எளிய மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்சிக்கு வந்தது போல அடுத்தடுத்து அமைதியைக் கெடுக்கும் சட்டங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக அரசு! இந்த மீன்வள மசோதாவோ மீனவர்களை கடலுக்கே அன்னியமாக்கி கண்ணீரில் தள்ளுகிறது!
உலக மீனவர் தினம் இன்று சர்வதேச அளவில் மீனவர்களால் கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் கூடி பாராளுமன்றம் முன்பு மீனவர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். மீனவ மக்கள் நலன் தொடர்பாக அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஒட்டுமொத்த மீனவர் நலனுக்கு எதிரான இந்திய கடல் மீன்வள மசோதா 2021ஐ மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. நாளையும் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் காலங்காலமாக எளிய மீனவர்கள் வாழ்ந்து வருகின்ற ஒட்டுமொத்த இந்தியாவின் 7,517 கி.மீட்டர் நீளமுள்ள கடற்கரை பரப்பை கடல்சார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுபாட்டிற்கு கொண்டு போகிறது மத்திய அரசு! இது போதாது என்று 1,382 தீவுத் திட்டுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் 23 லட்சம் சதுர கி.மீட்டர் கொண்ட விரிந்து பரந்த கடல் பரப்பும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவின்படி, இந்தியக் கடற்பகுதியில் கரையில் இருந்து 22.2 கி.மீ அண்மைக் கடல் என்று வரையறுக்கப்பட்டு, இந்த தூரத்திற்குள் மட்டுமே நமது மீனவர்கள் மீன் பிடிக்க முடியும் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. உண்மையில் அதற்கு மேல் தான் மீன்வளமே உள்ளன. ஆனால், அதில் மீன் பிடிக்க செல்ல ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கட்டணம் கட்டி அனுமதி பெற வெண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது, பெருந்திரளான மீனவர்களை கடலில் சுதந்திரமாக செல்லவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் கொண்டு வந்துள்ளனர்!
இவற்றை இந்தியா முழுமையும் உள்ள மீனவர்கள் எதிர்த்து வருகின்றனர்.இதன் ஒரு அம்சமாக டெல்லியில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த மீனவ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி மாறன் ஆகியோர் தற்போது மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நம்மிடம் விளக்கினர்.
இது தொடர்பாக அறம் இணையதள இதழுக்கு அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி:
” வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய கடல் மீன்வள மசோதா 2021 ஐ நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஒட்டுமொத்த மீனவர் நலனுக்கும் இந்த மசோதா எதிரானது. குறிப்பாக, கடல் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வயிற்றுப் பாட்டை கழித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இது அடியோடு அழித்துவிடும்.
இந்த சட்டமானது பெரிய கப்பல்களில் கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களை பிடித்து வந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோரை கருத்தில்கொண்டு தீட்டப்பட்டதாகும்.
தமிழ்நாட்டில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை 14 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ கிராம மக்களில் பெரும்பாலும் சிறிய படகு மூலம் மீன் பிடிப்பவர்கள். இவர்கள் கடலுக்குள் சென்று மீண்டு வந்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும்.
லட்சக்கணக்கான இந்த மீனவத் தொழிலாளர்களுக்கு தாங்கள் வசிக்கும் வீடு, மீனவ கிராமம், கடல், மீன்பிடித் தொழில் இது தான் தெரியும். இவர்கள் இயல்பாக தற்போது செய்து வரும் தொழிலைக் கூட இந்த மசோதாவில் உள்ள சரத்துக்கள் பாதிக்கும்.
இந்த மசோதாவில் உள்ள சரத்துக்கள்படி சாதாரணமாக கடலில் மீன் பிடித்து வீடு திரும்பும் மீனவர்களைகூட குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி அவர்களிடம் அபராதம் விதிக்க முடியும், சிறையில்கூட அடைக்க முடியும்.
எனவே தான் நாடு முழுவதும் உள்ள மீனவ பிரதிநிதிகள் இன்று தலைநகரில் திரண்டு இந்த மசோதாவை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் இப்பிரச்சனை குறித்து நன்கு அறிவார். எனவே தமிழக அரசு இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் என்று நம்புகிறோம்.
தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கை, இங்கு பிடிக்கும் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு அண்டை மாநிலமான கேரளாவுக்கு போக வேண்டியுள்ளது. அங்கே சலுகைகள் அதிகம் தரப்படுகிறது.
ஏற்றுமதி அங்கே நடைபெறுவதால் அந்நிய செலவாணி அந்த மாநிலத்திற்கு போகிகிறது. இங்கிருந்தே ஏற்றுமதி செய்யும் வகையில் உரிய சூழலை கட்டமைப்பு வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக மீனவப் பெண்களுக்கு மீன் வியாபாரம் முக்கியமான வாழ்வாதாரம் ஆகும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் மீன்களை விற்கும் ஒரு நெருக்கடியான சூழலில் தற்போது அவர்கள் உள்ளனர்.
உரிய குளிர் சாதன கிடங்கு வசதி கொண்ட மீன் அங்காடியை சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைத்துக் கொடுக்கும்படி நீண்ட காலமாக கோரி வருகிறோம்.
அப்படிச் செய்யும்போது மீன் விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அது மிகுந்த பயன் தருவதாக அமையும். முதல் கட்டமாக கடலோர மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலாவது இதை நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளூர் நீர்நிலைகளில் மீன் பிடிக்க அங்கு உள்ள மீனவர்களுக்கு இதுவரை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏரி, குளம் போன்ற நீர் தேக்கங்களில் உள்ள மீன்களை பிடிக்க, அதற்கான ஏலத்தில் பங்கேற்க அவர்கள் முன்வராத பட்சத்தில் தான் வெளியாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்போது பணம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டு மீனவர் அல்லாத வெளியாட்கள் இதில் பங்கேற்கும் சூழல் உருவாகிவிட்டது.
Also read
இதனால் மண்ணின் மைந்தர்களான உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது. சொந்த மண்ணிலேயே மீனவர்களை அநாதைகளாக்குகிறது இந்த சட்டம்! விவசாயிகளை போலதான் மீனவர்கள் நிலைமையும் மாறி மாறி வரும் பருவ மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள். அந்த அடிப்படையில் இங்கு நடைபெறும் பணமே பிரதானம் என்ற நிலைமையை மாற்றி ஏழை மீனவ மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பாரம்பரிய மீனவர்களுக்கான உரிமைப் பாதுகாப்பு என்பது சட்டமாக இயற்றப்பட வேண்டும். மற்ற பழங்குடி மக்களுக்கு என உரிமைகள் உள்ளன. கடல் பழங்குடிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். ஏனென்றால் அரசாங்கம் தொடர்ந்து ஒவ்வொரு சட்டங்களாகப் போட்டுக் கொண்டே வருகிறது. கடல்சார் மீன்வள சட்டத்தால் பாரம்பரிய மீனவர்கள் என்ற இனமே இல்லாமல் போய்விடும்.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. அண்மையில் நடைபெற்ற உயிரிழப்பபை மனிதநேயம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்டுரையாளர்; மாயோன்.
Leave a Reply