பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள் தடுக்க என்ன வழி?

- ஈரோடு உமா

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4

தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது.

உலகம் முழுவதுமே பெண்களுக்கான  பாலியல் சீண்டல்  பிரச்சனைகள்  இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும்  பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும்  சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது!

தனியார் பள்ளிகளின் அராஜகம் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் சின்மயா பள்ளியின் மாணவிக்கு இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தந்த தொடர்ந்த பாலியல் பிரச்சனையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி நம்மை அதிர வைக்கிறது.. காவல் துறைக்கு விஷயம் தெரிந்து பள்ளி நிர்வாகம், ஆசிரியரை அணுகவே சில தினங்களாயிற்று. அதற்கும் ஒரு போராட்டம் தேவைப்பட்டது. சாதாரணமாக தனியார் பள்ளி ஆசிரியரையோ, பள்ளியையோ  கேள்வி கேட்பதற்கு  எவருமில்லை என்ற சூழல் தான் தற்போதைய நிலைமையாகும். ஏனென்றால் இது தமிழகத்தின் தனியார் பள்ளிகளுக்கு புதிதல்ல .

கடந்த ஜூன் மாதம் சென்னையின் பத்ம சேஷாத்திரி (PSBB) யில் இணைய வழி வகுப்புகளில் பெண் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களைத் தொடர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் குறித்து செய்திகள் வெளிவர தமிழகமே கொந்தளித்தது. பள்ளி நிர்வாகம் மீது விசாரணை , ஆசிரியரை காவலில் வைத்தல் என  ஒரு புறம் நடந்தன.  ஆனால், இது போன்ற பாலியல் சீண்டல்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.

அதன் பிறகு ஏராளமான புகார்கள் மகரிஷி வித்யா மந்திர், சுஷில் ஹரி சர்வதேசபள்ளி, செட்டி நாடு வித்தியாஷ்ரம் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகளின்  நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் , மீது பதிவாகியதை ஊடகங்கள் அறிவித்துக் கொண்டே இருந்தன. போக்சோ சட்டப் பிரிவுகளின் படி விசாரணை நடப்பது , தண்டனை என்று தொடர்ந்தாலும் கூட எவ்வித அச்சமுமின்றி , ஒரு மாணவியின் தற்கொலை வரை சென்றுள்ள  கோவை சின்மயா பள்ளியின் நிர்வாகம் , ஆசிரியர் ஆகியோரை எந்த அளவுகோலைக் கொண்டு அளவிடுவது. இவர்களுக்கெல்லாம் இவ்வளவு தைரியத்தை யார் கொடுத்தது ? சில தனியார் மயக் கல்வி நிர்வாகங்களின்  கோலோச்சும் அதிகாரத்தை இது நமக்கு  தெளிவாக விளக்குகிறது.

கற்பித்தல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பெண் மாணவிகளிடம் அத்து மீறும் இத்தகைய கீழ்மையான  செயல்களை தடுக்கத் தவறிய கோழைகளாக தனியார் பள்ளிகள் உள்ளன . இதில் உறுதியான நடவடிக்கை இல்லாமல் மெத்தன போக்கில் அரசு இருப்பதால் சில தனியார் பள்ளிகளில் அராஜகம் தொடர்கிறது .

பாதுகாப்பான இடமே பள்ளிகள் தான்

பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளை அவர்களின் மீதான  கனவுகளுடன் கொண்டு சேர்க்கும்  பாதுகாப்பான இடமாகவே பள்ளிகள் காலம் காலமாக இருக்கின்றன. அங்குள்ள ஆசிரியர்களை  தெய்வமாகவே மதித்து நம்பும் போக்கு இயல்பாகவே பெற்றோர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது.  ஆனால் அவற்றை எல்லாம் சுக்கு நூறாகத் தகர்ப்பது போல் இன்று பள்ளிச் சூழல்கள் அமைந்து வருவது தான் மிகப் பெரிய சாபக்கேடு.

பள்ளியில் பயிலும் பெண் மாணவிகளிடம்  ஆண் ஆசிரியர்கள் தவறான வழியில் நடந்து கொள்வதும் ஒரு கட்டத்தில் மாணவிகள் பயப்பட்டு தலைமையிடம் சென்று பிரச்சனைக்குத் தீர்வைத் தேட , ஆனால் அதை அனுசரித்துப் போகக் கூறிய தலைமை , பெற்றோருக்கேத் தெரியாமல் மறைத்து கவுன்சிலிங் அழைத்துச் சென்றதும் இறுதியில் மரணத்தைத் மாணவி தழுவியதும் இங்கு பள்ளியைப் பாதுகாப்பாக நாம் எப்படி அணுகுவது என்ற கேள்வி நம்முள் எழுப்புகிறது.

அரசுப் பள்ளிகளில்  நடக்குமா ?

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் – மாணவர் உறவு முறை என்பது , குழந்தைகள் – பெற்றோர்கள் உறவு முறையைப் போன்றது. ஆசிரியர்கள் குழந்தைகளின் பிரச்சனைகளை அறிந்து தீர்வு காணவே வழிகாட்டுவர். அங்கு ஓர் ஆண் ஆசிரியர்  பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் மேற்கொண்டால் , அது தலைமை ஆசிரியருக்கு தெரிய வரும் முன்பே ஆசிரியர்கள் , நண்பர்கள் என அறியப் படலாம். அதோடு இங்கு தலைமை ஆசிரியர்கள் ,  மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் , பெற்றோர் ஆசிரியர் அமைப்பு , பள்ளி மேலாண்மைக் குழுக்கள்  என அனைத்து தரப்பிலும்  உடனடியாக நடவடிக்கை எடுக்கும் சூழல் இருப்பதால் மரணம் வரை சென்றிருக்காது.

குழந்தைகள் அரசுப் பள்ளி  ஆசிரியர்களை அணுகுவது எளிது. பயமின்றி தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்துவர். குடும்பப் பிரச்சனைகள் , தனியாள் வேறுபாடுகள் , உளவியல் சார்ந்த பிரச்சனைகள் என அனைத்திற்கும் வழிகாட்டுதல் , ஆதரவுடன் குழந்தைகளை  தைரியமூட்டுதல் போன்ற முயற்சிகளை ஆசிரியர்கள் தங்கள் கல்வியின் வழியாகவும் அனுபவத்தின் வழியாகவும் செய்து வருகின்றனர். மதிப்பெண்களுக்கான  இடத்தைக் காட்டிலும் குழந்தைகளின் மன உடல் நலம் சார்ந்தவற்றிற்கு தான் முக்கியத் துவம் தரப்படும் அரசுப் பள்ளிகளில் .

ஆனால், மதிப்பெண்களுக்காக குழந்தைகளை அச்சுறுத்தி வைத்திருக்கும் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலோ  கோட்டைகள் போல , பெற்றோரோ கல்வி அலுவலர்களோ எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பவை. நிர்வாகம் பள்ளியின் பெயரைக் காக்கும் விதமாக எப்பேர்ப்பட்ட தவறையும் மறைக்கும் செயலை கைக்கொள்கின்றன. இதைத் தடுக்கவோ முற்றாக மாற்றவோ வழிகள் இல்லை .

இச்சம்பவத்தை எப்படித் தவிர்த்திருக்கலாம் ?

மிதுன் சக்கரவர்த்தி, மீரா ஜாக்சன்

தற்போது நிகழ்ந்திருக்கும் கோவை மாணவியின் இந்தக் குறிப்பிட்ட  தற்கொலை சம்பவம் குறித்து   நாம் யோசிக்கும் போது பெற்றோர்களை விட அந்த மாணவி பள்ளியையே  பாதுகாப்பாகக் கருதி தான், பள்ளித் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனிடம் கூறியிருக்கிறார். மாணவியின் இப்பிரச்சனையை கவனமாகக் கையாளும் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு இருந்திருக்க வேண்டும் . தலைமை ஆசிரியர் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு கண்டித்து தண்டனை தந்திருக்கலாம். மாணவிக்கு  தைரியமும் நம்பிக்கையும் கொடுத்திருக்கலாம் . அம்மாணவியின் பெற்றோர்களை வரவழைத்து  பேசியிருக்கலாம்.

இந்த சமூகம் பெண்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்தே பெற்றோர்கள்  மானம் , கெளரவத்திற்கு பயந்து குழந்தைகளையே கேள்வி கேட்டு அச்சுறுத்தும் மனநிலை உள்ளது. இப்பிரச்சனைகளுக்கு இது  கூட காரணமாக இருக்கலாம். நம்மால் அறுதியிட்டுக் கூற இயலாது. இதை குறித்து பெற்றோருக்கு வழிகாட்டுதல் செய்திருக்கலாம்.

சக வகுப்பு ஆசிரியர் எவரேனும் ஒருவருக்காவது இச்சம்பவம் குறித்து அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றவோ  அல்லது அவர்களது அச்சுறுத்தலுக்கு பயந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ இப்பிரச்சனையைக் கண்டும் காணாமல் இருந்திருக்கின்றனர். ஆசிரியர்கள் மனது வைத்திருந்தால்  அப்பெண் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையின் பாலியல் பிரச்சனை குறித்த வழிகாட்டு நெறி முறைகள் உறுதி செய்யப்பட்டிருந்தால் இம் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் .

ஆகவே, இந்த சம்பவத்தைப் பொறுத்த வரை பள்ளி நிர்வாகம் , தலைமையாசிரியர் , ஆசிரியர் , கல்வித் துறை இவர்களின் கடமை தவறுதலே விபரீதமாகியுள்ளது. மேற்படி சம்பவத்தில் கோவை மக்கள் தங்கள் தங்கள் தார்மீக கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவசரமான மற்றும் அவசியமான நடவடிக்கை

21 ஆம் நூற்றாண்டில்  வாழ்கிறோம் . கற்பித்தல் முறைக்கும் கல்வி முறைகளும் , பள்ளி சமுதாய சூழல்களும்  மாறியுள்ளன.   ஆசிரியர்களைப் பின்னுக்குத் தள்ளி  தொழில்நுட்ப சாதனங்களே முன்னணியில் நிற்கின்றன. காலத்திற்கேற்ற மாற்றங்களை அரசும், கல்வித் துறையும் செய்தாக வேண்டியன ஏராளம் . பாலியல் சீண்டல் மட்டுமல்ல , திரைப்படங்கள் , மது , போதை மருந்துகள் , திறன்பேசிகள் பயன்பாடு  என மாணவர் சமுதாயம்  தடம்மாறும் வழிகள்  ஏராளமாகப் பெருகியுள்ளன. அவர்களது நடத்தை மாற்றங்களை சீர்படுத்தவும்  உயிரைப் பாதுகாக்கவும், எதிர்கால மாணவர் சமுதாயம் நல்வழிப்படவும்  அவசரமான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உளவியல் ஆலோசகர் நியமனம்ஆசிரியருக்கான பயிற்சிகள் 

ஒவ்வொரு பள்ளியிலும்  மன நல ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டு பதின் பருவ வயதில் இருக்கும் மாணவர்களுக்கு  தொடர்ந்து ஆலோசனைகளும், மேற்சொன்ன பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வும் உடனடியாக வழங்க வேண்டும். அத்து மீறும் ஆசிரியர்களை அடையாளப் படுத்தும் தைரியத்தையும் ஒரு பயிற்சியாக வழங்க வேண்டும் .  குழந்தைகள் மன அழுத்தங்களைக் குறைக்க , சரி செய்ய தொடர் முயற்சி செய்ய வேண்டும் .குழந்தைகளுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் இப்பிரச்சனைகளை அணுகவும் இதற்கான சட்டங்கள் குறித்தும் மாணவர்களிடம் உரையாடவும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே அறியாமல் இருக்கின்றனர். பள்ளிகளில் நடப்பவை குறித்து குழந்தைகளிடம் அன்றாடம் பேசவும், அவர்களுக்கான மன அழுத்தங்களைப் புரிந்து கொண்டு பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து தீர்க்கவும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் கட்டமைக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தனியார் பள்ளிகளைப் புறக்கணியுங்கள் / அரசே ஏற்று நடத்த வேண்டும்.

 இப்படியான குற்றங்கள் நிகழும் தனியார் பள்ளிகளை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும். இப்பள்ளிகளும் அரசின்  கல்வித்துறை கட்டுப்பாட்டில் தான் வருகின்றன என்ற நிலையில்  ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் பள்ளிகளுக்கு என்ன நடவடிக்கைகள் எடுத்தனர் என்று தெரியவில்லை.  இது போன்று அசட்டையாக குழந்தைகள் நலனை எண்ணாது ஆசிரியர்களைக் காப்பாற்றும் பள்ளிகளை அரசாங்கமே கைப்பற்றி பள்ளியை நடத்த வேண்டும்.

 தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் 

அரசு இப்பிரச்சனைகளுக்காகப் போடப்பட்ட சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். அவை வெறும் எழுத்துக்களாக இல்லாமல்  களத்தில் செயல்படுகின்றனவா என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும் . ஏற்கனவே அமைத்துள்ள குழுக்கள் செயல்படுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.

பள்ளி /மாவட்ட / மாநில அளவில் கண்காணிப்புக் குழுக்கள் 

குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பல நிலைகளில் குழுக்கள் அமைத்து சர்வே எடுக்க வேண்டும். பிரச்சனைக்குரிய ஆசிரியர்களை காவல் நிலையத்தில் குற்றவாளிகளின் கோப்புகள் இருப்பது போல கல்வித் துறையில் பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்கள் , அவர்களுக்கு துணை போகும் ஆசிரியர்கள் , தலைமைகள் என விவரக்  கோப்புகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும். விசாரணையின் பேரில் அவர்களுக்கான கல்வித் தகுதி சான்றிதழ்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் . இப்படியான தொடர் நடவடிக்கைகளை உயிர்ப்புடன் கண்காணிப்புக் குழுக்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வியின் சவால்கள் அதிகமாகி வரும் சூழலில் தீர்வுக்கான வழிகளைப் போர்க்கால அடிப்படையில் எடுப்பது மிகவும் இன்றியமையாதது.

கட்டுரையாளர் ; ஈரோடு உமா

கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்! அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர்.                ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time