‘The Shawshank Redemption’ – அமெரிக்காவின் ஜெய் பீம்!

- பீட்டர் துரைராஜ்

சிறைக் கொடுமைகள் குறித்தும், அதில் ஒரு நிரபராதி கடுமையாகத் தண்டிக்கப்படுவது குறித்தும் எடுக்கப்பட்டு அமெரிக்காவில் சக்கை போடுபோட்ட படம் தான் ‘The Shawshank Redemption’. ‘ஜெய்பீம்’ படத்திற்கும் முன்பாக IMDb  ரேட்டிங்கில் உலக அளவில் முன்னணியில் இருந்தது இது தான்!

Shawshank என்பது அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலையைக் குறிக்கும். Redemption என்பதற்கு விமோசனம் என்பது பொருளாகும்.இது ‘ஜெய் பீம்’  போலவே காவல் சித்திரவதையை ரத்தமும், சதையுமாக சொல்லும் ஒரு படம். இதை ஜெய்பீம்மின் முன்னோடி படம் என்றும் சொல்லலாம்! பொதுவாக இதுபோன்ற திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால்  யதார்த்தம், கதைமாந்தர், பேசுபொருள், திரைக்கதை போன்ற காரணிகளின் விளைவாக ஜெய்பீம்  போலவே இந்தப் படமும் வெற்றி பெற்றிருக்கிறது . ஜெய்பீம்மிற்கு எதிராக, திட்டமிட்டு எழுப்பப்படுகின்ற அவதூறுகளையும் மீறி,  தொடர்ந்து அது உலக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனுடைய IMDb  ரேட்டிங் 9. 5 ஆகும். அதாவது, இன்றளவில், ‘ஜெய்பீம்’ படம் சர்வதேச அளவில் முதன்மை பெற்ற படமாக இருக்கிறது.

IMDb என்பது அமேசான் நிறுவனத்தால் நடத்தப்படுகிற ஒரு வலைத்தளம் ஆகும்.1990 ல் தொடங்கப்பட்ட இதன் முழு வடிவம் Internet Movie Data Bank. இந்த வலைத்தளத்தில்  திரைப்படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள், அதில் பங்கு பெற்ற கலைஞர்களின் விவரங்கள், டிரைலர் போன்றவை இருக்கும். God Father திரைப்படம் 9.1 புள்ளிகளையும்,  பரியேறும் பெருமாள் 8.5  புள்ளிகளையும்  பெற்றுள்ளன. ரசிகர்களும்  திரைப்படங்களுக்கு  மதிப்பெண்களை (Rating) வழங்க முடியும்.

ஜெய் பீம் படம் வெளிவந்த சமயத்தில் அதனுடைய  ரேட்டிங் 7.2 ஆக இருந்தது. ஆனால்  ரசிகர்களின் தொடர்ச்சியான ரேட்டிங் காரணமாக, ஏற்கனவே 9.2 புள்ளிகள் பெற்று  முதலிடத்தில் இருந்த  ‘The Shawshank Redemption’ ‘ God Father’ போன்ற படங்களை  விஞ்சிவிட்டது.

இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘The Shawshank Redemption’ படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்!   ‘The Shawshank Redemption’ என்ற படமும் காவல் சித்திரவதை குறித்த படம்தான்.   ஸ்டீபன் கிங்கின் குறு நாவலான ரிட்டா ஹேவொர்த் அண்ட் ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சனை அடிப்படையாகக் கொண்டு ஃப்ரான்க் டாராபோண்ட் எழுதி இயக்கிய திரைப்படமாகும்.   1994 வெளியான  இந்தத் திரைப்படம் இன்றளவும்  பார்க்கப்பட்டு வருகிறது. அந்த சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டிருந்த, இருவர்  மீட்சி அடைவதுதான் கதை என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இதில் பெண் பாத்திரங்கள் கிடையாது. ஷஷாங்க் சிறைச்சாலையிலேயே கிட்டத்தட்ட படம் முழுவதும் நடக்கிறது. எனவே இந்த படம் 1994 ல்  வெளிவந்தபோது, பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால்  விமர்சகர்கள், கலைஞர்கள்  இந்தப் படம் குறித்து  அவ்வப்போது பேசிவருவதாலும், அது பெற்ற விருதுகளாலும்,  பல ஆண்டுகளாக IMDb தரவரிசையில்  முன்னணியில் உள்ளது. ரசிகர்கள்  பலராலும் பார்க்கப்படுகிறது. இணைய இதழ்களில் தொடர்ந்து பேசப்படும் படமாக உள்ளது.

இந்த கதையின் நாயகன் ஆண்டி  டுவரன்ஸ் ஒரு வங்கியின் நிர்வாகி. குடிபோதையில்  மனைவியையும்,  அவளுடைய  காதலனையும்  கொன்று விட்டதாக பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனைக்கு,  (40 ஆண்டுகள் ) உள்ளாகிறான். ஷஷாங்க் சிறையில் கிட்டத்தட்ட பத்தொன்பதரை  ஆண்டுகள் இருக்கிறான். இந்தப் பாத்திரத்தில் டிம் ராபின்ஸ் என்பவர் நடித்துள்ளார். குற்றவாளியாக்கப்பட்ட ஒரு நிரபராதியாக உணர்ச்சிகளைக் வெளிக்காட்டாத பாத்திரம்; ஆழமான மனநிலை கொண்டவன்.யதார்த்தமான நடிப்பு.

அங்கு ஏற்கனவே சிறைவாசியாக ரெட் என்பவன் இருபது ஆண்டுகளாக இருக்கிறான்.  மோர்கன் ப்ரீமேன் இந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது குரல் வழியாகவே கதை நகர்ந்து செல்லுகிறது. அவ்வளவு இயல்பான நடிப்பு. பிரான்க் டாராபாண்ட் என்பவர் இதனை இயக்கி உள்ளார்.கதை 1940 களிலும், 50 களிலும் நடக்கிறது. ஒரு நாவலை அடிப்படையாக  வைத்து எடுக்கப்பட்ட கதை இது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகளில், முதல்  இரவில், யார் தூக்கம் வராமல் முதலில் அழுவார்கள் என சிறைவாசிகள் பந்தயம் கட்டுகிறார்கள். வங்கி நிர்வாகியாக இருந்த ஆண்டி  டுவரன்ஸ் அழுவான் என பந்தயம் கட்டுகிறான் ரெட். ஆனால் பந்தயத்தில் தோற்று அதற்காக சிகரெட்டுகளை இழக்கிறான். மெல்ல,மெல்ல இருவருக்கும் இடையே நட்பு உருவாகிறது. பலமாகிறது. ரெட்தான் சிறைக்குள் பொருட்களை, மற்றவர்கள் கண்ணில் மண்னைத்தூவி விநியோகம் செய்பவன். கல் உடைக்கும் சிறிய சுத்தியலை ஆண்டிக்கு அவன்தான் தருகிறான். எதற்கு என்பது இறுதியில்தான் நமக்குத் தெரியும்.

சிறை என்பது, அது எந்த நாடாக இருந்தாலும் வெளியுலகத்தின் கண்பார்வை படாத இடம்தான். அங்கு கேள்விகளுக்கு  இடமில்லை. கைதிகளின் மீது நடக்கும் சித்திரவதைகளுக்கும் அளவில்லை.  இவையெல்லாம் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இருபது ஆண்டுகள் முடிந்த நிலையில் ரெட்டை பரோலில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க  அறிவுரைக் கழக உறுப்பினர்கள் வருகிறார்கள். அவனது கோரிக்கையை எந்திரத்தனமாக தொடர்ந்து  நிராகரிக்கிறார்கள். அவன் மெல்ல, மெல்ல நம்பிக்கை இழக்கிறான்.

ஆனால், ஆண்டி டுவரன்ஸ் படித்த சக சிறைவாசிகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறான். நூலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி  வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து அரசுக்கு கடிதம் எழுதி அதில் வெற்றியும் பெறுகிறான். அவன் எக்காலத்திலும் நம்பிக்கை இழப்பதில்லை. அவனுடைய  இந்த மனோபாவம்தான் இந்தப்படத்தின் வெற்றிக்கான சூத்திரம் போலும். அதனால்தான் விமர்சகர்கள் இந்தப் படத்தை சிலாகிக்கிறார்கள்.

ஆண்டி டுவரன்ஸை பாலியல் தேவைகளுக்கு உட்படுத்த ஒரு கும்பல் கட்டாயப்படுத்துகிறது.  ஹேட்லி சிறைத்தோழர் போக்ஸை (மார்க் ரோல்ஸ்டோன்) மிருகத்தனமாக அடிக்கிறார். “த சிஸ்டரின்” தலைவர், அவரது குழுவினர் பாலியல் ரீதியாக ஆண்டி டுவரன்ஸ்க்கு தொல்லையளிக்க முயற்சித்த பிறகு ஆண்டியை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது.. சிறை அதிகாரிகளுக்கு வரிக்  குறைப்புக்கு ஆலோசனை தருகிறான். அதுவே அவனது கேடயம் ஆகிறது. சிறை வார்டன் லஞ்ச லாவண்யம் மூலம் சம்பாரிக்கும் நிதியை ஆண்டி ஆலோசனைப்படி ‘இல்லாத ஒருவன்’ பெயரில் முதலீடு செய்கிறான். அதனாலேயே ஆண்டி கொலைப் பழிக்கு ஆளான வழக்கில் உண்மையான குற்றவாளி யாரென தெரியும் நிலை வந்தாலும், அதற்கு வார்டன் உதவ மறுக்கிறான்.

இப்படி பல சிறை அனுபவங்களை இந்தப்படம் ரசிகர்களுக்கு துல்லியமாக கடத்துகின்றது. தனது அதிகாரத்தை நிலைநிறுத்த சிறை அதிகாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனாலும் இறுதியில் ஊழலில் திளைத்த அதிகாரிகளின் கைதிற்கும்,தற்கொலை செய்துகொள்வதிற்கும் ஆண்டி காரணமாக அமைகிறான்.

சிறையில் ஐம்பது ஆண்டுகள் இருந்து பரோலில் வெளியான  வேறு ஒருவரால்  வெளியுலகில் வாழ முடியவில்லை. தற்கொலை செய்துகொள்கிறான். இதுதான் அவருக்கு மீட்சி. சிறை உணவில் இருக்கும் புழுவை எடுத்து ஒரு பறவைக்குஞ்சுக்கு உணவாகக்  கொடுத்து  வளர்க்கிறான். இப்படிப்பட்ட மெல்லிதயம் படைத்தவர்கள் எப்படி குற்றவாளிகள் ஆனார்கள்?

ஆனால், ஆண்டி டுவரன்ஸ் இத்தனை அவநம்பிக்கை, சோதனைகளுக்கு இடையிலும் துல்லியமாகத் தனது திட்டத்தை நிறைவேற்றி சுரங்க பாதை அமைத்து தப்பித்துச் செல்கிறான். சக கைதியாக இருக்கும் ரெட்டி ற்கும் புனர் வாழ்வு அளிக்க விரும்புகிறான்; அளிக்கிறான்.

இந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது அதன் சிறப்பு தெரியவில்லை. எனவே மனதில் பதியவில்லை. இந்தப் படத்தை ஜெய்பீம் விஞ்சியது என செய்தி வந்த நிலையில் மீண்டும் பார்த்தேன். உள்ளபடியே கலை நேர்த்தியில், நடிப்பில், இயக்கத்தில், கதையில் சிறந்த படம்தான். பிரைம் தளத்தில் இந்தப் படத்தை பார்க்கலாம். சிறைவாசிகள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை ;  வெளியில் இருக்கும் அனைவரும் நல்லவர்களும்  இல்லை.

– பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time