மோடி – அமித்ஷா கூட்டணியின் மூர்க்கமான நகர்வுகளாக அவசர, அவசரமாக இரு சட்டங்கள்! எதற்கு? சி.பி.ஐ அமைப்பை சிதைக்கவும், அமலாக்கத் துறையை அடிமைத் துறையாக்கவும்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க சற்று முன்னதாக அவசர அவசரமாக மோடி-ஷா கூட்டணி இரண்டு அவசர சட்டங்களை நவம்பர் 13ந்தேதி பிறப்பித்துள்ளது.
அமலாக்கப் பிரிவு இயக்குனர், சி பி ஐ இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் தற்போது இரண்டு ஆண்டுகள் என்று இருப்பதை ஒவ்வொரு வருடமாக நீட்டித்து பதவி தொடரச் செய்யவும், அப்படி ஐந்தாண்டுகள் வரை இத்தகைய பணி நீட்டிப்பு வழங்கவுமான அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு வழங்கவும் இந்த இரண்டு அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
உயரதிகாரிகள் பாரபட்சமின்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே – பணியிட மாற்றம், பணி நிரந்தரம் மற்றும் பதவிக்காலம் போன்ற அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் இல்லாமல் – சிபிஐ இயக்குனர் போன்ற உயர் பதவிகளுக்கு இரண்டாண்டுகள் என்ற வரையரையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதை தகர்த்து ஏன் இந்த அவசர கோலம் ?
அமலாக்கப் பிரிவு இயக்குனராக உள்ள சஞ்ஜய் குமார் மிஸ்ரா பதவிக்காலம் தற்போது (நவம்பர் -18, 2021) முடிகிற தருவாயில் அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய சட்டத்தில் இடமில்லை உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்த வழியில்லை. இந்தச் சூழலில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது கவனத்திற்கு உரியது!
இதை அனைத்து எதிர்கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.
பாராளுமன்ற விவாதத்திற்கோ, பரீசீலனைக்கோ வழியில்லாமல் தான்தோன்றித்தனமாக இந்த அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, ஏற்கனவே அரசின் கைப்பாவையாகச் செயல்படும் சி பி ஐ, அமலாக்கப் பிரிவு E.D. உளவுத் துறை, ஆகியவை இனிமேல் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பே இல்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது! தற்போது வரை இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் இந்த அவசர சட்டத்தால் பறிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர்களின் பதவிகாலம் வருடா வருடம் ஒன்றிய அரசின் சம்மதத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்பது, இயக்குனர்கள் ஒன்றிய அரசின் தயவினால்தான் பதவியில் இருக்க, நீடிக்க முடியும் என்பதையே வலியுறுத்துகிறது எனலாம்.
இது, ஆட்சியமைப்புகள் (CB I, E.D.,I.B.,N.I.A. R&A.W. போன்ற அரசு அமைப்புகள்) சட்டத்தின் அடிப்படையில் பாரபட்சமின்றி சுதந்திரமாக செயல்பட உச்ச நீதி மன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் நெறிகாட்டுதல்களை புறந்தள்ளுகிறது. ஜனநாயக நெறிமுறைகளை சீரழிக்கிறது. அவர்களின் சுயத்தன்மையை பறிக்கும் மோசமான நடைமுறைகளுக்கு இந்த அவசர சட்டங்கள் சட்ட அங்கீகாரம் அளிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு அவசரச் சட்டங்களும்- அமலாக்கப் பிரிவிற்காக சி வி சி சட்டதிருத்தம், சி பி ஐ க்காக டெல்லி ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் சட்டதிருத்தம்- தேசநலனை முன்னிட்டே பிறப்பிக்கப்படுகின்றன என்று ஆட்சியாளர்கள் வாய்கிழிய கத்துவது மிகவும் அருவெறுப்பாக உள்ளது. நம்புவதற்குத் தான் ஆளே இல்லை.
சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குனர் பதவிகள் இரண்டாண்டுகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்பது இருக்கின்ற சட்டம் (2003) , இதை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதி மன்றம் அமலாக்கப்பிரிவு இயக்குனர் மிஸ்ராவின் பதவிக்காலத்தை இதற்கு மேல் நீட்டிக்க கூடாது என்று 2003 சட்டத்தை மேற்கோளிட்டு உத்தரவிட்டது.
கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்துவைத்த கதையாக 2003 சட்டத்திற்கே திருத்தம் கொண்டுவந்து அவசர சட்டம் போட்டுள்ளனர் ஆட்சியாளர்கள். நாட்டு நலன் என்று கூறிகொண்டு ஆளுங்கட்சியின் நலனுக்காக, அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்கட்சியினரையம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களயும் குறிவைத்து, அமலாக்கப் பிரிவு வழக்குகள் தொடுப்பதும் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதை எல்லோரும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர்.
எதிர்கட்சியினரை அடிபணிய வைக்கவும், அச்சுறுத்தவும் அமலாக்கப் பிரிவை ஆளும் மோடி- அமித்ஷா கூட்டணி கடந்த ஏழரை ஆண்டுகளாக பயன்படுத்தி உள்ளனர், அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், முலாயம் சிங்யாதவ், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளும், எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளும் பழிவாங்கும், அச்சுறுத்தும் செயலன்றி வேறென்ன?
மேற்கு வங்கத்தில் நிலக்கரி சுரங்க வழக்கு,
கேரளத்தில் தங்கம் இறக்குமதி வழக்கு,
ஹரியானாவில் ராபர்ட்வத்ரா மீதான வழக்கு,
இமாச்சல் பிரதேச வீரபத்ர சிங் வழக்கு
மராட்டியத்தை சேர்ந்த அமைச்சர் அனில் தேஷ்முக் வழக்கு என்று அடுக்கிக் கொண்டே போகலாம், அத்தனை வழக்குகளும் எதிர்கட்சியினர் மீதுதான் , ஆளுங்கட்சியினர் மீது (அவர்கள் மீது ஆணித்தரமான ஆதாரங்களும், குற்றச்சாட்டுகளும் இருந்தாலும்) ஒரு வழக்கு கூட கிடையாது, ஏற்கனவே இருந்தாலும் அவை நீர்த்துப் போக வழிவகுப்பதெல்லாம் அமலாக்கப்பிரிவின் லீலைகள்தான் என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கறிவர்.
அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைகளில் இன்றைய நிலவரப்படி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, ஜனதா தள்(ம), பிஜூ ஜனதா தள், எஸ். பி., பி எஸ் பி, சிவசேனா,திரிணாமுள் காங்கிரஸ், ஆகிய கட்சி பிரமுகர்கள்,தலைவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
சி பி ஐ தயங்கினாலும், சஞ்சய் குமார் மிஸ்ரா இயக்குனராக உள்ள அமலாக்கப்பிரிவு சட்டதிட்டங்கள் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக ரெய்டு நடவடிக்கை, சொத்து முடக்கம் ஆகியவற்றை மணிலான்டரிங் வழக்கு என்பதன்பேரில் அரங்கேற்றம் செய்வதை யாராவது மறுக்க முடியுமா?
சரி, இப்படி தொடுக்கப்படும் வழக்குகள் முறையாக நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளதா?
2005லிருந்து இன்றுவரை அமலாக்கத்துறை 3000க்கும் மேற்பட்ட மணிலான்டரிங் PMLA (ஹவாலா தடுப்பு ) வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 0.04% வழக்குகளில்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வெற்றி பெற்ற வழக்குகள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்பது வெட்கக்கேடான விவரமில்லையா?
இவற்றில் கடந்த ஏழாண்டுகளின் பங்கு 90% மேலாகும். இதுதான் அமலாக்கப்பிரிவின் நடத்தை லட்சணம்! இதன் தலைவர்தான் சஞ்சீப் குமார் மிஸ்ரா! இவருக்குதான் பதவி நீட்டிப்பு! இதற்காகதான் அவசர சட்டம்!
இத்தனை பொய்வழக்குகளா? அல்லது பேரம் பேசியதால் நிருபிக்க அவசியமின்றி கைவிட்டீர்களா..?
ஒருமுறை குற்ற நடைமுறை மூலம் வழக்கு தீர்க்கப்பட்டால் – குற்றவாளி என்றோ நிரபராதி என்றோ தீர்ப்பாகிவிட்டால் – அவ்வழக்குகளால் ஆளுங்கட்சிக்கு கிடைக்கும் ஆதாயம் முடிவுக்கு வந்து விடும் . ஆனால் இழுத்தடிக்கப்படும் வழக்குகளால், முடிக்கப்படாத வழக்குகளால் ஆளுங்கட்சிக்கு அரசியல் லாபம் அதிகம் (என்பதால்) அமலாக்கப்பிரிவு வழக்குகளை அதிரடியாக ஆரம்பித்து பின் அதை முழுமையாக முடிக்காமல் இழுத்தடிப்பதன் நோக்கம் இதுதான்!
பணியிட மாற்றம், பணி நிரந்தரம் மற்றும் பதவிக்காலம் போன்ற அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் இல்லாமல் உயரதிகாரிகள் பாரபட்சமின்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே சிபிஐ இயக்குனர் போன்ற உயர் பதவிகளுக்கு இரண்டாண்டு காலம் என்ற வரையரையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால் அதையும் மீறி சிபிஐ, இ.டி, ஐ பி, என்.ஐ.ஏ. போன்ற துறைகளை தன் இரும்புபிடியின் கீழ் வைத்துள்ள இன்றைய ஆட்சியாளர்கள் இந்த அவசர சட்டம்மூலம் தனது ஆதிக்கத்தை 2024 வரையிலும் ஏன் அதற்கு மேலும் நீட்டிக்க, நிலைநாட்டிக் கொள்ள இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.
ரபேல் முறைகேடு விவகாரத்தில் மொரீஷியஸ் அரசு சுஷீல் குப்தாவிடம் கைப்பற்றிய ஆவணங்களை இந்திய அமலாக்கப்பிரிவிடம் 2018ம் ஆண்டே கொடுத்தாலும், அதைப்பற்றி மூச்சு விடாமல் ஆளுங் கும்பலை காப்பாற்றும் நோக்கத்தில் இன்று வரை வழக்கு எதுவும் தொடுக்காமலிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களின் அ நீதியான நகர்வுகளுக்கு இணங்க மறுத்த சிபிஐ மீதே (அலோக் வர்மா பதவி பறிக்கப்படுமுன்) ரெய்டு நடத்திய டெல்லி போலீசும் , நேர்மையாளரான அன்றைய சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை இரவோடிரவாக பந்தாடியதும் நமக்கு உணர்த்துவது என்ன?
இன்றைய ஆட்சியாளர்களிடம் நேர்மையோ, நியாயத்தையோ எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பு போன்றதுதான் . ஜனநாயக வழிமுறையும் அரசியலில் அனைவருக்கும் சம வாய்ப்பளித்தலும் அருகி வரும் வேளையில் பெகாசஸ் விவகாரத்தில் முழுமையாக அம்பலப்பட்டு மாட்டிக்கொண்ட ஆளுங்கட்சி தலைமை அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு, அனைத்து தர மக்களிடமிருந்தும் முரண்பட்ட நிலையில் மதவெறி என்ற ஆயுதத்துடன் மக்களை பிரித்தாளுதல் மூலம் தன் ஆதிக்கத்தை நீட்டிக்க முனைகின்றர். அதறகு பக்கபலமாக அதிகாரமையங்களில் தங்களுக்கு சேவகம் செய்வோரை இருத்த முயற்சிப்பதன் விளைவே இந்த அவசர சட்டங்கள். இவ்வளவு அப்பட்டமான அதிகார வெறியை வெளிக்காட்டுவதும் ஒரு உத்திதான். விடப்பட்ட எச்சரிக்கை யாருக்கு?
ஆனால் ஒரேயொரு சன்னக்குரல் இந்த அக்கிரமத்தை நியாயப்படுத்தி தேவையான சீர்திருத்தம், சரியான தருணத்தில் வந்துள்ளது என்று கூறுகிறது. இக்குரலின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல, முன்னாள் சிபிஐ இயக்குனர் ஆர்.கே. இராகவன் தான்.
இஸ்லாமியப் படுகொலைகள் அரங்கேறிய குஜராத் கலவரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தவர்தான் இந்த ராகவன். அப்போதைய குஜராத் முதல்வராக மோடியை விசாரிக்காமலே, சஞ்சீவ் பட் போன்ற மிக நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகளின் வாக்குமூலங்களை எல்லாம் புறந்தள்ளி மோடிக்கு அநீதியாக நற்சாட்சி பத்திரம் வழங்கியவர்! இவருடைய இந்தச் செயலை மறுஆய்வு செய்ய அன்றே உச்ச நீதி மன்றம் மூத்த வழக்கறிஞரான ராஜூ ராமச்சந்திரன் தலைமையில் ஒரு மறு ஆய்வறிக்கைக்கு உத்தரவிட்டது. இன்றும் எஸ் ஐ டி யின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது!
Also read
நற்சான்று கொடுத்தற்கான பரிசு ராகவனுக்கு கிடைத்தது 2017ல் . சைப்ரஸ் நாட்டிற்கான இந்திய ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டார். ‘இவாள் ‘ ‘பெரியவாளால் ‘ பெற்ற அனுகூலத்தை அடுத்து, மோடியிடம் பரிசு பெற்று ஹை கமிஷனரான ராகவன் , இந்த அவசர சட்டத்தின் மூலம்”நீண்ட காலம் பணியில் இருப்பதால் சிறப்பாக அதிகாரிகள் செயல்பட முடியும்” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் இந்து ஆங்கில பத்திரிக்கையில்!
வேலிக்கு ஓணான் சாட்சி கூறுகிறது!
வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியது போல இதையும் வாபஸ் பெற வைக்கும் காலம் தொலைவில் இல்லை!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
Leave a Reply