வாழ்க்கை கல்விக்கு வாய்ப்பில்லையா? சிறப்பாசிரியர்களை சிறுமைப் படுத்தாதீர்!

- ஈரோடு உமா

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 5

வழக்கமான பாடங்கள்,படிப்புகளுக்கு இடையே ஓவியம், பாடல்,விளையாட்டு, தையல் உள்ளிட்ட கைத்தொழில்கள், தோட்ட பராமரிப்பு, போன்ற வகுப்புகள் வரும் போது மாணவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைகிறார்கள்! இதைத் தான் வாழ்க்கை கல்வி என்பார்கள்! நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி இதைத் தான் ஆதாரக் கல்வி என்றும், அவசியமான செயல்பாடு என்றும் சொல்கிறார்! இந்த ஆனால், தொழில்கல்விக்கான ஆசிரியர்கள் நியமனம், சம்பளம் தொடர்ச்சியான வகுப்புகள் ஆகியவற்றில் தற்போதைய தமிழக அரசுக்கு போதுமான புரிதல் இல்லாத நிலையே உள்ளது.

அரசுப் பள்ளிகள் என்றாலே ….. மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஒரு குழுந்தையின் முழு ஆளுமைத் திறனை வெளிக் கொண்டு வரும் இடமாக , வாழ்வியல் கூடமாகவே அதை நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் முப்பது ஆண்டு காலம் முன்னோக்கிப் பார்த்தால் பெரும்பாலான உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல் திறன்களை வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்

குறிப்பாக,ஓவிய ஆசிரியர், பாடல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் ,கைத்தொழில் ஆசிரியர்,  விவசாய ஆசிரியர் என தொழிற் கல்வியை கற்றுத் தரக்கூடிய –  மாணவர்களின் திறன்களை மேம்படுத்தக்கூடிய – பல பிரிவுகளில் அரசு, பள்ளிகளில்  ஆசிரியர்களை நியமித்து வந்தது. அவர்களை சிறப்பாசிரியர்கள் என்று குறிப்பிடுவார்கள்.

 பாட வகுப்புகளை விரும்பாத மாணவர்களும் கூட ,விளையாட்டை , ஓவியத்தை , நெசவை , தோட்டப் பராமரிப்பை , தையல் வேலைப்பாடுகளை நேசித்து அந்த வகுப்புகளுக்காகக் காத்திருப்பர். கணக்கு , அறிவியல் உள்ளிட்ட பாடப் பகுதிகளில் 90 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மேற்சொன்ன சிறப்புத் திறன்களில் ஈடுபாடு இருக்கும் என்று சொல்லிட முடியாது. ஆனால் 35 மதிப்பெண் எடுக்க முடியாமல் ஃபெயில் என்று முத்திரைக் குத்தப்படும் மாணவர்களின் திறமைகள்  இந்த வகுப்புகளில் வாழ்வியல் திறன்களாக   சிறப்பாக வெளிப்படும்.

மாநில அளவில் மாவட்ட அளவில் பரிசுகள் குவிக்கும் விளையாட்டு வீரர்களாகவும் ஓவியத் திறன்களில் ஆசிரியர்களையே மிஞ்சும் மாணவர்களாகவும் பள்ளிகளை அழகான பசுந்தோட்டங்களாக மாற்றும் திறமையாளர்களாகவும் , விழாக் கால மேடைகளை அலங்கரிக்கும் , கைத்தொழில்  தயாரிப்புகளைத் தரும் இளம் திறனாளர்களாவும், தையல் பழகி தனக்கான ஆடைகளை வடிவமைக்கும் இளங் கலைஞர்களாகவும் மிளிர்ந்த காலம் ஒன்று உண்டு.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக,  அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நெசவு , விவசாயம்  தையல் உள்ளிட்டவர்   பணி ஓய்வு பெற்றவராக மாறும் போது, அவர்களின் பணியிடங்கள் நிரப்பப்படுவதே இல்லாமலாகும் சூழல் வந்ததுள்ளது. காலாவதியாகிவிடும் பணியிடங்களுக்கு புதிதாக பகுதி நேர ஆசிரியர்களை மட்டுமே நியமிக்கிறது அரசு.

கல்வி உரிமைச் சட்டம்பகுதி நேர ஆசிரியர்கள் 

2009 , கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி  இந்தியா முழுவதும் விதி 35 இன் கீழ்  (  Central Act. No 35 of 2009) உருவானது தான் இந்த பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பிரிவு .

அது தமிழகத்தில் , குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 08.11.2011 இன் எண் 173 அரசு ஆணையாக வெளிவந்து , அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (Sarva Shiksha abhiyan) கீழே , 11.11.2011 இல் எண் 177 கொண்ட அரசாணையாக வெளியிடப்பட்டது. அதன்படி 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் பள்ளிகளில் பணியமர்த்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 5,392 பணியிடங்கள் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் , 5253 பணியிடங்கள் கலை ஆசிரியர்களுக்கும் ( Art Education – ஓவியம் , இசை, பாட்டு),. 5904 பணியிடங்கள் தொழிற்கல்வி ( Work Education- கை வேலை , கணினி) ஆசிரியர்களுக்கும்  ஒதுக்கப்பட்டது .

செய்தித்தாள் விளம்பரத்தின் வழியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வாய் மொழி , எழுத்துத் தேர்வு என அந்தந்த மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு 2012 மார்ச் மாதம் பணியில் சேர்ந்துள்ளனர். எண்ணிக்கையில்  100 குழந்தைகளுக்கும் மேற்பட்டு பயிலும்  அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தான் இந்த பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். ரூ 5000 ஊதியத்துடன் 11 மாதங்களுக்கு மட்டுமே என்று தான் ஆரம்பத்தில் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.  ஆசிரியர்களும் அடுத்த ஆண்டே தாங்கள் காலமுறை ஊதியத்தில் நிரந்தரப் பணியிடத்தில் வந்து விடுவோம் என நம்பி இருக்கின்றனர். ஆனால் நடந்தது என்ன ? 10 வருடங்களாகியும் பகுதி நேர ஆசிரியர்களாகவே பணியாற்றி வருவது தான் மிகப் பெரிய துயரம்.

 சில ஆசிரியர்களிடம் பேசும் போது …

கௌதமன் , சிறப்பாசிரியர் , அரசு உயர்நிலைப் பள்ளி ,

குமரானந்தபுரம், திருப்பூர்  

வாரத்தில் 3 அரை நாள்கள் மட்டுமே பள்ளிக்கு வருகிறோம் . இதனால் மாணவர்களை முழுமையாக கவனிக்க நேரமோ வாய்ப்போ இல்லை.

பத்தாண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரிகிறோம் , எங்களுக்கு கால முறை ஊதியம் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். கேரளா , திரிபுரா, மணிப்பூர்  உள்ளிட்ட சில மாநிலங்களில் காலமுறை ஊதியம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது தமிழகத்தில் முதலில் 5000 மாத ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டோம் .அடுத்து 2014 2015 கல்வி ஆண்டின் வரவு செலவுப் பணித் திட்டத்தின் கீழ் (Annual Work Plan & Budget)  2014 ஏப்ரல் முதல் மாத ஊதியம் ரூ 7000 தரப்பட்டது,  அதே ஆண்டு ஆகஸ்டு முதல் ரூ 7700  மாத ஊதியமாகப் பெற்றோம் .தற்போது 2021 பிப்ரவரி மாதம் முதல் ரூ 10000 பத்தாயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.

பணி நியமனம் செய்யும் போது இட ஒதுக்கீட்டின்படியே முறையாக பணி நியமனம் செய்யப்பட்டோம். கல்வி உரிமைச் சட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் வலியுறுத்தவில்லை . பணி நிரந்தரம் செய்யவே வலியுறுத்துகிறது. பொருளாதார ரீதியாகவும், சமூகப் பார்வையிலும் பகுதி நேர ஆசிரியர்கள் மிகவும் நலிவுற்றவர்களாக இருக்கிறோம்.

கமலக்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, புஞ்சை புளியம்பட்டி

மிகவும் குறைந்த ஊதியத்தில், அன்றாடம்  80 கி.மீட்டர் தொலைவு பயணித்து தான் பள்ளிக்குச் செல்கிறேன். M.P.Ed , M.phil என கல்வித் தரம் உயர்ந்து இருப்பதற்கு தனியார் பள்ளிகள் , கல்லூரிகளில் பணியாற்றினால் இந்த பத்தாண்டுகளில் நல்ல ஊதியம் பெற்றிருப்பேன். ஆனால் இங்கு, வாங்கும் மிகக் குறைந்த ஊதியத்தால் வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டியுள்ளது. மனதளவில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும் இயலவில்லை. மேலும் விளையாட்டுப் பயிற்சி அன்றாடம் தரப்பட வேண்டிய பயிற்சி. அப்போதுதான் மாணவர்கள் திறன் மேம்பாடு பெறும். ஆனால் வாரத்தில் மூன்று  அரைநாள்கள் மட்டுமே பள்ளிக்கு வருவதால் மாணவர்களுக்குப் போதிய பயிற்சி தர இயலவில்லை .

பி. கருணாநிதி, ஓவிய ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, கட்டிகானப்பள்ளி, கிருஷ்ணகிரி 

இப்பணியில் 10 வருடங்களாகப் பணியாற்றுகிறேன். இந்த சம்பளத்தில் குடும்பம் நடத்துவது மிகவும் சிக்கலாக உள்ளது. பல முறை அரசுக்கு கோரிக்கைகளை வைத்தோம் .DPI வளாகத்தில் பல நாட்கள் போராடினோம்.குழு அமைத்து விசாரணை செய்வதாகக் கூறி கிடப்பில் போட்டு விட்டனர். கலைஞர் இருக்கும் போதே தேர்தல் அறிக்கையில் எங்களை நிரந்தரப் பணியாளர்களாக்கப் போவதாகக் கூறியிருந்தார். ஆனால், அப்போது வெற்றி பெற வில்லை. தற்போதைய முதல்வர்  தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நல்லதொரு அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்.

லதா ,தையல்  ஆசிரியர், அரசு உயர்நிலைப்ள்ளிசெல்லக் குட்டியூர், திண்டுக்கல்.

வாரத்தில் 3 அரை நாள்களில் குழந்தைகளுக்கு தேவையான எதையும் முழுமையாகத் கற்றுத் தரமுடியவில்லை. வீட்டிற்குத் தேவையான கலைப் பொருட்கள் , தலையணை உறை , லஞ்ச்பேக் , கதவு தோரணம் , எம்ராய்டரி, பெட்டிக்கோட் , பிளவுஸ் என   கடந்த வருடம் நிறையக் கற்றுக் கொடுத்தேன். பை தயாரித்தும் ஃபிராக் தைத்தும் கொரோனா கால ஊரடங்கின் போது ரூ 3000 சம்பாதித்ததாக  ஒரு மாணவி கூறினார். அது எங்கள் குடும்பத்தை வறுமையிலிருந்தும் காப்பாற்றியது என்று எனது அவர் குறிப்பிட்ட போது நெகிழ்ந்து போனேன். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் , கவலை ஒத்துக் கொள் என்பார்கள்.  அதனடிப்படையில் மற்ற ஆசிரியர்கள் போலவே முழு நேர ஆசிரியர்களாக்கினால் மகிழ்ச்சியாக பணியாற்றுவோம்..

பத்மா, பகுதி நேர ஆசிரியர், லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி,

எனக்கு கடந்த ஜூன் மாதம் 58 வயது ஆனது. எங்களுக்கும் மாநில அரசின் 60 வயதே ஓய்வுக்கான வயது என்ற சட்ட விதிகள் பொருந்தும். ஆனால்,  தலைமை ஆசிரியர் , என்னை பள்ளிக்குள் அனுமதிக்கவே இல்லை. கட்டாயமாக எழுதி வாங்கிக் கொண்டு வெளியேற்றி விட்டார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். தமிழகம் முழுவதும் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதல் இல்லை. பல மாவட்டங்களில்  ஓய்வு வயது 60 எனக் கூறி பணியாற்றி வருகின்றனர். கடந்த 6 மாதமாக பொருளாதாரத்தை இழந்து துன்பப்படுகிறேன் .

இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்களின் பிரச்சினைகள் ஒருபுறம் என்றாலும், பள்ளி மாணவர்களுக்கு முழு நேர சிறப்பாசிரியர்கள்  தேவைப்படுகின்றனர். வாழ்க்கைக் கல்வி எனப்படும் தொழில் கல்வி மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தருவது கண்கூடாகத் தெரிகிறது. மாணவப் பருவத்தில் ஏதேனும் ஒன்றில் தன் திறமையை வெளிப்படுத்த உள்ளுக்குள் ஆசை கழன்று கொண்டிருக்கும். அதற்கான வாய்ப்பை மறுக்கக் கூடாது! தற்போதைய கல்வி அமைச்சர் சமீபமாக ஒரு நேர்காணலில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து பேசியுள்ளார். தொழில்கல்வி ஆசிரியர்களை நிரந்தரமானவர்களாக மாற்றுவது  அவசரத் தேவையாகும். அரசு பள்ளிகளில்  தரமான கல்வி என்பது ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட செயல்களால் தான் சாத்தியப்படும். ஆகவே, ஏற்கனவே நியமிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றினால் நமது அரசுப் பள்ளிகள் பொலிவு பெறும்.

கட்டுரையாளர்; ஈரோடு உமா

கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்! அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர்.                ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time