என்ன அண்டர்ஸ்டாண்டிங்? ஒபி.எஸ்சுக்கும், ஸ்டாலினுக்கும்!

- சாவித்திரி கண்ணன்

”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினரின் ஊழல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசினார்! உச்சபட்ச ஊழல்களில் திளைத்த அதிமுக ஆட்சி மீது விரக்தியில் இருந்த தமிழக மக்கள் ‘கண்டிப்பாக இந்த ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்!

ஸ்டாலின் கூறிய வாக்குறுதிகளை நம்பி சமூக ஆர்வலர்களும், அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட நேர்மையாளர்களும், அந்தந்த ஏரியாவில் வாழும் மக்கள் சிலரும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகுந்த ஆதாரங்களைத் திரட்டி புகார்கள் தந்தனர்! இப்படியாக நாளும்,பொழுதும் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார்கள் குவிந்துள்ளன!

இந்த வகையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி பால்வளத் துறையில் அடித்த பகல் கொள்ளைகளை பட்டியலிட்டு புகார் கொடுத்தார் பால்முகவர் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி! பரம ஏழைகளாக வாழும் பால் விவசாயிகள் கட்டுப்படியாகாத விலைக்கு பால் கறந்து கொடுத்து விட்டு, அதற்கான பணத்திற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் நிலையில், பல நூறு கோடியை ஈவு இரக்கமின்றி கொள்ளையடித்துவிட்டு, இன்னும் அதிகார தோரணையில் ”என் மீது யாராவது புகார் சொன்னால் தொலைத்துவிடுவேன்” என்று ராஜேந்திர பாலாஜி வலம் வந்து கொண்டிருக்கிறார்!

அதே போல மின்சாரத்துறைக்கே ஷாக் கொடுக்கும் வகையில் வரலாறு காணாதவிதமாக கொள்ளையடித்துவிட்டு அத் துறையை சுமார் ஒன்றரை லட்சம் கோடி நஷ்டத்தில் தள்ளிய தங்கமணி மீது சமூக ஆர்வலரும், அத்துறையின் ஓய்வு பெற்ற ஊழியரான எஸ்.ஏ.காந்தி தெளிவாக புகார்கள் தெரிவித்தார். தங்கமணியும் தற்போது தகதகவென்று வலம் வந்து கொண்டுள்ளார்.

நான் இங்கே தெரிவித்து இருப்பவை சில உதாரணங்களே! முன்னாள் மாஜிக்கள், அதிகாரிகள், அதிமுகவினர் மீதான பல புகார்கள் ஏனோ இது வரைகிணற்றில் போட்ட கல்லாக உள்ளன! ஊழல் செய்த சென்ற ஆட்சியாளர்கள் மிகப் பாதுகாப்பாக தங்களை உணர்வதாகத் தெரிகிறது.

மேற்படி விவகாரங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் ஒ.பி.எஸ் மீது ஆயிரம் கோடியை விஞ்சும் மிக ஆதாரமான பல புகார்கள் சி.எம்.டி.ஏ வில் அவர் செய்தது தெரிய வந்தும் சைலண்ட் மூடில் இருக்கிறது திமுக அரசு! குறிப்பாக புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி கட்டிட விவகாரத்தில் ஐ.ஐ.டி ஆய்வு அறிக்கை வந்த பிறகு அதை வெளியிடாமல் மறைத்தது பற்றி எல்லாம் நேற்றைய அறம் இதழில் எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரை வெளியான நேரத்தில், நேற்று தேனி மாவட்டம் உப்பார்பட்டியைச் சேர்ந்த பி.ஞானராஜன் என்பவர் பல ஆதாரங்களை திரட்டித் தந்து 217 பக்கத்திற்கு விலாவாரியாக விளக்கி புகார் தந்திருந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது!

அவர் தனது புகாரில் ஒ.பி.எஸ்சும், அவரது உதவியாளர் அன்னபிகரகாசம் மற்றும் ஒ.பி.எஸ் உறவினர்களும் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் சுமார் 500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள கிராவல் மணலை எடுத்துள்ளனர். அத்துடன் இந்த அரசு நிலத்தையே தனியார் சொத்தாக்கியும் விட்டனர். இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பாதிப்புகள் ஆகியவற்றையும் அவர் கவனப்படுத்தி இருந்தார்! இவர் மட்டுமல்ல, தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் ஒ.பி.எஸ் குடும்பத்தின் பல ஆயிரம் ஏக்கர்கள் நில ஆக்கிரமிப்பு குறித்து ஏகப்பட்ட புகார்களை தந்துள்ளனர்! பூவில் தேனை உறிஞ்சும் ராட்ஸச தேனீயைப்  போல தேனீ மாவட்டத்தையே உறிஞ்சி கொழுத்துள்ள ஒ.பி.எஸ் குடும்பம் தற்போதும் அங்கு சர்வ அதிகாரங்களுடன் வலம் வருவதாக சொல்லப்படுகிறது!

லஞ்ச ஒழிப்புத் துறை தானே முன்வந்து முன்னாள் மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை தேடி கண்டடைய வேண்டும். வழக்கு தொடுத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தான் அவர்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது! அல்லது தங்களுக்கு மக்கள் தாங்களாகவே திரட்டி தந்துள்ள தகவல்களின் அடிப்படையிலாவது வழக்கு பதிந்து ஆரம்பகட்ட விசாரணையாவது நடத்தி இருக்க வேண்டும்! எதையும் செய்யாமல் வாளாயிருந்தால் என்ன அர்த்தம்…?  ஆகவே, பொறுத்துப் பார்த்த ஞானராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டார்.

வழக்கு வந்துள்ளதே நீதிபதி அழைத்து கேட்பாரே அதற்கு முன்பாவது ஒரு வழக்கை பதிந்து ஆரம்பகட்ட விசாரணையை ஆரம்பிப்போம் என்ற அளவுக்குக் கூட இறங்கிவரத் தயாரற்ற நிலையில் தான் லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு வேளை இந்த அரசானது, ”உங்க வேலையே இனி ஊழல்களை ஒழிப்பதல்ல, ஒளித்து வைப்பதே” என்று சொல்லிவிட்டதா என்ன?

அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த குற்றவுணர்வும் இன்றி நீதிமன்றத்தில், ”மனுதாரரின் புகார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறியதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மனுதாரரே, அந்த புகாரை ஆணையருக்கு அனுப்பிய பிறகு அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படாமலும்,,வழக்கு பதியப்படாமலும் காலம் தாழ்த்துவதன் காரணம் என்ன? லஞ்ச ஒழிப்புத் துறையின் கைகளை கட்டிப் போட்டு இருப்பது யார்? இது போல எத்தனை புகார்களை கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுள்ளனர்…?

சமூக ஆர்வலர்கள் அல்லது இயக்கங்கள் யாராவது அடுத்தகட்டமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடந்த ஆறு மாதங்களாக வந்த புகார்கள் என்னென்ன? அவற்றில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..? காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணங்கள் என்ன? என கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றால் நன்றாக இருக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time