காவலருக்கு ஒரு கோடி! மருத்துவருக்கு 25 லட்சம்! ஏன் இந்தப் பாகுபாடு?

- சாவித்திரி கண்ணன்

அப்துல்லத்தீப், ராணிப்பேட்டை, வேலூர்,

சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலங்களை தங்கள் வசதிக்கு ஏற்ப அதிகரிக்க பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதே?

பதவி நீட்டிப்பு வேண்டுபவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்கள்! சட்டம், நீதி, தர்மம் எனப் பேசும் அதிகாரிகளுக்கு ஆட்சியாளர் போடும் தூண்டில்! எதிர்ப்பவர்களை வேகமாக  இன்னும் சிறையில் தள்ளுவார்கள்!

ஜான் ஜேக்கப், நாகர்கோவில், கன்னியாகுமரி

திருச்சி அருகே படுகொலையான காவலர் குடும்பத்திற்கு யாரும் கேடாமலே ஒரு கோடி நிதி அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், கொரானாவை பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை தந்து உயிர் துறந்த மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சத்தைக் கூட குறைத்து 25 லட்சம்! ஏன் இந்தப் பாகுபாடு?

மருத்துவர்களின் சேவை முழுமையும் மக்களுக்கானது!

காவல்துறையின் சேவையின் பெரும்பகுதி ஆட்சியாளர்களுக்கானது.

ஆட்சியாளர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ பொது மருத்துவமனைக்கு வரப்போவதில்லை! ஆனால், காவல்துறையின் தயவின்றி முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தின் நடமாட்டமே இல்லை! இந்த தான் பலவீனம் தான் இந்த பாகுபாட்டிற்கு காரணம்!

மேலும், ஆட்சி மக்களுக்கானதாக இருந்தால் தானே போராடும் மருத்துவர்களுக்கு நீதி கிடைக்க!

மனித நேயத்திற்கு இலக்கணமான மரியாதைக்குரிய மருத்துவத் தொழிலைக் கூட அதிகார வர்கத்தின் சுய நலம் மலினப்படுத்தி விடுகிறது!

அந்தோணிசாமி, சமயநல்லூர், திருச்சி

வெறும் 85 நிமிஷம் மருத்துவ சிகிச்சை பெற அமெரிக்க அதிபர் ஜோபைடனின் அதிகாரம் கமலா ஹாரிஸ்க்கு மாற்றப்பட்டது குறித்து?

இங்கே மாதக்கணக்கில் ஜெயலலிதா சுய நினைவின்றி அப்பலோவில் முதல்வராகத் தொடர்ந்தது நினைப்புக்கு வந்து தொலைக்கிறதா? சுயநினைவற்ற முதல்வரின்  கை நாட்டு பெறப்பட்டு அரசு நிர்வாகம் நடந்தது ஞாபகம் வருகிறதா..?

அரசியல் சட்ட ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதில் அமெரிக்கர்களுக்குரிய பொறுப்புணர்ச்சியை நம் நாட்டுத் தலைமைகளோடு ஒப்பிடவே முடியாது. ஒவ்வொரு நிமிடமும் அதிபர் நாட்டிற்கு பொறுப்பானவர். அமெரிக்கர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் இது!

மு.ரத்தின சபாபதி, விழுப்புரம்

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் விளக்கத்தைப் படித்தீர்களா..?

ஒரு படைபாளியாய் அவர் முதலிலேயே இந்த தன்னிலை விளக்கத்தை தந்திருக்கலாம்! காலதாமதமான இந்த வெளிப்பாட்டால் பல கல்லடிகளை, சொல்லடிகளை, காயங்களை சுமக்க வேண்டியதாயிற்று சூர்யா! ஆனால், இந்த காலதாமதம் பலர் முகத்திரைகள் கிழிய உதவியது தமிழகத்திற்கு கிடைத்த பலன்!

கு.ராஜவேலு, பரமத்தி வேலூர், நாமக்கல்.

ஜெய்பீம் பார்வதியம்மாவிற்கு முதலமைச்சர் கையால் சூர்யா பணம் தர விரும்பி காத்திருந்தும் ஸ்டாலின் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கவில்லையாமே?

அடக் கொடுமையே! இவ்வளவு தைரியமான ஒரு முதலமைச்சர் தமிழக வரலாற்றிலேயே இருந்திருக்க முடியாது. கொள்கைத் தெளிவுமில்லை. கோழைத்தனத்திற்கு அளவுமில்லை!

அ.சரஸ்வதி, பழவேற்காடு, திருவள்ளூர்

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை தமிழக சுகாதாரத் துறை சுற்றறிக்கை கேள்விக்கு உள்ளாக்குகிறதே?

தடுப்பூசி போடாதவர்களை கேள்விக்கு உள்ளாக்கும் முன்பு தடுப்பூசி விளைவுகளுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும் சுகாதாரத்துறை!

தடுப்பூசி போட்டுக் கொண்ட இள வயதினருக்கே கூட நெஞ்சு வலியும்,மாரடைப்பும் வருகிறதே?

தடுப்பூசி செலுத்திக் கொண்ட கற்பிணிகளில் பெரும்பாலோருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளதே!

இரண்டுகட்ட தடுப்பூசி போட்ட நிலையில் கொரானா வருகிறது என்பது மட்டுமல்ல, உயிரையும் பறித்துச் செல்கிறது என்பது நடைமுறையில் வெளியான பிறகும் மெளம் ஏன்?

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகான பின்விளைவுகளை சொல்வதற்கோ, கேட்பதற்கோ ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

மக்கள் நலனுக்காக இந்த தடுப்பூசி கட்டாயம் திணிக்கப்படவில்லை. உங்கள் சுய நலனுக்காக மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்!

சத்தீஸ், வடவள்ளி, கோயம்பத்தூர்

மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பிறகும், இது வாபஸ் அல்ல, தற்காலிக பின்வாங்கல் என எழுதுவது ஏன்? சற்று திறந்த மனநிலையோடு அணுகலாமே?

ரத்தச் சுவைக்கு பழக்கப்பட்ட புலி ஒரு போதும் புல்லைத்தின்னாது!

நான் திறந்த மனநிலையோடு அணுவதால் பசுதோல் போர்த்தி வந்துள்ள புலியின் குணம் மாறப்போவதில்லை. புலி பதுங்குவது பாய்வதற்கே!

சிபி,பேரளையூர், கடலூர்

படம் வந்த பிறகு பணம் தருவதற்குப் பதில் முன்பே அனுமதி வாங்கி ராயல்டி கொடுத்திருக்கலாமே பார்வதிக்கு?

அவர் என்னமோ தன் கதையை விற்பனைக்கு வைத்து காத்துக் கொண்டு இருந்தது போல நீங்கள் பேசுவது வியப்பளிக்கிறது. 25 வருடங்களுக்கும் மேலாக இந்த சமூகம் அந்தம்மா வலியை காது கொடுத்து கேட்கவும் தயாரற்ற நிலையில் இருந்தது. இது போல பல சம்பவங்கள் உள்ளன! நீங்கள் படம் எடுக்க தயாரா?

ஒரு எளிய பெண்மணி நீதி கேட்டுப் போராடியதை கேள்விப்பட்டு, அதில் பல கற்பனைகளைக் கலந்து ஒரு படைப்பாளி சமூகத்திற்கு பயன்படும் வண்ணம் அதற்கு வடிவம் கொடுத்துள்ளான். படைப்பாளிகள் அனைவருக்கும் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், சினிமா என எல்லா வடிவங்களுக்கும் இப்படி ஒரு சம்பவம் தூண்டுதலாக இருந்தே வந்துள்ளது! பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படுத்துவது கூட இல்லை. இது படுதோல்வி அடைந்திருந்தால் அந்த நஷ்டத்தை நாம் யாரும் அதை பகிர்ந்து கொண்டிருப்போமா? வெற்றிபெற்ற நிலையில் தானே முன்வந்து பார்வதிக்கு அவர்கள் பணம் கொடுக்க முன்வந்தது தார்மீக ரீதியில் அவசியமானதே!

தாமரைக் கண்ணன், சென்னை

நீதிபதிகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் உண்டா?  உதாரணம் 1)ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது கட்டாயம் 2)வாகனங்களில் பம்பர் அகற்றுவது!

சட்டம் இயற்றும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபைகளுக்கும், நாடாளு மன்றத்திற்கும் மட்டுமே உண்டு. அந்த சட்டம் முறையாக அமல்படுத்தபடுகிறதா என்பதை கண்காணித்து வழி நடத்தும் அதிகாரம் பெற்றதே நீதிமன்றம்!  இந்த தலைக் கவசம், பம்பர் அகற்றுவது என்பதெல்லாம் இருக்கின்ற சட்டத்தில் சில அணிகலன்களை மாட்டி அலங்கரிப்பது போன்றதே!

மு.ராஜேஷ், அரும்பாக்கம்,சென்னை

அருணாச்சல பிரதேசத்தில் சீனா அத்துமீறி நுழைந்த வண்ணம் உள்ளதே?

அருணாசலப் பிரதேசத்திற்குள் நுழையும் முன்பே, அது ஆளும் கட்சியின் அதிகார கோட்டைக்குள் நுழைந்து இந்தியப் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் சர்வத்திற்கும் சீனத்தை சார்ந்து நிற்கும் நிலை இந்த ஏழாண்டுகளில் ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது! சீனா, ஒரு உலக ஆபத்தாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அருணாச்சல பிரதேச அத்துமீறல் ஆக்கிரமிப்புகளே இதற்கு அத்தாட்சி!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time