பேமெண்ட் ஆப்களால் எப்படி இலவச சேவை தரமுடிகிறது?

- செழியன் ஜானகிராமன்

Gpay, Paytm, Phonepe, Amazon Pay போன்ற பணப் பரிவர்த்தனை ஆப்கள்  போட்டி போட்டுக்கொண்டு இலவசமாக நமக்குச் சேவையைத் தருகின்றன! நாம் என்ன தொகையை அனுப்புகிறோமோ, அதே தொகை அனுப்பியவர்களுக்கு அப்படியே தந்துவிடுகின்றன! அதற்கு நம்மிடம்  இருந்து எந்தவித கட்டணமும்  வாங்குவதில்லை.

இலவச சேவையை எப்படி வழங்குகின்றன, இந்த நிறுவனங்கள்? இதனால் இந்த  நிறுவனங்களுக்கு என்ன லாபம்? முற்றிலும் இலவசம் என்றால், நஷ்டம் வரவே அதிக வாய்ப்பு உண்டு. இந்த ஆப்களை பயன்படுத்தும் நமக்கு இப்படிப் பல கேள்விகள் தோன்றலாம்.

உண்மையில் இவை நமக்கு சும்மா தரவில்லை இந்தச் சேவையை! எப்பொழுதும், எந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களும் எந்த ஒரு சேவையையும், இலவசமாகத் தர மாட்டார்கள் என்பதை  நினைவில் வைத்துக் கொள்வோம்.  அப்படி தருவது போல் இருக்கும், ஆனால், உண்மையில் அதற்குள் நிறைய லாபக் கணக்குகள் இருக்கும்! இல்லையென்றால், லாபகரமாக நிறுவனங்களை எப்படி இவ்வளவு வருடங்கள் நடத்த  முடியும்?

நாம் ஒரு பொருளை தயாரித்தால் அதை சற்று லாபம் வைத்து நேரடியாக விற்பனை செய்வோம். வாங்குபவர் கொடுக்கும் பணத்தில் நமக்கான லாபமும் அடங்கி இருக்கும். இது சாதாரண வியாபாரமுறை. அனைவரும் இப்படித்தான் யோசித்து செயல்படுவோம். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் இதைவிட மேலாக யோசிப்பார்கள்.

உதாரணமாக, சில வருடங்கள் முன்பு 1 GB மொபைல் டேட்டா 200 ரூபாய்க்கு மேல் கொடுத்து ரீச்சார்ஜ் செய்தோம். கொஞ்சம் நேரம் யூடியூபில் படம் பார்த்தால் 1GB காலியாகிவிடும். இப்படி இருந்த நேரத்தில் ஒரு நாளைக்கு 1GB இலவசம் மாதம் 30GB இலவசம், நீங்கள் செய்யும் போன் கால்கள் அனைத்தும் இலவசம் என்று ஜியோ அறிவித்தது. எப்படி இப்படிக் கொடுக்க முடிகிறது என்பதை யோசிப்பதற்கு பதிலாக பெரும்பாலானோர் ஜியோ சிம் வாங்கச் சென்றார்கள். இவைதான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறது. மக்களை யோசிக்க விடமாட்டார்கள். இலவசம் கொடுத்து அதில் கவனம் செய்ய வைத்துவிடுவார்கள்.

ஜியோ வருகையால் மக்களுக்கு இலவசம் ஆனால் ஏர் செல், யூனினார் போன்ற  சிறு மொபைல் நிறுவனங்கள் முற்றிலும் அழிந்தேவிட்டது. இதில் அரசு பொதுத்துறை நிறுவனமான BSNL தள்ளாடி விட்டது. அரசு நிறுவனம் என்பதால் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால், ஏர்செல் நிலைமைதான் ஏற்பட்டு இருக்கும்.

ஆக, இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் இலவசம், எப்படி அவர்களுக்கு லாபமாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த பணப் பரிவர்த்தனை ஆப்கள் வருவதற்கு முன்பு நாம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு  மூலம் பொருட்களை வாங்குவோம். இப்பொழுது அப்படி வாங்குவது குறைந்து விட்டது என்பது உண்மை. பொதுவாகப் பெரிய கடைகள் என்பது இல்லை சிறிய கடைகளும்  கிரெடிட் கார்ட் தேய்ப்பதற்கு வங்கியிலிருந்து மிஷின்  வாங்கி வைத்து இருப்பார்கள்.

500 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கி கார்டு தேய்த்தால் அதில் 2 சதவிகிதம் வரை வங்கி கமிஷனாக எடுத்துக் கொள்ளும். அதாவது, 500 க்கு 10 ரூபாய் பிடித்து கொண்டு 490 ரூபாய் கடைக்காரர் கணக்கில் சேர்ந்துவிடும். கடைக்காரர் தனக்கு வரும் லாபத்தில் இந்த 10 ரூபாய் இழக்க நேரிடும். இது நடைமுறை.

அந்த 10 ரூபாயையும் இழக்க விரும்பாத கடைக்காரர் அல்லது சில டாக்டர்கள் நடத்தும் கிளினிக் 2 சதவிகித கமிஷன் பணத்தையும் சேர்த்து உங்கள் பில்லில் சேர்த்து கார்டில் தேய்த்து கொள்வார்கள். அதாவது, 500 ரூபாய் பதிலாக 510 ரூபாயாக எடுத்துக் கொள்வார்கள்.

வங்கிக்கு இப்படி 1 அல்லது 2 சதவிகிதம் கமிஷன் கிடைத்தது. அந்த இடத்தைத்தான் இப்பொழுது மொபைல் ஆப்கள் எடுத்துக் கொண்டன. இன்று பணம் செலுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்கு பதிலாக Paytm, Google Pay போன்ற ஆப்கள் வழியாகச் செலுத்தி விடுகிறார்கள். அந்த கமிஷன் தொகை இனி இந்த மொபைல் ஆப்களுக்கு சென்றுவிடும். கடைக்காரர் தன் லாபத்தில் கமிஷன் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இங்குதான் சிறு வேறுபாடு உண்டு.

என்ன  வேறுபாடுகள் உண்டு. முழுவதும் பார்ப்போம்

உங்களுடைய மொபைலில் இருக்கும் இந்த ஆப்களை  திறந்து பாருங்கள். பணம் அனுப்ப மட்டும் வசதி இருக்காது. பல வசதிகள் இருக்கும். ஹோட்டலில் உணவு ஆடர் செய்யும் வசதி முதல்  தங்கம் கூட வாங்க முடிகிற வசதி வரை உண்டு. இந்த வசதிகளை நாம் பயன்படுத்தும்பொழுது ஆப்கள் பலன் அடைகின்றன.

பணப் பரிவர்த்தனை ஆப்கள் பல வழிகளில்  பணம் சம்பாதிக்கின்றன.

மொபைல் ரீசார்ஜ் –  இந்த ஆப் வழியாக மொபைல் ரீசார்ஜ் செய்தால் அதற்கான கமிஷன் தொகை மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இவர்களுக்குக் கொடுத்துவிடும்.

தண்ணீர் பில், இன்சூரன்ஸ் பில், மின்சார பில், கேபிள் ரீசார்ஜ்(DTH), Postpaid Bill போன்ற பில் தொகையைச் செலுத்தினால் அதற்கான கமிஷன் தொகை கிடைக்கும்.

பல நிறுவனங்கள் தள்ளுபடி கூப்பன்களை இந்த மொபைல் பரிவர்த்தனை ஆப்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றதன! அந்த கூப்பன் வழியாகப் பொருட்களை மக்கள் வாங்கும்பொழுது அதனால் பலன் அடையும் கூப்பன் வழங்கும் நிறுவனங்கள் அதற்கு உண்டான கமிஷன் தொகையை இந்த ஆப்களுக்கு செலுத்தும்.

நேரடியாக நீங்கள் ஒருவருக்கு மொபைல் எண் வழியாகப் பணம் செலுத்தினால் அதற்கு எந்தவித கமிஷன் தொகையும் ஆப்களுக்கு கிடைக்காது.  அதற்குப் பதிலாகப் பயனாளர்களின் தகவல்களை இந்த பணப் பரிவர்த்தனை ஆப்கள் பயன்படுத்திக் கொள்ளும். உங்களுடைய தகவல்கள் கொண்டு உங்களுக்கு  எந்தவிதமாக விளம்பரங்களைக் காண்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யும். இன்னும் பல விதங்களில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளும்.

இப்பொழுது சில ஆப்கள் இன்சூரன்ஸ் விற்பனை, பரஸ்பர நிதி (Mutual Fund) விற்பனையிலும் இறங்கி உள்ளது. சமீபமாக phonepe நிறுவனம் இன்சூரன்ஸ் விற்பனை ஆரம்பித்து 5 மாதத்திற்குள் 5 லட்சம் பாலிசியை விற்பனை செய்து உள்ளதாகத் தெரிவித்து உள்ளது.

நிதித் தொழிலில் அதிக வருமானம் கொடுக்கக் கூடிய பொருள் இன்சூரன்ஸ் விற்பனை ஆகும். அதனால்தான் அனைத்து வங்கிகளும் ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் விற்பனை செய்து வருகின்றன.  அதனால் phonepe போன்ற ஆப்கள் இதில் கவனம் செலுத்துகிறது.

மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து பணப் பரிவர்த்தனை ஆப்களில் முதன் முதலாக phonepe தங்கள் வாடிக்கையாளர் செய்யும் மொபைல் ரிச்சார்ஜ்களுக்கு சிறிய கமிஷன் வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.

50 ரூபாய் முதல் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 ரூபாயையும், 100 ரூபாய் மேல் செய்யும் ரிச்சார்ஜிகளுக்கு 2 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க போகிறது. 50 ரூபாய்க்குக் குறைவாக ரீசார்ஜ் செய்யும்பொழுது எந்தவித கட்டணமும் இல்லை என்று அறிவித்து உள்ளன.

நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கமிஷன் பெரும் முறைக்கு தொடக்கமாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நாளடைவில் அனைத்து ஆப்களும் இந்த நிலையைப் பின்பற்றத் தொடங்கிவிடும். பிறகு அனைத்து சேவைகளுக்கும் சிறு தொகையை வசூலிக்கத் தொடங்குவார்கள்.

ஏற்கனவே நிறுவனங்கள் கொடுக்கும் கமிஷன் தொகையோடு புதிதாக வாடிக்கையாளர் கொடுக்கும் கமிஷன் தொகையும் சேர்ந்தால் அதிக லாபத்தில் பணப்பரிவர்த்தனை ஆப்கள் நடைபெறும் .

பணப்பரிவர்த்தனை ஆப்கள் வருமானம்

கடந்த 2020 முதல் 2021 ஆண்டு Phonepe நிறுவனம் 690 கோடி வருமானம் வந்துள்ளதாகத் தெரிவித்து உள்ளது. அதேபோல் amazon pay 1769 கோடி வருமானமும், Google pay 14.8 கோடி வந்துள்ளதாகத் தெரிவித்து உள்ளது. இப்படி ஒவ்வொரு பணப் பரிவர்த்தனை ஆப்களும் வருமானம் ஈட்டிக் கொண்டுதான்  இருக்கிறது. ஆனால், நமக்கு இலவசமாக சேவைகளை அளிக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

நமக்கு இலவசமாக யாராவது கொடுக்கிறார்கள் என்றால், முதல் கேள்வி நீங்கள் ஏன் எங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டுப்பாருங்கள்?

இன்னும் சில கடைக்காரர்கள் உங்களுக்குத்தான் இவ்வளவு தள்ளுபடி என்று சொல்வார்கள் அதற்கு முன்பு அவரை பார்த்துக் கூட இருக்கமாட்டோம். இவையெல்லாம் லாபம் சம்பாதிக்க ஒரு மார்க்கெட்டிங் வழியே தவிர, மக்களுக்குச் சேவை என்ற எண்ணத்தில் இல்லை.  நேரடி கடைகளே இப்படி என்றால், முகம் தெரியாத பணப்பரிவர்த்தனை ஆப்கள் எப்படி நமக்கு இலவசமாகச் சேவையை வழங்கும்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time