வர்த்தகச் சூதாட்டத்தால் வதைபடும் ஜவுளித் தொழில்!

- சாவித்திரி கண்ணன்

ஜவுளித் தொழில் வரலாறு காணாத நெருக்கடியில் திணறுகிறது! பஞ்சு,நூல் விலைகள் ஆகாயத்தில்! நெசவாளர்கள் வாழ்வோ பாதாளத்தில்! கோடிக்கணக்கானோர்களுக்கு வாழ்வாதாரமான பருத்தி பஞ்சு, நூலின் விலையை தீர்மானிப்பது வர்த்தகச் சூதாடிகளா..?

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு மட்டுமின்றி, பல லட்சம் பருத்தி விவசாயிகளுக்கும், வாழ்வாதாரமாகத் திகழும் ஜவுளித்துறை தொடர்பான தெளிவான புரிதல்கள் இந்திய அரசுக்கு இல்லாத காரணத்தால் சமச்சீரற்ற விலை உயர்வால் இத் தொழில் திணறுகிறது.

தமிழகத்தை பொறுத்த அளவில் ஜவுளி தொழிலில் மிக முன்னணியில் உள்ள மாநிலம் என்றாலும், ஜவுளிக்குத் தேவையான பருத்தி உற்பத்தியில் மிகவும் பற்றாகுறை உள்ள மாநிலமாகும்! தமிழகத்திற்கு மட்டுமே 108 லட்சம் பேல்கள் தேவைப்படுகின்றன! இதில் கால்வாசி கூட இங்கு உற்பத்தி ஆவதில்லை! நாம் மற்ற மாநிலங்களில் இருந்து தான் தருவிக்கிறோம்!

சென்ற ஆண்டு இதே மாதத்தில் நூல் விலை ஒரு கிலோ 210. ஆனால், தற்போது 340 ரூபாய்! அதாவது 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த விலைக்கு நூல் வாங்கித் தொழில் செய்ய முடியாத நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்கிறார்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள்!

மத்திய ஜவுளித்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்கிற்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிரச்சினையை விரிவாக விளக்கி தீர்வு காணச் சொல்லி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 19 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதுமுள்ள நூற்பாலைகளில் 45 சதவீதம் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. மேலும் பருத்தி, பஞ்சு பதுக்கல் காரணமாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது! எனவே, நூற்பாலைகளின் நேரடி பருத்தி கொள்முதல் உச்ச வரம்பை இந்திய பருத்தி கழகம் நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.

இவ்வளவு அதிகமாக பஞ்சு மற்றும் நூலின் விலை உள்ளதே! ஆக, பருத்தி விவசாயிகள் காட்டில் மழைதான் என நாம் நினைத்தால் அது தான் இல்லை! பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் சாதாரண விவசாயிகளைச் சென்றடையவில்லை. காரணம், பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள விபரீதமே இது! பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.

அதுவுமின்றி பருத்தி ஏற்றுமதியின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டதால், வர்த்தகச் சூதாடிகள் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள்! பல கோடி நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்!

நம் நாட்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகிறது. அதில் உள் நாட்டித் தேவை எவ்வளவு? அது போக உபரி எவ்வளவு? அல்லது பற்றாகுறை எவ்வளவு என்றெல்லாம் கணக்கிட்டு, ஏற்றுமதி இறக்குமதி கொள்கை வகுக்கப்பட்டால் பிரச்சினைகளே இல்லை!

உள் நாட்டில் பற்றாகுறை என்றாலும், ஏற்றுமதி செய்வேன்! உள் நாட்டில் உபரியாக இருக்கும் சமயமாக பார்த்து இறக்குமதி செய்வேன் என சந்தையில் தாறுமாறாக இயங்கினால் தொழில் எப்படி சிறக்கும்? சிரிப்பாய்த் தான் சிரிக்கும்!

கொங்கு மண்டலம் கொந்தளித்து கிடக்கிறது. பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்! உண்மையில் பிரச்சினையின் அடிப்படையே புரியாமல் பழனிச்சாமி பேசியுள்ளார்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) கடைப்பிடிக்கும் தவறான கொள்கையால், நூல் விலை மூன்று மாதங்களுக்கு கூட நிலையாக இருப்பதில்லை. பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போது, விவசாயிகளிடம் வாங்கி அதிக அளவு இருப்பு வைக்கின்றனர் வர்த்தகச் சூதாடிகள்! தட்டுப்பாடு ஏற்படும் போதுவிலையை உயர்த்தி விற்கிறார்கள்!  இதில் பல பருத்தி வியாபாரிகளுமே கூட வாங்கி இருப்பு வைத்து அதிக லாபம் அடைகின்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைக்காமல் ஒரு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இந்த நாடகம் பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதைக் கட்டுபடுத்தாமல் அரசாங்கம் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது!

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் 130 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதன் மூலம் 355 லட்சம் பேல்கள் பஞ்சு உற்பத்தியாகிறது. நமது உள் நாட்டு சந்தைக்கு 375 லட்சம் பேல்கள் தேவைப்படுகிறது. ஆக, நமக்கே பற்றாகுறை 20 லட்சம் பேல்கள்!

இந்த நிலையில் அரசாங்கம் மொத்த உற்பத்தியில் கணிசமான பஞ்சை ஏற்றுமதி செய்கிறது! ஒரு சில வருடங்களில் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கெல்லாம் ஏற்றுமதியாகியுள்ளது. அதே போல தரமான நூலெல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டுவிடுகின்றன. இப்படி ஏற்றுமதியானதால் பற்றாகுறை அதிகமாவதால் அதிரடியாக இறக்குமதியும் நடக்கிறது! எந்த அளவுக்கு ஏற்றுமதி ஆனதோ, அந்த அளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அப்படி தடாலடியாக அதிகமாக இறக்குமதியாகும் போது, உள் நாட்டு பஞ்சின் விலை அடிவாங்கிறது! அதனால், இறக்குமதி பஞ்சின் மீது அதிகம் வரி விதிக்க வேண்டும் என்ற குரல்களும் விவசாயிகள் தரப்பில் எழுகிறது!

உள்நாட்டு தேவையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பஞ்சு, நூல்  ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. உள்நாட்டு தேவை பூர்த்தியாகாததால் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இது தான் பிரதான பிரச்சினையே!

”பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும்” என்று கூறி, விவசாயிகளை சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு தூண்டுவதும் அரசு தான்! ”ஐயோ பஞ்சு இறக்குமதியால் எங்கள் பஞ்சின் விலை வீழ்ச்சி அடைகிறதே! ஆகவே, இறக்குமதி பஞ்சுக்கு அதிக வரிவிதியுங்கள்” என விவசாயிகளை பேச வைப்பதும் அரசு தான்!

இந்த இரண்டு அணுமுறைகளாலும் இங்குள்ள விவசாயிகளும், உற்பத்தியாளர்களும், இதை நம்பியுள்ள தொழிலாளர்களுமே மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்!

ஒருபுறம் தொழிலாளிகளையும், மறுபுறம் விவசாயிகளையும் ஒரு சேர பாதிப்படைய வைத்து ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் உள்ள கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதே புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது இதற்கு விடிவு ஏற்படும்!

உள்நாட்டு தேவைகளுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள பஞ்சு மற்றும் நூலிழைகளை மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். பஞ்சு, நூல் என மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதை காட்டிலும் ஆயத்த ஆடையாக மாற்றி வர்த்தகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பும் பெருகும்  என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.

இந்தியப் பருத்திக் கழகம் என்பது வெறுமனே பார்வையாளராக இல்லாமல் பஞ்சு, நூல் ஆகியவை சீரான விலையில் கிடைக்கும்படி கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக சீனாவின் தலையீடுகளால் சீரழிந்து கொண்டுள்ளது, நமது ஜவுளி பொருளாதாரம்!  அதீத உற்பத்தியின் போது வெளி நாட்டுக்கு பெருமளவு ஏற்றுமதியாகி விடாமல் இந்திய பருத்தி கழகமே கொள்முதல் செய்து கொண்டு, தேவைப்படும் போது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சீரான விலையில் தர வேண்டும். இந்த அவசிய, அவசரக் கடமையை செய்தால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time