க.அமுதன், சுசீந்திரம், கன்னியாகுமரி
”அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே.?
இதற்கெல்லாம் புளகாங்கிதப்படும் மனநிலையை மக்கள் கடந்துவிட்டனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் சென்ற ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு உள்ளது. தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்ததை யாவரும்பார்த்தோம். அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள்.
என்ன ஆச்சு? அவர்கள் தந்த விசாரணை அறிக்கையே வெளியிடபடாமல் – முழு அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்துவிட்டு, பூச்சு வேலை மட்டும் தான் பிரச்சினையாம் மற்றபடி ஒன்றுமில்லை என சமாளித்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் அதை வாங்கி அம்பலப்படுத்தி உள்ளது அறப்போர் இயக்கம். இவ்வளவு மோசமான கட்டுமானத்திற்கு காரணமான பி.எஸ்.டி நிறுவனத்தையும், அவர்களிடம் கமிஷன் பெற்ற ஒ.பி.எஸ்சையும் காப்பாற்றி வருகிறது இந்த ஆட்சி. அதே போல 2028 கோடி ரேஷன் கொள்முதல் ஊழலிலும் நடவடிக்கை இல்லாமல் அதே கிறிஸ்டி நிறுவனம் இந்த ஆட்சியின் டெண்டர்களிலும் பங்கு பெற முடிகிறது!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்த உச்சபட்ச ஊழலை மருத்துவத் துறையில் செய்தார். குட்கா வழக்கிலும் சம்பந்தப்பட்டவர். அவர் வீட்டில் நடந்தது ரெய்டு.
வில்லங்கமான வேலுமணி உள்ளாட்சித் துறையில் அராஜமாக ஊழலை அரங்கேற்றியவர். அவர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இப்படி எத்தனையோ ரெய்டுகள் நடந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே ரெய்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தற்போது பிரைடு ஷோ காட்டி கெத்தாக வலம் வருகின்றனரே! ரெய்டு விஷயத்தில் ஸ்டாலினுக்கு கெய்டாக இருப்பார் போல மோடி!
நடவடிக்கை எடுக்கப்படாத ரெய்டுகள் ஆட்சியாளர்களால் செய்யப்படும் மறைமுக பிளாக்மெயிலாகத் தான் புரிந்து கொள்ளப்படும்! தண்டிக்க மறுக்கும் அரசும், தப்பித்து செல்லும் ஊழல்வாதிகளும் சமீப காலத்திய சாபக்கேடு!
ஆகவே, ஊழல்வாதிகளை இந்த ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் பொய்த்துக் கொண்டே வருகிறது. நேர்மைத் திறமின்றி அமைக்கப்படும் விசாரணை கமிஷன்களெல்லாம் வீழலுக்கு இறைத்த நீரே!
வி.ஜானகிராமன், மயிலாப்பூர், சென்னை
உங்களைச் சிலர் நடுநிலை பத்திரிகையாளர் என்று நம்புகிறார்கள்! அது உண்மை என்றால், மனசாட்சியுடன் சொல்லுங்கள் ஜெய்பீம்மில் 40 கோடி வியாபாரம் பார்த்திருக்கும் சூர்யா அந்த கதைக்கு சொந்தமான பார்வதியம்மாவிற்கு வெறும் 15 லட்சம் தந்தது ஏற்புடையதா?
இதைத் தான் மாரிதாஸ் போன்ற பாஜக ஆதரவு சனாதனக் கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஜெய்பீம் படம் வருவதற்கு முன்பு வரை பார்வதி அம்மாவையோ அவர் நீதி கேட்டு நடத்திய நீண்ட போராட்டத்தையோ அதன் வலியையோ, அதில் அவர் தன் மானத்துடன் சோரம் போகாமல் இருந்த நிகழ்வையோ யாரும் அறிந்திருக்கவில்லை. ஜெய்பீம் படத்தால் தான் அவை உலகிற்கே தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு மரியாதையும், புகழும், பல்வேறு உதவிகளும் கிடைக்கிறது. ஜெய்பீம் படத்தை சினிமாவாக எடுக்கும் தைரியமும், அறநோக்கும் இருந்ததால் மட்டுமே இவையாவும் சாத்தியமானது. இந்தக் கலைப்படைப்பு அதையும் கடந்து அரசாங்க அளவிலும் பல அதிர்வுகளை உருவாக்கி பழங்குடியினர், குறவர் இன மக்களின் வாழ்வில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிஜத்தில் சாத்தியப்படுத்தி உள்ளது. இந்த நல் விளைவுகளுக்கெல்லாம் விலை மதிப்பிட முடியுமா?
எல்லா நல்ல முயற்சிகளையும் வெறும் பொருளாதார அளவு கொண்டு மதிப்பிடக் கூடாது. கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சியை பற்றி அற்புதமான படமெடுத்து நஷ்டப்பட்டார் பி.ஆர்.பந்துலு. அதன் மூலம் காலாகாலத்திற்கும் வ.உ.சிதம்பரனாரை நம் மனத்தில் ஆழமாக விதைத்துச் சென்றார். அது போல, எளிய பழங்குடியினரை சமத்துவமாக நடத்த வேண்டும் என்பதை படம் ஆழமாக மக்கள் மனங்களில் பதிய வைத்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த சமூகமே அந்த கலைபடைப்பு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைபட்டுள்ளது! இந்த புரிதல் இடதுசாரிகள் உள்ளிட்ட சமூக தளத்தில் நல்ல எண்ணம் கொண்ட அனைவருக்குமே உள்ளது.
இதையெல்லாம் கடந்து படம் வெளியாகும் முன்பே பழங்குடியினர் நலனுக்கு ஒரு கோடி நன்கொடை சூர்யா வழங்கினார். தற்போது, பார்வதி அம்மாளுக்கு 15 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. பட வியாபாரம் பற்றிய தகவல்கள் எனக்கு தெரியாது. ஆனால், வெற்றி கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலையில் ரிஸ்க் எடுத்து தயாரிக்கப்பட்ட அந்தப் படம் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது! பல தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகை, துணை நடிகர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. படம் பார்த்த மக்கள் மனங்களில் அறச் சீற்றத்தையும், எளியோரை அரவணைக்கும் சிந்தனைகளையும் விதைத்துள்ளது.
அதிகார வர்க்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட இது போன்ற பல சம்பவங்கள் உள்ளன!
வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பழங்குடியின பெண்கள் கதை!
சிதம்பரம் பத்மினி கணவனையும் இழந்து கொடூரமாக கற்பழிக்கப்பட்ட கதை,
தேனி சிலுவம்பட்டி குருவம்மாள் சிதைப்பட்ட கொடுமை,
திருக்கோவிலூரில் நான்கு பழங்குடியினப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு போராடிய கதை..!
இதில் எது ஒன்றையேனும் நேர்மையாக படம் எடுக்கட்டுமே இவர்கள்! முதலில் படம் எடுக்க துணிவுண்டா இவர்களுக்கு? அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் நிஜத்தில் குரல் கொடுத்து பழக்கப்பட்ட சனாதன சக்திகளின் துர்பிரச்சாரத்திற்கு இரையாகாதீர். அவர்கள் நன்மைக்கு ஆதரவாக ஒரு துரும்பை கூட எடுத்துப் போடக் கூட துப்பில்லாதவர்கள்!
எஸ். அப்துல் ரகுமான், வேலூர்
நீதித் துறையினரின் எதிர்ப்பு, வழக்கறிஞர்கள் எதிர்ப்பு, தமிழக மக்களின் எதிர்ப்பு ஆகிய அனைத்தையும் மீறி தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மேகலாயாவிற்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளாரே?
இது நீதிக்கு கிடைத்த தண்டனை!
நீதிபதிகள் இட மாற்றங்களையோ, நியமனங்களையோ மத்திய அரசு செய்ய அதிகாரமில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கொலிஜியத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த அதிகாரத்தை ஆட்டுவிக்கும் அதிகாரம் மத்திய அரசு வசம் போய்விட்டது தான் நீதிபதி சந்தீப் பானர்ஜி விவகாரத்தில் மட்டுமல்ல, நீதிபதிகள் தாகில்ரமனி, ஜெயந்த் பட்டீல் விவகாரங்களிலும் நமக்கு கிடைக்கும் விடை!
எஸ்.பரமேஷ்வரி, கோவில்பட்டி
நல்லம்ம நாயுடுவின் மறைவு குறித்து?
அநீதிகளுக்கு அஞ்சாத ஜெயலலிதாவின் ஊழல்களை அச்சமின்றி, தடங்கல்கள் பலவற்றை தாங்கி வெளிக் கொணர்ந்தவர். நல்லம்ம நாயுவின் முயற்சி இல்லாவிட்டால், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதற்கான முகாந்திரமோ, ஆதாரமோ அமைந்திருக்காது. இதுவே, ஜெயலலிதாவிற்கு பதில் கருணாநிதி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட காரணமாக நல்லம்ம நாயுடு இருந்திருப்பாரென்றால், அவரது நேர்மையும், துணிவும் அகில இந்திய அளவில் கொண்டு சென்று புகழப்பட்டிருக்கும் என்பது உண்மை! அவரை புரிந்து கொள்ள ‘என் கடமை, ஊழல் ஒழிக’ நூலை படியுங்கள்.
மு.ராகவன், வந்தவாசி
தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதி கேட்டுள்ளாரே சிவசங்கர் பாபா?
இப்படி கேட்கும் தைரியம் இந்த கிரிமினலுக்கு எப்படி வந்தது?
சிவசங்கர் பாபா செய்த குற்றங்களில் பத்தில் ஒரு பங்கை யாரேனும் செய்திருந்தால் கூட அவர்கள் வழுக்கி விழுந்து கை,கால்கள் முறைந்ததாக கட்டு போடப்பட்டிருக்காதா? லாகப்பிலேயே லாடம் கட்டப்பட்டு இருக்காதா? விசாரணையை விரைவாக முடித்து தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனையோ பெற வேண்டியவர் சலுகைகள் கேட்பதா? கடுமையான கிரிமினல் குற்றவாளிகளில் வசதி படைத்தவருக்கு ஒரு நியாயம்? வசதி இல்லாதவனுக்கு ஒரு நியாயம் வழங்கக் கூடாது.
வி.பரமசிவம், திருவொட்டியூர், திருவள்ளுர்
இந்திய பிரதமர் மோடி முதியோர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வங்கியில் சேர்த்திருக்கும் சேமிப்பு கணக்கின் வட்டியைஅநியாயமாக குறைத்துக்கொண்டே செல்கிறாரே.இதற்கும் விடிவு காலம் இல்லையா?என்னைப் போன்ற முதியோர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
மக்கள் தங்கள் சேமிப்பை இனியும் ஏன் அரசு வங்கிகளில் போட வேண்டும்? என்று யோசிக்கவும், அவர்களை தனியார் வங்கிக்கு மடைமாற்றம் செய்வதற்குமான ஏற்பாடே வட்டி குறைப்பு!
Also read
தயாளன், தாம்பரம்,சென்னை
தமிழகம், கேரளாவைப் போல வட இந்திய மக்கள் அரசியலைப் பற்றி பேசுவதில்லையா..?
அரசியல் விழிப்புணர்வில் தமிழகமும், கேரளமும் வட இந்திய மக்களைக் காட்டிலும் பல மடங்கு முன்னேறி உள்ளது.மேற்குவங்கத்திலும் அரசியல் விழிப்புணர்வு அதிகம். துளசிதாசரின் கண்மூடித்தனமான ராமர் பக்தியில் மூழ்கடிக்கப்பட்ட வட இந்தியா, இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கிறது.
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.
//வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பழங்குடியின பெண்கள் கதை!
சிதம்பரம் பத்மினி கணவனையும் இழந்து கொடூரமாக கற்பழிக்கப்பட்ட கதை,
தேனி சிலுவம்பட்டி குருவம்மாள் சிதைப்பட்ட கொடுமை,
திருக்கோவிலூரில் நான்கு பழங்குடியினப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு போராடிய கதை..!
இதில் எது ஒன்றையேனும் நேர்மையாக படம் எடுக்கட்டுமே இவர்கள்! //