குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சில தினங்களுக்கு முன் லெப்டினன்ட் கர்னல் சஜ்ஜாத்திற்கு பதம்ஷீ பட்டம் வழங்கினார். இவரின் விவரங்கள் தெரிந்த போது பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். சுமார் 50 ஆண்டுகள் பாகிஸ்தானால் தேடப்பட்டு வரும் இவருக்கு இப்படி பகிரங்கமாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி இவர் செய்த செயல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள சரித்திரத்தின் பக்கங்களை புரட்டுவோம்.
பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் காசி சஜ்ஜாத் அலி ஜாஹிருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஷீ விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு வீரருக்கு நம் நாட்டில் பாராட்டு மழையா? அது எப்படி சாத்தியம் என்று நமக்கு தோன்றும். பாகிஸ்தானின் உயரிய பதவியில் இருந்த இராணுவ அதிகாரியான இவர் இந்தியாவின் உளவுத் துறையோடு கைகோர்த்த சம்பவம் நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?
இந்தியா பாகிஸ்தான் பிரிந்த பொழுது பாகிஸ்தான் இரண்டு பகுதிகளாக தனி தனியாக இருந்து செயல்பட்டது. பஞ்சாப் ஒட்டி இருக்கும் இடம் பாகிஸ்தான் என்றும், தற்போது பங்களாதேஷ் இருக்கும் பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது. இதில் வங்காள மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். ஆகவே, பாகிஸ்தானின் கொடும் கரங்களில் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என பங்களாதேஷ் மக்கள் போராடினார்கள். அவர்கள் மத்தியில் இனப் படுகொலைகளை அரங்கேற்றியது பாகிஸ்தான். தங்கள் உரிமைகள் காக்கப் படவேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலை போரை தொடங்கினார்கள். பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும், கிழக்கு பாகிஸ்தான் போராளிகளுக்கும் போர் நடந்தது. இதில் சுமார் 80,000 பாகிஸ்தான் இராணுவப்படை வீரர்கள் வங்க மக்களைப் கொடூரமாக படுகொலை செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கொலை செய்யப்பட்டு, பல குடும்பங்களில் இருந்து இளம் பெண்கள் கடத்தி செல்லப்பட்டு ஈவு இரக்கமின்றி கற்பழிக்கப்பட்டார்கள். துயரத்தில் இருந்த மக்கள் இந்தியாவை நோக்கி வர ஆரம்பித்தனர். ஆனால் எவ்வளவு பேரை இந்தியாவால் ஆதரிக்க முடியும்? இதற்கு தீர்வு பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டுவது என்று தீர்மானித்து அந்த பணிகளை துரிதபடுத்தியது இந்தியா. இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மனித நேய அடிப்படையில் வங்கதேச விடுதலைப் போருக்கு முழு ஆதரவு கொடுத்தார்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து குண்டுகள் வீசத் தொடங்கின. 13 நாட்கள் கடுமையாக நடந்த இந்த போரின் முடிவில், டாக்காவில் இருக்கும் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தார்கள். ஆக சுபமான முடிவாக கிழக்கு பாகிஸ்தான், வங்காளதேசமாக உருவானது. இது தான் வரலாறு.
1971ல் நடந்த இந்த மாபெரும் யுத்ததில் பாகிஸ்தான் தரப்பில் இருந்தவர் தான் லெப்டினன்ட் கர்னல் குவாசி சஜ்ஜாத் அலி ஜாஹிர். சியால்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். 22 வயது இளம் அதிகாரியான இவர் மிகவும் புத்திசாலி, எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்ளும் திறமை இவரிடம் இருந்தது. நடந்தவைகள் அனைத்தையும் மிக துல்லியமாக நினைவில் வைத்துக்கொள்ளும் photogenic memory இவரிடம் அபாரமாக இருந்தது.
Map readingகிலும் இவர் ஒரு வல்லுனராக திகழ்ந்தார். அறிமுகமில்லாத நிலப்பரப்பில் ஒரு வழியைப் பின்தொடர்ந்து செல்வது அதுவும் இரவு வேளையில் செல்வதை night navigation என்று சொல்வார்கள். இது இராணுவ பயிற்சியில் முக்கிய அம்சம். இது அவருக்கு கை வந்த கலையாக இருந்தது. இப்படி பல திறமைகளை வைத்திருந்த இந்த இளம் அதிகாரியின் மனதில் பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவம் செய்த அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும், இனபடுகொலைகளையும் பார்த்து இவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. இப்பொழுது அவர் முடிவெடுக்க வேண்டிய் கட்டாயத்தில் இருந்தார். ஒரு பக்கம் இவருக்கு நல்ல வளர்ச்சியும், சுகமான வாழ்க்கையும் இராணுவத்தில் நல்ல பதவியும், மரியாதையும் இருந்தது! மறுபக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக முடிவு எடுப்பதன் மூலம் தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியாத இருண்ட நிலை! இருந்த போதும் வங்காள மக்கள் படும் துன்பத்தை மன கண் முன் கொண்டு வந்து மனித பேரழிவுகளை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில் இரண்டாவது வழியை தேர்வு செய்தார். தனது வளமான எதிர்காலத்தை தூக்கி எறிந்து திக்கு தெரியாத இந்திய தேசத்தை நோக்கி வர முடிவு செய்தார்.
இந்திய அரசு ஒரு பாகிஸ்தான் வீரனான தன்னை நம்புமா? தான் சொல்லுவதை மதிக்குமா? தன்னை மரியாதையோடு நடத்துமா? என பல சந்தேகங்களுக்கு இடையிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பங்களாதேஷ் மக்களை காப்பாற்றுவதற்கு இந்தியாவை நாடுவதே ஒரே வழி என அவர் திடாமான முடிவுக்கு வந்தார்!
பாகிஸ்தான் இராணுவம் சம்மந்தமான முக்கிய ஆவணங்களை சேகரிக்க தொடங்கினார். அவர்களிடம் உள்ள இராணுவ tank கள், படை அணிவகுப்புகள், வெடிமருந்து கிடங்குகள், ஹெலிகாப்டர் pads பற்றிய இரகசிய தகவல்கள் என்று அவரால் என்ன வெல்லாம் முடியுமோ அனைத்து ஆவணங்களையும் திரட்டினார். பிறகு அனைத்தையும் தனது பூட்ஸில் வைத்து மறைத்துக்கொண்டு ஆபத்துகள் பெரியதாக இல்லாத ஒரு வழியை தேர்வு செய்து ஜம்மு எல்லை நோக்கி இரவு பகல் பாராமல் பல நாட்கள் நடந்து வந்தார். அப்பொழுது அவருடைய ஷர்ட் பாக்கெட்டில் இருந்தது வெறும் 20 ரூபாய் தான். இரண்டு பக்கமும் பயங்கரமாக மாறி மாறி குண்டு முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அதற்கு நடுவில் எப்படியோ தப்பித்து இந்திய எல்லை பகுதிக்குள் வந்து சேர்ந்தார் சஜ்ஜாத்அலி ஜாஹிர். இருப்பினும் இந்திய இராணுவம் இவரை நம்புவதற்கு தயாராக இல்லை.
இவர் பாகிஸ்தானின் உளவாளியாக இருக்கலாம் என்று நினைத்தனர். கொஞ்சமும் சலிக்காமல் தைரியமாகவும், தெளிவாகவும், தன்னுடைய எண்ணத்தை எடுத்துக்கூறி தன்னிடம் இருக்கும் ஆவணங்களை எல்லாம் கொடுத்து வங்கதேசத்தை விடுவியுங்கள் என்று மன்றாடியிருக்கிறார் சஜ்ஜாத் அலி ஜாஹிர். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய இராணுவம் இவரை டெல்லிக்கு அனுப்பிவைத்தது. டில்லியில் பல மூத்த இராணுவ வீரர்களுடன் உரையாடி, அவர்களுடன் கை கோர்த்து இந்திய உளவுத்துறைக்கு பல முக்கிய தகவல்களை கொடுத்திருக்கிறார் ஜாஹீர்.
அதன் பிறகு அவர் இந்தியாவிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் சென்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் வங்கதேசத்தின் முக்தி பாஹினி என்னும் கொரில்லா படைக்கு பயிற்சி அளித்தார். இந்த கொரில்லா படையும், இந்திய இராணுவத்தோடு இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட்டது. போரின் போது பல முக்கிய ஆபரேஷன்களில் இவரை உடன் அழைத்து சென்றிருக்கிறது இந்திய இராணுவம். போர் களத்தில் காயம் பட்ட பல வீரர்களையும், உயிர் நீத்தவர்களின் சடலங்களையும் தனது இரு கைகளில் தூக்கி சுமந்தார்.
தன்னுடைய தாய் நாடாகவே இருந்தாலும் தவறு நடக்கிறது என்று தெரிந்த உடன் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்து நியாத்தின் பக்கம் நின்றார். அதற்கு பிரதிபலனாக அவருடைய தாய் நாட்டில் அவரை துரோகி என்று அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள். அந்த தண்டனைகள் யாவும் தனக்கு கிடைத்த badge of honours என்று பெருமிதத்தோடு கூறுகிறார் சஜ்ஜாத்அலி ஜாஹிர்.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இவர் வாழ்க்கை கதை என்பது ஒரு இராணுவ வீரன் விடுதலை போராட்ட வீரனாக மாறிய கதை தான்!
இந்த வருடம் 50வது பொன் விழா கொண்டாடிய வங்காளதேசம், இவருக்கு நாட்டின் மிக உயரிய விருதை தந்து கெளரவித்த போது, அதன் விடுதலை போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களையும் சேர்த்தே கௌரவித்தது உலக வரலாற்றில் இது வரை நடைபெறாத சம்பவம். ஒரு நாடு மற்றொரு நாட்டின் இராணுவ படையின் உயிர் நீத்த தியாகிகளை பாராட்டி கௌரவிப்பது என்பது எங்குமே நடந்ததில்லை அது நடப்பதற்கும் காரணமாக இருந்தவர் சஜ்ஜாத்அலி ஜாஹிர். இளைஞர்களை, மாணவர்களை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட சஜ்ஜாத் 58 நூல்களை எழுதியுள்ளார். வங்கதேச தொலைகாட்சியில் நாட்டுபற்றை விதைக்கும் நல்ல தொடர்களையும் தந்துள்ளவர்.
Also read
டிசம்பர் மாதம் 16ம் தேதி பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 93,000 பேர் நம்மிடையே சரணடைந்த தினம் ஆகையால் விஜய் திவஸ் என்ற பெயரில் இந்த தினத்தை நினைவு கூர்ந்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, வெற்றி தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். அடுத்த மாதம் விஜய் திவஸின் பொன் விழா கொண்டாட்டம் நடைபெறப் போவது குறிப்பிடதக்கது.
50 ஆண்டுகளாக சஜ்ஜாத்தை பாகிஸ்தான் தேடி வருகிறது, அவருக்கு மரண தண்டனையும் விதித்திருக்கிறது. இவர் பேரை கேட்டாலே பாகிஸ்தான் இன்னமும் வெறுப்போடு தான் இருக்கின்றது.பாகிஸ்தானில் துரோகி பட்டம் சூட்டப்பட்ட தேடப்படும் குற்றவாளியான இவர் பங்காளதேஷை பொறுத்த வரை மனித நேயத்தின் மாபெரும் அடையாளமாக பார்க்கப்படுகிறார். எது எப்படி இருந்தாலும் தாய் நாடாகவே இருந்தாலும் மனிதம் எல்லாவற்றையும் விட பெரியது, நியாயமற்ற மானுடப் படுகொலைகளுக்கு உடன்படமாட்டேன் என்று நிரூபித்த சஜ்ஜாத் அலி ஜாஹிர் நம் அனைவருக்குமே ஒரு முன்மாதிரி. ஆகையால், இவருக்கு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது மிகவும் ஏற்புடையதே!
கட்டுரையாளர்; நா.ரதி சித்ரா,
யூ டியூபர், வாகை வனம்
தெரிய வேண்டிய. உண்மைகள் தெளிவான கட்டுரை