”மோடியின் வாபஸ் மீது நம்பிக்கை வரவில்லை” – கே.பாலகிருஷ்ணன்

- பீட்டர் துரைராஜ்

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்!  மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல்.

தமிழ்நாட்டில், 60 க்கும் மேற்பட்ட விவசாயச்  சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக, கடந்த ஓராண்டு காலமாக  போராட்டத்தை வழிநடத்தி வருபவர்   கே.பாலகிருஷ்ணன்.  பிரதமரின் திடீர் அறிவிப்புக்கான  காரணம்,  அதன் நம்பகத்தன்மை, போராட்டத்தின் விளைவுகள், இதன் தாக்கம், பாஜகவின் உள் முரண்பாடு, விவசாய இயக்கத்தின் எதிர்காலம் என பல அம்சங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசுகிறார்.

விவசாயச்  சட்டங்களை திரும்ப பெறுவதாக பகிரங்கமாக பிரதமர் மோடி  அறிவித்துள்ளார். ஆனால், பாராளுமன்றத்தில் சட்டமியற்றி, அதிகாரபூர்வமாக திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளீர்கள். நம் நாட்டினுடைய பிரதமர்  பகிரங்கமாக கொடுத்த வாக்குறுதியை ஏற்காமல் போராட்டத்தை தொடர வேண்டுமா ?

பிரதம மந்திரியின் சொல் மரியாதைக்குரியது; ஆனண போன்றது. கிட்டத்தட்ட சட்டம் போன்றது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர் இது போன்ற எத்தனையோ வாக்குறுதிகளை தந்து ஜகா வாங்கியவர். உதாரணத்திற்கு விவசாய விளைபொருளுக்கு, எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலையை நிர்ணயிப்போம் என அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாய விளை பொருளுக்கு எம்எஸ் சுவாமிநாதன் பரிந்துரைப்படி கொள்முதல் விலையை குறைந்தபட்ச ஆதார விலையை கொடுகாமலேயே கொடுத்துவிட்டோம் என்று முதலில் கூறினார்கள். பிறகு உச்சநீதிமன்றத்தில் இது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார்கள். விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்குவோம் என்ற  வாக்குறுதியையும், இந்த ஏழு ஆண்டுகளில் அவர்  நிறைவேற்றவில்லை. எனவே பிரதம மந்திரியின் வார்த்தை விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுப்பதாக இல்லை. இப்படிப்பட்ட நிலைக்கு அவர்தான் காரணம்.

அதுமட்டுமன்றி, தோட்டப்பயிர் மற்றும் பால் உள்ளிட்ட அனைத்து  விவசாய  பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யசட்டம் இயற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இப்பொழுது நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு  ரூ.1950 விலை நிர்ணயம் செய்வதாக வைத்துக்கொள்வோம். எல்லா இடங்களிலும் இதே தொகைக்கு கொள்முதல் நடக்காது. சில இடங்களில் வியாபாரிகள் 1,700 ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள். அதாவது அரசாங்க அறிவிப்பை அமலாக்கம் செய்ய வழிவகை எதுவும் இல்லை .எனவேதான் குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வேண்டுமென்று நாங்கள் கேட்டு வருகிறோம். இதன் மூலம், குறைந்தபட்ச ஆதார விலையை விட, குறைவாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மீது வழக்குப் போட முடியும். அவர்களைத்  தண்டிக்கலாம். அதுமட்டுமன்றி, எல்லா விவசாயப் பொருள்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. எனவே பழங்கள், மலர்கள், பால் உள்ளிட்ட அனைத்து வகையான விவசாய விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் சலுகை விலையிலும், இலவசமாகவும், மின்சாரம் கிடைக்கிறது. இதனை தடுப்பதற்காக ஒன்றிய அரசு,  மின்சார திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உள்ளது.  இந்தச் சட்டம் அமலானால், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு 100 யூனிட் வரை இலவசமாக கிடைத்துவரும் மின்சாரம் கிடைக்காது.   நெசவாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை மின்சாரம் கிடைக்காது. எனவேதான் மின்சார சட்ட திருத்தத்தையும் திரும்பப்  பெறவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

விவசாய போராட்டத்தின்போது இறந்து போன விவசாயிகளுக்கு இழப்பீடு தரவேண்டுமென்று கோரி வருகிறீர்களே ?

சரியாகச் சொன்னால் இதுவரை 675  விவசாயிகள் இறந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு தரவேண்டும், என்பதைவிட,  அவர்கள் இறந்துபோனதை ஒன்றிய அரசு அங்கீகரிப்பது முதன்மையானது. இறந்து போனவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும்; படுகாயம் அடைந்தவர்களுக்கு அதற்கேற்ற வகையில் நிவாரணம் வழங்க வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது,  தேசத்துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம்.

அரியானாவில் பாஜகவை சேர்ந்த ராம்சந்தர் ஜாங்ரா என்ற மாநிலங்களவை உறுப்பினர் ஒரு விவசாயியை, குற்றுயிரும், கொலையுயிருமாக  தாக்கியதால் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பாஜக எம்.பி  மீது எந்த வழக்கும் இதுவரை பதியப்படவில்லை. லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜித் மிஸ்ரா இன்னமும் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற கோரிக்கைகளும் உள்ளன.

‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ பற்றி சொல்லுங்களேன் ? 

தமிழ்நாட்டில் 60க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து,  செப்டம்பர் 21ம் நாள் டில்லியில் போராடிவரும் சம்யுக்த மோர்ச்சா தமிழில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி,  தமிழ்நாட்டிலும் அமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகிறது. அதனுடைய மாநில ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுகிறேன். இதில் இடதுசாரி விவசாய சங்கங்களும் உண்டு; மாவட்ட அளவில் சுயேட்சையாக செயல்படும் சங்கங்களும் உண்டு. இதற்கு முன்னதாக நாங்கள் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSSC) என்ற பெயரில் செயல்பட்டு வந்தோம். உத்திரப்பிரதேசம், லக்கிம்பூரில்  மரணமடைந்த விவசாயிகளின் வீரச் சாம்பலை எடுத்துக்கொண்டு, கடந்த மாதம் 23 ந்தேதி காந்தி மண்டபத்தில் தொடங்கி,  தமிழ்நாடு முழுவதும் 21 மாவட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் அனைத்து மக்களின் அஞ்சலிக்காக எடுத்துச் சென்றோம்.  இறுதியில் 26 ம் தேதி  வேதாரண்யம் சென்று வங்கக் கடலில் தியாகிகளின் வீரச்சாம்பலை கரைத்தோம். இந்த அஸ்தி பயணத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும் அளித்த வரவேற்பு உணர்ச்சி பூர்வமாக இருந்தது. பெரிய எழுச்சி தரக்கூடிய நிகழ்வாகவும் அது  அமைந்திருந்தது.

விவசாயிகள் போராட்டத்தில் ஸ்டாலின் நிலைப்பாடு எப்படி இருந்தது ?

தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலுக்கு  முன்பு மு.க.ஸ்டாலினை நாங்கள் சந்தித்தோம். விவசாய சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படியே தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. நேற்று கூட 3 வேளாண் சட்டங்களை  ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது விவசாயிகளுக்கும், சனநாயத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்ற ஆதரவான கருத்தை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஓராண்டாக போராடி வந்தாலும் கண்டுகொள்ளாத மோடி திடீரென்று உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள் ?

எழுச்சி மிக்க தொடர் போராட்டம் மோடிக்கு சர்வதேச நெருக்கடியை கொடுத்து வருகிறது. பல மாநிலங்களில், பாஜக உட்கட்சி நெருக்கடியைச் சந்திக்கிறது. அவரது கட்சியை சேர்ந்தவர்களே  விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். வரவிருக்கிற உத்தரப் பிரதேசம்,  பஞ்சாப்,உத்திரகாண்ட் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சமும் ஒரு காரணம்.

ஹரியானா போன்ற மாநிலங்களில் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் வெளியில் தலை காட்ட முடிவதில்லை. அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி தொடர்ந்து காட்டப்படுகிறது. திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில்  கூட அவர்களால் கலந்து கொள்ள முடிவதில்லை.  விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில பாஜக இளைஞரணி தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபோன்ற பல காரணங்களினால் பாஜக அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள நேரிட்டது என்று நினைக்கிறேன்.

விவசாயிகளின் போராட்டத்தினால்  பெற்ற படிப்பினை என்னவென்று சொல்ல முடியுமா ? 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஆறாம் நாள் தொடங்கிய இந்த போராட்டம்,  சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் தொடக்கமாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். ஒரு வலுவான கூட்டமைப்பை இந்த போராட்டம் உருவாகியுள்ளது. இது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இனிமேல் வேறு எந்த ஆட்சி வந்தாலும் விவசாயிகளுக்கு எதிராக இருக்க முடியாது. சமுதாய மாற்றத்தின் தொடங்கப்புள்ளியாக இந்த போராட்டம் இருக்கும்.

இந்தியா முழுவதும் உள்ள மக்களை மதத்தின் பெயரால்  பிளவுபடுத்தி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தை பாஜக செயல்படுத்தி வருகிறது. ஆனால் விவசாயிகளின் போராட்டம் பிளவுபடும்  மானுடத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக மாறிவிட்டது. உதாரணமாக, முசாபர்நகரில்,  இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டாக்கி, 2013 ல் பாஜக உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அதே முசாபர்நகரில், 2021 செப்டெம்பர் 5 ல்,  விவசாயிகள் நடத்திய மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் 10 லட்சம் விவசாயிகள் திரண்டனர். ‘அல்லாஹு அக்பர்’ ‘ஹரி ஹர மகாதேவா’  என்ற ஒற்றுமை முழக்கங்கள் அங்கு எழுப்பப்பட்டன. இவையெல்லாம் இந்திய அரசியலில் ஒரு தீர்க்கமான விளைவுகளை ஏற்படுத்தும். விவசாயிகள் மதம் கடந்து, பிரதேசம் கடந்து,  மொழி கடந்து,  பணக்கார விவசாயி விவசாய தொழிலாளி என்ற வேறுபாடு கடந்து வர்க்கமாக திரண்டுள்ளனர்.

உடமை விவசாயிகள் – விவசாயத் தொழிலாளிகள் என இருப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று நெடுங்காலமாக இடதுசாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியை இந்தப்  போராட்டம் சாத்தியப்படுத்தி இருக்கிறது.  ஆணாதிக்கம் நிலவும் ஜாட் மக்கள் மத்தியில்,  ஆயிரக்கணக்கான பெண் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதும் ஒரு உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகும். ‘வெல்லப்பட முடியாத ஒரு பிம்பம்’  என சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் நொறுங்கி விட்டது.

கனடாவில் ‘இந்திய விவசாயிகள் எழுச்சி’ என்ற பாடத்தை மாணவர்களுக்கு வைத்துள்ளனர். இதனை நீக்க வேண்டும் என்று இந்திய அரசு விடுத்த கோரிக்கையையும் கனடா அரசு நிராகரித்துவிட்டது. ‘நீண்டகாலமாக போராடி வரும் விவசாயிகளுக்கு நாம் ஏதும் செய்ய இயலாதா ?’ என்று  அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசைப்  பாடகி,  ரிகானா  போட்ட ட்விட்டர் பதிவு உலகம் முழுவதும், அடுத்த சில நிமிடங்களில் லட்சக்கணக்கில், வலைத் தளம் தேக்கம் அடையும் அளவுக்கு  பகிரப்பட்டது.

இதுவரை வழக்கமாக தொழிலாளர்கள் போராடுவார்கள்; அவர்கள் பின்னே விவசாயிகள் போராடி இருக்கின்றனர். ஆனால் முதன் முதலில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து பிறவர்க்கங்களையும் இணைக்கக்கூடிய போராட்டமாக மாற்றியது  என்பது மிக முக்கியமான நிகழ்வாகும். விவசாயிகளும், தொழிலாளிகளும் ஒன்றிணைந்து , நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கின்றனர். தமிழ்நாட்டில் சுயநலரீதியாக செயல்படும் சங்கங்கள் செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இவைகளெல்லாம்   முக்கியமானவை.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில தேர்தல்கள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? 

பாஜக வைப் பொறுத்தவரை உத்தரபிரதேசத்தில் வெல்வது என்பது அவர்களுக்கு வாழ்வா –  சாவா பிரச்சினை.  எனவே, எல்லாவிதமான முறைகேடுகளிலும் அவர்கள்  ஈடுபடுவார்கள். ஆனாலும் நாங்கள் உத்தரப் பிரதேசத்திலும்,  உத்தர்காண்டிலும் பாஜகவை தோற்கடிப்பது எங்களது அடுத்த ஆண்டு இலக்கு;  அதாவது மிஷன் –உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் என்ற திட்டத்துடன் செயலாற்றுகிறோம். வருகிற 22 ஆம் தேதி லக்னோவில் விவசாயிகள்  ஒன்றுசேரும் மகா பஞ்சாயத்தை நடத்த இருக்கிறோம்.

கே.பால கிருஷ்ணன்

இந்தப் போராட்டத்தை ஊடகங்கள் எப்படிப் பார்த்தன ? 

பெரும்பாலான பெரிய ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்தை சிறுமைப்படுத்தி எழுதின. டெல்லியில் விவசாயிகள் ஏன் சாலை மறியலில்  ஈடுபட்டனர் என்று உச்சநீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.  ராம்லீலா மைதானம் செல்ல வேண்டும் எனச் சென்ற விவசாயிகளை காவல்துறை அனுமதிக்கவில்லை. எனவேதான் மறிக்கப்பட்ட இடத்திலேயே நாங்கள் மறியலில் ஈடுபட்டோம். அதேபோல விவசாயிகளின் போராட்டத்தினால்  போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது என்று கூறினார்கள். ஆனால்  ஹரியானா காவல்துறையும், ஒன்றிய அரசின் காவல் துறையும் தான் சாலைகளில் தடைகளைப் போட்டு  இத்தகைய போக்குவரத்து தடையை ஏற்படுத்தினார்கள். விவாயிகள் சாலைகளில் கூடாரங்கள் அமைத்து இரண்டுபுறமும் போக்குவரத்துக்கு வழிவிட்டு போராடி வருகிறார்கள்.

எழுத்து ஊடகங்கள் எங்கள் போராட்டங்களைச்  சரியாக சித்தரிக்கவில்லை. நிறுவனப் படுத்தப்பட்ட  ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு உரிய ஆதரவளிக்கவில்லை. தி வயர் மற்றும் தி பிரிண்ட் போன்ற பல  இணைய இதழ்கள்  எங்களுக்கு ஆதரவாக உண்மையான நிலையை எழுதின. வடநாட்டு செய்தி என்று விவசாயிகள் போராட்டத்தை தமிழக ஊடகங்கள் சரி வர சித்தரிக்கவில்லை. இப்போதுதான் போடுகிறார்கள். ஆனாலும், விவசாயிகளின் எழுச்சியை சமூக ஊடகங்கள் இந்தியா முழுவதும் சிறப்பாக பிரதிபலித்து மக்களிடம் கொண்டு சென்றன.

நேர்காணல் செய்தவர் : பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time