ஏரி ஆக்கிரமிப்புகளும்,எதிர்ப்போர் கொலை செய்யப்படுதலும் – தொடரும் போராட்டம்!

அ.வை.தங்கவேல்

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நீர்பிடிப்பு பகுதிகளான ஏரி,குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் அதற்கு அரசே பட்டா தந்து ஆதரிப்பதும் தொடர்கதையாகிவிட்டன!தமிழகத்திலுள்ள முதலைப்பட்டி என்ற சிற்றூரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்கப் போராடிய காரணத்தினால் ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனுமாக இருவரை ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டிக் கொன்றனர்! ஆயினும்,அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்த படு கொலைகளுக்கெல்லாம் அஞ்சாமல் இப்போதும் தொடர்ந்து போராடி வருகிறார். சமூக நலனுக்கான போராளிகளை வெட்டிச் சாய்ப்பதால் பின் வாங்கச் செய்யமுடியாது என்பதற்கு இந்தப் சம்பவம் ஒரு எடுத்துக் காட்டாகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டியிலுள்ள நீர்பிடிப்பு  ஏரி 198.42 ஏக்கர் கொள்ளவு கொண்டதாகும். இதுபடிப்படியாகஆக்கிரமிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டின் யூடிஆர் சர்வேயில் 39.01 ஏக்கர் மட்டுமே ஏரியாகவும்,   90.27 ஏக்கர் தரிசாகவும்,  59.87 ஏக்கர் அரசு விதைப்பண்ணையாகவும்  சுமார் 10 ஏக்கர்  பாதையாகவும் மறுபதிவாகியுள்ளது.

இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால்,ஏரிக் குளங்கள் எல்லாம் உள்ளாட்சிகளின்  நிர்வாகத்திலிருந்து மாநில  பொதுப் பணித்துறை வந்த பிறகு உள்ளூர் மக்களுக்கு ஏரி, குளங்கள் மீதான உரிமை மற்றும் அதிகாரங்கள் பறிபோயின.இதைப் பயன்படுத்தி சமூகவிரோத சக்திகள் அரசியல் செல்வாக்கோடு அதிகாரிகளை சரிக்கட்டி ஏரி நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்துவிடுகின்றனர்! அதற்குத்தோதாக அரசாணைகளும் அவர்களுக்கு உதவுகின்றன!

நீர்நிலைகளை கூறுபோட்ட அரசாணைகள் :-

அரசாணை 168/ 27-003-2000-ஆனது  அரசுக்குப் பயன்படாத நீர்நிலைகளில்  பத்தாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து  வசிப்போருக்குப் பட்டா வழங்கலாம் என்கிறது. அரசாணை 396/23-06-2006 மற்றும் 555/26-08-2006-ஆனது விளைநிலம் இல்லாதோருக்கு நிலம் வழங்க  வழிவகுக்கிறது.

இந்த அரசாணைகளை மையப்படுத்தி சுமார் 1.10 ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு குடியேறிகளுக்கு  வீட்டுமனை பட்டாவாகவும் சுமார் 87 ஏக்கர் ஏரிநிலம் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்தோருக்கு  LandSettlement’D’Formஆகவும் வழங்கப்பட்டுவிட்டன.  இதிலென்ன வேடிக்கை என்றால் UDR பதிவிட்ட 39.01 ஏக்கர் ஏரிநிலத்தில்  மீண்டும் 17 செண்ட் நிலத்தை  ஆக்கிரமிப்பு குடியேறிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. இப்போது 198.42 ஏக்கர்  நீர்ப்பிடிப்பு ஏரி வெறும் 38.84 ஏக்கராகச் சுருங்கிவிட்டது.   ஆக்கிரமிப்பை மதரீதியாய் பாதுகாக்க ஆக்கிரமிப்பாளர்கள் 2016ல்  ஏரிக்கரையில் ஒரு கோயிலை  கட்டிவிட்டனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டு பல்வேறு தீர்ப்புகளால்  உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றத்தாலும் தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வருகின்ற”இயற்கை வளம்”   பாதுகாப்பு மற்றும் மேம்பாடுகளை  ஆட்சியாளர்களும், மற்றவர்களும் செய்யத்தவறும்போது அதைச் செய்து முடிக்க ஆங்காங்கே யாரேனும் ஒருதனி நபரேனும்  முன்வருவது  தவிர்க்க முடியாததாகிறது!

சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுவதும் அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படுவதும் அதன் உச்சக்கட்டமாய்  கொல்லப்படுவதும் நம்மண்ணில் தொடர் கதையாகிவிட்டாலும் போராட்டங்கள் ஓய்வதில்லை!

இரட்டைக் கொலை:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா இனாம்புலியூரைச் சேர்ந்த விவசாயி வீரமலை  இப்பகுதி விவசாயச் சங்கத்தின்உதவியுடன் 2003ல் 198.42 ஏக்கர் ஏரியை மீட்க நீதிமன்றத்தை நாடினார். இதனால்,2004ல் சிறிதளவு  ஆக்கிரமிப்பை அகற்றிய மாவட்ட ஊழல்நிர்வாகம், ஏரி மீட்பை  கிடப்பில் போட்டது.  ஆனால்,விவசாயசங்கம்தொடர்ந்துஅழுத்தம்தந்துவந்தது!இதனால்விவசாய சங்கப்பிரதிநிதிகள்  ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் தாக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து இப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் துணிச்சலாகஏரியை மீட்க முன்வந்தார். அவரது சகோதரரும் ஆக்கிரமிப்பாளர்களால் வெட்டப்பட்டார்.  அதிர்ஷ்டவசமாக பெரும் காயத்துடன் உயிர் தப்பினார்.

அதன்பிறகும் பின்வாங்காமல் மீண்டும்,விவசாயி வீரமலை அவர்கள் தனிநபராய் களம் கண்டார். ஏரியை மீட்க வீரமலை தனது நண்பரும் வழக்கறிஞருமான  ஆனந்தன் என்பவர்   உதவியுடன்   மதுரை  உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தார். இத்துடன் ஏரியை பாதுகாக்கத்  தவறியவர்கள் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கும்  தொடர்ந்தார்.

வேறுவழியின்றி,கடந்த ஆண்டு ஜுலை 25 அன்று ஏரியை அளவிட அதிகாரிகள் வந்தனர். வீரமலை தானே முன்னின்று  எல்லையைச் சுற்றிக் காண்பித்தார். இதனால், ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்  கடும்  கோபமடைந்தனர். வீரமலையை  விட்டுவைத்தால், ஏரிநிலமும் அதற்காக கட்டப்பட்ட கோயிலும் பறிபோய்விடும் என்பதை உணர்ந்த. ஆக்கிரமிப்பாளர்கள் வீரமலையையும்   மகன் நல்லதம்பியையும் அடுத்த நான்காம் நாளன்று (ஜூலை29 ) காலை எட்டு மணிக்கெல்லாம் அவரது சிறு வயது  பேரன் மற்றும் தாய் மற்றும் சகோதரி கண்முன்னே   படுகொலை செய்துவிட்டனர்.

தந்தை மகன் படுகொலையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து Suo mottu வழக்காக விசாரித்தது. கொலையாளிகள் ஆறுபேர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.ஆனால் கரூர் ஆட்சியர் மற்றும்  காவல்துறையின் அலட்சியப் போக்கினால்  கொலையாளிகளின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகிவிட்டது.

நிர்வாக சீர்கேட்டின் உச்சக்கட்டம்:-

கடந்த 20ஆண்டுகளில் மூன்றுமுறை  ஆக்கிரமிப்பை அகற்றி கரையை வலுப்படுத்தியதாக மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.  ஆனால் இப்போதும்  ஏரியில் நீர் தேங்கினால் குடியிருப்புக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஏரியின் வடகிழக்குப் பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டு நீர் தொடர்ந்து வெளியேறி வீணாகிப்போகிறது.

உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடக்கும் இரட்டை கொலை வழக்கில் குண்டர் சட்டத்தை முறையாகப்  பிரயோகிக்காத இவர்களா நம்மண்ணில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப் போகிறார்கள்? இப்போது தெரிகிறதா தமிழகத்தில் தினசரி கொலைகள் தயக்கமின்றி அரங்கேறிவருவது ஏனென்று!

தொடரும் போராட்டம்:-

படுகொலையான வீரமலையின் மகளும் நல்லதம்பியின் சகோதரியுமான அன்னலட்சுமி தற்போது இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார். 198.42 ஏக்கர் ஏரிக்குள் வழங்கபட்ட பட்டாக்களை ரத்துசெய்து ஏரியை மீட்கவும், கரூர் மாவட்ட முதன்மை அமர்வில் நடக்கும்  கொலை வழக்கில் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்   சிவஞானசம்பந்தன்     அவர்களை அரசுத் தரப்பு  சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டியும் மதுரை உயர்நீதிமன்றக்  கிளையில்  வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொலை வழக்கின் இன்றைய நிலை:-

இரட்டை கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த, கூட்டுச் சதியில் ஈடுபட்ட  மற்றும்  ஆயுதங்களைப் பதுக்கி வைத்த நால்வர் பிணையில் வெளியில் வந்துவிட,, கொலையாளிகள் ஆறுபேரின் குண்டர் சட்டம் முடிவுக்கு வந்த போதும், கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை  மட்டுமே நிலுவையில் இருப்பதால்,  ஏரியில்  ஆக்கிரமிப்பு குடியேறிகளை அகற்றுவது  தொடர்பான வழக்கு மற்றும் ஆக்கிரமிப்பு  கோயிலை  அகற்றுவது தொடர்பான வழக்குகள் நிலுவையில்  இருப்பதால் சிறுவன் உட்படச் சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து என்பதை  சுட்டிக்காட்டி  கொலை வழக்கு நடந்துவரும்  கரூர் செசன்ஸ் கோர்ட்டால் ஆறுபேரின்  ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு  சிறையிலேயே உள்ளனர். மேலும் கொலையாளிகள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதையும் செசன்ஸ் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கு விசாரணை COVID19 காரணத்தால் செப்டம்பர்25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளின் ஒவ்வொரு ஜாமின் மனுவிலும் அன்னலட்சுமி அவர்கள் குறுக்கீட்டாளர் asIntervenor மனு தாக்கல் செய்து தனது  எதிர்ப்பை நீதிமன்றத்தில்  பதிவுசெய்துவருகிறார். அதனால்தான் கொலையாளிகள் 13மாதங்களுக்கு மேலாக சிறையிலேயே இருக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.  சென்னை சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கில் காவல்துறையின் கவனக்குறைவால் கொலையாளி  தஷ்வந்த் ஜாமினில் வெளிவந்து தனது தாயையும் கொலை செய்ததை இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.  அதேசமயம் ஒவ்வொரு கொலை வழக்கிலும் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு ஓடமுடியுமா என்னும் கேள்வியையும் உங்கள்முன் வவைக்கிறோம்..

அதிகொடூரமான குற்றத்தில் ஈடுபடுவோருக்கும் மற்றும் கொடுங்குற்றத்தை இயல்பாக கொண்ட குற்றவாளிகளுக்கும் கடுமை காட்டும் வகையில் சட்டத்திருத்தம் வேண்டும். இல்லையேல்  மூன்று வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்டான் நான்கு கொலை செய்தான் எனக் கொலைகாரர்களுக்குப் பட்டம் சூட்டி மகிழ வேண்டியதுதான்.

தார்மீக ஆதரவு:-

குடும்பத் தலைவர்களை எல்லாம் இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் ஏரி மீட்பை  கையிலெடுத்திருக்கும் அன்னலட்சுமியின் துணிச்சல் அசாத்தியமானது. இந்த வழக்கின் மூலம்  நீர்நிலைகளில்  பட்டா இல்லாமல் வசிப்போர்தான் ஆக்கிரமிப்பாளர்கள் என்றில்லாமல்  பட்டா வைத்திருந்தாலும்  ஆக்கிரமிப்பாளர்கள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!  இந்த ஏரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போர் பாரபட்சமின்றி அப்புறப்படுத்தப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது  மட்டுமின்றி கொலையாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதே நமது எண்ணமாகும்..

இக் குடும்பத்திற்கு தொடர்ந்து உதவி இந்த நீர் நிலை மீட்பில் உறுதியாக உடனிருக்கும் சிலரை நினைவு கூறுவதை என் கடமையாகக் கருதுகிறேன். உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை வழிகாட்டியாகக் கொண்ட மக்கள் பாதை பேரியக்கம்,  மற்றும் வழக்கறிஞர்கள்  திரு.சிவஞான சம்பந்தன்,, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் M.L.ரவி,  அ.அருண், , பேரளம் பிரகாஷ்,   சென்னை பொற்கரங்கள் லயன்ஸ் கிளப் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்..

ஒருபுறம் நம்மையெல்லாம் மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம் வீட்டுக்கு வீடு ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் மழைநீரை சேமிக்க சொல்கிற தமிழக அரசு  மறுபுறம் 100 ஏக்கர் 200 ஏக்கர் நீர்நிலைகளை  எல்லாம் பட்டா போடுகிறது என்றால், இதிலிருந்தே நமது ஆட்சியாளர்களின் யோக்கியாதாம்சம் வெளிப்படுகிறது தானே!

அ.வை.தங்கவேல்

திருச்சி மாவட்டம் புத்தனாம் பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக  2011முதல்2016 வரை செயலாற்றியவர். சுங்கச்சாவடிகளை மூடவேண்டும், நதிநீர் வழக்கு, நீட் தேர்வுக்கு எதிரான  வழக்குகஜா புயலில் வீடு இழந்தோருக்கு வீடு வழங்கவேண்டும் , எட்டுவழிச் சாலைக்கு எதிரான வழக்கு,ஜெயலலிதாவின் போயஸ் தோட்டஇல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றக்கூடாது என்பன   உட்பட 20க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தவர்.தான் சார்ந்த கிராமம் உட்பட நான்கு கிராம மக்களின் நிரந்தரத்  தேவைகளை நிறைவேற்ற மூன்று அரசாணைகளைப்  பெற்றவர்.மக்கள் பாதை இயக்கத்தின் நீதித் திட்ட மாநில துணை ஒருங்கிணைப்பாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time