வரைமுறையின்றி வன்மம் வளர்ப்பதைக் கேட்க நாதி இல்லையா?

- சாவித்திரி கண்ணன்

தமிழ் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? எளியோரிடம் இரக்கம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை முன்வைத்து பலவித கலவரச் சூழல்கள் உருவாக்கப்படுவதும், ”உதைப்பேன், கையை வெட்டுவேன்” என்ற வன்முறை பேச்சுகள் அரங்கேறுவதும், தியேட்டர்களில் படம் பாதியில் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதும், சூரியாவின் பேனர்கள் கிழித்து எரிக்கப்படுவதும்… நடந்து கொண்டே இருக்கின்றன! இதை இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறது அரசாங்கம்? வன்முறை வளர்ந்து நடக்கக் கூடாத ஒன்று நடந்த பிறகு தான் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா?

தமிழ்த் திரைத்துறையில் பாரதிராஜா என்ற ஒரே படைப்பாளி மட்டுமே இதற்காக குரல் கொடுத்துள்ளார். ஆகப் பெரிய செல்வாக்கான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய் மூடி மெளனிக்கிறார். நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்று கட்சி ஆரம்பித்துள்ள கமலஹாசன் அன்புமணியை எதிர்க்க துப்பில்லாவிட்டாலும், ஒரு நல்ல கலைபடைப்புக்கு ஆதரவாக சூரியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க திரானியின்றி பெட்டைக் கோழி போல் கூட்டுக்குள் பதுங்கி கிடக்கிறார்!

நடிகர் சங்கம் நடுக்கத்தில் உள்ளதோ என்னவோ..? தயாரிப்பாளர் சங்கம் தடுமாற்றத்தில் உள்ளதோ என்னவோ? தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மட்டுமே அறிக்கை தந்துள்ளது!

இன்று சூரியாவிற்கு ஆதரவாக நிற்க மறுத்தால் நாளை இந்த சாதி ஆதிக்க சக்திகளிடம் தான் தங்கள் படத்தை திரையிட்டு தடையில்லா சான்று பெற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படலாம்.

ஜெய் பீம் படம் வந்ததும் அது மிகப் பெரிய வரவேற்பு பெற்று, பேசு பொருள் ஆனதும் மிக இயல்பாக தன்னிசையாக நடந்தன. அடுத்த இரண்டொரு நாளில் இந்த படத்திற்கு எதிரான கருத்துகளை ஹெச்.ராஜா, மாரிதாஸ், ரங்கராஜ் பாண்டே போன்ற சனாதன ஆதரவாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆரம்பித்து வைத்தனர்!

முதலில், ”இந்த படத்தைக் கூடவா எதிர்ப்பார்கள்?” என்ற பேரதிர்ச்சியோடு இந்துத்துவ ஆதரவாளர்களின் குரலை செவிமடுத்த போது, எனக்கு சட்டென்று புரிபட்டது விஷயம்.

நல்லது. இவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பானது இந்தப் படம்!

ஆதிக்கம் செலுத்துவோரும், அடிமைப்படுவோரும் கொண்ட சமூக அமைப்பை அப்படியே தக்க வைத்தால் தான் அவர்கள் அரசியல் எடுபடும். அதை தகர்க்கத் தூண்டுவது போல, ஜெய் பீம் ஏற்படுத்தி வரும் அரசியல் விழிப்புணர்வு அவர்களை பதற்றமடைய வைத்து ஆத்திரம் ஏற்படுத்துகிறது. இந்த சமூகத்தின் மனசாட்சியை தட்டி உலுக்கி, எளிய மக்களின் பால் அன்பும், அரவணைப்பும் காட்டத் தூண்டுவதே படத்தின் மைய நோக்கம்! சாதி ஆதிக்கத்தை உருவாக்கி நிலைபெற வைத்தவர்களுக்கு இருக்காதா தாக்கம்?

உண்மையில் இந்த பிரச்சினைக்கு காரணமான அந்த நகை திருடுபோன புகாரைத் தந்தவர் கதிர்வேல் படையாட்சி. சம்பந்தமே இல்லாத ஒரு பழங்குடி எளிய மனிதன் மீது போலீஸ்வெறி கொண்டு தாக்கக் காரணமானதும் அவரிடமும், அவர் மனைவிவியிடமும் மண்டிக்கிடந்த சாதி ஆதிக்க உணர்வும், எளியோரை எகத்தாளமாக இழிவாக கருத்தும் குணமும் தான். கடைசியில் அந்த நகையை திருடியதும் அவர்களின் நெருங்கிய சொந்தமே! அதாவது, அந்த வன்னிய சாதியைச் சேர்ந்தவர்களே! இந்த உண்மையை பகிரங்கபடுத்தாமலும், இந்த அக்னிகுண்ட காலண்டரை அந்த படையாட்சி வீட்டில் மாட்டாமலும் தவிர்த்ததில் இருந்தே படக்குழுவினரின் பக்குவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

    ‘abp நாடு’ பாஜகவின் மின் ஊடகத்தில்..

இத்தனை யதார்த்தங்கள் இருக்க, அதையெல்லாம் புறம் தள்ளி சமூகத்தை இருகூறுகளாக்கும் தீய நோக்கத்திற்கு சிலர் தங்களையும் அறியாமல் இரையாகிக் கொண்டுள்ளனர்.

இந்துத்துவ சனாதன சக்திகள் தனித்து தங்களால் இந்தப் படத்தை எதிர்க்கமுடியாது என்பதால் வன்னிய சகோதரர்களை தூண்டிவிட்டனர். ஆனால், பொது நிலையோடு இதை அணுகிய வன்னியர்கள் அந்த வலையில் சிக்கவில்லை. படத்தின் மையக் கருத்தில் – சமத்துவ நோக்கில் – அவர்களுக்கு ஒரு புரிதல்  இருந்தது.

உண்மையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரிரு வினாடிகள் மட்டுமே இடம் பெறும் அந்த காலண்டர் விவகாரம் ஆரம்பத்தில் யார் கவனத்திற்குமே வரவில்லை. சூர்யாவிற்குமே கூட இது தெரிந்திருக்கவில்லை என்றே தெரிய வருகிறது. அன்புமணியோ, ராமதாஸோ ஒரு தொலைபேசி இருந்தாலே கூட அடுத்த நிமிடத்தில் உடனே இது நீக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதை பொதுவெளியில் கவனப்படுத்தி, கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் பாமக அன்புமணி அந்த காலண்டர் மாற்றப்பட்ட நிலையிலும், சூடாக அறிக்கைவிட்டதோடு, கட்சி அணிகளையும் தூண்டிவிட்டார். இதையடுத்து சில ஊடகங்களும் இந்த தீயை வளர்த்து குளிர்காய்ந்தன!

பொதுவுடமைத் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி ஆகியோர் சூர்யாவுக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளனர்! தொல். திருமாவளவன் ஒருபடி மேலே போய் கண்ணியமாக சூர்யாவிற்கு தன் ஆதரவை நல்கியுள்ள விதம் சிறப்பாக இருந்தது!

”பொறுமையும் சகிப்புத் தன்மையும்தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள், போராளி சூர்யாவுக்கு வாழ்த்துகள்” என்று பண்பட்ட விதத்தில் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு தொல். திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மை யினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதைப் போல தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவு தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி’’ என அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இவ்வளவு மோசமான வன்ம பிரச்சாரத்திற்கு உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றாமல் சூர்யா தானும் பக்குவமாக அமைதிகாத்து, ரசிகர்களையும் அமைதிபடுத்தி கொண்டு இருப்பது ஒரு சிறந்த முன் உதாரணமாகும்.

பாரதிராஜாவின் அறிக்கை மிகுந்த பக்குவத்தோடு பிரச்சினையை அணுகி இருந்தது;

திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்… அவர் மீதான வன்மத்தையும்… வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால், ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? என பாரதிராஜா கூறி இருக்கிறார்!

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மிகத் தெளிவாக சூர்யாவை ஆதரித்து அறிக்கை தந்துள்ளார். ”ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது.” எனக் கூறியுள்ளார்.

மிகப் பெரும்பாலான பொதுமக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகின்றனர். சூர்யாவை ஆதரிக்கும் மக்கள் பதற்றத்தோடு சகலத்தையும் பார்த்தவண்ணம் உள்ளனர். சர்வ அதிகாரம் உள்ள அரசு அமைப்புகள் வன்முறை வளர்ந்து கொண்டே செல்வதற்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time