கல்வி என்பது மதத்திற்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்! பொதுக் கல்லூரி எனத் தொடங்கி அதில் மத சம்பந்தமான வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் சொல்வது அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கே இழுக்காகும். இதுவே அர்ச்சகர்களுக்கான கல்லூரி என்றால், அதில் மதம் சார்ந்த வகுப்புகளுக்கு யாரும் ஆட்சேபனை செய்யப் போவதில்லை.

அடுத்ததாக இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாகவும் அமையவில்லை. ஏனெனில், இப்படி கோவில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோ, விருப்பமோ மக்களிடம் இருந்து எழவில்லை.

இந்தச் சூழலில் தான் இந்த அரசாணைக்குத் தடை விதித்து ரத்து செய்யக் கோரியும், கோயில் சொத்துகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

20 ஆயிரத்திற்கும் மேலான கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்து எதுவும் இல்லை என்றும், முதல்வர் தொகுதி என்ற காரணத்தினால் அங்கு அவசரமாகக் கல்லூரி தொடங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்..

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தைப் பின்பற்றியே தொடங்கப்படுவதாகவும், பல கோயில்களில் இருந்து பொது நிதிக்குப் பெறப்பட்ட பங்களிப்பு நிதியில் இருந்துதான் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

திராவிட இயக்க பின்புலத்தில் இருந்து வந்த திமுக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் பாஜகவிற்கு இணையாக ஒரு இந்து மத அரசியலை கையில் எடுத்துக் கொள்வதைப் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் பாஜகவினர்

மற்றொரு பக்கம் தமிழக பாஜக வெளித் தன்மைக்கு திமுகவோடு மோதுவது போன்ற தோற்றத்தைக் காட்டினாலும், மிகச் சமீபத்தில் தமிழகத்தின் மிகப் பிரதானமான 16 கோயில்களில் இந்து அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் பிரதமர் மோடியின் கேதார் நாத் விசிட் நிகழ்வை ஒளிபரப்பி உள்ளது. இந்த நிகழ்வில் பாஜகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளனர். அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலிலும், பொன் ராதாகிருஷ்ணன் மீனாட்சி அம்மன் கோவிலிலுமாக ஒவ்வொரு பாஜக தலைவர்கள் ஒவ்வொரு இடம் என்பதாக திட்டமிட்டு சென்று கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வின் வழியாக தமிழக வாக்குச்சாவடி மூலமாக நிறுவ முடியாத தங்கள் செல்வாக்கை கோயில்களின் வழியே நிறுவ முனைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜகவினர்

இது நாள் வரையிலான தமிழக வரலாற்றில் கோயிலுக்குள் கட்சி சார்ந்த நடவடிக்கைகள் எந்தக் காலத்திலும் நடந்ததில்லை! கோயில்களில் இறை வழிபாடும், அந்தத் தளம் சார்ந்த இறைவன் புகழ்பாடும் சொற்பொழிவுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இறைவன் சன்னிதியில் பிரதமர் உள்ளிட்ட எந்த தனி நபர் புகழ்பாடவும், பரப்பவும் அனுமதிக்க இடமில்லை. பிரதமரானாலும் அவர் ஒரு இறைத் தொண்டராக, பக்தராக கோயிலுக்கு வரலாமே தவிர இறைவனுக்கு நிகராக அவர் நடத்தப்படக் கூடாது. பிரதமர் நிகழ்ச்சியை பாஜகவினர் கட்சி அலுவலகத்தில் கூடிப் பார்த்து களித்திருக்கலாம் அல்லது ஒரு கல்யாண மண்டபம் மாதிரியான இடத்தில் மக்களை அழைத்து பார்க்க வைத்திருக்கலாம்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதி வேண்டி இறைவனை தரிசிக்க வருவார்களே தவிர, ஆட்சியாளர்கள் புகழ்பாடும் நிகழ்வைக் காண விரும்பமாட்டார்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக பக்தர்களின் கடும் அதிருப்தியைத் தான் பாஜகவினர் பெற்றுள்ளனர்! நான் விசாரித்த வரையில் அன்றைய மோடி நிகழ்வை பாஜகவினரைத் தவிர, கோவிலுக்கு வந்த பக்தர்கள் யாரும் பார்க்கவில்லை. சில இடங்களில் பாஜகவினர் அழைத்தும் பக்தர்கள் சட்டை செய்யவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் பார்ப்பது எல்லாம் இந்த சட்டத்தை மீறிய – தார்மீகத்திற்கு எதிரான இந்த செயல்களை பாஜக நிர்பந்தத்தில் ஏன் செய்து கொடுக்க தமிழ்நாடு இந்து அற நிலையத்துறை ஒத்துக் கொண்டது? ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி கோயில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற இணை ஆணையர்கள் நிர்வகிக்கும் முக்கிய பெரும் கோவில்களில் இந்த அ நீதி அரங்கேறியுள்ளது. இதற்கு பல தரப்பிலும் கண்டணங்கள் எழுந்துள்ளன!

குறிப்பாக வைஷ்ணவ பெரியவர் ரங்கராஜன் நரசிம்மனின் அறச் சீற்றம் மிக நியாயமானது! ‘’பெருமாளுடைய கோவிலில் எந்த தைரியத்தில் எந்த ஆணவத்தில் தங்களுடைய கட்சித் கூடாரமாக மாற்றினார்கள் என்பதற்கு கோவில் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். இது இது ஒரு சட்ட விரோதமான செயல் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல். இது போன்ற செயல்களை பாஜக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இது கண்டிக்கதக்கது என ரங்கராஜன் கூறியுள்ளார்.அவருக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விட்டுள்ளது தொடர்பாக தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் சட்ட-ஒழுங்கை பாதுகாக்கும் விதத்தில் நடவடிக்கை வேண்டும். இன்னொரு சங்கரராமன் கொலை நிகழ்வை தமிழகம் அனுமதிக்கக் கூடாது.

திராவிடர் இயக்க தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் இதை எதிர்த்து பேசி இருப்பதன் மூலம் இது முக்கியமான அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இந்து அற நிலையத் துறையின் ஏற்பாட்டில் தான் இவை நடந்தன. நாங்கள் வெறும் பார்வையாளர்களாகத் தான் இதில் கலந்து கொண்டோம் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக ஆட்சி கட்டிலில் இருக்கும் திமுக தலைமை கள்ளமெளனத்தைக் களைந்து நடைபெற்ற சம்பவத்திற்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளது. ஏனெனில், அடிமை ஆட்சி என்று சொல்லப்பட்ட அதிமுக ஆட்சியில் கூட இந்த அளவுக்கு தைரியமாக பாஜகவினர் இந்துத்துவ அரசியலை அத்துமீறிச் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

பாஜகவின் மதவாத சாம்ராஜ்ஜியத்தை தடுக்கவே, தமிழகத்தில் மக்கள் திமுகவிற்கு வாக்களித்து அரியணையில் ஏற்றினார்கள். ஆனால், திமுக அரசின் துணையுடனேயே அதை பாஜக செய்ய முடியும் என்பது தற்போது நிருபணமாகியுள்ளது! உண்மையில், இந்த ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல் டெல்லி கையில் இருக்கிறதா? என்ற சந்தேகம் சமீபகாலமாக ஏற்பட்டுக் கொண்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட இந்து முன்னேற்றக் கழகமாகிக் கொண்டிருக்கிறதா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time